கன்னித்தீவு நாவல் விமர்சனப் போட்டி

Hemalatha G.
Theni.

கன்னித்தீவு.. நான் படித்த முதல் மானுடவியல் நாவல். அந்தமான் தீவுகளில் மாட்டிக் கொள்ளும் ஒரு கர்ப்பிணி பெண்ணை சுற்றி நடக்கும் கதை. அங்கு வாழும் பழங்குடி இன மக்களின் பழக்கவழக்கங்கள், இயற்கையை புரிந்து அதனுடன் இணைந்து வாழும் அவர்களின் வாழ்வியல் முறை என கதை முழுதும் இயற்கையை பின்னி பிணைந்து கொண்டு செல்கிறது.பார்வதி, மரியா என இரு பெண்களை மையமாக கொண்டு கதை செல்கிறது.

சாதியை கடந்து, பெற்றோர்களை எதிர்த்து திருமணம் புரிந்த காதல் தம்பதி முருகன்-பார்வதி.கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் பார்வதி தேர்தல் வேலைக்காக 'ஓங்கே' பழங்குடியினர் வாழும் தீவு பகுதிக்கு செல்கிறாள். அவ்வேளையில் ஏற்படும் எதிர்பாராத புயலில் சிக்கி, மனித வாசத்தையே வெறுக்கும் 'லெமூரியர்கள்' என அழைக்கப்படும் வேறு ஒரு இனக்குழு வாழும் தீவில் கரை ஒதுங்குகிறாள்.அங்கு இருந்து அவள் தப்பித்து தன் கணவனுடன் எவ்வாறு  சேரப்போகிறாள் என்பதே கதை.கதை  முழுவதும் பார்வதியின் பார்வையில், நகர்கிறது.

திக்குத்தெரியாத காட்டில் வழி தப்பிய மனநிலையில் அத்தீவில் மாட்டிக்கொள்ளும் பார்வதிக்கு, இன்னொரு தாயாக மரியா என்ற பழங்குடி பெண் அடைக்கலம் தருகிறாள்.ஒரு தோழியாக கதை நெடுகிலும் அவளுக்கு உற்ற துணையாக இருக்கிறாள். தன் மனம் விரும்பியவன்,
விருப்பமில்லாமல் பார்வதியை அடைய துடிக்கும் போது எந்த யோசனையும் இல்லாமல் அவனை அழித்திடும் இடத்தில் ஒரு பெண் தெய்வமாகவே விளங்குகிறாள். இவ்விரு பெண்களின் அன்பு ஒரு தெளிந்த நீரோடையாக திகழ்கிறது.

பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு,காற்று,வான் என கதையை ஐந்து பகுதிகளாக பிரித்து கதையின் போக்கை அதனுடனேயே பயணப்படுவது புதுமை.

கணவனின் அருகாமை இல்லாமல் இருந்தாலும், அவள் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்திலும், தன் கணவனின் நினைவுகளையும் கோர்த்து அவனுடன் மனதளவில் உரையாடியபடி காலத்தை கழிக்கும் பார்வதியின்   உண்மை காதலை உணர முடிகிறது. அவ்வுரையாடல்களில் மெலிதாக இழையோடும் காமம் வெகுவாக ஈர்க்கிறது. அவளின் ஒவ்வொரு இக்கட்டான நிலையிலும் சஷ்டி சொல்லுவது ஒரு சாமானிய பெண்ணின் நிலையை காட்டுகிறது. சூழலுக்கேற்ற சஷ்டிவரிகளை தேர்ந்தெடுத்து போட்டிருப்பது 'ஆஹா' போட வைக்கிறது.

அந்தமான் தீவுகளை பற்றிய பல புதிய தகவல்களை ரசூல் என்ற கதாபாத்திரம் மூலம் விளக்கியது  அந்தமானின் வரலாற்றை ஓரளவு அறிய முடிகிறது. தான் செய்த ஒரு பிழையால் பார்வதிக்கு ஏற்படபோகும் இன்னல்களை நினைத்து  குற்றவுணர்ச்சியோடு கடக்கும் போதும், அதற்கு பிராயச்சித்தமாக பார்வதிக்கு ஒரு பாதுகாவலரை போல் இருந்து காக்கும் ரசூல் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.

