நூல் : நன்றி ஓ ஹென்றி 

ஆசிரியர் : எஸ்.சங்கரநாராயணன் 


மனிதனின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகளை கொண்ட சிறுகதை தொகுப்பு. ஒவ்வொரு  சூழ்நிலையிலும்  மனிதனின் மனம் விதவிதமாக மாறுவதையும், அதன் வெளிப்பாடாய் கதையின் இறுதி முடிவில் வைத்திருப்பது  வெகு சிறப்பாக உள்ளது.ஆண், பெண் ஒழுக்கம், மனப்பிறழ்வு கொண்ட மனிதர்களின் குணாதிசயங்கள், அவர்களை கையாளும் மனிதர்களின் உணர்வுகள், பாலியல் ரீதியான வக்கிர மனம் கொண்டவர்களின் ஆசைகள் என மனிதமனங்களின் அத்தனை தன்மைகளையும் விளக்கியுள்ளார் ஆசிரியர். 


தன் தாய் கருமாதி செலவுக்கு  தன் உறவுக்கார் சிவதாணுவிடம் கையேந்தும் நிலைக்கு ஆட்பட்டு அவன் இல்லம் தேடி செல்கிறார்  வடிவேல் வாத்தியார்.ஆனால் அவர்கள் வீட்டில் ஒரு மங்கள நிகழ்ச்சியில் முஸ்தீப்பில் இருப்பதை கவனித்து ஒதுங்கி நிற்கிறார்.பணம் கேட்கதான் வந்திருக்கார் என உணர்ந்த சிவதாணு, இந்த முறை தரக்கூடாது என்ற முடிவுடன் இருப்பதும், பின்பு காரணம் அறிந்ததும் உடனே மனம் மாறி உதவுவதை காட்டும் கதை 'வெயில் மழை'.வெயிலாக இருந்த சிவதாணுவின் மனம் ஒரே நிமிடத்தில் மழையாக மாறியது நம் மனதிலும் தூறலாக விழுகிறது. 


'பூனை' மனதிற்கு மிகவும் நெருக்கமான கதையாக இருந்தது. சிறு வயதில் நமக்கு பிடித்த ஆசிரியர் மேல் உள்ள அன்பை வெளிக்காட்ட நாம் எடுக்கும் பிரயத்தனங்கள், அதன் மூலம் அவர்கள் அன்பை பெறுவது, பிடித்த ஆசிரியர் மட்டுமல்லாது அவர் எடுக்கும் பாடமும் நமக்கு பிடித்து நன்கு படிக்க ஆரம்பித்து விடுவோம். இக்கதையில் நாகராஜனுக்கு அப்படி ஒரு நந்தினி டீச்சர். பல கெட்ட பழக்கங்களை கொண்ட அவனை அன்பால் திருத்தும் நந்தினி டீச்சருக்கு, அவள் கணவனாக வர போகிறவன் கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவனாக அமைவது நாகராஜனுக்கு மட்டுமல்ல நமக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.அந்த இக்கட்டு நிலை யாருக்கும் வர கூடாத அளவு மனதில் பாரத்தை ஏற்றிவிட்டு முடிக்கிறார் கதையை. 


விடலை பருவத்தில் ஆணுக்கு ஏற்படும் அதே சின்ன சின்ன உணர்வுகள் தான் பெண்களுக்கும் ஏற்படும் என்பதை உணர்த்தும் கதை, 'ஊதல் உதைபட வாழ்தல்' சிறுகதை.ஒழுக்கத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைக்கவேண்டும் என்பதை போல், ஒழுக்கமற்றவையும் இதில் அடங்கும்.இக்கதையில் வரும் அக்கா, தம்பி இருவருமே ஒரே மனநிலையில் வாழ்வது ஆச்சர்யம். இதில் அவர்களின் பெற்றோரின் நிலைதான் கவலைக்கிடமாக இருக்கப் போகிறது என்பது நிதர்சனம். 


