நூல் : பொன்னி
ஆசிரியர் :ஷான் கருப்பசாமி

நீண்ட நாளுக்கு பின் வாசித்த முழு திரில்லர் நாவல்.தங்கம், என்ற மதிப்புமிக்க மஞ்சள் உலோகத்தை எடுக்கும்  கோலார் தங்க வயல் சுரங்க தொழிலர்களின் வாழ்க்கை அவல நிலையும், சுரங்க பணிகளின் போது ஏற்படும் மரண விபத்துகளில் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என விரிவாக எடுத்துரைக்கும் நாவல்.

 சரித்திர நாவலோ என எண்ணி  கதையை  படிக்க ஆரம்பித்தேன்.  ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பிக்கும் போதும் தமிழ் பிராமி எழுத்துக்களை பார்த்ததும் பிரமிப்பாக இருந்தது. ஆனால்
கி. பி. 2ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் கதை, 1940 கடந்து, 2018 ல் இன்டர்நெட் யுகத்தில் வந்து நிற்கிறது.கதை பல்வேறு காலகட்டத்தில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுக்கும்  பயணிக்கிறது.

கி. பி. 2 ஆம் ஆண்டில் தொடங்கும்  கதை, ஒரு சத்தியத்துக்காக, தங்கத்தால் நிறைந்து இருக்கும் கண்ணகி சுணை பகுதியை, தங்கள் தலைவன் வரும் வரை  பாதுகாக்கும் இரணிய சேனையின்  பலத்தையும், அவர்களின் விசுவாசத்தையும் விவரிக்கிறது.

நாவல் மூன்று காலக்கட்டத்தில் நடந்தாலும், 1940ல், கே.ஜி. எப்.க்கு தங்கத்தை தேடி வரும் பிரிட்டிஷ் இளைஞன் ஜேம்ஸ்க்கும், உள்ளூர் பெண் செல்லம்மாவுக்கான காதலை விவரிக்கும் பகுதி மிக உயிரோட்டமாகவும் கதையின் ஆரம்ப புள்ளியாகவும் இருக்கிறது. இரணிய சேனையின் ஒரு அங்கமாக இருக்கும் செல்லம்மா, ஜேம்ஸை தங்கள் கண்ணகி சுணையின் பக்கம் தங்கத்தை தேடி வரவிடாமல் இருக்க, அவனை விரும்புவது போல் நடிக்க ஆரம்பித்து, அவனின் நல்லியல்பால் கவரப்பட்டு, விரும்ப ஆரம்பிக்கிறாள்.இரணிய சேனையால் ஜேம்ஸ்க்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரும் என உணர்ந்த செல்லம்மா, அவனை காப்பற்ற எந்த எல்லைக்கும் செல்ல துணிகிறாள்.காதலா, கனிமமா என வரும் போது காதலே ஜெயிக்கிறது.ஜேம்ஸ் கண்ணகி சுனையில் தங்க நக்கெட்களை கண்டுபிடித்தும், இரணிய சேனையின் முட்டுக்கட்டையால், அதன் பயனை அடைய முடியாமல் தன் நாட்டுக்கு செல்லம்மாவுடன் திரும்பி  செல்கிறான்.

தன் பாட்டி செல்லம்மாவின் கனவை நிறைவேற்ற புறப்படும் புதுமை பெண்ணாக 'பொன்னி'தன் சொந்த ஊரான கோலார் தங்க வயலுக்கு, தங்கத்தாது இருக்கும் இடத்தை கண்டறியும் நிபுணன்  சக்தியுடன் வருகிறாள்.தன் 'ஆதி  மைன்ஸ் 'நிறுவனம் மூலம் அரசு அனுமதியுடன் தங்கம் தோண்டி, அதை அனைத்து சுரங்க தொழிலாளர்களையும் பங்குதாரராக வைத்து, அவர்களின் வாழ்க்கை பொருளாதார நிலையை  உயர்த்த நினைத்த தன் பாட்டியின் கனவை நிறைவேற்றினாளா என்பதே மீத கதை. அவள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அசாத்தியமானது.

கதை நாயகி பொன்னியை விட அவள் பாட்டி செல்லம்மாதான்  மனதில் நிற்கிறாள். செல்லம்மாவின் தைரியம், எடுத்த காரியத்தை  செயல்படுத்தும் பிடிவாதம், ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் மார்ட்டின் மீது கொண்ட ஆழமான காதல்  என எல்லாவற்றிலும் நம் மனதில் முதல் இடத்தை பிடிக்கிறாள். பொன்னி, சிவாவின் காதல் மனதில் ஒட்டவில்லை. கதையின் பாண்டஸிகாக  சிலபல நிகழ்வுகளை சேர்த்தது, தேவையில்லாத ஆணியாகவே தோன்றுகிறது.
கதையில்  பழனி, கதிரவன், ஏஞ்சல் எலினா, வைஜெயந்தி  போன்ற  கதாபாத்திரங்கள்  கதையை தொய்வில்லாமல் செல்வதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

பகட்டுக்காக நாம் அணியும் தங்கத்துக்காக  தன் வாழ்க்கை, உடல் உறுப்புகளை தொலைக்கும் சுரங்க தொழிலர்களின் நிலையை எண்ணி மனம் பதைபதைக்கிறது. ஆசிரியர், சுரங்க அமைப்பு, அதன் தன்மை  முதற்கொண்டு
விளக்கி எழுதியுள்ளார். அதற்காக அவர் திரட்டி தந்திருக்கும் விவரங்களுக்கான உழைப்பு அசாத்தியமானது. கே. ஜி. எப். பற்றி இதுவரை அறிந்திராத எனக்கு, அதன் வரலாற்றை அறிந்து கொள்ள கூகிளில்  தேடி தேடி படிக்கும்  ஆர்வத்தை தூண்டியது.ஆவாரம்பூ அதிக அளவு இருக்கும் இடத்தில் தங்கம் இருக்கும் என்பது எனக்கு புதிய செய்தியாக இருந்தது.

//ஒவ்வொரு பவுன் தங்கமும் குறைஞ்சது ஒரு மனுஷனையாவது கொன்னுட்டு தான் மண்ணுக்கு மேல வருது //

//கீழே போனால் பொணம், மேலே வந்தால் பணம் //

//இறந்தது யார் என்று தெரியும் வரை அத்தனை பேரும் பொதுவாக அழுது கொண்டு இருப்பார்கள். தெரிந்த பிறகுதான் இறந்தவர்களுக்காக அழுவார்கள். ஆட்கள் மாறுவார்கள், அழுகை மட்டும் மாறாது. //
       
        போன்ற வரிகளில் உள்ள வலியை நம்மால் உணர முடிகிறது.

நாவல்,  ஒரு திரைப்படத்துக்கு உரிய திரைக்கதையை கொண்டது போல் இருந்தது. தங்கத்தை பற்றிய ஆராய்ச்சி ஆவணம் போல் எழுதியிருந்தாலும், கையில் எடுத்த நாவலை கீழே வைக்க முடியாத அளவு விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் ஆசிரியர்.இரணிய சேனையின் தலைவன் வருகையை 2ஆம் பாகமாக வரும் என்ற ஆர்வத்தையும் தூண்டி விட்டு கதையை முடிக்கிறார். இரணிய சேனையின் தலைவனை காண ஆவலாக காத்திருக்கிறேன். நன்றி.

Comments