நூல் :கருக்கு
ஆசிரியர் : பாமா
கருக்கு.. இது ஒரு கரிசல் பூமியின் கதை. நாம்
இதுவரை பார்த்து, பழகியிராத,வாழ்ந்திராத ஒடுக்கப்பட்ட பூமியின் கதை. கிறிஸ்துவ பின்னணி கொண்ட தலித் மக்களின் வாழ்க்கையை சொல்லும் நாவல்.தலித் பெண்ணாக பிறந்து, வளர்ந்து, படித்து, வாழ்ந்த கதையை ஒரு சுயசரிதையாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர் பாமா.
தன் ஊரை பற்றிய விவரனையுடன் கதை ஆரம்பமாகிறது.ஊரின் மலை, காடு, ஆறுகள், குளங்கள், ஊருணி, கம்மாய் என்று ஆரம்பித்து தெரு, சுடுகாடு என்று வரும் போது ஊரின் பிரிவினையை பற்றிய முதல் புள்ளியை வைக்கிறார் ஆசிரியர்.அந்த ஊரின் தெருக்கள், அதில் இருக்கும் சாதி பாகுபாடுகள்,
ஊரின் முக்கிய இடங்களாக கருதப்படும் கோயில், பள்ளிக்கூடம், போஸ்ட்ஆபீஸ், பால்பண்ணை ஆகியவை மேல் சாதியினர் வாழும் இடங்களில் இருப்பதும், கல்லறை, சுடுகாடு அருகில் கீழ் சாதியினர் வாழ்வது என இடங்களின் பேதத்தை இதில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.வாழும் நிலத்தில் மட்டுமல்லாது உணவு, உடை, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் உள்ள பேதத்தை வரிசையாக இக்கதையில் நிகழும் சம்பவங்கள் மூலம் நமக்கு கடத்துகிறார் ஆசிரியர்.
தனது பத்தாவது வயதில் 'தீண்டாமை'என்ற வார்த்தையை அனுபவபூர்வமாக உணர்ந்த அவள்,நாயக்கமாரிடம் தன் பாட்டி அனுபவிக்கும் கொடுமையை பார்த்து கோபப்பட்டாலும், தாங்கள் கீழ்ச்சாதியினர் என்ற முத்திரையால் அவர்களுக்கு அடிமைகளாகவே தங்களை நிலைநிறுத்தி கொண்டதை பார்த்து மனம் கொதிக்கிறாள்.தங்கள் நிலையை மாற்ற கல்வியால் மட்டுமே சாத்தியம் என்று உணர்ந்த அவள் அண்ணனின் அறிவுரைப்படி படிப்பில் கவனம் செலுத்துகிறாள்.
ஆனால் பள்ளியிலும் அவள் சாதி வேற்றுமையை அனுபவிக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது.வாத்தியாரின் வீட்டு வேலை, பள்ளிக்கூடத்து வேலை என அனைத்தையும் கீழ்ச்சாதியினரான இவர்களையே ஏவி வேலை வாங்குவதும், எதும் பொருள் திருடு போனாலும் இவர்களுக்கே திருட்டு பட்டம் கட்டுவது என பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது.ஆனால் அவளின் படிப்பு ஆர்வம் அனைத்து தடைகளையும் தாண்டும் சக்தியை அவளுக்கு கொடுத்தது.பத்தாவது பொது தேர்வில் தங்கள் வட்டாரத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து தங்கள் சமூகத்திற்கு அந்தஸ்தை ஏற்படுத்தி தருகிறாள்.மேலும் படித்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கிறாள்.
பள்ளியில் மட்டுமல்லாது கல்லூரியிலும் அவளை சாதி துரத்துகிறது. அரிஜன பிள்ளைகளுக்கென்று அரசாங்கம் நடத்தும் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் அவர்களுக்குள் சாதி வேறுபாட்டை புகுத்துகிறது கல்லூரி நிர்வாகம்.விடுமுறை எடுப்பதற்கு கூட பேராசிரியர்கள் அவளின் சாதி சொல்லி தடை போடுவது நமக்கு மிகையாக தெரிந்தாலும், அதிலுள்ள உண்மை நம்மையும் சுடுகிறது.
பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து,ஆசிரியராக பணியாற்ற விரும்பிய அவளின் ஆசையும் கைகூடியது. தான் பட்ட துயரங்கள், அவமானங்கள் இனி ஒரு ஏழை தலித் குழந்தைக்கு வரக்கூடாது என்ற முடிவுடன் ஆசிரியர் பணியில் சேர்கிறாள்.அவள் ஆசை அதோடு முடிந்திருக்கலாம். கிறிஸ்துவ சபையில் சேர்ந்து தலித் மாணவர்களுக்கு சேவை செய்ய அவள் எடுத்த முடிவு அவளின் வாழ்வையே கேள்விக்குறியாகிடும் நிலைக்கு தள்ளுகிறது.அதில் அவள் மீண்டாளா? வெற்றி பெற்று அவள் கனவை அடைந்தாளா என்பதே மீதி கதை.
