நூல் : சிலேட்டுக்குச்சி
ஆசிரியர் : சக.முத்துக்கண்ணன்
குழந்தைகளின் உலகம் சிரிப்பும்,குறும்பும், குதூகலமும் கொண்டு உருவாக்கப்பட்டது.அதுவும் மாணவ பருவம் என்பது என்றும் நீங்காத நினைவுகளை கொண்டவை.அந்த பருவத்தில் ஆசிரியர்கள் தான் குழந்தைகளின் 'ஹீரோ'.பெற்றோர்களிடம் இருக்கும் நேரத்தை விட அவர்கள் ஆசிரியர்களுடன் தான் அதிக நேரம் இருக்கிறார்கள்.குழந்தைகளை அங்கீகரிக்கும் விஷயத்தில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். பெற்றோர்களின் வார்த்தைகளை விட ஆசிரியரின் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் என்பதை நாம் அனுபவித்திருப்போம்.'எங்க மிஸ் சொன்னாங்க' என்று சொல்லாத குழந்தைகளை காண முடியாது.மாணவ-ஆசிரியர் பிணைப்பு என்பது வகுப்பறை பாடங்களை கடந்தது. அப்படிப்பட்ட பள்ளி, வகுப்பறை அனுபவங்களை ஒரு ஆசிரியர் பார்வையில் நமக்கு கட்டுரையாக தொகுத்து தந்திருக்கிறார் 'சிலேட்டுக்குச்சி' நூல் ஆசிரியர் சக. முத்துக்கண்ணன்.
சாதாரண கட்டுரை தொகுப்பு மனநிலையில் படிக்க துவங்கிய எனக்கு மனோஜின் சேட்டையில் தொடங்கி, ஒவ்வொரு அத்தியாயமும் சிரிப்பையும், கண்ணீரையும் மாறி மாறி வரவழைக்கும் அளவு நெகிழ வைத்தது.வெவ்வேறு சூழலில் மாணவர்களின் உளவியலை அவர் அனுபவத்தில் இருந்து கட்டுரையாக தொகுத்திருக்கிறார்.
வகுப்பறை என்பது ஆசிரியர்களின் அதிகார மையமாக இல்லாமல், மாணவர்களின் இயல்பை வெளிக்கொண்டு வருதலுக்கான சுதந்திரத்தை தருவதே நியாயமாக இருக்க வேண்டும்.அதை அரசு பள்ளிகள் தருகிறது என்பதை இக்கட்டுரை வாசிக்கும்போது புரிய வைக்கிறார் நூலாசிரியர். முக்கியமாக இரண்டு ஆசிரியர்களை உதாரணமாக சொல்லும் இடம் நம் பள்ளி பருவ ஆசிரியர்களையும் ஞாபகத்தில் வரவைத்து விடுகிறார்.
நம் மாணவ பருவத்திலும் பன்னீர் சார் போல் ஒரு ஆசிரியரை கடந்திருப்போம்.எந்த தடையும் இல்லாமல் நம்முடைய சந்தேகங்களை கேட்கவும், நம் இயல்புக்கு அவர்கள் இறங்கி வந்து பாடம் நடத்துவதும், மாணவர்களிடையே முதல் ரேங்க், கடைசி ரேங்க் எடுப்பவன் என்ற எந்த பிரிவினையும் பார்க்காமல் சமமாக நடத்தியும்,மாணவர்களின் மனதில் உள்ள பிரச்னைகளையும் கேட்டறிந்து அவர்களை ஊக்குவித்து வழிநடத்துவதில்,பன்னீர் சார் நம் மனதில் நிறைகிறார்.வகுப்பறை பொறுப்புகளை கடைசி ரேங்க் மாணவனிடம் கொடுக்கும் பொழுது அவனது தாழ்வு மனப்பான்மை விலகி கற்றல் திறன் மேம்படும் என்ற பன்னீர் சாரின் அணுகுமுறை மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு பாடம்.இனப்பெருக்க பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கலான சந்தேகங்களை நிவர்த்தி செய்வது இன்றைய ஆசிரியர்களுக்கு சவாலான ஒன்றான இருக்கும் போது,அதனை எவ்வாறு கையாளலாம் என்றும் பன்னீர் சாரை பார்த்து கற்றுக்கொள்ளலாம். பன்னீர் சாரை பற்றி வாசிக்கும் பொழுதே நம் மனதில் நமக்கு பிடித்த ஆசிரியர் வந்து போகிறார்.வாசிக்கும் பொழுதே அவரை நேரில் காண ஆவலாய் இருந்த பொழுது இந்நூல் அறிமுக விழாவில் அவருடைய பேச்சையும் கேட்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து ராமரய்யா.குழந்தைகளின் குதூகலத்தோடு பாடம் எடுப்பவர்.எப்பொழுதும் சிடுசிடுப்புடன், கையில் பிரம்புடன் பாடம் நடத்தும் சில ஆசிரியர்களுக்கிடையே, குழந்தை மனம் கொண்ட ஒருவராக ராமரய்யா இருக்கிறார்.அவருடைய உருவத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத குழந்தை மனதும், கூச்ச சுபாவம் கொண்டவர்.குழந்தைகளின் அலைவரிசையில், அவர்களோடு பயணித்து கற்க வைப்பதே ராமரய்யாவின் அணுகுமுறை. அதில் அவர் வெற்றியும் கண்டார்.முருகன் சாரிடம் அவருக்குள் இருந்த பிணைப்பு நம்மை நெகிழவைக்கிறது.அவர்களின் நட்பு, மாணவர்களிடத்தில் ஒரு பிணைப்பையும்,அவர்களுக்குள் இருக்கும் பாகுபாட்டையும் உடைத்தெறிகிறது.
