கவரி
நிலைக்கண்ணாடியின் முன் நின்ற துர்கா, மெதுவாக தன் தலைமுடியை வகிடு வகிடாகப் பிரித்துப் பார்க்கத் துவங்கினாள். மெல்ல விரலால் தலையை தடவிய படியே உச்சி வரை சென்றவளுக்கு தடவிய இடங்களில் எல்லாம் சிறு சிறு கொப்பளங்கள் நெருடியது. அந்த இடங்களில் வலியையும் உணர்ந்தாள். எதிர்பார்த்ததை விட அதிக கொப்பளங்கள் தட்டுப்பட்டதும் மனதில் லேசாக பயம் எட்டிப் பார்த்தது. வெளிச்சம் பற்றாமல் செல்போன் டார்ச்சை ஆன் செய்து பார்த்த போது சில கொப்பளங்கள் புண்களாக மாறிக் கொண்டு வருவது தெரிந்தது. அவற்றை லேசாக அழுத்திப் பார்த்ததில் எரிச்சலும்,வலியும் ஒருசேர வதைத்தது. இடதுகையில் செல்போனை பிடித்தபடி, வலது கையால் தேங்காய் எண்ணையை தொட்டு ஒவ்வொரு புண்ணின் மீதும் தடவினாள். எண்ணெய் தடவிய இடங்களில் லேசாக குளிர்ச்சி பரவியது அவளுக்கு இதமாக இருந்தது. கணவன் வாங்கி வந்த ஆயின்மென்டை பயன்படுத்தினால் புண் மேலும் பரவி விடுமோ என்ற பயம் இருந்ததால் இரண்டு நாளாக தேங்காய் எண்ணெயை மட்டும் தடவிக் கொண்டிருந்தாள். ஆனால் அதுவும் இதமாக இருந்ததேயன்றி புண் ஆறுவதாக தெரியவில்லை. புண் காயாமல் சீழ் பிடிப்பது போன்று தோன்றியது. 'ஹாஸ்பிடல் தான் போகணும் போலயே..' என்ற யோசனையோடு சீப்பை எடுத்து லேசாக தலைமுடியை வாரிப் பின்னிக்கொண்டாள்.
குப்புறபடுத்தபடியே மனைவியின் செய்கையை பார்த்துக்கொண்டிருந்த சரவணன் "இன்னைக்கு ஹாஸ்பிடல் வேணா போய் காட்டிட்டு வரலாமா..?"
"வேணாங்க...இன்னும் இரண்டு நாள் பார்க்கலாம்.. " என்றபடி ரூமை விட்டு சமையற்கட்டுக்குள் சென்றவளை "போய் நல்லா கையை சோப் போட்டு கழுவிட்டு வந்து சமையல் பாத்திரத்தை தொடு...தலைல என்ன சீக்கோ.." எரிந்து விழுந்த மாமியாரை கடந்து குளியலறை சென்றாள் துர்கா. மாமியாரின் வசவு சொற்கள் எப்பொழுதும் கேட்பவைதானே என்று மனம் நினைத்தாலும், உடல்நிலை சரியில்லாத இந்த நிலையிலும் மனம் புண் படும்படி பேசுவதை கேட்ட துர்காவிற்கு அழுகை முட்டியது.
