ஹேமலதா கு.
தேனி.

நூல் : ஒரு குச்சி ஒரு வானம்
ஆசிரியர் : முனைவர் மு.அப்துல் சமது

கோடை பண்பலையில் ஒலிபரப்பான முனைவர் அப்துல் சமது அவர்களின் உரைகளை கட்டுரைகளாக தொகுத்து வெளிவந்த நூல்.கட்டுரைகள் அனைத்தும் தகவல் களஞ்சியமாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் தகவல்கள் மட்டும் அல்லாது பல படிப்பினையையும் தருகிறது.

புத்தகத்தின் தலைப்பை கொண்டு எழுதிய முதல் கட்டுரையில், ஒரு குச்சியை ஆதாரமாக கொண்டு இனப்பெருக்கத்துக்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பார்ன் சுவாலோ என்ற பறவை பற்றி கூறியுள்ளார். ஒரு சிறு பறவையே ஒரு குச்சியை வாழ்வாதாரமாக கொண்டு பறக்கும் போது, ஐம்புலன்களும், ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போகும்? என்ற கேள்வியை நம் மனதில் ஆழமாக விதைக்கிறார்.முதல் கட்டுரையே தொடர்ந்து படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

நம் தேசத்தின் சமையல்கட்டாக விளங்கும் விளைநிலங்களின் இன்றைய நிலையையும், இயற்கை வேளாண்மையின்  உண்மை தன்மையையும் விளக்கியுள்ளார். 'இயற்கையில் கழிவு என்பதில்லை, சுழற்சி முறையில் அனைத்தும் பயன்பாட்டுக்கு உரியவைதான்' என்ற விதியை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் விளைநிலங்களை விஷமாக்கி மறுசுழற்சியை தடுப்பதை பற்றி வேதனையுடன் பதிவு செய்துள்ளார். நம் கலாச்சார பண்பாட்டில் விவசாயத்திற்கும், விவசாயிக்கும் வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் கொடுத்த 'சீர்திருத்தத் தண்டனை' புதுமையாக இருக்கிறது. நெருக்கடி காலங்களில் விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்க விதை நெல்லை கோயில் கோபுரங்களில் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதை விளக்கியுள்ளார்.குறைந்த காலப்பயிர் என பன்னாட்டு கம்பெனிகள் போட்ட ஆசை தூண்டிலில் நாம் மாட்டிக்கொண்டு இயற்கை விவசாயத்தை அழித்த நம்மவர்களுக்கு இக்கட்டுரைகளின் வழி ஆசிரியர் இடித்துரைத்துள்ளார். ஆசிரியரின் விவசாயத்தின் மேல் உள்ள விருப்பம் அதிகபட்ச கட்டுரைகளாக வெளிப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் இன்றைய கல்வி நிலையையும் விவரித்துள்ளார். அதோடு இளைஞர்களின் ஆற்றலின் சக்தியை எவ்வாறு ஆரோக்கியமாக, அறிவுபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும் என எடுத்துரைத்துள்ளார்.

இப்படியாக சகிப்புத்தன்மை, நன்றியுணர்வு, நேர்மை, கோவம், தியாகம், சுயநலம் என மனிதனின் ஒவ்வொரு குணத்தையும் பிரதிபலிக்கின்ற கட்டுரைகளை கொண்டுள்ளது இத்தொகுப்பு.

விவேகானந்தர், காமராசர், முத்துராமலிங்க தேவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, நெல்சன், ஹிட்லர், சே, மார்க்ஸ், ஐன்ஸ்டின் என  நம் நாடு மட்டுமல்ல வெளிநாட்டு அறிஞர்கள், தலைவர்கள் பலரின் வாழ்க்கை நிகழ்வுகளையும் தொகுத்து நமக்கு ஒரு பாடமாக இத்தொகுப்பை அளித்துள்ளார்.

1.நட்சத்திர குழந்தைகள்
2.இயற்கைக்கு திரும்பும் பாதை
3.ஒற்றை வைக்கோல் புரட்சி
என பல புத்தகங்களின் அறிமுகமும் இக்கட்டுரை தொகுப்பில் உள்ளது.

ஒவ்வொரு கட்டுரையிலும் இரண்டு சுவரசியாமான தகவல்களை கொண்டு எழுதியுள்ளார். அனைத்து கட்டுரைகளும் நமக்கு  ஒரு பாடத்தையும், பல தேடல்களையும் தருகிறது. கட்டுரையில் வரும் சில நிகழ்வுகளை இன்னும் விரிவாக அறிய ஆவலை தூண்டுகிறது. நன்றி உணர்வின் வெளிப்பாடாக இருந்த 'டின்டிம்' கட்டுரை கண்களை கலங்க வைத்தது. யூடியூபில் அதை காட்சியாக பார்த்தபொழுது மனதை கனமாக்கியது. பார்ன் சுவலோ பறவை, ஜப்பானின் தேசிய அவமானமாக கருதப்பட்ட மசாபுமி ஹோசனா, கால்பந்தாட்ட வீரர் ஜிடேனின் இன்டெர்வியூ என பலவற்றை இணையத்தில் தேடி பார்க்கும் ஆர்வத்தை கொடுத்தது.

'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்ற வாக்கியதுக்கிணங்க சிறு கட்டுரைகளாக இருந்தாலும் அதில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்கள் நம்மை என்றும் வழி நடத்த உதவுவதாக உள்ளது.நன்றி.

Comments