'அறியப்படாத தமிழகம்'
ஆசிரியர்: தொ.பரமசிவன்.

தமிழ்நாட்டின் நம்பிக்கைகள்,பண்பாட்டு நிகழ்வுகள்,அதன் வரலாறுகள் பற்றிய கட்டுரை தொகுப்பு.

'இனிமையும்,நீர்மையும் தமிழ் எனல் ஆகும்' என்று குறிப்பிட்டு, தண்ணீர் என்ற சொல் ஒவ்வொரு இடத்துக்கும் தக்கவாறு ஏரி,குளம்,கிணறு,சுனை எனப் பெயர் மாறுபடுவதை விளக்கியுள்ளார்.நகர்புறமயமாதல் காரணமாக 'தமிழர் உணவுமுறை' எவ்வாறு மாறி இருக்கிறது எனவும்,உணவு சார்ந்த நம்பிக்கைகளான விரதமுறைகள்,விருந்தினர்களுக்கு படைக்கும் உணவு,தெய்வ வழிபாட்டு முறைகளில் படைக்கும் உணவு,இறந்த வீட்டில் படைக்கும் உணவு,எண்ணெய்,உப்பு போன்றவை பயன்படுத்திய முறைகளை பற்றி வரலாறு என கட்டுரையில்  தெளிவாக விளக்கியுள்ளார்.

தமிழர் பண்பாட்டில் 'சொறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல' என இலக்கிய கூற்றுக்கேற்ப்ப அன்றைய காலங்களில் சத்திரம்,சாவடி உருவானதை விளக்கி,இன்று அவையே காசு கொடுத்து சாப்பிடும் 'உணவகங்களாக' மாறி உள்ளதாக கூறுகிறார்.

அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வீடு கட்டும் உரிமைகள் அரசர்களால் சாதிவாரியாக  வகுக்கப்பட்டதாகவும்,மாடி வீடு கட்டவும்,கிணறு வெட்டவும் பார்ப்பனர்களுக்கே அனுமதி அளித்ததும், சாதிஒடுக்குமுறை அன்றிலிருதே இருப்பது புரிகிறது.அதே போல் உடை விஷயத்திலும் மேட்டுகுடி மக்களின் ஆதிக்கமே இருந்துள்ளது.உயர்சாதி பெண்கள் சேலையை வலதுபுறமாகவும்,ஏனையோர் இடதுபுறமாகவும் கட்டியுள்ளனர்.பெரும்பான்மையோர் இடதுபுறம் கட்டியதால் அதுவே இன்றும் வழக்கமாகிவிட்டது.

இடம்,சாதி,சாதிக்குரிய உறவுமுறைகளை வைத்து 'உறவு பெயர்கள்'எப்படி வந்தது எனவும்,சைவ,வைணவ பக்தி மூலமாகவும்,சமண,பௌத்த மதங்களின் செல்வாக்காளும் தமிழ் மக்களின் பெயர்கள் இன்றைய காலத்தில் எவ்வாறு  மாறியுள்ளது எனவும் விளக்கியுள்ளார்.

இன்றைக்கு மங்கலகரமான பொருளாக பெண்கள் கருதும் மஞ்சள்,குங்குமம் முதலியவை சங்ககாலங்களில் மங்கலமாக கருதவில்லை.மஞ்சளை ஆரோக்கிய தொடர்பான பொருளாகவே கருதினர்.அதுபோல் சங்ககாலங்களில் தாலிகட்டும் பழக்கமுமில்லை என்று தோன்றுவதாக ஆசிரியர் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் பௌத்தமும்,சமணமும் எவ்வாறு பரவியது,அவர்களின் செயல்பாடுகளை குறிக்கும் கல்வெட்டுகள்,சமணபடுக்கைகள்,துறவு நெறியை பெரிதும் வற்புறுத்தியதால் அவர்கள் இழந்த செல்வாக்கு என விரிவாக விளக்கியுள்ளார்.

தமிழ் மொழியின் இலக்கண அமைப்பு இன்றைய பேச்சு மொழியோடு ஒத்து இருப்பதாலே தமிழ் இலக்கணம் இன்றுவரை உயிர்ப்பாற்றலுடன் இருப்பதாக கூறுகிறார்.
வாக்குறுதிகள்,சத்தியம் செய்தல் போன்றவற்றில் இருந்த மக்களின் நம்பிக்கைகளை விளக்கியுள்ளார்.

கறுப்பு என்ற வண்ணத்தின் மீதுள்ள இன்றைய வெறுப்பை 'கறுப்பு' கட்டுரை உணர்த்தியது.

நூல் படிப்பதற்கு எளிமையாகவும்,சுவாரஸ்யமாகவும் இருந்தது.ஆசிரியர் சங்க இலக்கியங்களில் இருந்து நிறைய மேற்கோள்கள் காட்டி கட்டுரையை விளக்கியிருந்தார்.பலதரபட்ட நூல்கள்,கல்வெட்டு ஆய்வுகள் மூலமே இந்நூல் எழுதபட்டுள்ளதாக அறியமுடிகிறது.அனைத்து சாதியை பற்றி எழுதி இருந்தாலும் பார்ப்பனிய சாதியை நிறைய இடத்தில் முன்னிறுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

இந்நூல் தமிழ்நாட்டின் பண்பாட்டை பற்றிய ஆய்வு நூலாகவே விளங்குறது.அனைத்தையும் மேலோட்டமாகவே அறிந்து வைத்திருந்த நமக்கு, அதன் வரலாற்றை உணர வைத்த இந்த நூல் நமக்கு ஒரு பொக்கிஷமே.நன்றி.

Comments