நூல்:இருண்ட காலக் கதைகள்
தொகுப்பு:அ.கரீம்
இன்றைய சமகால அரசியலையும், அதன் விளைவுகளால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளை கொண்ட சிறுகதை தொகுப்பு.சமகால இலக்கிய உலகின் பெரும் எழுத்தாளர்கள் பதினேழு பேர் எழுதிய கதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார் அ. கரீம்.
ச. தமிழ்ச்செல்வன் அவர்களின், 'என்ன கதை இது'.. தொகுப்பின் முதல் கதையே சாதிய வன்மத்தையும்,பாகுபாட்டையும் மையமாக வைத்து எழுதபட்டுள்ளது.வண்ணார் இன மக்களின் சாதிய கொடுமையை படம் பிடித்து காட்டியுள்ளார் ஆசிரியர். ஆதிக்க சாதியினரின் பாலியல் வக்கிரங்களுக்கு பலியாகும் கீழ்சாதி இன மக்களின் வலியை இருவேறு காலங்களில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.பூவாயியின் அக்கா முதல், பூவாயியின் பேத்தி வரை இந்த பாலியல் கொடூரம் அவர்களின் வாழ்வில் தொடர்கதையாக இருப்பது வலிமிகுந்த வேதனையை நமக்கு ஏற்படுத்துகிறது.இந்த குற்றங்களில் சட்டமும், அரசாங்கமும் எளிய மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், ஆதிக்கசாதியினரின் கைப்பாவையாக இருப்பதும், இதை தட்டி கேட்கவோ, பாதிப்புள்ளாவானவர்களுக்கு ஆதரவாகவோ யாரும் இல்லாதபட்சத்தில், பூவாயியின் ஓலமே நம்மை கேள்வி கேட்பது போல உணரமுடிகிறது.
2008 ல் நடந்த மும்பை தாக்குதலை மனதில் வைத்து, தீவிரவாத செயல்களை கட்டுக்குள் வைக்க அரசு ஏற்படுத்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) செய்யும் அராஜக செயல்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை கரீமின் 'இன்று தஸ்தகீர் வீடு'.தீவிரவாதம் என்றாலே இஸ்லாமிய சமூகம் தான் செய்யும் என்ற நோக்கத்திலேயே அவர்களை விசாரணை என்ற பெயரில் மிரட்டவும்,அவர்களின் மேல் பொய்யான வழக்கை சுமத்தி 2 அல்லது 3 ஆண்டுகள் சிறையில் அடைத்து, பின் விடுதலை செய்து அவர்களை இந்த பொது சமூகத்தில் இருந்து அந்நியமாக்கி மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்பதை இந்த கதையின் வழி நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். ஒரே தெருவை சேர்ந்த அன்சாரி, சுலைமான்,தஸ்தகிர் என மூவரின் வாழ்க்கையை, போலீஸ் அராஜகம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுகிறது என்பது மட்டுமல்லாது, ஒரு தேசிய வரைபடத்தை வைத்திருப்பதை கூட குற்றச் செயலாக கூறி மிரட்டுவதும் நமக்கு ஒரு பதற்றத்தை தருகிறது.சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்காகவே இந்த சட்டத்தை இன்றைய ஆளும் அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது சந்தேகமின்றி விளங்குகிறது.
மத்திய ஆளும் அரசாங்கம் புதிதாக கொண்டுவந்துள்ள 'குடியுரிமை திருத்தச் சட்டத்தை' மையமாக வைத்து மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளது.ஒரு வயதான இஸ்லாமிய வாத்தியாரை கிண்டல் தொனியில் பேசும் கதை, இரா. நாறும்பூநாதன் எழுதிய 'மொகைதீன் வாத்தியாரும், எலக்ட்ரிக் குக்கரும்'.தங்களுக்கு சிறுவயதில் பாடம் நடத்திய வாத்தியாரை ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர், அவரை எவ்வாறு வெவ்வேறு மனநிலையில் நடத்துகிறார்கள் என்பதை இக்கதையில் காணமுடிக்கறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக,டில்லி ஷாஹின் பாகில் பெண்களால் தன்னெழுற்சியாக நடந்த போராட்டத்தை மையமாக வைத்து எழுதிய கதை சல்மாவின் 'இருண்மை'.அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு,தன் தோழி நமீதா இல்லத்திற்கு செல்லும் ஹாலிதா, அங்கு நமீதாவின் கணவன் ஆதித்யாவின் வெறுப்பான பேச்சில் இருண்மையுடன் வெளியேறுகிறாள்.ஆண் என்ற அதிகாரத்தை கணவன் நிலைநாட்டும் இடத்தில், தன் தோழிக்கு ஆதரவாக பேச முடியாத இடத்தில் நிற்கும் நமீதாவின் நிலை இன்று பல குடும்பங்களில் உள்ளது.ஆதித்யாவின் பேச்சில் அதிகாரம் மட்டுமல்லாது மததுவேஷமும் உள்ளதை நம்மால் அறிய முடிகிறது.