தலித் மக்களின் கண்ணீரை, உழைப்பை,மதத்தின் பெயரில் அவர்கள் அடைந்த ஏமாற்றங்கள் என ஒரு இனத்தின் வரலாற்றையே சொல்லி இருக்கிறது இந்நூல்.
ஒடுக்கப்பட்ட தங்கள் சமூகத்தை நிலைநிறுத்த கல்வியால் மட்டுமே சாத்தியம் என உணர்ந்து,படித்து முன்னேற நினைத்தாலும், பள்ளியில் ஆரம்பித்து வேலை பார்க்கும் இடம் வரை சாதியின் பெயரால் அவர்களை தலை நிமிர விடாமல் செய்கிறது மேல் சாதி சமூகம்.கீழ் சாதியினர் என்றாலே இழிப்பிறவி போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்து,அடிமை, அசிங்கம், தீண்டத்தகாதவர்கள், மான மரியாதையற்றவர்கள் என்று அவர்களையே நம்ப வைத்து தங்கள் காலடியில் வைத்திருக்க நினைப்பது அநியாயம்.
அதுமட்டுமல்லாது, அவர்களை 'உழைக்கும் வர்க்கமாகவே' பாவித்து, அவர்களை தங்கள் காட்டு வேலைக்கு மேல் சாதியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.காட்டு வேலை, விறகு பொருக்கும் வேலை, கடலை உடைப்பது, கதிரறுப்பது, ஆடு, மாடு மேய்ப்பது என பெரியவர்கள் மட்டுமல்லாது சிறு பிள்ளைகளையும் வேலைக்கு வைத்து அவர்களை முழு அடிமைகளாக்கி அவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள். காலத்திற்கு ஏற்றார்போல், இப்பொழுது தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளில் வேலைக்கு வைத்து அவர்கள் உயிரையும் குடிக்க அஞ்சாத கயவர்களாக இருப்பது வேதனையை அளிக்கிறது.
இக்கதையில் முக்கிய திருப்பமாக வருவது அவள் கன்னியாஸ்திரியாகும் ஆசையில் கிருஸ்துவ மடத்தில் சேரும் இடம். கிறிஸ்துவ மடத்தில் அவள் சாதி வேற்றுமை மட்டுமல்லாது மொழி வேற்றுமையையும் சேர்த்து அனுபவித்தாள்.அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு,ஏழை எளிய மக்களை அடக்கி அவர்கள்
மனதில் குருட்டுத்தனமான பக்தியை திணித்து கடவுளின் மேல் பயத்தை விதைத்து அதன் பெயரில் அவர்களை அடிமைகளாக தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு சொகுசாக வாழும் கன்னியாஸ்த்ரிகளின் திமிரை வெட்டவெளிச்சமாகியுள்ளார் ஆசிரியர்.கடவுள், கோயில் என்று இம்மக்களை அடிமையாக வைத்து சுய சிந்தனை இல்லாமல், 'கடவுளுக்கு கீழ்படிதல்' 'விசுவாசம்'என்ற வார்த்தையை வைத்து தலை நிமிர விடாமல் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் கூட்டமாக விளங்குகிறது.
கடவுளை சாந்தமானவர், மன்னிப்பவர், பொறுமையானவர் என்று அர்த்தங்கெட்டத்தனமாக மக்களுக்கு பயிற்றுவித்து, அவர்களின் தவறை மிகை படுத்தி எந்த நேரமும் 'பாவமன்னிப்பு' கேட்க வைத்து ஒரு குற்றவுணச்சிக்குள்ளேயே வைத்திருக்கின்றனர். கடவுளின் தூதராக தங்களை வெளிப்படுத்தி ஏழை மக்களின் பணத்தில் குளிர்காய்கிற அவர்களின் போக்கு அவளுக்கு பிடிக்கவில்லை. அன்பை மட்டும் வலியுறுத்தும் கிருஸ்துவ மதத்தின் மடத்தில் பணமும், சொகுசு வாழ்க்கையும் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.ஒரு தங்க கூண்டில் அடைப்பட்டதை போன்ற உணர்வை அவளுக்கு தந்தது. அதில் இருந்து தப்பித்து விடுதலை சுவாசத்தை அனுபவிக்க அவள் நினைக்கையில் அதற்கும் பல தடைகளை அவள் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்.ஒரு புதிய உலகத்திற்குள் காலடி எடுத்து வைக்க அவள் பல அவமானங்களை கடக்க வேண்டியுள்ளது என்பது மிகையானது.ஆனால் இது தொடர்கதையாகத்தான் அவளுக்கு அமையபோகிறது என்ற நினைப்பு தான் நமக்கு ஏற்படுகிறது.
