நூல் : சொல்லவே முடியாத 
             கதைகளின் கதை
ஆசிரியர் : ஆதவன்தீட்சண்யா

சமகால அரசியல், சமூகம், அதில் வாழும் மக்களின் அவலங்களையும், அதற்கு காரணமாக இருக்கும் சமூக காரணிகள் பற்றி வெளிப்படுத்தும் சிறுகதை தொகுப்பு.

இந்திய சுதந்திர  போராட்டத்தின் போது, புரட்சி இயக்கங்களின் போராளிகளை கலகக்காரர்களை போல் சித்தரித்து அவர்களை ஒடுக்கி, சித்ரவதை செய்து கொல்லுவதும், இந்து-முஸ்லீம் பிரிவினையின் போதும் பெரும் தலைவர்களே எவ்வாறு உடந்தையாக இருந்தனர் என்பதை உணர்த்திய கதை, 'இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை'. போராளியாக இருக்கும் ரஞ்சித், சிறையில் தான் எழுதிய கட்டுரைகளை புத்தகமாக்க, தன் தோழிகளான நந்தினி, லஜ்ஜாவதியிடம் சேர்ப்பிக்கிறான். அதை புத்தகமாக வெளியிட அவர்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இதற்கு நடுவில் இந்து -முஸ்லீம் பிரிவினையினால் நாடு பிரிக்கப்படுகிறது. ஒரு சூழலில் அந்த கட்டுரைகள் எரிந்து போனதாக நம்பப்படுகிறது. ஆனால் தன் இறுதி காலத்தில் நந்தினி, தான் பாதுகாத்து வைத்திருந்த ரஞ்சித்தின் கட்டுரைகளை மெஹருன்னிசாவிடம் கொடுக்கும் போது, ரஞ்சித்தின் கனவு மெய்ப்பட போகுதென்று நமக்குள்ளும் ஒரு ஆசுவாசம் பிறக்கிறது. இரு நாடுகள்  பிரிவதை விட, அதில் வாழும் இரு சமூகங்களுக்குள்ளும் இணக்கம் காணமுடியாத பகைமை விதைக்கப்படுவது மிகுந்த அச்சத்தை கொடுத்தது. இக்காலத்துக்கும் பொருந்துவது போன்ற உணர்வை தந்தது இக்கதை.

காலங்காலமாக பெண்களை உடல் மற்றும் மனரீதியாக சிதைத்து சிறுமைப்படுத்தி ஒடுக்குவதிலேயே தங்களது புனிதம் காப்பாற்றப்படுவதாக நினைத்து செயல்படும் சாதி, மத துவேஷத்தை தோலுரித்து காட்டும் ஒரு  திரைப்படமாக விரிகிறது 'கடவுளுக்கு தெரியாதவர்கள் ' கதை.
'ஆனந்தியம்மா' கதாபாத்திரம் மூலம் சாதி மத ரீதியாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சுட்டி காட்டியுள்ளார் ஆசிரியர்.ஆண்களை பார்க்க, பேச கூடாது என இளம் வயதிலே பெண்களுக்கு மொட்டை அடிப்பதும், விதவைகள், தன் வீட்டிலேயே  மற்ற ஆண்களுக்கு தாசியாகவும், வீட்டு வேலையாளாகவும் அடிமை படுத்தப்படுகின்றனர். இதே நிலையில் இருக்கும் ஆனந்தியம்மா, ஒரு நாவிதனோடு தன்னை பகிர்ந்து கொள்கிறாள். அதை தாங்கி கொள்ள முடியாத அவளின் சாதிய சமூகம் கல்லெறிந்து அவர்களை விரட்டியடிக்கிறது.

       'ஒரு பெண்ணின் மனதுக்கும் உடலுக்கும் அவளே எஜமானி. எதன் பேராலும் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை '
   
        -என்ற ஆனந்தியம்மாவின் நாட்குறிப்புவாசகம்,பெண்ணடிமைதனத்தை எதிர்க்கும் தந்தை பெரியாரின் வாசகமாகவே நம் மனதில் பதிகிறது. ஒரு குறிப்பிட்ட பிராமண சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எந்த சமரசமும் இல்லாமல் சுட்டிக்காட்டிய ஆசிரியரின் தைரியம்  அசாத்தியமானது.