அதே குடியுரிமை திருத்த சட்டத்தினால் ஏற்பட போகும் பின்விளைவுகளை கொண்டு எழுதிய கதை சம்சுதீன் ஹூரா எழுதிய 'மயானக்கரையின் வெளிச்சம்'. கதையை வாசிக்கும் பொழுதே நம் மனதில் பாரத்தை ஏற்றி வைத்தது போன்ற உணர்வை தந்தது இக்கதை. இச்சட்டத்தினால் இவ்வளவு கொடுமைகள் அரங்கேறுமா? அல்லது மிகைப்படுத்தப்பட்டு சொல்லியிருக்கிறாரா ஆசிரியர்? என தோன்றினாலும், கதையின் போக்கு 'இப்படியும் நடக்கும்'என ஊர்ஜிதப்படுத்துகிறது.
இஸ்லாமியனான கதை நாயகன்,தன் குழந்தை முபீனாவை பள்ளியில் சேர்க்க சென்ற இடத்தில் குடியுரிமை அட்டை இருந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும் என்ற விதியால் அந்த சட்டத்தின் விபரீதத்தை உணர்கிறான்.பின் தன் வங்கி கணக்கில் பணம் எடுக்க, சொந்த வீடை தக்க வைக்க என அனைத்துக்கும் குடியுரிமை அட்டை வேண்டும் என கேட்கும் அரசாங்கத்தின் கெடுபிடியால்,தன் பூர்வீகத்தை தேடி அலைகிறான். இதில் தன் மனைவி, குழந்தையை இழந்து தானும் ஒரு அகதியாகி அடிமை முகாமில் அடைபடுவது வரை கதை மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது.பல தலைமுறைகளாக பிறந்து, சுதந்திரமாக, மதநல்லிணக்கத்துடன் வாழ்ந்த தங்களை இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக,சொந்த நாட்டில் இருந்து தங்களை விரட்ட ஆளும் அரசாங்கம் செய்யும் அராஜகத்தை எதிர்க்க முடியாமல் கையறு நிலையில் இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்ற குழப்பமே மிஞ்சுகிறது.
காடுகளை தங்கள் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை, அவர்களின் இடத்திலிருந்து அப்புறப்படுத்த நினைக்கும் ஆட்சியாளர்களை தோலுரித்து காட்டும் கதை வே. பிரசாந்த் எழுதிய 'காடர் குடி'.தலைமுறை தலைமுறையாக காட்டில், பல கொடூர மிருகங்களின் வழித்தடங்களில் வாழ்ந்து பழகிய மக்களை, அவர்களாலேயே மிருகங்கள் அழிகிறது என்ற வாதத்தை வைத்து அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றி, 'வனச்சட்டம் 'என்ற பெயரில் காலனி வாசியாக மாற்ற நினைக்கும் அதிகாரிகளை எதிர்க்க முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து நிர்கதியாக நிற்க்கையில் நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.பழங்குடி மக்களை 'வனஆக்கிரமிப்பாளர்கள்' என்ற பெயரில் அவர்களை ஒழித்து, நவீன வாழ்வு என்ற பெயரில் அவர்களை ஆசை காட்டி ஏமாற்றி வெளியேற்றி, காடுகளை பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் அரசின் செயல் வெட்கக்கேடானது.