துர்காவின் சிறு வயதில் இருந்தே இதுபோன்ற கொப்பளங்கள் தலையில் அடிக்கடி வரும். தலையில் பேன் இருந்தால் தான் இப்படி வரும் என்று அவளது அம்மா தலை வாரும் போதெல்லாம் பேன் சீப்பை கையில் எடுத்து விடுவாள். துர்காவிற்கு எரிச்சலாக இருக்கும், 'அம்மாவிற்கு பொழுது போக நம் தலைதான் கிடைத்ததா..' என்று அவள் சீப்பை எடுக்கும் முன் சிட்டாக பறந்து விடுவாள். அம்மாவிடம் இருந்து தப்பித்தாலும் அடுத்த வீட்டு மேனகா அக்கா இழுத்து விடுவாள். அவளின் முதல் பொழுதுபோக்கே இதுதான். எட்டு வீடுகள் கொண்ட அந்த காம்பௌண்டில், வாசலில் நான்கு பெண் பிள்ளைகள் விளையாடினால் போதும் கையில் சிக்குபவளை இழுத்து பேன் பார்க்க ஆரம்பித்து விடுவாள். விளையாட்டு மும்முரத்தில் இருக்கும் பிள்ளைகள் தப்பிக்க நினைத்தாலும் முடியாது. அவளின் கிடுக்கு பிடி அப்படி இருக்கும். அம்மாக்களும் ஒரு வேலை மிச்சம் என்பதால் விட்டுவிடுவார்கள். சற்று எரிச்சலாக இருந்தாலும் அவள் பேன் பார்த்தால் எங்கிருந்து தான் தூக்கம் வருமோ தெரியாது. பாதி நேரம் அவள் மடியில் ஒரு சுகமான தூக்கத்தை போட்டு விடுவாள் துர்கா.
இத்தனையும் மீறி துர்காவின் தலையில் கொப்பளங்கள் வந்தது. முதலில் பேன் காரணமாக இருக்கும் என்ற அம்மா பின் அதை 'சூட்டு கொப்பளம் ஆக இருக்கும்' என தேங்காய் எண்ணெயை தடவ ஆரம்பித்தாள். அதற்கும் கட்டுப்படவில்லை என்றதும் வேப்பெண்ணையை தடவினாள். அப்பொழுது எல்லாமே கை வைத்தியம் தானே. ஆளாளுக்கு ஒரு வைத்தியம் சொல்ல அனைத்தையும் செய்து பார்த்தும், அதையும் மீறி அதிக கொப்பளங்கள் தென்பட ஆரம்பித்தது. வேறு என்ன செய்வது எனத் தெரியாமல் ஆஸ்பத்திரிக்கு கிளம்ப ஆயத்தமானார்கள். அப்பொழுதுதான் பக்கத்து வீட்டு பாஸ்கர் சித்தப்பா, அவள் பள்ளி சென்றிருந்த நேரம் பார்த்து வீட்டில் ஒரு யோசனை சொன்னார். அவளின் அப்பாவிற்கு இந்த யோசனை நன்றாக பட்டது. ஆனால் இதை துர்காவிடம் எப்படி சொல்லி சம்மதிக்க வைப்பது என்ற யோசனை அழுத்தியது. ஆனால் வேறு வழி இல்லை என்பதால்
பள்ளி விட்டு வீடு வந்த துர்காவை அப்பா அழைத்து அருகில் அமரவைத்து அந்த யோசனையை மெதுவாக சொன்னார். அரைகுறையாக காதில் வாங்கியவள் கொஞ்சம் சுதாரித்து மீண்டும் கேட்டாள். அப்பாவின் யோசனை அவளுக்கு அழுகையை வரவழைத்தது. முகம் சிவந்து அவள் கத்திய கத்தலில் எட்டு குடித்தனக் காரர்களும் அவளின் வீட்டின் முன் ஆஜர் ஆகினர்.
"என்னால மொட்டை போட முடியாது. என்னை ஆஸ்பத்திரிகே கூட்டிட்டு போங்க. என் ஸ்கூல்ல எல்லாரும் சிரிப்பாங்க. நான் மொட்டை போட மாட்டேன்" என்று அவளது அழுகுரல் அனைவரையும் சங்கடப்படுத்தியது. ஏழாம் வகுப்பு படிக்கும் துர்காவின் நீளமான முடியை அதிசயத்து பார்க்காத ஆட்களே இல்லை எனச் சொல்லலாம். இந்த யோசனை அவளுக்கு மட்டுமின்றி அங்கு சூழ்ந்திருந்த அனைவருக்கும் வருத்தத்தை அளித்தது. துர்காவின் அழுகுரலை சமாதானப்படுத்த தெரியாமல் அவளின் அம்மாவிற்கு கண்களில் கண்ணீர் சொரிந்தது.
