16 ஆவது தமுஎகச மாநில மாநாட்டில் ஆகமத்தின் பெயரால் அநீதி என்ற தலைப்பில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள் ஆற்றிய உரை...
ஆகமத்தை காரணம் காட்டி எப்படி கீழ்நிலை ஜாதியில் உள்ள மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் செய்த சனாதானிகளின் அநீதிகளை சட்டத்தின் அடிப்படையில் விவரித்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் கோயில்கள் உருவாகின. பின் பூஜைகளும் அர்ச்சகர்களும் வந்தனர். கோயில்களில் நடத்தப்படும் சடங்குகளும் சம்பிரதாயங்களும், கோயிலின் கட்டுமானம், கோயில் சிலைகளின் அளவுகள், கோயிலில் சிலைகளை எப்படி பிரதிஷ்டை செய்வது, அதன் வழிபாட்டு முறைகள், அபிஷேகங்கள், பிரசாதம் எனப் பல விஷயங்கள் சனாதனிகளால் தொகுக்கப்பட்டன. அப்படி தொகுக்கப்பட்டவைகளைத் தான் ஆகமங்கள் என்று சொல்லப்படுகிறது. இவை ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை என்பதால், இதில் எந்த ஆட்சேபனையும் நமக்கு கிடையாது.
ஆனால் இதில் 2 அநீதிகள் நடந்தன..
1. குறிப்பிட்ட கீழ்நிலை சாதியினர் கோவிலுக்குள் செல்லக் கூடாது.
2. அர்ச்சகராக பிற சாதியினர் இருக்கக் கூடாது.
இதில் ஒரு அநீதியை சட்டத்தின் துணைக் கொண்டு நாம் வென்று விட்டோம்.
1936 கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டமும், அதை தொடர்ந்து 1939 ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ராஜாஜி முதல்வராக இருந்த பொழுது இதற்காக Temple Entry Authorisation Act என்ற சட்டத்தை இயற்றியதாலும் அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உரிமையை நாம் பெற்றோம்.
ஆலைய நுழைவுக்கான போராட்டத்தில் முன்னோடியாக இருந்தது நாடார் சமூகம்.
1855 ஆம் ஆண்டு இதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. சாணார் (நாடார் ) இன மக்கள் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நடக்க அனுமதி கிடையாது. அவர்களது திருமண ஊர்வலத்தை தடுத்ததால், தங்களுக்கும் அத்தெருக்களில் நடக்க அனுமதி வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்தின் வழி 1860 ல் அதற்கு அனுமதி வாங்கி இருந்தாலும், அதை அமல் படுத்த முடியவில்லை.
அதேபோல் 1800 -1850 வரை நடந்த திரைசீலை போராட்டமும் நாடார் இன மக்களின் வரலாற்று முக்கியமான போராட்டமாக கருதப் படுகிறது. அன்றைய காலத்தில் நாடார் இனப் பெண்கள் மேலாடை அணிந்தால் நாயர் சமுதாய மக்கள் அதை கிழித்து எறியும் அநியாயம் நடந்துள்ளது.
இது போன்ற எதிர்ப்புகளுக்கு பயந்து அவ்வின மக்கள் பெரும்பாலானவர்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறினர். இஸ்லாமிய, கிருஸ்துவ மதத்தினருக்கு கோயில் தெருக்களில் செல்ல அனுமதியுண்டு என்பதுவும் ஒரு காரணம். இதில் இருந்து நாம் அறிந்துகொள்வது என்னவெனில் இந்து மதத்தை விட்டு மக்கள் வேறு மதத்திற்கு துரத்தியவர்கள் சனாதனிகள் தான் என்பதாகும்.
1893 ல் ராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதிக்கு கீழ் இருக்கும் கமுதி மீனாட்சி கோயிலுக்குள் நாடார் சமூக மக்கள் சென்றதற்கு 'purification ceremony' ரூ. 500 தண்டம் கட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
1899 ஆண்டு சிவகாசியில் நடந்த மிக கொடூரமான சம்பவம் தான் இதில் உச்சம். கோயில் பிரவேசத்தின் காரணத்தால் நாடார் இன மக்கள் 27 பேர் கொல்லப்பட்டனர். 700 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது.
1927 கன்னியாகுமரி சென்ற காந்தியை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. அவர் கடல் கடந்து சென்று வந்ததை அதற்கு காரணமாக கூறப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு சொந்தமான கோயில் என்பதாலும் அந்த நெருக்கடியை காந்தி சந்தித்தார். ஆனால் அவரே 1939 ஆலைய நுழைவு proclamation க்கு பின், அதே கன்னியாகுமரி கோவிலுக்கு செல்ல அனுமதி கிடைத்தது.