குழந்தைகளின் கேள்விகளை அடக்க finger on the lips என்று சுலபமாக சொல்லிவிட்டு போவது போல் இயற்கை உபாதைகளையும் அடக்க பழக்கப்படுத்துகிறது சில பள்ளிகளின் வகுப்பறை விதிமுறைகள்.அதை உணர்த்தும் விதம் இரண்டு சம்பவங்களை கொண்டு விளக்குகிறார் ஆசிரியர்.பள்ளிகளில், கழிவறையின் முக்கியத்துவதை உணராமல் சுத்தமின்றியும், வகுப்பறைகளில் இருந்து தூரமாகவும் வைத்திருப்பது போன்றவற்றால், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் அதிகம்.அதுவும் பெண் பிள்ளைகளின் நிலை சொல்லில் அடங்காதது. ஒரு சுவரை மட்டும் மறைவுக்காக கட்டி விட்டு,மாதவிடாய் காலத்தில் தவிக்கும் மாணவிகளின் நிலை இன்றும் அரசு பள்ளிகளில் நடப்பதை அறிகின்றோம். இரண்டு சம்பவங்களுக்குள் பல ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும் இன்றும் பல அரசு பள்ளிகளின் நிலைமை இதுதான் என்று முகத்தில் அறையும் உண்மையை எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
அரசுப்பள்ளி மாணவர்களின் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது அவர்களின் வறுமை மற்றும் அவர்கள் தந்தைகளின் குடிப்பழக்கம்.இதனால் ஏற்படும் மனரீதியான சிக்கல்களை பள்ளி ஆசிரியர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்றும் அதன் மூலம் குழந்தைகளின் மன இன்னல்களை எவ்வாறு போக்குகிறார்கள் என உணர்த்தியது இக்கட்டுரை.
மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட கதை வழி கற்றல், அவர்களின் எதிர்கால ஆசைகளை கேட்டறிந்து உத்வேகப்படுத்துவது,கடிதம் எழுத வைத்து அதன் வழி அவர்களின் மனநிலை அறிதல், வகுப்பறையில் மட்டும் பாடம் நடத்தாமல் பள்ளியின் வெளியிலும் அவர்களை அழைத்து சென்று செயல் வழி கற்றலை மேம்படுத்துவது என ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளை மேன்மைபடுத்தியுள்ளார். மனதில் சொல்ல முடியாத வலிகளை,உடல் நல பிரச்சனைகளை கடிதம் மூலம் குழந்தைகள் வெளிப்படுத்தும் போது அதை நிவர்த்தி செய்யும் ஆசிரியர்களை நாம் நேரிலும் காண்கிறோம்.
இத்தனை அனுபவங்களும் அரசு பள்ளியில் படித்திருந்தால் மட்டுமே நம்மால் கடந்து வந்திருக்க முடியுமோ என தோன்றுகிறது. பள்ளி இறுதி வரை நிலையான ஆசிரியர்கள், மாணவர் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள், மாணவர்களின் பொருளாதார பின்புலம் அறிந்து உதவும் ஆசிரியர்கள், அறிவு பாகுபாடு பார்க்காத ஆசிரியர்கள் என அனைவரையும் அரசு பள்ளியில் தான் பார்க்கமுடியும் என்பது நிதர்சனம்.
ஒவ்வொரு கட்டுரையிலும் சில விஷயங்களை 'பின் விரிவாக பேசுவோம்' என்று எழுதி இருந்தது சிறிது ஏமாற்றமாக இருந்தது. அதையும் எழுதி இருந்தால் இன்னும் முழுமை பெற்றிருக்கும் என தோன்றியது.ஆனாலும் 'சிலேட்டுக்குச்சி 2 வது தொகுப்பு' வரும் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது. நூறு பக்கங்களில் நம்முடைய பல நூறு பள்ளி நினைவுகளை நம் மனதில் அசைபோட வைத்து விட்டது இந்த சிலேட்டுக்குச்சி.நன்றி.
Comments
Post a Comment