ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்...

உலக புகழ்பெற்ற அறிவியலறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங்கின்  வாழ்க்கை வரலாறும், அடிக்கடி அவரிடம்  கேட்கப்பட்ட  'ஆழமான கேள்விகளுக்கு' அவர் அளித்த கருத்துகளையும் ஒரு தொகுப்பாக கொண்ட நூல். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் ரகசியத்தையும் இந்த ஒரு புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது.

நாம் அறியாத அவரது பால்ய கால நிகழ்வுகளில் இருந்து ஆரம்பித்து அவரது  மாணவ பருவம், அவரது பெற்றோர்,  ஆசிரியர்கள்  மூலம் அவருக்கு ஏற்பட்ட தூண்டுதல், அறிவியல் மேல் அவர் கொண்ட ஆழமான பற்று, அவரது ஆராய்ச்சிகள் என பல தகவல்கள் இப்புத்தகத்தில் கொட்டிக் கிடக்கிறது.அவரது 'A brief history of time'  புத்தகத்தை வாசிக்கும் போது அதில் உள்ள இயற்பியல் வார்த்தைகளை உள்வாங்க முடியாமல் திணறி பாதியில் விட்ட அனுபவத்தால், இந்த புத்தகமும் அப்படித்தான் இருக்குமோ என்று நினைத்து வாசிக்க துவங்கினேன். ஆனால் வாசிக்க மிக எளிமையாகவும், நன்கு புரியும் விதம் இருந்தது.

முதல் கேள்வியே மிக சுவாரசியமான கேள்வியாக அமைந்துள்ளது... 'கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? '
        "பெருவெடுப்புக்கு முன்னால் காலம் என்ற ஒன்று கிடையாது எனும்போது, பிரபஞ்சத்தை படைக்கக் கடவுளுக்கு காலமே இருந்திருக்காது. சொர்க்கம் என்றும், மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை என நம்முடைய நம்பிக்கை வெறும் ஆசை மட்டுமே. அதற்கு நம்பகமான சான்று எதும் இல்லை. நம் குழந்தைகள் வழியாக அடுத்த தலைமுறைக்கு நம்முடைய மரபணுக்கள் மூலம் இறப்புக்கு பின் வாழ்வு என வேணா எடுத்துக் கொள்ளலாம். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை போற்றி கொண்டாடுவதற்கு நமக்கு இந்த வாழ்க்கை வாய்த்துள்ளது. "
           என பதிலைத்துள்ளார்.

இது போன்று, பிரபஞ்சத்தின் தோற்றம், வேற்றுகிரக உயிரினங்கள் இருக்கிறதா?, காலப்பயணம் சத்தியமா?, கருந்துளை, விண்வெளியில் குடிபுக முடியுமா? செயற்கை நுண்ணறிவு, வருங்காலத்தில் மனிதன் பூமியில் உயிர் பிழைத்திருப்பானா?
       என சுவாரசியமான கேள்விகள் அணிவகுக்கிறது.

'காலப்பயணம்'பற்றிய ஸ்டீபனின் விளக்கம் அறிவியல் புனைவு கதை போல் வெகு சுவாரசியமாக இருந்தது. காலப்பயணம் செய்யும் சூழல் எதிர்காலத்தில் வந்தால், அதில் மனிதன் சந்திக்க வேண்டிய பல பிரச்சனைகளையும் விளக்கியுள்ளார்.

மனிதகுலத்தின் வருங்காலமாக ஸ்டீபன் சொல்லும் முக்கிய விஷயங்கள்...
     1.நாம் வசிக்க தகுந்த  கோள்களை கண்டுபிடித்தல்.
      2.செயற்கை நுண்ணறிவு.

இதில் 'செயற்கை நுண்ணறிவை' பற்றி அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும், எதிர்கால மனித சன்னதிக்கு சவால் விடும் விஷயமாக இருக்கும் என்பதை எள்ளளவும் சந்தேகமின்றி விளங்குகிறது. வாசிக்கும் போது நமக்குள் சிறிது பதற்றம் தொற்றிக்கொள்கிறது. மனிதனை விஞ்சக்கூடிய பேராற்றல் கொண்ட தன்மையுடன் செயற்கை நுண்ணறிவு விளங்கும் என்றும், அது மனித உதவியின்றி தன்னை தானே மேம்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டவையாக மாறும்  என கூறும் போது நம் கண் முன் 'சிட்டி' ரோபோ வருகிறது.அறிவியலறிஞர்கள் பலர் சேர்ந்து செய்த ஒரு அதிநவீன கணினியிடம், அவர்கள் கேட்ட முதல் கேள்வி, 'கடவுள் இருக்கிறாரா? என்பதற்கு அது, 'இப்போது உருவாகிவிட்டார்' என்ற பதிலில் ஒளிந்திருக்கும் உண்மை மனிதகுலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.

மனித இனம் பிற கோள்களுக்கு பயணித்து அவற்றை காலனிபடுத்துவது என்பது இனியும் அறிவியல் புனைகதையாக இருக்காது என்றும், மனித இனம் மேலும் பல லட்சம் ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றால், இதுவரை பயணித்திராத இடங்களுக்கு போக துணிய வேண்டும் என்று முடிக்கிறார்.

பூமியில், நாம் வருங்காலம் குறித்து பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து  கொள்வது இனி வரும் சந்நிதிகளுக்கு பல இன்னல்களை தருவது மட்டுமல்ல, பூமியை அழித்தது மட்டும் அல்லாது மற்ற கோள்களையும் காலனி ஆதிக்கம் செய்து, அதன் இயற்கையையும் உறிஞ்ச போகும் நிலையை எண்ணி வருத்தம் அடைய செய்கிறது.

வாசகர்களுக்கு ஸ்டீபன் வழங்கிய இறுதிச் செய்தியாக இப்புத்தகம் உள்ளது. நன்றி.

Comments