'இது யாருடைய வகுப்பறை..?'
ஆயிஷா இரா.நடராசன்

கல்வியின் வரலாறு,மாணவர்களின் உளவியல், மாணவர்-பெற்றோர்-ஆசிரியர் உறவுமுறை,கல்வி சம்பந்தமான சட்டங்கள்,அயல் நாட்டுக் கல்விமுறைகள் என பல்வேறு விஷயங்களை பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

தொழிற்புரட்சியின் போது தொழிலாளர்களின் குழந்தைகளை 'அடைத்து' வைக்கவே பள்ளி எனும் அமைப்பு உருவாகியது.நமது ஆதி கல்விமுறையான குருகுலம்,திண்ணைப்பள்ளி,மதராஸா போன்றவற்றை அழித்து  கிருஸ்துவ மிஷினரிகளின் ஆங்கில கல்வி எப்படி ஆக்கிரமித்தது என விளக்கியுள்ளார்.மெக்காலே வரும் முன்னரே இந்தியாவில் ஆங்கில கல்வி வேரூன்றி இருந்திருப்பது நாம் எந்த வரலாற்றுப் பாடத்திலும் படிக்காத ஒன்று.பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் கூட வரவிடாமல் ஆங்கில கல்வியை பரவ விட்டு,'இந்தியர்களுக்கு சிந்திக்கும் திறன் கொண்ட கல்வி தேவையில்லை,தங்களது அறிவை தாண்டாமல் சேவகர்களாக இருந்தால் போதும்' என முடிவுசெய்து இந்திய கல்விமுறையை மாற்றியது.

'கல்வி தேவை,ஆசிரியர் தேவையில்லை' என்ற ரூசோ வின் கல்விமுறையும், 'பள்ளி,ஆசிரியர் தேவை' என்ற டூயிவின் வாதமும் Education and Schooling யை வேறுபடுத்தி காட்டுகிறது.

'ஒரு குழந்தையின் அறிவுநிலை என்ன என்பதை நாம் முதலில் ஏன் பரிசோதிக்க வேண்டும்?' என்ற கேள்வி சிந்திக்க வைக்கிறது.ஒரு குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்த விபரம் தெரிகிறதா என்பதே கல்வியின் அளவுகோள்.ஆனால் அதை தியரியாக எழுத தெரிந்துள்ளதா என மதிப்பீடு செய்வது இந்திய கல்விமுறையின் அவலம் ஆகும்.அயல் நாடுகளில் paperless education முறையை சாத்தியமாக்கி கொண்டிருக்கையில் நம் பிள்ளைகள் புத்தகம்,கைடு என தூக்கி சுமந்து தியரிகளுடன் மல்லுகட்டுகின்றது வேதனை அளிக்கிறது

கல்வி உளவியலை கற்பவர்,கற்கும் முறை,கற்கும் சூழல் என மூன்று வகையாக பிரித்து,இதன் மூலம் மாணவர்களின் உளவியலையும்,ஒரு அறிவியல் ஆசிரியருக்கு அறிவியலும் தெரிய வேண்டும்,அதை கற்கும் மாணவனையும் தெரிய வேண்டும் என விளக்கியுள்ளார்.குழந்தை பருவம் முதல் குமார பருவம் வரை மாணவர் உளவியலை மூன்றாக பிரித்து விரிவாக விளக்கியுள்ளார்.இதை படிக்கும் போது நம் குழந்தைகளின் வயதுக்கேற்ற உளவியலை புரிந்து கொள்ள முடிகிறது.

