நூல் : ஆதி இந்தியர்கள்
ஆசிரியர் : டோனி ஜோசப்
65000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த நம் மூதாதையர்களின் வரலாற்றை சொல்லு நூல். ஒரு பீட்சாவின் அடுக்கு போல் நவீன மனிதர்கள், முதல் உழவர்களாக கருதப்பட்ட ஜாக்ரோஸ் மெய்ப்பாளர்கள், ஹரப்பா நாகரீகம், கடைசியில் ஆரியர் வருகை என வரிசைபடி விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.
இது இந்நூலின் மதிப்புரை போல் அல்லாமல்,என் புரிதலுக்காக முக்கியமான குறிப்புகளின் தொகுப்பாக எழுதியுள்ளேன்.நான் உள்வாங்க முயன்ற விஷயங்களை மட்டுமே எழுத முடிந்தது.
பண்டைய வரலாற்றுகளை கல்வெட்டு, தொல்லியல் சான்றுகளை கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்களை வாசித்திருந்தாலும், மரபியல் சான்றுகளையும் கொண்டு விவரிக்கிறது இந்நூல்.இது நம் வரலாற்றை வேறு கோணத்தில் நமக்கு புரிய வைக்கிறது.
மரபியல் ரீதியாக விளக்கும் இடங்களில், நமக்கு ஒரு புது அனுபவமே கிடைப்பது உண்மை. அதை புரிந்து கொள்ள இன்னும் புத்தகத்தின் ஆழ செல்ல வேண்டிய நிலை என்றாலும் ஏதோ புதையலை தேடும் பரவச நிலையே ஏற்படுகிறது.
மைட்டோகான்ட்ரியல் 'டி என் ஏ'வும், Y குரோமோசோம் வழி நம் மூதாதையர்களை அறிந்து கொள்ள முடியும் என்று விளக்கும் இடத்தில் பிரமிப்பை ஆழ்த்தியது.பண்டைய DNA ஆய்வு முடிவுகள், இதுவரை நாம் அறிந்து வைத்துள்ள வரலாற்றை மாற்றி எழுதி கொண்டிருக்கிறது என்றும் பல புதிர்களின் முடிச்சுகள் எவ்வாறு அவிழ்த்து விடுகிறது என்று பல அறிவியலாளர்களின் ஆய்வறிக்கை கொண்டு விளக்குகிறார்.
இரண்டு வேறுபட்ட மக்கட்குழுவினருக்கு இடையே இருக்கும் ஒற்றுமை, வேற்றுமை, மக்களின் இடப்பெயர்ச்சி பற்றிய சான்றுகள் என அனைத்தையும் பண்டைய மனிதர்களின் புதைப்படிமங்களின் DNA வை அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கவும் உதவுகிறது.இடப்பெயர்ச்சி நிகழ்ந்திருக்கும் காலத்தை கணிக்க மரபியல் மட்டுமின்றி தட்பவெப்ப நிலை மாற்றத்தையும் கணக்கில் எடுத்துள்ளனர்.
ஹரப்பா நாகரீகம் :
பண்டைய நாகரீகங்களில் மிகவும் முக்கிய, ஏழு நூற்றாண்டுகள் நீடித்திருந்த பிரம்மாண்ட நாகரீகமாக விளங்கியது ஹரப்பா நாகரீகம்.ஹரப்பா நாகரீகத்தை விளக்கும் இடத்தில் மெசபெடோமியா நாகரீகத்தின் ஒற்றுமை, வேற்றுமை மூலம் ஹரப்பா நாகரீகத்தின் பல சுவாரசிய தகவல்கள் கிடைக்கிறது.
* கோவில்கள் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை.
* அரசர்களின் பெருமை பேசும் எந்த சிற்பமும் இல்லை.
* ஆடம்பர கல்லறை சடங்குகள் இல்லை.
* மிக நவீன நீர் மேலாண்மை
சுமார் 700 ஆண்டுகள் கொண்ட இந்நாகரீகத்தில், மனிதர்கள் இடையே வன்முறையோ, தாக்குதலோ, எந்த நகரமும் தீக்கிரையாகுதலோ என எந்த சம்பவமும் நடந்ததாக எந்த சான்றும் இல்லாதததும், போர் கருவிகள் இல்லாததின் சான்றும் உள்ளது.
ஹரப்பர்களின் மொழி என்ன என்ற புதிரை இன்று வரை ஆராச்சியாளர்களால் முழுமையாக விடுவிக்க முடியவில்லை.இங்கு பல மொழிகள் பேசப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறுகின்றனர். ஹரப்பா எழுத்து வரிவடிவத்தின் அடிப்படை மொழி முதனிலை திராவிட மொழியாக இருக்கலாம் என பெரும்பாலான வரலாற்று தொல்லியலாளர்கள் ஆதரிக்கின்றனர்.ஹரப்பர்களுக்கும் ஜாக்ரோஸ் வேளாண்குடியினருக்கும் இடையேயுள்ள பிணைப்பின் காரணமாக ஜாக்ரோஸ் மக்களின் 'ஈல மொழி'யாக கூட இருக்க வாய்ப்பு இருப்பதாக அறிஞர்கள் விளக்கியுள்ளனர். அதோடு அறிஞர் மெக்ஆல்பின் அவர்களின் ஆய்வின் படி ஈல மொழிக்கும் திராவிட மொழிக்கும் உள்ள ஒற்றுமைகளை பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் பொழுது நமக்கும் ஆச்சரியம் மேலோங்குகிறது.அந்த ஒற்றுமை உண்மையெனில் திராவிடம் எவ்வாறு வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தது என்பதையும், அதற்கு முக்கிய காரணமாக மேய்ப்பர்களாக இருக்கக்கூடும் என்று கூறுகிறார் ஆசிரியர்.அதுபோல் ஹரப்ப நாகரிகத்தில் சமஸ்க்ருதத்திற்கும், ஆரியம், வேதங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ஆணித்தரமாக கூறுகிறார்.
