நூல் : மன்னார் பொழுதுகள்
ஆசிரியர் : வேல்முருகன் இளங்கோ
ஒரு பெண்ணின் சாப நிழலில் வாழும் ஒரு குடும்பத்தின் தொடர் நிகழ்வுகளை ரத்தக்கறை படிந்த சுவடோடு எழுதிக்கப்பட்டிருக்கும் நாவல்.ரத்தமும்,சதையுமாக பல திரைப்படங்கள் பார்த்திருப்போம், ஆனால் ஒரு நாவலில் இத்தனை உயிரோட்டமாக(?)கொலைகளை,நம் கண்களால் நேரில் காண்பதை போன்ற ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தி விடும் அளவு எழுதபட்டுள்ள இந்நாவல்,தேரிக்காட்டு மக்களின் வாழ்வை சமூக பார்வையோடு எடுத்துரைக்கிறது.
தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதி கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்ட நாவல். தூத்துக்குடி பகுதி மக்களின் தொழிலான மீன்பிடி,துறைமுகப்பணி, கடலுக்குள்ளான அவர்களது வாழ்க்கை என நெய்தல் நில சமூகத்தின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டியுள்ளார் ஆசிரியர்.
கதையின் பிரதான கதாபாத்திரமாக இசக்கி, தன் தந்தையை கொன்று தன் முதல் கொலை கணக்கை ஆரம்பித்து பின் தன் நட்புக்காக,காதலுக்காக என கொலை பட்டியல் நீள்கிறது.இளமையின் முறுக்கில் தன் சகாக்களுடன் செய்யும் கொலைகள் ஒரு நிலையில் அவனின் மனதில் ஒரு வெறுமையை உணர்ந்து தன் குடும்பத்துடன் வாழ விரும்பினாலும், பழிவாங்கல் படலம் தொடர்ந்து கொண்டே இருப்பதை அவனால் உணரமுடிகிறது.அதை தடுக்கும் ஆயுதம் இப்பொழுது அவன் கையில் இல்ல என்ற நிதர்சனமும் புரிகிறது. இதில் தன் முன்னோர் செய்த பாவத்தின் நிழலும் தன்னோடு அலைவதை அவனால் தடுக்க முடியவில்லை. தன் தந்தை கொடுத்த 'மங்கம்மா விளக்கை' மட்டும் தங்கள் குடும்ப பாவத்தை போக்கும் ஒரே பிடிமானம் என்ற கருத்தில் நாள்தோறும் விளக்கை ஏற்றி வரும் அவனின் நம்பிக்கை, அவனின் இயலாமையைதான் காண முடிகிறது.
குடும்பத்தில் வரிசையாக பலி கேட்கும் மங்கம்மாவின் சாப சுவடு மறைய நம்பூதிரியின் வாக்குப்படி பரிகாரமாக 'மங்கம்மா விளக்கு' ஏற்றினாலும் சாபம் என்னவோ நீங்கியதாக தோன்றாத அளவு அக்குடும்பத்தை துஷ்ட காற்று சுழற்றி அடிக்கும் பொழுது, செய்த பாவங்களுக்கு பரிகாரம் எந்த உதவியும் செய்யாது என்பதை நிதர்சனமாக புரிகிறது. மங்கம்மாவின் சாபம் ஒரு பக்கம் என்றால், இசக்கி விரும்பிய மரியாவும் ஒரு யட்சியாக இசக்கியை தொடர்வது ஒரு யாசகத்திற்காக என்பது கதையோட்டத்தில் புரிகிறது. ஆனால் மரியாவின் நிழல் எதற்காக இசக்கியை தொடர்கிறது என்பதை அறியும் பொழுது நமக்கு கண்ணீர் சுரப்பது நிஜம்.அவளின் இயலாமையை இசக்கி நிறைவேற்றும் இடத்தில் அவள் மறைவது,படிக்கும் நமக்கு மனநிறைவினை தருகிறது.
