நூல் : பேலியோ சிக்கல்கள்
ஆசிரியர் :அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
பேலியோ டயட்.. சமீப காலமாக என் நெருங்கிய நண்பர்கள் முதல் உறவினர்கள் வரை யாரை கேட்டாலும் இந்த டயட்யை கடைபிடிப்பதாக சொல்லுவதை கேட்டு, அதை பற்றி அறிந்து கொள்ள அந்த டயட்டை கடைபிடிக்கும் முகநூல் குழுவில் சேர்ந்தேன். பல மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் பரிந்துரைக்கும் உணவுகளின் பட்டியலை பார்த்து சற்று மலைப்பாக இருந்தது. பசிக்கும் பொழுது, பிடித்த உணவை சாப்பிட்டு பழகிய நமக்கு இந்த ஆதி மனிதன் உணவு சரிப்பட்டு வராது என தோன்றியது.ஆனால் சர்க்கரை நோய், உடல் பருமன், BP, என அலோபதியின் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருக்க வேண்டிய நோய்களுக்கு கூட உடனடி நிவாரணம் கிடைப்பதாக கூறுவதால், இந்த டயட்டை பின்பற்றும் நபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதை காணமுடிந்தது.
கார்ப் உணவுகளை நிறுத்தி விட்டு கொழுப்பு உணவுகளை மட்டும் உண்ண பரிந்துரைக்கிறது இந்த டயட்.இந்த டயட்டை பற்றி முகநூலில் பல ஆதரவு கருத்துகளை கேள்விப்பட்டுள்ள நிலையில் அதன் சிக்கலை பற்றி தெரிந்து கொள்ள தேடியபோது அக்குஹீலர் உமர் பாரூக் எழுதிய 'பேலியோ சிக்கல்கள்' புத்தகம் கையில் கிடைத்தது .பேலியோ டயட் பற்றி மட்டுமல்லாது உடலியல், உளவியல் என அனைத்திலும் இந்த டயட் எந்த அளவு வினை புரிகிறது என எடுத்துக்காட்டியுள்ள புத்தகம்.
முதலில் பேலியோவின் நேர்மறை அம்சங்களான, உணவில் உள்ள கொழுப்பு பயத்தை நீக்கியது,கலோரி அடிப்படைகளில் உணவை தீர்மானிப்பதிலுள்ள சிக்கல்கள் என அடிப்படை தகவல்கள் மற்றும் அதன் வரலாறு பற்றிய முழு புரிதலை நமக்கு தருகிறார் ஆசிரியர்.கொலஸ்ட்ரால் பற்றிய பயத்தோடு வாழ்ந்த சமூகத்தில், அதனால் எந்த தீங்கும் இல்லை என்றும், கொழுப்பின் அவசியத்தையும் உணர்த்தியது இந்த டயட் முறை என்பது மிகையாகாது.
இறைச்சியை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு வாழ்ந்த ஆதிமனிதர்கள் மிக ஆரோக்கியமாக வாழ்ந்ததாகவும், பின் விவசாயம் வந்த பின், நெல், தானியங்கள் என்று உணவு மாறிய பின்னே மனிதன் பல நோய்களின் பிடியில் சிக்கி இருக்கிறான் என்பது இந்த டயட்டின் அடிப்படை வாதம்.ஆனால் ஆதிமனிதர்கள் இறைச்சி மட்டுமின்றி சேர்த்து தேன், தானியங்கள், விதைகள், பழங்கள் என அனைத்தையும் உணவாக எடுத்துக்கொண்டுள்ளனர் என்பதை பல மானுடவியல் மற்றும் தொல் பொருள் ஆய்வுகளின் தரவுகளை கொண்டு ஆசிரியர் உறுதிப்படுத்துகிறார்.
அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக,கொழுப்பு உணவுகளை சொல்லும் அலோபதி மருத்துவத்தின் கூற்றை பொய்யாகும் விதத்தில் இந்த பேலியோ டயட் இருந்தாலும், அதை பின்பற்ற அதே அலோபதி மருத்துவத்தின் பரிசோதனை முறைகளை நாடுவது சற்று நெருடல்.ஒவ்வொரு தனிமனிதனும் உடலாலும், மனதாலும் தனித்தன்மை கொண்டவன்.அதன் அடிப்படையில் மட்டுமே நோயறிதலையும், சிகிச்சையும் இருக்க முடியும்.ஒரு சராசரி புள்ளிவிவர பரிசோதனைகளை வைத்து சிகிச்சை அளிக்கிறது இந்த டயட்.அதேபோல் இதில் பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலிலும்,தற்கால வணிக கலப்படம், ரசாயன நஞ்சுகள் பற்றிய புரிதல் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய உணவுமுறை என்பதே சமச்சீர் உணவுதான். ஐந்து வகை சுவையும் நம் உடல் ஆற்றலுக்கு தேவை.இதில் இனிப்பை அறவே தவிர்ப்பதும் உடலுக்கு தீங்கை தான் ஏற்படுத்தும்.அந்தந்த நிலம் சார்ந்த,காலம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொண்டாளே நம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்துவிடும்.
