நூல் : பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
ஆசிரியர் : மயிலன் ஜி சின்னப்பன்
மருத்துவ மேற்படிப்பு மாணவன் பிரபாகரனின் தற்கொலையில் இருந்து ஆரம்பமாகிறது கதை. பிரபாகர் படித்த அதே கல்லூரியில் இடம் கிடைத்தது செல்லும் அவனுடைய நண்பன், பிரபாகரின் தற்கொலைக்கு தூண்டி விடப்பட்ட காரணிகள் என்ன என அறிய முற்படுகிறான். பிரபாகர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் அவன் சந்தித்த நபர்கள், அவனுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் என ஆர்வத்தின் உந்துதலில் தேட ஆரம்பிக்கிறான்.அவனது கண்ணோட்டத்தில் கதை விரிகிறது.
பிரபாகர்.. கதையின் நாயகன். கதையின் தொடக்கத்திலேயே இறந்து விட்டாலும், அவன் கதையின் இறுதி வரை உயிர்ப்புடன் நம்முடன் பயணிக்கிறான் .சிறு வயது முதல் 'முதல் மதிப்பெண் ' வாங்கும் ஒரு மாணவன், அதை தக்க வைத்து கொள்ள அவன் எடுக்கும் முன்னெடுப்புகள், தன் மீதான அதீத நம்பிக்கையில், அவனை நெருங்கி வரும் உறவுகளை ஊதாசின படுத்தியும், வெற்றி தரும் போதையில் அனைத்தையும் போட்டியாக கருதும் மனப்பாங்கு கொண்டவனாக இருக்கிறான். இந்த இக்கட்டு நிலையே அவனை தற்கொலைக்கு தூண்டி இருக்க வாய்ப்பாக அமைகிறது.
அவனது உளவியல் பிரச்சனையால் செய்த தற்கொலை, அவன் நுழைவு தேர்வில் தோற்றத்தால் தான் இறந்தான் என்று அவனது நெருங்கிய நண்பன் சதாசிவம், காதலில் தோல்வியுற்றான் என கட்டுக்கதையை பரப்பும் நண்பன் தாமோதரன், அவனது குடும்பத்தின் நிலைமையை வைத்து ஒருவரும், அவன் ஒரு பெண் பித்தன் என்ற அபாண்டத்தை நாஸியா, மணியும், தன் சொந்த கணக்கை தீர்க்க தலைமை மருத்துவர் மயில்சாமி மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மர்மசாயத்தை பூசும் லீமா, அவன் தற்கொலை எண்ணத்தில் இருக்கிறான் என தெரிந்தும் அவன் சிக்கலை கலையாமல், வெறும் பார்வையாளனாக இருக்கும் அன்வர் என கதையின் அனைத்து கதாபாத்திரமும் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை கொண்டே அவனது தற்கொலையை நிறுவ பார்க்கிறார்கள்.
இதில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் மருத்துவ பேராசிரியர் மயில்சாமியின் அதிகார துஷ்ப்ரயோகம், சாதி பாகுபாடு, மாணவர்களை நோயாளிகளின் முன்பே அவமானப்படுத்தியும், சர்ஜெரி செய்யும்போதும் மாணவர்களை இழிவுபடுத்தி வெளியே அனுப்புவதுமாக அவரின் செயல் ஒவ்வொன்றும் நமக்கு மருத்துவ மாணவர்களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
கதையின் முக்கிய புள்ளியாக இருப்பது, மருத்துவ உலகின் மறுபக்கம்.தன் மருத்துவ துறையில் உள்ள உளவியல் சிக்கல்களையும், அதிகார துஷ்பிரயோகம், சாதி பாகுபாடு என பல இருண்ட பக்கங்களை கொஞ்சமும் சமரசம் இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். ஒரே கல்லூரியில் M.S. படிப்பவர்களுக்கும், M.D. படிப்பவர்களுக்கும் உள்ள politics, துறை தலைவர்களின் எடுபிடிகளாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படும் மாணவர்கள், மருத்துவ கெமிக்கல்களை கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமை ஆகும் மருத்துவ மாணவர்கள் என பல சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார். மெத்த படித்தவர்கள் என்ற பிம்பத்தில் வாழும் அவர்களுக்குள்ளும் சாதி, மத பாகுபாடு, ஒரே சாதியினர் ஒரே அறையில் இருப்பதும், தங்களுக்கு பின் தங்கள் அறையை தன் சாதி ஜூனியர் மாணவர்களுக்கு விட்டு செல்வதும், தலைமை மருத்துவர், தன் சாதி மாணவர்களுக்கு லிபெரலாக இருப்பதும் என சாதி முழுமூச்சாக செயல்படுவது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிறது. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தங்களது தனியார் மருத்துவனைக்கு மாற்றும் அரசு மருத்துவர்களின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது.