இந்நாவலில் குறிப்பிடும் படியாக உள்ள மற்றொரு விஷயம் லெமூரிய பழங்குடியினரின் வாழ்க்கை முறை. தங்கள் இடத்தில் அந்நிய மனிதர்களின் காலடி படாமல், இயற்கைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த கேடுகளையும் அண்ட விடாமல், கோபம், கருணை என்ற இரு நிலை வாழ்வியலோடு வாழ்வது
சாமானிய மக்களுக்கு ஒரு பாடமாக உள்ளது.இயற்கை பேரழிவான சுனாமி வருவதற்கு முன்பே அதன் அறிகுறி அறிந்து தங்களை தற்காத்து கொள்வதை அறியும் போது 'ஆறறிவு' கொண்டவன் மனிதன் என்ற கோட்பாடு அவர்களுக்கே பொருந்தும்.பழங்குடிகளை மனித இனமாகவே கருதாத, 'நாகரிக மக்கள்' என்ற திமிரான போர்வையோடு  வாழும் நமக்கு ஒரு சாட்டையடி கிடைக்கிறது.

 கதையின் காலம் 15 வருடங்கள் முன் நடப்பதால், அன்றைய அரசியல் களம், சாதிய மனோபாவம், சுனாமி, என பலவற்றை நமக்கு rewind காட்சிகளாக தருகிறார் ஆசிரியர்.சுனாமி சீற்றத்தின் காட்சியை ஆசிரியர் விவரித்த இடம்,நம்மையும் அவ்விடத்திற்கு இட்டுச்சென்று பய உணர்வை தருகிறது.

மனித வாடையே விரும்பாத லெமூரியர்கள் பார்வதியை மட்டும் ஏற்றுக்கொள்வதும், ரசூலின் வேண்டுகோளுக்கிணங்க ரத்னம் அரசாங்கத்திடம் இருந்து வானிலை அறிக்கையை மறைப்பது போன்றவை நம்பகத்தன்மையாக இல்லை.   கதையில் ஒரு பகுதியாக வரும் இயற்கை பிரசவத்தை வெகு நுட்பமாக விவரித்த ஆசிரியர் பின்குறிப்பாக, 'இயற்கை பிரசவத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை' என்று எழுதி இருந்தது சற்று நெருடல்.நம் வாழ்வில் உயிர் வாழ்தலைப் போல் ஒரு இயல்பான இயக்கம் தான் கருவுறுதலும்,பிரசவமும். அதை  இன்றைய நவீன மருத்துவம் நோயாக பார்ப்பதன் விளைவாக ஏற்படும் மருத்துவ வணிகம் அலாதியானது. அனைத்திலும் விஞ்ஞானம் தேடுபவன் மனிதனில் இருக்கும் இயற்கையை அறிய முற்படுவதில்லை.

//இந்தியாவில் இஸ்லாமியர்கள் தம் நாட்டுப்பற்றை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் //

//சாதிய சூதாட்டத்தில் முற்போக்கு என்பது ஒரு முகமூடி //

போன்ற வரிகள் எக்காலத்திலும் பொருந்தும் வண்ணம் இருந்தது.

சந்தோஷ் நாராயணின் அட்டைப்பட ஓவியம் தலைப்புக்கேற்று மிக அழகு.

கதைக்களம் மிகவும் சுவாரசியமான இடமாக உள்ளதால் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு புது அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது. ஒரு திரைப்படத்திற்கு உரிய அனைத்து அம்சங்களையும் கொண்டு, மிக நேர்த்தியாகவும்,விறுவிறுப்பாக கதையை கொண்டு செல்கிறார் ஆசிரியர்.கடலின் உப்புவாசத்தோடும், பிசுபிசுப்போடும் அத்தீவில் வாழ்ந்த அனுபவத்தை தருகிறது இந்நாவல். நன்றி.

Comments

  1. //கடலின் உப்புவாசத்தோடும்,பிசுபிசுப்போடும் அத்தீவில் வாழ்ந்த அனுபவம்//

    அருமையான பதிவு, உங்களின் விமர்சனத்திற்கே வாசிக்க வேண்டும் என்ற ஆவலை எழ வைக்கின்றீர்கள். வாழ்த்துகள் 💐

    ReplyDelete

Post a Comment