ஒவ்வொரு பெண்ணும் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கும் சொல்லவே முடியாத தங்கள் சொந்த கதையை சொல்லும் கதை 'சொல்லவே முடியாத கதைகளின் கதை'. திருமணம், குழந்தை வளர்ப்பு என்று வெளியுலகம் அறியாமல் குடும்ப அமைப்பிற்குள் சிக்கி இருக்கும் பெண்களின் ஓராயிரம் கதைகள் உண்டு. அதை காது கொடுத்து கேட்பதற்கு ஆள் இல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்தே பழக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி அவை வெளிப்படும் போது, அதை புரிந்து கொள்ளாத தன்மையை கொண்டது தான் இந்த ஆணுலகம். பெண் விழித்து கொள்ளக்கூடாது என்று கல்வி மறுக்கப்பட்டு, சுயமரியாதை பறிக்கப்பட்டு ஆணின் நிழலில் வாழும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். ஒவ்வொரு துயரமான சூழலையும் கடந்து வந்து ஒரு நல்ல நிலையில் தன்னை நிலைநிறுத்தி கொண்டாலும், 'நாலெழுத்து படித்தாலே பொம்பளைக்கு திமிர் வந்துவிடும் 'என்ற கருத்தையே மனதில் பதிய வைக்கும் சமூகத்தில் வாழ்வது வெட்கக்கேடானது என உணர்த்திய கதை.

'பசுமை இந்தியா', 'தூய்மை இந்தியா' என்று நாட்டை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என்று பிரதமர் மோடி துவக்கி வைத்த 'ஸ்வச் பாரத்' திட்டத்தை பகடி செய்து எழுதி இருக்கும் கதை, 'கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்'. இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐமில் ஆதிக்க சாதியினர் மட்டுமே பயிலமுடியும் என்ற பிம்பத்தை உருவாக்கி, மற்ற சாதியினரை உள்ளே நுழைய விடாமல், சாதி மற்றும் பொருளாதார ரீதியாக கல்வியையும், கல்விக்கூடங்களையும் அரசியலாக்கி அராஜகம் செய்வதை சுட்டி காட்டியுள்ள கதை. நுழைவு தேர்வு என்ற பெயரில் ஏழை மாணவர்களின் கனவை நசுக்க நினைக்கும் ஆட்சியாளர்களின் முகத்திரையை கிழிக்கிறது இக்கதை.  மேல்சாதியினர் மட்டும் ஏதோ தேவதூதர்களை போலவும், அவர்களுக்கு மட்டுமே கல்வி,வேலைவாய்ப்பு என்று அனைத்திலும் அவர்களுக்கு முன்னுரிமை இருப்பதாகவும், மற்ற சாதியினர் தங்கள் குலத்தொழிலை செய்தால் போதும் என்று ஒடுக்குவுது அராஜகம்.சாதியின் அடிப்படையில் 'இடஒதிக்கீடு' இருந்த காலம் போய், இன்று பொருளாதார ரீதியாகவும், யார் படிக்க தகுதியானவர்கள் என்ற வரையறையை அரசே செய்வது வேதனை.

இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள், பழமைவாதம், அதில் ஒடுக்கப்படும் எளிய மனிதர்களின் ரணங்கள், இன்றைய ஆட்சியாளர்களின்அடக்குமுறை அரசியல் என அனைத்தையும் எதிர்த்து தன் எழுத்தின் வழி குரல் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். கதைகள் எதுவும் நேர்க்கோட்டில் இல்லாததால் படித்து உள்வாங்க மிகவும் சிரமமாக இருக்கிறது.'இப்பொழுதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் 'என்று  மேம்போக்காக சொல்லு இன்றைய சமூகத்தின் மனநிலையை சாட்டையால் அடிப்பது போன்ற உணர்வை தந்தது இந்த சிறுகதை தொகுப்பு. நன்றி.

Comments