நஞ்சுண்டான்.. கதையின் அடுத்த முக்கிய கதாபாத்திரம்.இசக்கியின் நம்பிக்கையை பெற்றவர். சிறையில் அவர்களுக்குள் ஏற்படும் பிணைப்பு, இசக்கியின் மகன் இருதயராஜை காப்பாற்றும் பொறுப்பை ஏற்கும் அளவு நெருக்கம் கொண்டவர்களாக விடுகிறார்கள்.விடுதலை புலியின் ஆதரவாளராக இருக்கும் அவர், புலிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் நோக்கத்தோடு,உணவு, மருந்து என அத்தியாவசிய பொருட்களை இசக்கியின் உதவியோடு கடல்வழியாக அனுப்பிவிடும் தீவிர புலி ஆதரவாளர்கள். பணவிஷயத்திலும் இசக்கியும் நஞ்சுண்டானும் நம்பிக்கையின் பெயரிலேயே கையாண்டனர்.இந்த பரஸ்பர நம்பிக்கையே அவர்கள் இறுதி வரை நண்பர்களாக இருந்ததிற்கான அத்தாட்சி.
நஞ்சுண்டான்-இசக்கியின் நட்பு, இசக்கி-ராஜசேகரின் நட்பு,இருதயராஜ் -சந்திரன், திப்புவின் நட்பு என நட்புக்கு இலக்கணமாக வாழும் மனிதர்கள் சூழ் உலகத்திலும் பகையும், துரோகமும் கண்டிப்பாக இருக்கும் என வாழ்வின் இரண்டு பக்கத்தையும் எடுத்து காட்டியுள்ளார் ஆசிரியர்.
கடைசி நேர நஞ்சுண்டான்-இருதயராஜ் அன்பு உறவை தனி தொகுதியாக கதையில் இடம் பிடிக்கிறது.
கதையின் இறுதி பக்கங்கள் ஒரு திரைப்படத்திற்கு உரிய பரபரப்பை தருவது எனது வாசிப்பனுபவத்தில் புதிது.எப்பொழுதும் சாய்ந்து கொண்டே எரியும் 'மங்கம்மா விளக்கு' தன் சாபத்தை விலக்கி தலைகீழாக எரியும் பொழுது நமக்கு ஒரு புல்லரிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு பெண்ணின் சாபம் தான் இத்தனை நிகழ்வுக்கும் காரணமா? என்ற எண்ணம் தோன்றினாலும் கதையின் அழுத்தத்தில், வாசிப்பவர் மனதில் நம்பும்படி நங்கூரம் பாய்ச்சுகிறார் ஆசிரியர்.
கதையில் எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள் இருந்தாலும் குழப்பமற்ற கதை நகர்வு.வட்டார வழக்கு மொழியில் கதை இருப்பதால், அம்மண்ணின் உயிரோட்டமான தன்மையை வெளிப்படுத்துகிறது. 385 பக்கத்தில்,எந்த இடத்திலும் தேவையில்லாத இடைச்சொருகல் இல்லாமல் கச்சிதமான கதையோட்டமாக அமைந்திருப்பது சிறப்பு.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தின் கடந்த ஐம்பது வருட வரலாற்றையும் திரும்பி பார்க்கும் அளவு அவ்வூர் மக்களின் தொழில்,ஊரின் தோற்றம்,அரசியல் நிகழ்வுகள்,ஸ்டெர்லைட் ஆலை திறந்த ஆரம்பத்தில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டங்கள், திருநெல்வேலியை விட தூத்துக்குடி குறுகிய காலத்தில் பெரும் வணிக ஊராக மாறிய வரலாறு என அனைத்து வரலாற்று பதிவுகளையும் கதையில் உறுத்தல் இல்லாமல் கையாண்டிருப்பது சிறப்பு.
கதையின் பிற்பகுதி முழுவதும் கடலும்,கடலை நம்பி வாழும் மாந்தர்களின் வாழ்க்கையையும் விளக்கும் விதம் இருந்தது.அவர்கள் சாப்பிடும் மீனை வைத்தே சாதியை பிரித்து பார்ப்பதை அறியும் போது,இதுவரை கேள்வி படாத விஷயமாக எனக்கு பட்டது.கிருஸ்தவ அமைப்பின் உள் நடக்கும் பாலியல் வக்கிரங்கள், சிறைச்சாலை அக்கிரமங்கள் என ஒரு முழு நீள வாழ்க்கையே கதை மாந்தர்களுடன் வாழ்ந்து முடித்த அனுபவத்தை கொடுக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் வேல்முருகன் இளங்கோவிற்கு இது இரண்டாவது நாவல். பகை,பாவம்,அவமானம், பழிவாங்கல்,நட்பு, காதல் என வாழ்வின் அத்தனை பரிணாமத்தையும் உள்ளடக்கிய கதையாக உள்ளது இந்த 'மன்னார் பொழுதுகள்'. நன்றி.
Comments
Post a Comment