மேலும்,சாதி கலப்பு காதல் திருமணத்தில், பெற்றோர்களின் சாதிவெறியால், ஆணவப் படுகொலை செய்யப்படும் காதலர்களை மையமாக வைத்து எழுதிய உதயசங்கரின் 'துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்',மாடுகளை வாங்கி, விற்கும் வியாபாரி மம்மதுவை,அடிமாட்டுக்கு தான் மாடுகளை அவன் எடுத்துப் போகிறான் என்பது போல் சித்தரித்து, இந்து மத வெறியர்களின் கையில் சிக்க வைக்கும் அவனது வியாபார போட்டியாளரான ரத்தினத்தின் சூதை வெளிப்படுத்தியும், இன்றைய சூழலில் நடக்கும் 'மாட்டு அரசியலை' மையமாக வைத்து எழுதிய அரும்பாவூர் இ. தாஹிர் பாட்சாவின் 'வியாபாரிகள்',ஆளும் அரசின் பிற்போக்குதனமான சட்டங்களை நையாண்டி செய்து தனக்கே உரிய நடையில் எழுதி இருக்கும் ஆதவன் தீட்சண்யாவின் 'காமிய தேசத்தில் ஒரு நாள்' படிக்க பகடியாக இருந்தாலும் நாம் எதிர்நோக்கப்போகும் அடுத்த அசம்பாவிதம் என புரிகிறது.பல வருடங்களாக அமைதியாக கொண்டாடிய கோயில் திருவிழாவை, மத அடையாளத்துடன் கொண்டாட நினைக்கும் இளைஞர்கள் கையில் கொடுத்து ஏற்படும் அசம்பாவிதத்தால் பழிகாடாகும் ஹாலித் ராவுத்தரின் கதை, பிர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதிய 'அடையாளம்'. தேசத்தின் சொர்க்கமாக கருதப்படும் காஷ்மீரத்தில் நடக்கும் ராணுவ ஆட்சியில், தன் மகன் குலாமை தேடும் ஒரு தாய், அவன் மனைவியின் கண்ணீரை வெளிப்படுத்தும் கதை, ச. பாலமுருகனின் 'இங்கே சொர்க்கம் துவங்குகிறது' என ஒவ்வொரு கதையும்,எதை நோக்கி இந்த தேசம் செல்கிறது என்று புரிபடாமல், இரண்டாம் விடுதலை போருக்கு ஆயத்தமாகும் மனநிலைக்கு தள்ளுகிறது.
மக்களுக்கான அரசாங்கம் என்று இருந்த நாட்டில் இப்பொழுது பெரு முதலாளிகளுக்கான அரசாங்கமாக மாறியுள்ளதை கதைகளின் மட்டுமல்லாது நிஜத்திலும் உணரமுடிகிறது.சாமான்ய மக்களை சட்டத்தின் பெயரில் ஒடுக்குவதில் இருந்து, மத துவேஷத்தை மக்களிடையே பரப்பி, அதில் சிறும்பான்மையினரை மட்டும் இலக்காக வைத்து அவர்களை ஒழித்து கட்ட நினைக்கும் அரசாங்கம் ஆட்சி செய்யும் இந்த இருண்ட காலத்தில் வாழ்வது நமக்கும் ஒரு சாபக்காலமாதான் இருக்கிறது. இவைகளை தட்டிக் கேட்டு போராட்டம் பண்ண வேண்டிய பெரும்பாண்மை சமூகம் கை தட்டுவதும்,விளக்கு ஏற்றுவதிலும் தங்கள் வேலை முடிந்து விட்டதாக பாராமுகம் காட்டுவது வேதனையின் உச்சம். கல்வி, வேலை வாய்ப்பு,நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என மக்களின் அத்தியாவசிய விஷயங்களை முன்னெடுத்து செய்யாமல், சாதி, மத பிரச்னைகளை மக்களிடையே ஊடுருவ விட்டு ஏற்படும் கலவரங்களில் குளிர்காய நினைக்கிறது இன்றைய ஆளும் அரசு.இந்த இருண்ட காலத்தில் இருந்து ஒரு நாள் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையை கூட மனதில் ஏற்ற விடாத அளவு கதைகளின் கனம் மனதை அழுத்துகிறது. நன்றி.
Comments
Post a Comment