நூல் : பணிக்கர் பேத்தி 

ஆசிரியர் : ஸர்மிளா    ஸெய்யித்


இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் சிறு வயது முதல் அவளின் மரணபடுக்கை  வரை நிகழும்  வாழ்க்கை கதையை உணர்வு மேம்பட எழுதப்பட்டுள்ள நாவல்.


தான் வாழ்ந்த ஏறாவூர் நகரின் பசுமைகால நினைவுகளுடன் மரணப் படுக்கையில் இருக்கும் சகர்வான் அலிமுகம்மது சக்கரியாவிடம் இருந்து கதை நகரத் தொடங்குகிறது.


தன் பேத்தி அயானாவிடம், தாங்கள் பார்க்காத, செவிவழி கேட்ட தங்கள் தொன்மை நினைவுகளை கதையாக சொல்லும் அன்புமிகு பாட்டியாக அறிமுகம் ஆகும் சகர்வான் உம்மம்மா,தன் மூத்தப்பா உமர்லெப்பை பணிக்கரின் பெருமைகளை பேசும் இடத்தில் நம்மையும் கதை கேட்கும் மனநிலைக்கு கொண்டு வந்துவிடுகிறார். சகர்வானின் வாழ்க்கை கதையை விரும்பி கேட்கும் பேத்தி அயானாவாக நாம் உணர தொடங்க ஆரம்பித்துவிடுகிறோம்.மண்ணில் புதைந்து கிடைக்கும் ரகசியங்களை போல் தன் உம்மம்மாவின்  நினைவுகளை ஆழச் சென்று  அகழ்ந்தெடுக்கும் அசாதாரண பேத்தியாக அயானா இருக்கிறாள்.தன் மூத்தப்பாவின் கதையில் இருந்து ஆரம்பித்து தன் சொந்த கதையில் நிலைபெறுகிறாள் சகர்வான்.


காடுகளில் யானை வேட்டை நடத்தி, அந்த யானைகளை தன் வசம் பழக்கி விற்றுவிடும் மூத்தப்பாவின் சாகசங்களை பேசும்  சகர்வானின் முகம் பிரகாசிப்பதை நமக்குள்ளும் கடத்துகிறார் ஆசிரியர்.தன் பணிக்கர் மூத்தப்பாவின் பெருமைகள் முழுவதும் தன் பேத்தி அயானாவிற்கு விளக்கிவிட வேண்டும் என்ற எத்தனிப்பு மட்டும் சகர்வானிடம் உணர முடிகிறது.அதில் குற்றம், குறை ஆராயாமல் அவள் சொல்லும் கதையை அயானா எந்த எதிர்கேள்வியும்  கேட்காமல், தன் உம்மம்மாவை அவள் போக்கில் விட்டு கேட்கிறாள். யானை வேட்டை போல ஒரு பெண்ணையும் பலவந்தமாக திருமணம் செய்து, வெறுப்பின் நிழலில் உருவான தம் சந்ததி  கொஞ்சமும் குற்றஉணர்வின்றி  சகர்வான் சொல்லும் போது,அயானாவிற்கு ஏற்படும் சலிப்பு நமக்கும் ஏற்படுகிறது.ஆனால் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல், மூத்தப்பாவின் பெருமை பேசுவதே தன் நிலைப்பாடு என்பதை நிறுவும் விதம், தன் மூத்தப்பாவின் உருவம் பதித்த 1000 ரூபாய் நோட்டை அயானாவிடம் காட்டும் பொழுது சிறிது மலைப்பை நமக்கு தருகிறது.


அவள் மூத்தப்பாவின் கதையை விட சகர்வானின் சொந்த கதை நம்மை நெகிழ வைக்கிறது. பிறந்த வீட்டில் மட்டுமல்லாது, திருமணத்திற்கு பின்பும் அவளை தொடரும் இன்னல்களை அவளின் வைராக்ய மனம் கொண்டு கடந்து வரும் நிலை பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.ஒரு பெண்ணின் வாழ்வில்  ஆதார தூணாக விளங்கி இருக்கவேண்டிய தந்தையும், கணவனும் சரியில்லாத போது ஒரு பெண்ணின் வைராக்கியம் எந்த அளவு அவள் சூழலை நிர்மாணிக்கிறது என்பதை உணர முடிகிறது. 


அதிலும் இஸ்லாமிய சமூக பெண்களின் நிலை இன்று வரை சில வரையறையுடனே நிலைபெற்றிருக்கிறது. இஸ்லாமிய ஆண்களின் மத ரீதியான பல தர்க்கங்களுக்கு அவர்கள் குடும்ப பெண்களே பலிக்காடாகிறார்கள்.இக்கதையிலும் சகர்வானின் தந்தை, கணவன் இருவருமே ஒரு பெண்ணின் உணர்வை புரிந்து கொள்ளாமல், தங்கள் தனிப்பட்ட வாழ்வை எந்த குற்றஉணர்வின்றியும், திமிரோடும் தாங்களே தீர்மானித்து கொள்ளுவது மனதை ரணப்படுத்துகிறது.


அதை துச்சமாக நினைத்து தன் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் தன் வாழ்க்கையை நிர்மாணிப்பதே அவளின் எஞ்சிய கதை.சூழ்நிலை நிர்பந்தத்தால் தங்கள் சுயஉழைப்பில் வாழும் பல பெண்கள், தங்கள் கடைசி மூச்சு வரை அந்த  உழைப்பை விடுவதில்லை என்பதை சகர்வான் மூலம் நிதர்சனமாகிறது.பல கற்பிதங்கள் கொண்ட இந்த வாழ்வில்,அவளுக்கு ஏற்படும் பல இன்னல்கள், முரண்பாடுகளையும்,  தன்னியல்பாக அவள் கடந்து போவது அவளின் முதிர்ச்சியை காட்டுகிறது. ஆனால் இந்த நிலைப்பாடே ஆண்களுக்கு சாதகமாக முடிகிறது என்பதும் முகத்தில் அறையும் உண்மை.


