நூல் : அல்லி முலை ஆனை மாடன்
ஆசிரியர் : கு. கு. விக்டர் பிரின்ஸ்ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மையமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவு 'அல்லி முலை ஆனை மாடன்'.
கு. கு. விக்டர் பிரின்ஸ், குமரி மாவட்டத்தில் பிறந்தவர். டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்ட இளங்கலை படித்தவர். இங்கிலாந்தில் சட்ட மேற்படிப்பை மேற்கொண்டவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். 'செற்றை', 'கள்ளி வெட்டிச்சாரி ', 'சிவந்த நட்சத்திரத்திற்குச் செவ்வணக்கம்', போன்ற சிறுகதைத்தொகுப்புகள் இவரது படைப்புகளாக 'சால்ட் பதிப்பகம்' வெளியிட்டுள்ளது.
சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் சாதிக் கொடுமை, பெண்கள் விஷயத்தில் சாதியின் அடிப்படையில் மட்டுமின்றி பாலின ரீதியாகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. இது உடல் மற்றும் மனரீதியான வன்முறைக்கு வித்திடுகிறது. ஒடுக்குமுறையை எதிர்க்க திராணி இல்லாத ஜடமாக பெண்களை நினைத்து செய்யும் தாக்குதல்களையும் அவமதிப்புகளையும் எதிர்க்க கிளம்பியவள் தான் அல்லி.
தென் தமிழகத்தில் வாழ்ந்த சாணார் சமூக மக்களுக்கு நடந்த அநீதிகளை பேசுகிறது இந்நாவல். தாழ்த்தப்பட்ட சாதியினராக கருதப்பட்ட அவர்களின் வாழ்வாதாரத்தில் இருந்து அச்சமூக பெண்கள் வரை அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். பனையேறியாக வாழ்ந்த அவர்களுக்கு கிடைக்கும் கருப்பட்டி மற்றும் வேறு பொருட்களை விலை நிர்ணயம் செய்யவோ, விற்கவோ அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. அது நாயர் சாதியினரின் கையில் இருந்தது. பனை அரசுக்கு சொந்தமானது என வரி போட்டது மட்டுமல்லாது, அச்சமூக பெண்களுக்கும் 'முலை வரி' என்ற சட்டத்தையும் விதித்தனர்.
திருவிதாங்கூர் மன்னரின் கருவூலத்தை நிரப்ப திவான் வேலுத்தம்பியின் இந்த அர்த்தமற்ற வரி விதிப்பை எதிர்க்க முடியாமல், அவனின் வன்மம் நிறைந்த கொடூரங்களை அனுபவித்தனர் மக்கள். அதில் ஒரு குடும்பம்தான் கரியனின் குடும்பம். முலை வரி கட்ட முடியாமல் கரியனின் மனைவி, மகள் முலைகள் வேலுத்தம்பியால் வெட்டி எறியப்பட்டது. இதில் உயிர்பிழைத்த அல்லி தன் குடும்பத்தை இழந்து, பல தடைகளை மீறி வேலுத்தம்பியை எவ்வாறு பழி வாங்குகிறாள் என்பதை விறுவிறுப்புடன் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
வேலுத்தம்பியின் சாதி வெறி அவனை ஆங்கிலேய அரசுடன் மோத வைக்கிறது. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கிருத்துவ மத போதனைகளை பரப்பும் ஆங்கிலேய போதகர்களை இரணியலுக்குள் விடாமல் செய்தது அவனை ஆங்கிலேய அரசுக்கு எதிராக திருப்பியது. தன் நண்பன் மெக்காலேவுடன் சேர்ந்து திருவிதாங்கூர் மன்னராக ஆட்சி செய்ய அவன் செய்த பிரயத்தனங்களுக்கு எதிராக கிளம்பியது நாயர் படை. இப்படியாக தலைமறைவாகி போன வேலுத்தம்பியை கொல்ல வெளிவருகிறாள் அல்லி. அதன் பின் ஆனை மாடனின் ஆட்டம் தொடங்குகிறது.
வேலுத்தம்பியைத் தேடும் படலத்தில், ஆங்கிலேய - பிரெஞ்சு படைகளுக்கு இடையில் நடக்கும் அரசியல் சூதாட்டம் சுவாரசியத்தை கூட்டுகிறது.
கதை ஆரம்பம் முதல் இறுதி வரை எவ்வித தோய்வும் இல்லாமல் நேர்கோட்டில் செல்கிறது. கதைக்களத்திற்கு ஏற்ற மொழிநடை என ஒரு நாவலுக்குரிய அனைத்து அம்சங்களும் ஏற்புடையதாக இருக்கிறது.
சமகாலத்தில் நடத்தப்படும் சாதிய கொடூரங்களின் உச்சத்தை அனுபவித்து இருக்கிறாள் அல்லி. அதன் நீட்சி இன்றும் தொடர்வது வேதனையின் உச்சம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியவர்களும், ஒரு அலட்சிய போக்குடன் அவர்களை கையாள்வது சாதி வெறி அரசியலை மேலும் வலுவாக்குகிறது. இன்றைக்கு நடக்கும் சாதி - ஆணவ கொலைகள் அதற்கு சாட்சியாக உள்ளது. அல்லியை போல் இன்னும் பல பெண்கள் சாதியின் பெயரில் சீரழிக்கப்படுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வாழும் அல்லிகள் ஆனை மாடன்களாக மாறித்தான் ஆக வேண்டும் என்று புரிகிறது.
Comments
Post a Comment