பத்து வயதில் தான் எனக்கு 'தீண்டாமை' என்ற வார்த்தை, என்னுடைய பாடப்புத்தகத்தில் முதல் பக்கத்தில் அறிமுகமானது.ஆனால் கதை சொல்லியாக விளங்கும் பாமா அவர்களுக்கு அதை அந்த பத்து வயதில், தன் வாழ்க்கையாகவே கடந்து வந்திருப்பதும், அதன் தாக்கம் தன் வாழ்வை எந்த அளவு வலிமிகுந்ததாக அமைந்திருக்கிறது என்பதை படிக்கும் போது, எந்த மாறி சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது.பள்ளி, கல்லூரி மாணவியாக இருந்தபோது இருந்த அவளின் தைரியம், முற்போக்கு எண்ணம் முதலியவை 'தலித்'என்ற ஒற்றை வார்த்தை தரும் சமூக அழுத்தம் காரணமாக அவளை கோழையாக்கி, அவளின் கனவை நிர்மூலமாக்கி அவளை விரட்டியதாகவே தோன்றுகிறது.
தங்களின் வாழ்க்கை நிலையே கேள்விக்குறியாக இருக்கும் போது,ஒரு கல்லறைக்காக தங்களுக்குள் சாதி சண்டை போட்டுக்கொண்டு, தலைமறைவு வாழ்க்கை வாழ்வது மட்டுமல்லாமல் வீட்டு பெண்களுக்கும் இன்னலை கொடுக்கும் இது போன்ற வேண்டாத வேளைகளில் ஈடுபடுவதால் தங்களை தாங்களே பலவீனப்படுத்தும் செயலை செய்வது அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த உறுதுணையும் இல்லாமல் போகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
தலித் மக்களின் பேச்சு மொழியிலேயே கதை உள்ளது சிறப்பு.அவர்களோடு நாமும் அதே ஊரில் வாழ்வது போன்ற உணர்வை தரும் எழுத்துநடை.
தலித் இலக்கியத்தில் முன்னணி எழுத்தாளராக உள்ள பாமா அவர்களின் முதல் நாவல்.இந்த நாவல் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பல கல்லூரிகளில் படமாகவும் உள்ளது. 2000 ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதை இந்நாவல் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாவலே சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்ககூடிய கதைகளத்தை எடுத்து எழுதி இருப்பது பெரும் சவாலான ஒன்று. அதுவும் தன்னுடைய சமூகத்தின் விளிம்பு நிலையை,உணர்வு மேலோங்க எழுதி இருப்பது நம் மனதை ரணமாகியுள்ளது.
மேல் சாதி-கீழ் சாதி பிரிவினை, உழைப்பு சுரண்டல்,கல்வி, பணி செல்லும் இடங்களில் ஏற்படும் அவமானங்கள் என தலித் மக்களின் வாழ்வை அனுபவரீதியாக அவர் பகிரும் போது, நமக்கு குற்றவுணர்ச்சி மேலோங்குகிறது.
'
இப்பெல்லாம் யார் சாதி பாக்குறா' என்று பெரும் முற்போக்குவாதியாக நம்மை காட்டிகொள்ள பேசும் பேச்சுக்களுக்கு இந்நாவல் ஒரு சாட்டையடி.1992 ல் வெளியான இந்நாவல் 25 வருடங்களுக்கு பின் இன்றும், அதே தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது. இன்னும் 25 வருடங்கள் ஆனாலும் இதே சாதியின் போர்வைக்கடியில் தான் நாம் கதகதப்பை தேடுவோம் என்று புரிகிறது. இதை எழுதும் இந்நேரம் கூட ஹத்ராஸ் தலித் பெண் மனிஷாவை வன்புணர்வு செய்த மேல்சாதியினரை காப்பாற்ற அவளை எரித்த சம்பவத்தையும், தலித் பெண் என்ற ஒரே காரணத்திற்காக ராஜேஸ்வரி என்ற ஊராட்சி தலைவரை நாற்காலியில் அமர விடாமல் தரையில் உட்கார வைத்த சம்பவத்தையும் தொலைக்காட்சியில் காண நேர்கிறது.'பிறப்பால் அனைவரும் ஒன்று'என்று வாய்கிழிய பேசினாலும் இதுதான் உண்மை நிலவரம் என்பதை முகத்தில் அறைவது போல் உள்ளது இன்றைய நிலை.கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதிக்கீடு என்று எவ்வளவு அரசியல் செய்தாலும் மேல் சாதி சமூகத்தை தாண்டி ஒரு எட்டு கூட வைக்கமுடியாத அளவு சாதிக் கொடுமை தலைவிரித்தாடுகிறது.இதற்கு சமூகத்தில் நடப்பதை கண்டும் காணாதது போல் கடந்து போகும் நம்மை போன்ற ஆதிக்கசாதியினரின் கள்ள மௌனமே காரணம். நன்றி.
Comments
Post a Comment