ஆரிய குடியேற்றம் :
அடுத்து,நம் நாட்டில் இன்றைய சூழலில் சூடாக விவாதிக்கபட்டுக் கொண்டிருக்கும் 'யார் இந்தியாவின் மூத்த குடி.. ஆரியமா? திராவிடமா?, எது பண்டைய மொழி.. தமிழா? சமஸ்க்ரிதமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் அத்தியாயம். இதன் தலைப்பே, இந்த அத்தியாயத்தின் சாராம்சத்தை புரிய வைத்து விடுகிறது. 'இறுதியாக குடியேறியவர்கள் : ஆரியர்கள்.
ஸ்டெப்பி புல்வெளியில், இந்திய -ஐரோப்பிய மொழி பேசும் மெய்ப்பாளர்களாக இருந்த ஒரு இனக்குழு ஐரோப்பா மற்றும் தெற்காசியாவையும் ஆக்கிரமித்து, இந்தியாவை வந்தடைந்த கதையை இடப்பெயர்ச்சி,மொழி, கலாச்சாரம், மரபியல் ரீதியாக விளக்கி இருப்பது அருமை.
ஹரப்பா நாகரீகத்தின் வீழ்ச்சி அடைய தொடங்கிய பின்பே ஆரியம் வந்தடைந்ததையும், ஹரப்பா நாகரீகம் தான் தங்களின் நாகரீகம் என ஒரு சாரரின் வாதத்தை முழுமையாக மறுக்கும் விதம் சான்றுகளை அள்ளித் தருகிறார் ஆசிரியர்.
* ஹரப்பா நாகரீகத்தின் வீழ்ச்சி ஆரம்பித்த பின்பே ஆர்யம் அடியெடுத்து வைக்கிறது.
* ஹரப்பா நாகரீகத்தில் குதிரைகள் முத்திரைகளாகவோ, குறியீடாகவோ, எலும்புக்கூடாகவோ கிடைத்ததாக எந்த சான்றும் இல்லை.ஒற்றை கொம்பு விலங்கே அதன் குறியீடாக இருந்தது. ஆனால் ரிக் வேதத்தில் குதிரை முக்கிய இடம் வகிக்கிறது.
* பழமையான வேதமாகிய ரிக் வேதம் ஹரப்பா நாகரீகத்திற்கு பிந்தையது.
* ரிக் வேதத்தில் யோகாவை பற்றிய எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.
* இன்று போல் அன்றும் சமஸ்கரித்ததை வற்புறுத்தி, இணங்க வைத்ததன் மூலமே பரவியது.
* அடுக்கதிகார அமைப்புமுறையும், மன்னராட்சி முறையையும் வெகுவாக கவர்ந்த இனக்குழுக்களாக ஆரியம் இருந்துள்ளது.
ரிக் வேதத்தில் இருக்கும் ஒரே காரணத்திற்காக இன்றும் சரஸ்வதி நதியை பல கோடிகளை செலவழித்து சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு தனி அத்தியாயம் போட்டு பாடம் எடுத்துள்ளார் ஆசிரியர்.
தனித்துவமான இந்திய நாகரீகத்தில் பல்வேறுபட்ட இடப்பெயர்ச்சி வரலாறுகளையும், விதவிதமான மக்கட்குழுக்களையும் ஒன்றிணைத்துள்ள நம்முடைய நாகரீகம் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்வதில் தான் இருந்தது.உணவு, கலாச்சாரம் என பன்முகத்தன்மையோடு இருந்த இந்திய வரலாறை ஒற்றை கலாச்சாரமாக மாற்ற முயற்சி செய்துக்கொண்டிருப்பவர்களின் கைப்பாவையாக மாறாமல் இருக்க இந்நூல் உதவும்.நம் குழந்தைகளின் பாடத்திட்டத்தில் ஆரம்பித்து, வரலாற்றை திரித்து மக்களை குழப்பும் இன்றைய காலகட்டத்திற்கு ஒரு தெளிவை தரும் நூல்.
இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் இரண்டு மனநிலையை கொண்டவர்களாக உணர முடியும்.வரலாற்றை பற்றி இதுவரை நாம் தெரிந்து வைத்துள்ள பல சுவாரஸ்யங்கள் தொலையலாம் அல்லது இவ்விஷயங்களில் தெளிவும், அறிவும் கொண்டு இருப்பதற்கு சந்தோஷம் அடையலாம்.
மொத்தத்தில் நாம் அனைவருமே வந்தேறிகள் தான் என்பதும் இதில் ஆரியம், திராவிடம் என எந்த பிரிவினையும் இல்லாமல் அனைவரும் கலப்பின மக்களே என்று முடித்துள்ளார்.
சாதி, மதம், இனம், மொழி என பாகுபாடு பார்த்து பிரிவினையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இப்புத்தகம் கண்டிப்பாக ஒரு புரிதலை தரும் என்பது உண்மை. நன்றி.
Comments
Post a Comment