"இப்படியே புண்ணோட இருந்தால் முடி சிக்கு பிடிக்கும் துர்கா...பெரியவங்க உன் நல்லதுக்குதான சொல்லுவாங்க கேளுடா செல்லம்.."
"ஆஸ்பத்திரிக்கு போனாலும் அந்த புண்ணு இருக்குற இடத்துல முடியை வெட்டி தான் மருந்து போடுவாங்க... தலை பூரா இப்படி வெட்டினால் அதுவே அசிங்கமா இருக்கும்... அதுக்கு மொட்டை எவ்வளவோ தேவலாம் துர்கா.."
என்று ஒவ்வொருவராக சமாதானம் செய்ய ஆரம்பித்தனர். இரண்டு நாட்களுக்குப் பின் வேறு வழி இல்லாமல் மொட்டை அடிக்க ஒத்துக் கொண்டாள் துர்கா. மொட்டை அடித்து வந்த அன்றிலிருந்து நான்கு நாட்கள் வீட்டில் அடைகாத்து, பள்ளிக்குப் போக மாட்டேன் என அடம் பிடித்து, வீட்டு வாசலை தாண்டவில்லை. அம்மாதான், துர்காவின் தோழிகளை அழைத்து அவளிடம் சமாதானம் பேச வைத்து பள்ளி செல்ல புது சைக்கிள் வாங்கி தருவதாக ஏய்த்து பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.
மொட்டை போட்ட ஒரு வாரத்தில் அனைத்து புண்ணும் காய்ந்து போனதால் அவளும் சமாதான நிலைக்கு வந்து சேர்ந்தாள். அடுத்து வந்த இரண்டு வருடங்களுக்கும் இதே போல் வந்த பொழுது எந்த யோசனையும் இல்லாமல் ஆரம்பத்திலேயே மொட்டை போட்டு விட்டனர். துர்காவிற்கு அது பழகியும் விட்டது. ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் கொப்பளங்கள் வந்து போன அறிகுறியே இல்லாமல் கடந்தாள். இத்தனை வருடம் கழித்து இன்று தான் மறுபடி எட்டிப் பார்க்கிறது.
அன்று இரவே துர்காவிற்கு தலை அதிகமாக அரிக்க ஆரம்பித்தது. சொரிந்தால் இன்னும் புண் பரவும் என்பதால் கஷ்டப்பட்டு கையை கட்டிக் கொண்டாள். ஆனால் அரிப்புத் தாளாமல்,
"நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு போவோமா..?"
என்று கணவனைக் கேட்டாள்.
"ம்" என்றபடி தூங்கிப் போனான் சரவணன்.
காலை மகனை விரைவாக பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன் ஆபீஸ் கிளம்பும்போது அவன் ஸ்கூட்டரில் தொற்றிக் கொண்டாள் துர்கா. நேராக ஹாஸ்பிடல் சென்று டாக்டர் சொன்ன சில பரிசோதனைகளை செய்து, டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரை, ஆயின்மென்டை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
"டாக்டர் என்ன சொன்னாங்க துர்கா.." என்ற அத்தையின் கேள்விக்கு, "இன்பெக்சன் தான் அத்தை...இந்த ஆயின்மென்ட்ல சரி ஆகிடுமாம்..."என்றபடி நேராக தன் ரூமுக்கு சென்று தலை முடியை பிரித்து டாக்டர் கொடுத்த ஆயின்மென்ட்டை தடவினாள். அன்று இரவு அரிப்பு கொஞ்சம் குறைந்தது போல் உணர்ந்தாள்.