தந்தை, கணவன் கைவிட்ட நிலையிலும் சகர்வானின் வாழ்வில் அவளுக்கு உறுதுணையாக அவளது தம்பி இஸ்மாயில், பக்கத்து வீட்டு பெண் மர்யம் மாமி, குமரகுருபரன் என  சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற ஆசுவாசம் நமக்கு கிடைக்கிறது.அபுபக்கர் போன்ற நம்பிக்கை துரோகிகளும் இருப்பார்கள் என்பதும் உண்மை. 


கதையின் இடையிடையே அந்த நிலத்தின் இயற்கை அழகு,புயல், அரசியல் நிலைப்பாடு,போர் சூழல் என அனைத்தையும் எந்தவித நெருடலுக்கும் இடம் தராமல் கதையோடு ஒன்றி இணைத்திருக்கிறார் ஆசிரியர்.


சுயபொருளாதார தன்னிறைவு கொள்கை என்ற பெயரில் கோதுமை, சக்கரை போன்ற அத்தியாவசிய பொருளை கூட இறக்குமதி பண்ணமுடியாத அளவு அந்நாட்டின் பெண் பிரதமரின் செயலை விளக்கும்போது, அதை பற்றிய முழு விவரத்தையும் படிக்க தூண்டியது. போர், இயற்கை அழிவு போன்றவை எளிய மக்களின் வாழ்வை எவ்வாறு சிதைக்கிறது என்பதையும் காண முடிகிறது.இயற்கை எழில் கொஞ்சும் ஏறாவூர்,  மட்டக்களப்பு பகுதிகளை சுற்றியுள்ள காடுகளை பார்க்கும் ஆவல் வாசிக்கும் பொழுதே ஏற்படுவது மிகையில்லை. மண்முனை, எருவில், பாணமை, பதுளை என காடுகளின் பெயர்களை அறியும் போது ஒவ்வொன்றையும் தேடுதளத்தில் தேடி படிக்கும் போது பிரமிப்பாகவும், ஆர்வமும் மேலோங்குகிறது.சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் முக்கியத்துவமாக கருதப்பட்ட தலதா மாளிகை பற்றியும், புத்தரின் புனித பல் அங்கு இருப்பது, ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் எசலப் பெரகர பௌத்த திருவிழா போன்ற வரலாற்று பதிவுகளையும் இக்கதையோடு ஒன்றிணைத்துள்ளார். 


உலக போரை பற்றி எழுதியுள்ள இடத்தில் உள்நாட்டில் நடந்த ஈழதமிழர்களுக்கு எதிரான போரை பற்றி கூறாமல் விட்டது சற்று  நெருடலாக இருந்தது. 


ஸர்மிளா ஸெய்யத் அவர்களின் எழுத்தில் நான் படித்த முதல் நாவல். இலங்கை எழுத்தாளர் என்பதால் சிங்களம் கலந்த தமிழாக இருக்குமோ என்ற ஐயத்தோடு படிக்க ஆரம்பித்தேன்.ஆனால் ஆரம்பகட்ட வாசிப்பில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு புரியும் விதம் எளிய தமிழ் நடையில் இருந்தது மகிழ்ச்சி.இலங்கை  என்றாலே எனக்கு ஈழபோரே நினைவு வரும்.அதன் பின்புல கதையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்தேன்.ஆனால் ஒரு பணிக்கருடைய பேத்தியின் வாழ்வை சொல்லும் கதையாக அமைந்து இருந்தது சுவாரசியம்.


சகர்வானின்  பிறந்த வீட்டு கதையும், திருமணத்திற்கு பிந்தைய அவளின் சொந்த வாழ்க்கை கதையையும் முன் பின்னாக மாறி கதை விரிந்திருந்தாலும் எந்த குழப்பத்திற்கும் இடம் கொடுக்காத நகர்வு. 


சகர்வானின் கதையை கேட்கும் அயானாவின் மனநிலை என்னையும் ஆட்கொண்டதில் மிகையல்ல. அயானாவிற்கு ஒரு உம்மம்மா  என்றால் எனக்கு என் ஐயம்மா.பலவந்தபடுத்தி ஒரு பெண்ணை திருமணம் முடிக்கும் மூத்தப்பாவின் பெருமையை குற்றவுணர்வின்றி சகர்வான் பேசும் இடத்தில், ஆங்கிலேயருக்கு கும்பிடு போட்டு தன் வாழ்க்கை நிலையை உயர்த்திகொண்ட தன் தந்தையை பற்றி பெருமையாக எங்களிடம் பேசும் ஐயம்மா நினைவில் வந்தார்.எந்த எதிர் கேள்வியும்  கேட்காமல் பயந்து அவர்களின் வாய் பார்த்த நினைவுகள் மேலோங்குகிறது.ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பாட்டி தன் பேரப்பிள்ளைகளிடம் கூற ஒரு கதை வைத்திருப்பார். அது கண்டிப்பாக தன் வாழ்க்கை கதையாகத் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. தான் பட்ட இன்னல்களை தன் கணவனோ, பிள்ளைகளோ கேட்காதபட்சத்தில் தன் பேரப்பிள்ளைகள் தானே அவளின் வடிகால்.இந்த உணர்வு மேலோங்கும் உறவை உம்மம்மா -அயானா மூலம் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.


தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக 'ஒற்றை பெற்றோராக' இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்களுக்கு சகர்வானின் வாழ்க்கை கதை ஒரு பாடம். நன்றி.

Comments