அதேபோல் 1934 ல் நாடார்களையும், பட்டியலினத்தவர்களையும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் மதுரை சென்ற காந்தி அக்கோயிலுக்குச் செல்லவில்லை.
அதே காலத்தில் மகாராஷ்டிராவில் காலாராம் கோயிலுக்குள் செல்ல அம்பேத்கார் அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
1939 ஆண்டு சட்டம் இயற்றினாலும் 1960 வரை அதை அமல் படுத்த பல தடைகளை உயர் ஜாதி மக்கள் உருவாக்கினர்கள். அதை உடைக்க 1960 ல் மிக முக்கியமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது.
கர்நாடகத்தில், கௌட சரஸ்வத பிராமணர்கள் நிர்வாகித்து வந்த ஸ்ரீ வெங்கட ரமண கோயிலில் வேறு ஜாதியினரை உள்ளே அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் தொடுக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் வழக்கில் article 25 2b, தனியார் நிர்வாகிக்கும் கோயில்களுக்கு செல்லாது என்றும், யார் எங்கள் கோயிலுக்குள் வரவேண்டும் என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம் என்றும் article 26b யை மையமாக வைத்து வாதாடினர். 5 நீதிபதிகள் கொண்ட இவ்வழக்கில் 25 2b articleக்கு கீழ் தான் 26b article வருகிறது என்ற ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதனால் தனியார் நிர்வகிக்கும் கோயில்களுக்குள் அனைத்து ஜாதியினரும் செல்லலாம் என்ற சட்டம் இன்னும் வலுவானது.
ஆனால் எத்தனை சட்டம் இயற்றினாலும் இன்றும் பல கோயில்களில் கீழ்நிலை சாதியினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை அறியும் பொழுது அதிர்ச்சியாக உள்ளது.
முதல் அநீதியை வெல்லவே இத்தனை வருடம் சட்டத்துடன் போராட வேண்டிய நிலை இருந்தது. இரண்டாவது அநீதியான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்பதை உடைக்க இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ என்ற கேள்வி தான் நம் மனதில் எழுகிறது.
இந்த விஷயத்தில் தமிழக, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் முயற்சியால் Hereditary appointment தடை செய்யப்பட்டது. 2006 யில் அனைத்து சாதியினரும் தகுதி இருக்கும் பட்சத்தில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையையும் வெளியிட்டார். அதற்காக அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் 25 2b article க்கு உள்ளே அரசாணை எடுபடாது என்பதால் சட்டமாக இயற்ற முடிவு செய்து அவசர சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் அந்த அவசர சட்டத்தை தடை செய்தது.
அதன் பின் வந்த ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முடிவை அமல் படுத்துவதற்குள் அதற்கு எதிராக 25 வழக்குகள் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், ஆகமம், ஆகமம் இல்லாத கோயில் என இரண்டாக பிரித்து, ஆகமம் இல்லாத கோயிலுக்கு வேறு சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்புக்கு தமிழக அரசு மேல் முறையீடு செய்யவில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டினார்.
அந்த தீர்ப்புக்கு பின்,ஆகமம் இல்லாத கோயில்களை பட்டியலிட ஐந்து பேர் கொண்ட கமிட்டியை நியமித்தது நீதி மன்றம். ஆனால் அதிலும் ஒன்றிய அரசுக்கு சாதகமான நபர்களையே நியமித்தது.
2006 ல் கலைஞர் கருணாநிதி எடுத்த முயற்சி இன்றும் முடிவடையாமல் இருக்கிறது. அந்த சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் வலுவாகவில்லை என்பதையும், அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தனது உரையை முடித்தார்.
ஒவ்வொரு சட்ட போராட்டமும் எந்த ஆண்டு நடைபெற்றது என்பதை குறிப்பிட்டு கூறியது மேலும் அதை பற்றி தேடி வாசிக்க உதவியாக இருந்தது. வரலாற்றின் பல நிகழ்வுகளை தெரியாமலே கடந்து வந்திருப்பதும் தெரிந்தது.
மேலும் மாநாட்டில் பல முன்னோடிகளின் உரைகளை கேட்கும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது புது அனுபவமாக இருந்தது. நன்றி.

Comments
Post a Comment