நூல் : அம்பறாத்தூணி 

ஆசிரியர் : கபிலன் வைரமுத்து 



அம்பறாத்தூணி.. 15 சிறுகதைகள் கொண்ட  சிறுகதை தொகுப்பு நூல்.கதைகளை படிக்கும் முன் நூல் தலைப்பான 'அம்பறாத்தூணி' யின் அர்த்தம் தெரிந்து கொள்ள ஆவல் மேலோங்குகிறது.'வில் அம்புகள் வைக்கும் கூடு' தான் அதன் அர்த்தம் என்று விளங்கும் பொழுது, 15 கதைகள் (அம்புகள்) கொண்ட தொகுப்பை அம்பறாத்தூணி என்ற பெயரில் பொருள் வரும்படி அமைத்திருப்பது புரிகிறது. 


தொகுப்பின் தலைப்புக்கே பொருள் தமிழ் அகராதியில் தேடும் நிலையில் கதைகள் எப்படி இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியபடி வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் 15 கதைகளுமே எளிய தமிழில் இருந்தது சிறப்பு.


பெரும்பாலான கதைகள் ஏதாவதொரு  உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புனையப்பட்டவையாக இருந்தது.அதோடு மட்டுமல்லாமல் ஒரு கதையின் சிறு சம்பவத்தை அடுத்த கதையோடு தொடர்பு படுத்தி எழுதி இருப்பது புதுமை. இதனால் படிக்கும் பொழுது சுவாரசியம் கூடுகிறது.


1806ல் வேலூர் சிப்பாய் புரட்சியை மையமாக வைத்து புனையப்பட்ட கதை 'வள்ளி'. புரட்சியின் போது, தன் காதலனை கொன்ற படை வீரன் சின்னானை பழிவாங்க புறப்படும் வீர மங்கையான வள்ளி,சின்னானை மட்டுமல்லாது தன் காதலன் உயிர் போக காரணமாக இருந்த உயிரற்ற பொருளான பீரங்கியையும் சேர்த்து பழி தீர்ப்பது எதிர்பாராத திருப்பம். இது கொஞ்சம் மிகைத்தன்மையாக தெரிந்தாலும் அவள்  காதலின் ஆழத்தை புரிய வைக்கிறது.


1876-78 சென்னை பஞ்சத்தில்,  மெலிந்த தேகத்துடனும், ஒட்டிய வயிறுமாக இருந்த மனிதர்களின் புகைப்பட ஆவணங்களை நாம் பார்த்திருப்போம். அதை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட கதை  'சிவநேசன்'.பசியில் வாடும் மக்களை துச்சமாக கருதி அவர்களின் இறப்பையும், மெலிந்த தேகத்தையும் புகைப்படம் எடுக்கும் ஆங்கிலேய துரையின் தீவிரத்தன்மை நமக்கு ஒர் அதிர்வை தருகிறது.அதே பசிக்காக ஒரு ரொட்டித் துண்டுக்காக ஒருத்தரை ஒருத்தர் அடித்து பிடுங்கி உண்வது சிறுமையான காரியமாகவும், தங்கள் சந்நிதிகளுக்கு அந்த இழுக்கை  தந்து விடக்கூடாது என கருதி சிவநேசன் எடுக்கும் முடிவு அதிர வைக்கிறது. புனைவு என்று தெரிந்தாலும் வாசிக்கும் பொழுதே பஞ்சத்தின் சுவடே அறியாத நமக்கும் வலி ஏற்படுகிறது.


பொய்யின் வாசத்தை உணர முடிகிற தன் தாயிடம் தன் முதல் பொய்யை சொல்ல வாமன் எடுக்கும் ஒத்திகைகள் பலனளிக்காமல் போவதை சொல்லு கதை 'வாமன்'. நம் அனைவரின் வாழ்விலும் இந்த இக்கட்டான நிலையை அனுபவித்திருக்க வாய்த்திருக்கும்.ஒவ்வொரு பொய்க்கும் ஒவ்வொரு வாசனை என வகைப்படுத்தும் இடம் புதுமை.


