அமெரிக்காவில் வாழும் இந்திய பெண் பொம்மி...இரு குழந்தைகளுக்கு தாய்.தன் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையாமல், தன் தோழிகளின் நிலையை ஒப்பிட்டு, அவர்களை போன்று வீடு, கார் என்ற சராசரி வாழ்க்கை வாழ விரும்பும் பெண்.அதை அடைய அவள் எடுக்கும் முடிவுகள், அதனால் அவள் சந்திக்கும் இன்னல்கள் என கதை செல்கிறது.

தன் கனவை நிறைவேற்ற தன் குழந்தைகளை இந்தியா அனுப்பிவிட்டு, மருத்துவ துறையில் ஒரு வருட படிப்பு படிக்கிறாள்.மருத்துவர், நோயாளி இடையே இணக்கத்தை ஏற்படுத்தும் நிர்வாக ஏஜெண்டாக பணியில் சேர்கிறாள். அங்கு நடக்கும் நெட்ஒர்க் சேவையில், 'நோயாளிகளை எப்படி இரட்டிப்பாக்குவது', 'நோய்களின் கடுமையை எப்படி நீடிக்க செய்வது', 'நார்மலானவர்களை மருத்துவ இன்ஷுரன்ஸ் எடுக்க வைப்பது'என்ற அவர்களது கார்ப்பொரேட் மருத்துவ வணிகம் அவளுக்கு உவப்பாக இல்லை.ஒரு மாத வேலையின் பளுவில் ஆசுவாசபட  நினைக்கும் வேளையில், தன் குழந்தைகளின் நடத்தை மாற்றத்தை பற்றி அவர்களது பள்ளியில் இருந்து அழைத்து கண்டிக்கின்றனர்.

குழந்தைகளின் இயல்பான செயல்களை நோயாக கருதி அதற்கு சிகிச்சை என்ற பெயரில் அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் மருத்துவ உலகமும், அதற்கு உறுதுணையாக  இருக்கும் பள்ளிகளும்,  எவ்வாறு அவர்களுக்குள் பிணைத்து மருத்துவ வணிகமாக மாற்றுகிறார்கள் என்ற உண்மை முகத்தை உணர ஆரம்பிக்கிறாள் பொம்மி.இதுவே கதையின் மைய கருவாக உருவாகி பொம்மியை 'சராசரி வாழ்க்கை' என்ற அவளின் பார்வையில் இருந்து விலக வைக்கிறது.பின் அவள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அனைத்து பெற்றோருக்கும் பாடமாக அமைகிறது.

இன்றைய காலகட்ட குழந்தைகளின் மனநிலையை  சங்கமி - சத்வா மூலம் ஆசிரியர் உணர்த்தியுள்ளார். எந்த காரியம் செய்வதற்கும் 'reward' என்ற பெயரில் அவர்கள் வாங்கும் லஞ்சம், வீடியோ கேம்களில் மூழ்குவது,தன் நண்பர்களுடனேயே போட்டி, பொறாமை, பெற்றோரிடம் பிடிவாதம் என அனைத்தும் இன்றைய காலகட்ட குழந்தைகளை  பிரதிபலிக்கிறது.அவர்களின் பிடிவாத போக்கினை தடுக்க பொம்மி எடுக்கும் ஒவ்வொரு செயலும் நமக்கும் ஒரு உத்வேகத்தை தருகிறது.

கதைகளம் அமெரிக்கா என்பதால் சிறிது  அந்நியமாகபட்டாலும், கதை மாந்ததார்களின் உணர்வுகளை கடக்கும்போது, மனித உணர்ச்சிகள் எந்நாட்டிலும் ஒன்றுதான் என்பதை உணர முடிகிறது. கதை தொடக்கத்தில் பொம்மியிடம் இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் போது அது நமக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

மருத்துவ வணிகம் மட்டுமல்லாது உலக வணிகமயமாக்குதல் பற்றிய விழிப்புணர்வும் ஆசிரியர் இக்கதையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பொம்மி-சரவணப்ரியாவின் நட்பில் மெலிதாக இழையோடிய அவர்களது அன்பை உணர முடிந்தது. கதை ஆரம்பத்தில் அவர்களை அறிமுகப்படுத்த, அவர்களின் உரையாடல் மூலமே ஆசிரியர் கையாண்டிருப்பது புதுமை.

சமுதாயத்தில் மேல்மட்டத்தினர் தங்கள் ஆதாயத்திற்காக மற்றவர்களுக்கு நிர்ணயித்த வாழ்க்கை நெறி தான்  'சராசரி' என்ற ஆசிரியரின் கூற்று வெகு நிதர்சனம்.சமுதாயத்தின் 'சராசரி' கோடுகளுக்குள் கோட்டை கட்டி வாழ்வதே சந்தோஷம் என்ற மனநிலையில் வாழும் அனைவருக்கும் இந்நாவல் ஒரு பாடம்.

சிறு வயதில் இலக்கியத்தின் மீது காதல் கொண்ட பொம்மி, தன்னுடைய தனித்துவத்தை உணர்ந்து கட்டுரை எழுத ஆரம்பிக்கும் தருணம்,ஒவ்வொரு பெண்ணும் தன்னை உணர்ந்து கொள்ளும் தருணம்.  கணவன், குழந்தைகள், வீடு, கார் என்று  வாழ்தலே இந்த சமூகத்தில் கிடைக்கும் பெரிய அந்தஸ்தாக நினைக்கும் இன்றைய பெண்களின் சராசரி மனநிலையை உடைத்து, அவர்களின் தனித்துவத்தை வெளி கொண்டுவர வேண்டும் என்ற உத்வேகத்தை இந்நாவல் கொடுக்கிறது. நன்றி.

Comments