கடலோரங்களில் வாழும் மக்கள் மீனை மட்டுமே உணவாகவும், மலைவாழ் மக்கள் கிழங்கு வகைகளை உணவாகவும் எடுத்து ஆரோக்கியமாக வாழ்வதை நாம் காண்கிறோம்.அதேபோல் காலத்திற்கு ஏற்ற உணவாக பழங்கள், காய்கள் இயற்கையாகவே விளைவதை காண்கிறோம்.உடலின் இயற்கை உந்துதலில் ஏற்படும் பசி, தூக்கம் போன்றவற்றை கவனித்து பின்பற்றினாலே பல நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பதே நிதர்சன உண்மை என உணர்த்தியது இந்நூல்.
இந்த டயட்டில் உள்ள இன்னுமொரு சிக்கலான உணவாக கருதப்படுவது ப்ராய்லர் கோழி இறைச்சி. பல ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கப்படும் இவ்வகை கோழிகளின் தீங்கு பற்றி சாதாரண மக்களுக்கே புரிந்து நாட்டு கோழிக்கு மாறிவிட்ட நிலையில்,இந்த டயட்டை தொடர்பவர்கள்,அதன் கேடை உணராமல்,அதை மட்டுமே முழு உணவாக எடுத்துக் கொள்வது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
பேலியோ டயட்டினால் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் முன்வைக்கிறார் ஆசிரியர்.தங்கள் உடல்நலத்திற்காகவும், நோய்களை தீர்த்துக் கொள்வதற்காகவும் மனதின் கட்டாயத்தின் பெயரில் ஆரம்பிக்கப்படும் இது போன்ற டயட்கள்,நோயில் இருந்து நிவாரணம் கிடைத்ததும் மனது இயல்பு நிலைக்கு திரும்பி அதிலிருந்து வெளியேறி தங்கள் பழைய உணவுமுறைக்கே மாற விரும்புவார்கள்.இதனால் அவர்களின் உடல்நிலை பழைய நிலைக்கே திரும்புகிறது.மனிதனின் ஆரோக்கியம் என்பது அவனின் மனம் இயல்பு நிலையில் இருக்கும்பொழுது தான் கிடைக்கும். மனமும், உடலும் வெவ்வேறானதல்ல.அவ்வாறு இருக்கும்போது, மனதுக்கு ஒவ்வாத உணவை கட்டாயத்தின் பேரில் உண்டால் அது ஆரோக்கியத்திற்கு வித்திடுமா என்பது கேள்விக்குறியே..
இந்த டயட்டை தொடர முடியாமல் கைவிட நினைப்பவர்களுக்காக இப்பொழுது maintenance diet என்று புதிதாக அரிசி, தானியங்களை சிறிதளவு சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது அக்குழுக்களில்.பின் இந்த டயட்டின் நோக்கம்தான் என்னவென்று புரியவில்லை..இதில் இருந்தே பரிந்துரைக்கப்படும் உணவின் விருப்பமின்மையை, புரிந்துகொள்ள முடிகிறது.
இறுதியாக பேலியோவில் உள்ள முக்கிய அடிப்படை ஆபத்தான க்ளைக்கோஜன் புறக்கணிப்பால் உடலில் ஏற்படும் தீவிர ஆபத்தை அறிவியல் ரீதியாக விளக்கும் இடத்தில், இவ்வளவு ஆபத்தான டயட் முறை தேவையா என்ற கேள்வியே எழும்புகிறது.
நோய் தீர்க்கும் ஆற்றல் உணவிலும், மருத்துவத்திலும் மட்டுமே சாத்தியம் என தவறாக புரிந்து வைத்துள்ள மக்களுக்கு,உடல் தன்னை தானே சரி படுத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்டுள்ளதை பல உதாரணங்கள் கொண்டு விளக்கியுள்ளார் ஆசிரியர். வாழ்வியல் தவறுகளால் ஏற்படும் நோய்களை சரிசெய்ய அடிப்படை வாழ்வியலை ஒழுங்கு படுத்துவதே தீர்வாக இருக்க முடியுமே தவிர, அதை விட்டு புதிது புதிதாக முளைக்கும் டயட் முறைகளை பின்பற்றினால் ஏற்படும் பின்விளைவுகள் அதை விட அபாயகரமாக மாறிவிடக்கூடும் என்ற உண்மையை எடுத்துக்கூறியிருக்கிறது இந்நூல்.
பேலியோ ஆதரவு நூல்களிலுள்ள கேள்வி - பதில்களை வைத்தே அதன் முரண்களை தன் கருத்துகளாக முன்வைக்கிறார் ஆசிரியர்.அதனால் நமக்கும் வாசிக்கும் பொழுதே எந்த வித குழப்பமுமின்றி அதன் உண்மைதன்மையை அறியமுடிகிறது.பல ஆய்வு முடிவுகள் மற்றும் மருத்துவ நூல்களின் தரவுகளை கொண்டு எழுதி இருப்பதால் வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும் விதம் மிக எளிய நடையில் கட்டுரை அமைந்துள்ளது சிறப்பு.
நூலின் நிறைவு பகுதியில்,மொத்த நூலின் சாராம்சமும் புல்லட் பாயிண்ட் களாக கொடுத்திருப்பது மேலும் சிறப்பு.
ஆரோக்கிய தேடலில் புதிது புதிதாக முளைக்கும் டயட் முறைகளை நாடி செல்ல இருப்பவர்கள் இந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்தால் ஆரோக்கியத்தின் ரகசியம் பிடிபடும். நன்றி.
Comments
Post a Comment