ஆனால் அடுத்து வந்த இரண்டு நாட்களில் ஆயின்மென்ட், எண்ணெய் என தடவியதில் தலையில் பிசுபிசுப்பும் சிக்கும் சேர்ந்து அவளை வதைத்தது. சீப்பை கொண்டு தலை வார முடியாத அளவு சிக்கு பிடித்து, புண்ணில் சீழ்படிந்து காய்ந்து போன பக்கு உதிர ஆரம்பித்தது. எப்பொழுதும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் பராமரித்து, ஒரு செம்பட்டை முடி கூட வராத அளவு அவளது தலைமுடி இருக்கும். அவளுக்கென்று பிரத்யோகமாக அவளே தயாரிக்கும் எண்ணெயை தவிர வேறு எதையும் தேய்க்க மாட்டாள். அதேபோல் அரப்பு வைத்து அரைத்த சீயக்காய் மட்டுமே பயன்படுத்துவாள். கடைகளில் விற்கும் ஷாம்பு, சீரம், கன்டிஷனர் என எந்த பொருளும் அவள் தலைமுடியில் இதுவரை பட்டதில்லை. அப்படி சுத்தமாக பார்த்து கொண்ட தலை இப்பொழுது அவளுக்கு பெரும் பாரமாக கனத்தது. தலையை மட்டும் தனியே பிடிங்கி எறிந்து விட எண்ணியது அவள் மனம். சொல்ல முடியாத அளவு வலியும் வேதனையும் அவளை கண்கலங்க வைத்தது.
"இதுக்கெல்லாமா அழுவாங்க...ஆயின்மென்ட் பிசுபிசுப்புக்கு முடி அப்படித்தான் ஆகும். டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையை இன்னொரு செட் வாங்கி தரேன், சாப்பிடு சரியாயிடும்..." என்ற கணவனின் சமாதானம் அவளை சமாதானப்படுத்தவில்லை. இனி மாத்திரையை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்தவள், ' பேசாம மொட்டை போட்டு பார்க்கலாமா...?'என்ற கேள்வியை அவளாக மனதுக்குள் கேட்டுப் பார்த்துக் கொண்டாள். 'சரவணன் இதற்கு சம்மதிப்பானா...சரவணன் சம்மதித்தாலும் அத்தை என்ன சொல்லுவாங்களோ...'எங்க வீட்டுக்கு வந்த மருமகள்லேயே நீதான் சுமார் ' என அடிக்கடி அங்கலாய்த்து பேசும் மாமியாரின் அனுமதி கிடைக்குமா..? ஆனா அதற்கெல்லாம் பயந்துட்டு இருந்தா நம்ம பிரச்சனை தீராது...பேசாம சரவணன் கிட்ட கேட்டுட்டு மொட்டை போட்டுக்க வேண்டியது தான்...' என ஒரே மனதாக முடிவுக்கு வந்து கணவனின் வருகைக்காக காத்திருந்தவளுக்கு ஒரு புது பிரச்சனையோடு வந்தான் சரவணன்.
"உனக்கு என் டீம்ல ஒர்க் பண்ணுற சுவேதாவை தெரியும்ல... அவங்களுக்கு கேன்சராம்.. ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருக்கு... ஒன் மன்தா ஆபீஸ் வராம இருந்தவங்க இன்னைக்கு தான் வந்தாங்க. அவங்களை பார்க்கவே கஷ்டமா இருந்தது.. அவங்க முடி எல்லாம் கொட்டி, முகமும் பொலிவே இல்லாம பழைய அழகே போய்டுச்சு.. கீமோதெரபி பண்ணுவதால் முடி கொட்ட ஆரம்பிச்சதால சீக்கிரம் மொட்டை போட போவதா சொன்னாங்க.. நினைக்கவே கோரமா இருக்கு... " என்றவனிடம் துர்கா,
"உடம்புக்குள்ள உருக்கிட்டு இருக்குற வேதனையை விட முடி இல்லாதது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க...