1899 ரஷ்ய அரசாங்கம் டுகோபர்ஸ் இன மக்களை கப்பல் மூலம் கனடா நாட்டுக்கு நாடு கடத்திய நிகழ்வை மையமாக கொண்ட கதை 'டிமிட்ரி'.டுகோபர்ஸ்  சிந்தனையாளனாக இருக்கும் டிமிட்ரியும் அவனின் சகாக்களும் மாஸ்கோ சிறையில் இருந்து தப்பித்து, கப்பலை அடைய எடுக்கும் முன்னெடுப்புகளே கதை.சிறையில் இருந்து அவர்கள் தப்பிக்கும் இடம் ஒரு திரைப்படத்திற்கு உண்டான பரபரப்பு காட்சியாக அமைந்துள்ளது.இக்கதையை படிக்கும் போது 'டுகோபர்ஸ்' இன மக்களை பற்றி  அறிய முடிந்தது.கிறித்துவ மதத்திற்கு எதிரான கோட்பாடுகளை பின்பற்றும் இவர்கள், அரசாங்கத்தின் பல விதிகளுக்கு எதிராக இருந்துள்ளனர்.இவர்களை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்த நினைத்து அவர்கள் செலவிலேயே வெளியேற அனுமதித்தனர்.டுகோபர்ஸ் இன மக்களுக்குக்கு உதவும் பொருட்டு 'டால்ஸ்டாய்' அன்று எழுதிய புத்தகமே 'புத்துயிர்ப்பு'. அதில் கிடைத்த பணத்தை தன் மகன் செர்ஜியிடம் கொடுத்து கப்பலுக்கு அனுப்பிவைத்தார். தான் நேசித்த மக்களுக்காக ஒரு எழுத்தாளன் செய்த மகத்தான காரியமாக இதை பார்க்கப்படுகிறது.இன்றும் இவ்வின மக்கள் 'புத்துயிர்ப்பு' புத்தகத்தை தங்கள் வேதநூலாக கருதுகிறார்கள். டால்ஸ்டாயின் மகன் செர்ஜி,டுகோபர்ஸ் மக்களின் கனடா கப்பல் பயணத்தின் நாட்குறிப்பை தொகுப்பாக 'A journey to Canada' என்ற நூலாக வெளியிட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


மணியமுதன்.. நம் சிறு வயது மொட்டை மாடி அனுபவங்களை ஞாபகப்படுத்தும் கதை.சிறு வயதில் நண்பர்களுடன் மொட்டைமாடியில் விளையாண்டு, பின் வயதும்,சூழலிலும் மாறும் பொழுது,அதன் நினைவுகளை மட்டும் சுமந்து அசைபோடுவதை ரசனையோடு சொல்லும் கதை.மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாட மணியமுதன் போடும் பத்து விதிகள் சிரிப்பும்  சுவாரஸ்யமும் கொண்டது. வீட்டுக்குள் இருக்கும் அறைகளை விட மொட்டை மாடிக்கு உயிர் இருப்பதை போன்ற உணர்வை இந்த கதை தந்தது.


கார்ட்டூன் படங்களில் வரும் மிருகங்களுக்கு குரல் கொடுக்கும் 'அறிவுடைநம்பி' க்கும், அவரது மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை சொல்லும் கதை 'அறிவுடைநம்பி'.டப்பிங் குரலுக்காக தன் இயல்பான குரலை தொலைத்து,தன் பேச்சு தன் மகனின் குரலை சிதைத்து விடுமோ என்ற பயத்தில் அவனுடன் உரையாடாமல் முத்தங்கள் வழியே பேசிக்கொள்ளும் போது நம் மனதிலும் ஈரம் கசிகிறது.


சினிமா உலகில் ஒரு இளம் படைப்பாளியின் பங்கு எந்த அளவு அங்கீகாரம் கிடைக்கிறது என்பதை உணர்த்தும் கதை 'கோஸ்ட்' குருநாதன் கதை.அண்மையில் JNU பல்கலைகழகத்தில் மாணவர்களின் மேல் நடந்த அத்துமீறிய தாக்குதல்  சம்பவத்தை மையமாக வைத்து எழுதிய கதை 'யாழ்மதி'.இயற்கைக்கு முரணாக எது செய்தாலும் அந்த இயற்கையே அதை திரும்ப மீட்டெடுக்கும் என்ற உண்மையை உரைக்கும் கதை 'இருதய பிரகாசம்'.. இப்படியாக அனைத்து கதைகளும் ஒவ்வொரு விதமாக நம்மை ஈர்க்கிறது.


ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு அதிர்வையும்,உண்மையோடு கலந்த திருப்பதையும் தருவது வாசிக்கும் சுவாரசியத்தை கூட்டுகிறது.கதையின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே ஒவ்வொரு கதைக்கும் தலைப்பாக வைத்துள்ளார் ஆசிரியர்.


சரித்திர,நகர, கிராமிய,அந்நிய நாட்டில் நடந்த நிகழ்வு,சமகாலத்தின் பிரதிபலிப்பு  என கலவையான கதைக்களங்களையும்,கால நிகழ்வுகளையும் கொண்டவையாக உள்ளது.இதனால் ஒவ்வொரு கதையும் புது புது அனுபவத்திற்குள் நம்மை  இட்டுச்செல்கிறது.அம்பறாதூணியில் உள்ள ஒவ்வொரு அம்பும்(கதை) நம் மனதை துளைப்பது உறுதி. நன்றி.

Comments