அனுபவமுள்ள, ஓய்வு பெற போகும் மேனேஜர் எஸ்எம்ஜி க்கும், புது மேனேஜராக அறிமுகம் ஆகும் சிவாஜிராவ்க்கும் இடையே நிகழும் தலைமுறை இடைவெளியும், அதன் பொருட்டு ஏற்படும் மாற்றங்களையும் எடுத்துரைக்கும் கதை 'கவாஸ்கர்'. தன் மனைவியை இழந்து ஒரு வட்டத்துக்குள் வாழும் எஸ்எம்ஜி நிலை இன்றைய பல முதியவர்களின் நிலையாக உள்ளது என்பதை  உணர வைக்கிறார் ஆசிரியர்.எவ்வளவு தான் அதிகாரத்தில் இருந்தாலும்,ஓய்வு காலத்திற்கு பின் தங்கள் நிலை என்ன என்பதை உணர்த்தியுள்ளது கதை.ஒரு வயது முதிர்ந்தவர்க்கும், ஒரு இளைஞனுக்கும் உள்ள மன வேறுபாட்டை வெகு இயல்பாய், யாரையும் குற்றம் சுமத்தாத வண்ணம் விளக்கி இருப்பது அருமை.  


ஒரு ஆண்,அடுத்தவர் மனைவி மீது கொண்ட மனவக்கிரத்தை வெளிப்படுத்தும் கதை 'நாங்கள்'.அடுத்தவர் அந்தரங்கத்தை ஆராய நினைக்கும் ஒருவனின் கீழ்த்தரமான மனநிலையை கிழித்தெறிகிறார் ஆசிரியர்.தன் மனதில் உள்ள வக்கிரத்தை ஆராய்ந்து கலைய நினைக்காமல், பக்கத்து வீட்டு குடும்பத்தின் சந்தோஷத்தை கலைக்க நினைக்கும் அவனை அவர்கள் காப்பற்ற நினைத்து இருப்பது கதையின் இறுதி சுவாரசியம்.


இப்படியாக, சிறு குழந்தையை வேலைக்கு வைத்து,அதன் குழந்தைமையை மறக்கடிக்க வைக்க நினைக்கும் குடும்பத்தை 'வம்சம்' என்ற கதையிலும், பாலியல் தொழிலர்களின் வலியை உணர்த்திய 'நாங்கள்', தன் அறிவை மட்டும் நம்பி வாழும் ஒருவனை, அவன் அப்பா தெய்வத்தின் பக்கம் திருப்ப நினைப்பதும்,அதே அறிவால்  அவனின் வேலை பறிபோவதையும் 'ஷேக்ஸ்பியரும் வெங்காயமும்' கதையில் நகைச்சுவை இழையோட எழுதியிருப்பதை படிக்க சுவாரசியம் மேலோங்குகிறது. 

பைத்தியமாக அறியபடும் 'ஜலஜா அக்கா' இறப்பின் காரணத்தை அறிய முற்பட்டு,அதை நம்ப முடியாமல் பாலாஜி தவிப்பதும், ஆனால் அதே சூழல் வரும் பொழுது பதட்டமடைவதுமாக, பாலாஜியின் இரட்டை மனதை உணர்த்தும் கதை 'பழையன புகுதலும் புதியன கழிதலும்' கதை. 


நம் உணர்வுகளை பிரதிபலிக்கும் பல சிறுகதைகள் அணிவகுத்துள்ளது இத்தொகுப்பில்.மனித உளவியலை மையமாக வைத்தே பல கதைகள் உள்ளன.இவ்வளவு எளிமையாக சிறுகதை எழுத முடியுமா என்ற கேள்வி மனதில் தோன்றுகிறது. சிறுகதை எழுத விரும்பும் ஆரம்பகட்ட நிலை எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது.நன்றி.

Comments