"அது சரிதான்.. ஆனா மொட்டைல அவங்க முகத்தை நினைச்சு பார்க்க முடியல... எப்பவும் முடியை பின்னாம பிரீ ஹேரோட இருப்பாங்க... நினைச்சால் அள்ளி கொண்டை போட்டு க்ளிப்பா ஒரு பென்சிலை எடுத்து சொருகிட்டு அவங்க வேலை பார்க்கிறப்ப, அவங்க கான்பிடென்ட் லெவல் நம்மளையும் தொத்திக்கும்...அப்படி இருந்தவங்களை மொட்டையோட நினைச்சு பார்க்க சங்கடமா இருக்கு..."
"முடி ல என்னங்க கான்பிடென்ட்.?”
"முடியும் லேடீஸ்க்கு கான்பிடென்ட் கொடுக்குற ஒரு விஷயம் தான...முடி தான் அவங்களுக்கு அழகை கொடுக்குது...அந்த அழகு தான் அவங்க மனசுல இருக்குற தன்னம்பிக்கையை வெளி கொண்டு வருது.."
"இதெல்லாம் நீங்களா கற்பிச்சு வச்சுருக்குற மூடநம்பிக்கை... பெண்களோட தன்னம்பிக்கைக்கு முடியை எல்லாம் ஒரு காரணமா சொல்லாதீங்க.. இது மாறி தேவையில்லாத அழுத்தத்தை கொடுத்தே ஆண்கள் தான் அவங்க தன்னம்பிக்கையை குறைக்கிறீங்க..."
துர்காவின் மனதில் இப்பொழுது நிஜமாகவே ஒரு அழுத்தத்தை கணவன் ஏற்றியது போல் உணர்ந்தாள்.
'இனி இவனிடம் எப்படி மொட்டை போட கேட்பது.. ஒன்னுக்கும் உதவாத மயிரை ஏதோ தன்னம்பிக்கை கொடுக்குற விஷயமா சொல்கிறான். அதோட மொட்டை போட எதற்கு நான் சரவணனோட அனுமதியை எதிர்பார்த்துட்டு இருக்கேன்…என்னுடைய முடியை வெட்டிக்கொள்ள எனக்கு உரிமை இல்லையா...இதற்குமா மற்றவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும்..அந்த நிர்பந்தத்தை யார் எனக்கு கொடுத்தது...'அடிக்கிற வெயிலுக்கு மொட்டை தான் சௌகரியமா இருக்கு...' என வருடம் தவறாமல், வெயில் காலம் முடியும் வரை மொட்டை தலையோடு திரியும் கணவன் கூட யாருடைய அனுமதியையும் கேட்டதில்லையே....அப்போ ஆண்கள் அவர்கள் சௌகரியத்துக்கு எப்பொழுது வேண்டுமானாலும் மொட்டை போடலாம் ஆனால் பெண்களுக்கு இதற்கு பல பேரின் அனுமதி வேண்டுமா...'பொண்ணுனா நீளமான முடியோட பூச்சூடி அழகா இருக்கணும்... அவ தான் பொம்பள...' என்ற ஆச்சியின் பேச்சு ஞாபகம் வந்தது. எதிர் வீட்டில் புதிதாக குடி வந்த பெண் பாய்கட் பண்ணி இருந்ததை பார்த்து சடவுடன் இதை ஆச்சி சொன்னாள். அது மட்டுமா சொன்னாள், 'இவ எந்த மாதிரி பொம்பளையோ...நீ எதுவும் பேச்சு கொடுக்காத...தள்ளியே இரு..' என்று அவள் பேசிய பேச்சின் உள்ளர்த்தம் புரியாமல் இல்லை...அவளின் ஒழுக்கத்தையும் முடியோடு முடிச்சு போடுகிறாள்...முடியை குட்டையாக வெட்டிக்கொண்டால் அவள் திமிர் பிடித்தவள்னும், நீளமா தழைய பின்னி பூ வைத்திருப்பவள் அமைதியின் மறுவுருவமாக கற்பிக்கப்படுவது எந்த விதத்துல நியாயம்...அழகு, தன்னம்பிக்கை, ஒழுக்கம் னு எல்லாமே பெண்களோட மயிர்ல தான் இருக்கு போலயே...தலையே போனாலும் பொம்பளைக்கு தலைமுடி இருக்கனும் போல...சரவணனே இப்படி பேசுகிறான் என்றால் அத்தையை கேட்கவே வேண்டாம்...என துர்கா அவளது ஆதங்கத்தை மனதிற்குள் அரற்றிக்கொண்டிருந்தாள்.