MBBS மட்டும் படித்தால் போதாது, MS,MD என மேற்படிப்பு படித்தால் மட்டுமே அவன் முழு மருத்துவன் என்ற சமூக நிர்பந்தம் மற்றும் அவர்களின் பேராசையால் மேற்படி நுழைவு தேர்வுக்கு என பல வருடங்கள் செலவழித்து தங்கள் வாழ்க்கையில் கால்வாசி வருடங்களை படிப்பிலேயே கழித்து வரும் இன்றைய மருத்துவர்களின் நிலையை பார்க்கும் போது அயற்சியாக இருக்கிறது.
ஒரு நல்ல மருத்துவம் என்பது உடலுக்கு மட்டும் அல்ல மனதிற்கும் சேர்த்துதான் என்பது நாம் அறிந்தது. ஆனால், 'ஒரு கிழவி காய்ச்சல் என்று வந்தால் paracetamol கொடுத்தால் போதும், அதை விட்டு, அவள் எங்கிருந்து வருகிறாள், ஏன் தனியாக வந்தாள் போன்ற விஷங்களை ஆராய்ந்தால் மனஉளைச்சல் தான் மிஞ்சும் என மாணவர்களுக்கு மயில்சாமி பாடம் எடுக்கும் போது ஆங்கில மருத்துவத்தின் மேல் ஒரு வெறுப்பு வருகிறது.
ஒரு துப்பறியும் நாவலை போல் கதையை இட்டுச்செல்கிறார் ஆசிரியர்.கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களை கொண்டே கதை நகர்கிறது. மிக எளிமையான எழுத்து நடை. கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவு சுவாரசிய நகர்வு என அனைத்தும் அருமை. இத்தனை கோணத்தில் ஒரு மரணத்தை விவரித்து இருந்தது புதுமை. ஆசிரியருக்கு இது முதல் நாவல் போலவே இல்லை.
ஒவ்வொரு மனிதனின் கண்ணோட்டத்திலும் ஒரு தற்கொலை எந்த அளவு பேசப்படுகிறது என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம். இயற்கை மரணம், விபத்து மூலம் நடக்கும் இறப்புகளுக்கு இருக்கும் விளைவுகளை விட தற்கொலையில்,அதிகமாக இருக்கிறது.பிரபாகரனின் குணாதியசியத்திற்கு தற்கொலை செய்யும் அளவு எந்த முடுச்சு அவனை நிர்ப்பந்தித்தது என்பதை அவனை சுற்றியுள்ளவர்கள் விளக்கும் பொது, அது அவர் அவர்களின் பார்வைகளை கொண்டு விளக்கப்படுவதை உணர முடிகிறது.
கடைசியாக ஒரு 'தற்கொலை குறிப்பு' எழுதி இருந்தால் இத்தனை அனுமானங்களுக்கு அவசியமே இல்லையே என தோன்ற செய்கிறது. நாம் வாழ்ந்த கதையை விட, நம் மரணத்தின் பின் உள்ள கதை வெகு சுவாரஸ்யமானதாக நம்மை சுற்றி உள்ளவர்களால் கட்டமைக்கப்படுகிறது. இதற்காவே இயற்கை மரணம் வரை வாழ்ந்துவிட்டு போகலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.சாவிற்கான காரணங்கள் கூட கௌரவமாக இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் கூற்று உண்மையாகிறது.
இதற்கும் மேல், தற்கொலை எண்ணத்தில் நெருக்கடியில் இருக்கு ஒரு மனிதனுக்கு,நேசக்கரம் நீட்டாமல்,அவன் இறப்பிற்கு பின் அவனது உண்மை பிம்பத்தை உடைக்கும் சமூகத்தை நினைக்கும் போது சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது.நன்றி.
மிக அருமையான விமர்சனம், புத்தகம் அப்படி என்ன சொல்கிறது என்ற ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது.வாழ்த்துகள்💐
ReplyDelete