நூல் :வாழ்க வாழ்க 

ஆசிரியர் : இமையம் 



இன்றைய அரசியல் களத்தில், பொதுக்கூட்டங்கள் என்ற பெயரில் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகளையும், கூட்டத்திற்கு ஆள் சேர்க்க அடித்தட்டு மக்களின் பணத்தேவையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை வரவழைக்கும் யுக்தியை வெகு சாமான்யமாக நடத்தி கூட்டம் சேர்த்தும்,அங்கு அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் அல்லல் பட விடும் அரசியல் புரோக்கர்களின் அடாவடி என வரிசை கட்டி படு எதார்த்தமாக,ஒரு அரசியல் கூட்டத்தை கண்முன் கொண்டு வரும் நாவல் ஆசிரியர் இமையம் அவர்களின் 'வாழ்க வாழ்க'. 


தன் பேரனின் வைத்திய செலவுக்காக ரூபாய் ஐநூறு கிடைக்கும் என்ற ஆசையில் ஆளும் கட்சியின்  பொதுக்கூட்டத்திற்கு செல்லும் ஆண்டாளின் நிலை என்ன ஆனது என்பதை பல கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை வைத்து வெளிப்படுத்தும் நாவல்.  


ஒரு கொண்டாட்டத்திற்கு செல்லும் மனநிலையில்  கூட்டத்திற்கு செல்லும் ஆண்டாளும், அவள் தோழிகளும்,கலை நிகழ்ச்சி பெண்களை ரசித்தும், நகை அணிந்து வந்தவளை கிண்டல் அடிப்பதுமாக,இருக்கை சண்டை என ஆரம்பத்தில் குதூகலமாக இருந்தாலும், வெயில் ஏற ஏற அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறுகிறது. குடிக்க தண்ணீர் இல்லாமல்,அவசரத்திற்கு கழிப்பறை செல்ல முடியாமல் உடல் உபாதைகளால் அவஸ்தை படும் இடம், நாமும் அந்த கூட்டத்தில் சிக்கியுள்ளது போல் தோன்றியது. 


கோடி கோடியாய் செலவு செய்து மாநாடு நடத்தும் அரசியல் கட்சிகள், அதற்கு ஈடாக மக்களின் உயிரை காவு கேட்பது, கதையில் ரணப்படுத்தும் இறுதி முடிவாக இருந்தது வலியை ஏற்படுத்தியது. 


இக்கதையில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் வெங்கடேசப் பெருமாள், ஒரு கட்சியின் அரசியல் தரகர், அடிமட்ட தொண்டன், என்று படிப்படியாக முன்னேறி ஒரு அரசியல் பிரமுகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, அடித்தட்டு மக்களின் மத்தியில் தன்னையும், தான் சார்ந்த கட்சிக்கு வக்காலத்து வாங்கி பேசி,அவனின்  காரியங்களை சாதித்து கொள்வதுமாக இருக்கும் அவனின் செயல்பாடுகள் அவனின்  அறியாமையையே காட்டுகிறது.

அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்க்கவும்,தோரணம் கட்டவும் போன்ற சின்ன வேலைகளை கட்சிக்காக தங்கள் கைக்காசை போட்டு செலவு செய்து அந்த கட்சியின் தலைமையிடம் நன்மதிப்பு பெற அவன் படும் பிரயத்தனங்கள் ஒவ்வொரு அரசியல் தொண்டனையும் நினைவு படுத்துகிறது. என்றாவது தங்கள் கட்சி  தலைமையின் கடைக்கண் பார்வை பட்டு தானும் ஒரு மந்திரி ஆகும் கனவோடு வளைய வரும் இவர்களின் ஆசை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே..


அரசியல் செய்ய, சாதி எந்த அளவு கட்சிகளுக்குள் விளையாடுகிறது என்பதை இக்கதையில்  உணர முடிகிறது.ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பாகுபாடு எல்லாம் அரசியலில் மட்டுமே, சாதியில் கிடையாது.இரு கட்சிகளிலும் தங்கள் சாதியை சேர்ந்தவர்களையே முன்னிலை படுத்துவதும், பதவிகளில் அதிகாரம் கொடுக்கவும் சாதி முக்கிய பங்கு வகிக்கிறது.கட்சிக்குள் ஒருவர் வளர்ச்சி அடைய எந்த அளவும் இறங்கி வேலை செய்யவும்,செய்கிற தவறுகளுக்கு உறுதுணையாக இருப்பதுமாக சாதியை பிரதானப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.கதையில் பொதுக்கூட்டத்திலும் பெண்கள் இருக்கை சண்டையில் கூட சாதியை  சேர்ந்து இருப்பது,அனைத்து இடங்களிலும் சாதி வியாபித்துள்ளது புரிகிறது.


புத்தக வடிவமே மிக அழகாக கையடக்கமாய் இருப்பது வசீகரிக்கிறது.


பொதுக்கூட்டத்தின் ஒரு நாளை, வெயிலின் வெக்கை பிசுபிசுப்புடனும்,புழுக்கத்தின் கசகசப்பிலும், தாகம், மயக்கம் என ஆண்டாளுடன் சேர்ந்து நாமும் அனுபவிப்பதை உணர முடிகிறது.வட்டார வழக்கு பேச்சும், அடித்தட்டு மக்களின் கிண்டல் தோணி கெட்ட வார்த்தைகளும் கலந்து கட்டிய  யதார்த்தமான கதையோட்டம்.தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளை, கொஞ்சமும் சமரசம் இல்லாமல் பகடி செய்து எழுதி இருப்பதும்,ஆளும் கட்சியை ஒரு படி மேல் அதிகமாக குட்டியிருப்பதும் புரிகிறது.


'வாழ்க வாழ்க' கோஷத்திற்காக மட்டும் மக்களை பயன்படுத்தி, ஒட்டுக்கு பணம் கொடுத்து மக்களின் யோசிக்கும் தன்மையை கூட மழுங்கடிக்கும் இன்றைய அரசியல்வாதிகளை குற்றம் சொல்லி தப்பிக்க முடியாத அளவு பொதுமக்களின் செயல்பாடுகளும் கேலிக்குரியதாக  உள்ளது என்பதை இக்கதை உணர்த்துகிறது.நன்றி.

Comments