தன் பிரச்சனைக்கு எந்த தீர்வையும் எட்டமுடியாமல், அதே யோசனையோடு உலவிக்கொண்டிருந்தவளின் மொபைல் போன் சிணுங்கியது. கணவனின் ஆபீஸ் நம்பரில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அவசர தேவைக்காக பதிவு செய்திருந்தாலும் இதுவரை இந்த நம்பருக்கு அழைத்ததும் இல்லை, அழைப்பு வந்ததும் இல்லை என்பதால் மனதில் ஏதோ பதட்டம் தொற்றி வேகமாக அழைப்பை எடுத்தாள்.
"அம்மா..நாங்க சரவணன் சார் ஆபீஸ்ல இருந்து பேசுறோம். சரவணன் சார் ஆபீஸ் மாடிப்படில இருந்து தவறி விழுந்துட்டார். மயங்கினதனால ஆபீஸ் பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய்ட்டாங்க...மேனேஜர் உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ண சொன்னார்...நீங்க உடனே போய் பாருங்க..." என்றார்.செய்தியை கேட்ட நிமிடம் துர்காவிற்கு படபடப்பாகிவிட்டது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு நிமிடம் கட்டிலில் அமர்ந்தவள், பின் அத்தையிடம் விஷயத்தை சொல்லிவிட்டு வேகமாக மருத்துவமனை விரைந்தாள்.
மருத்துவமனை ரிசெப்ஷனில் விசாரித்து சரவணனை தேடி ஐசியூ வுக்கு சென்றவள் கணவனின் நிலையை கண்டதும் மனதில் எழுந்த பதட்டம் அவளை நிலைக்குலையச் செய்தது.
"பெரிய பிராக்சர் ஏதும் இல்லமா.. கை ஜாயிண்ட் எலும்பு லேசா நகர்ந்து இருக்கு...பத்து நாளுல சரியாயிடும்... மயங்குனதனால ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்திருக்கோம்...அதுலயும் ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல...3 நாள் மட்டும் ஹாஸ்பிடல்ல இருங்க...அப்புறம் வீட்டுக்கு போயிடலாம்....கை அசைக்காம வீட்ல ரெஸ்ட் எடுத்தால் போதும்.. என்று சொல்லிவிட்டு ஒரு பில்லை அவள் கையில் திணித்துவிட்டு போனாள் நர்ஸ். மூன்று நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டதும்தான் துர்காவின் மனம் பழைய நிலைக்கு வந்தது.
"கண் திருஷ்டி பட்ட மாறி தலைக்கு வந்தது தலைபாகை யோடு போச்சு...குலசாமி கோயில் போய் ரெண்டு வருஷம் ஆச்சு...சாமி குத்தமா இருக்கும்...அடுத்த வாரம் போய்ட்டு வந்துருவோம்..." என்று சொன்ன மாமியாரிடம்,
"ஆமாங்க அத்தை.. நானும் இவருக்காக எனக்கு மொட்டை போட வேண்டி வச்சுருக்கேன்...கண்டிப்பா போவோம்... என்று கூறியவளை ஏறிட்ட சரவணன் , 'வேண்டுதலை எல்லாம் தள்ளி போடக் கூடாது துர்கா…உடனே நிறைவேத்திடனும்…”என்றவனை வெறுமையுடன் பார்த்துவிட்டு நகர்ந்தாள் துர்கா.
கு. ஹேமலதா
தேனி
Comments
Post a Comment