கற்றல் என்றால் என்ன?அது வகுப்பறையில் மட்டும் நடப்பதல்ல ,கற்றல் என்பது பேசும்மொழி,பழக்கவழக்கம்,கொள்கை ,லட்சியம்,ஆளுமை குணம்,புலன்காட்சி என அனைத்திலும் கற்றல் இருக்கிறது எனவும் இதை தான் கல்வியில் உலகில் தலை சிறந்து விளங்கும் சுவட்சர்லாந்து,பின்லாந்து,கியூபாவில் பின்பற்றுகிறார்கள் என விளக்கியுள்ளார்.இங்கு பள்ளி இறுதி தேர்வு இல்லாமல் ராணுவம்,போக்குவரத்து,தபால்துறை,இயற்கை பேரிடர் மீட்பு பணி என வாழ்க்கை செயல்பாடாக பயிற்சி அளிக்கிறார்கள்.அயல்நாட்டு பாடமுறைபடி ஒவ்வொரு வகுப்புக்கும் மாணவர்கள் அறை மாறுகிறார்கள்.ஒவ்வொரு பாடத்திற்கும் தனி அறையில் நிரந்தரமாக ஆசிரியர்கள் உள்ளனர்.நம் குழந்தைகள் வருடம் முழுவதும் ஒரே அறையில்,ஆசிரியர்கள் மட்டும் மாறி மாறி வந்து போகிறார்கள்.ஏதோ சிறையில் அடைபட்டு கிடப்பது போல் நம் குழந்தைகளின் நிலை உள்ளது.பின்லாந்து கல்விமுறையில் குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்கிறார்கள்.அங்கு அனைத்துமே அரசு பள்ளிகள்.பள்ளியின் பல விஷயங்கள் நம்மை கவர்கிறது.வகுப்பறை கட்டமைப்பு முதல் கொண்டு நூல் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

தூண்டல் துலங்கல் கோட்பாடு மூலம் குழந்தைகளின் கற்றல் எப்படி ஏற்படுகிறது,அவர்களுக்கு பாடப்பொருள் நிலையான முழுதும் புரிந்துகொள்ள என்ன செய்வது,கற்றதை மறக்காமல் இருக்க என்ன செய்வது, trial and error முறைபடி கற்றால் பல தவறுகள் புரிந்து பின்னர் பயிற்சியின் காரணமாக சரியாக கற்பது, எவை positive reinforcement மற்றும் negative reinforcement என பல விஷயங்களை எளிமையாக புரியும்படி விளக்கியுள்ளார்.

கல்வியும் ஒழுக்கமும் இரண்டு கண்கள் என எந்த கல்வி உளவியலும் சொல்லவில்லை என்றும்,ஆனால் இதை வைத்தே பள்ளிகளில் பல விதிகள் உருவாக்கி குழந்தைகளுக்கு வகுப்பறை மீதான வெறுப்பை விதைக்கிறார்கள்.

பெற்றோர்-குழந்தைகள் உளவியலில்..பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சொத்தாக,love objectயாக,செல்லப்பிராணியாக,ஆடம்பர அலங்கார சாதனமாக,தங்கள் வாழ்வின் ஒரே நோக்கமாக கருதி மொத்த பாரத்தையும் குழந்தைகள் மீது திணிக்கும் கொடுமைகளை விளக்கி இதனால் குழந்தைகளின் இயல்பு நிலை எவ்வாறு மாறுகிறது என்றும் விவரித்துள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் சந்திக்கும் பெரிய சவால் மாணவர் மீதான பெற்றோர் எதிர்பார்ப்பு,அதிகாரிகளின் அழுத்தம்.இவ்விரு பிரச்சனைக்கும் நடுவில் மாணவரின் நடத்தை முரண் அனைத்தும் ஆசிரியரை நோக்கியே குற்றம் சுமத்துவது இப்பொழுது நடைமுறையில் உள்ளது.இதனால் ஆசிரியர்கள் குரலற்ற,வலிமை குறைந்தோராக உணரும் அவலம் ஏற்பட்டுள்ளது.மாணவர்-ஆசிரியர் தங்களை ஒருவருக்கு ஒருவர் புறக்கணிப்பது இயற்கைக்கு முரணானது ஆகும்.

இப்புத்தகம் கல்வி குறித்த பல கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கிறது.நூல் ஆசிரியரின் கடும் உழைப்பினால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது.கல்வியின் வரலாறு முதல் இக்கால கல்வி வரை ஆராய்ந்து எழுதி உள்ளார்.இப்புத்தகம் நம் எதிர்கால சந்ததியினரின் கல்வி முறையினை மாற்றக்கூடிய புத்தகமாக அமையும்.நன்றி.

Comments