நூல் : சின்னத்தாய் காவியம்

ஆசிரியர் : கே.எஸ்.கே. நடேசன்



சாதி, தீண்டாமை, பொருளாதாரம் போன்ற பல இடர்களுக்கு நடுவில் ஒரு ஏழை குடும்பம் உழைத்து முன்னேறும் கதை கே.எஸ்.கே. நடேசன் அவர்கள் எழுதிய 'சின்னத்தாய் காவியம்'. கரிசல் காட்டு பூமியான சிவகாசி பகுதியில் ஆரம்பிக்கும் கந்தவேலு - சின்னத்தாயின் வாழ்க்கை கதை தேனியில் வந்து முடிகிறது.இதில் எந்த இடத்திலும் அவர்கள் சறுக்காமல் வாழ்க்கையில் ஜெயிப்பது நமக்கும் ஒரு உத்வேகத்தை தருவது நிதர்சனம்.


கதையின் ஆரம்பத்தில் 'சாணர் வீட்டு பையன் வந்திருக்கான்'என்ற வரியிலேயே கதையின் மையப்புள்ளி தெரிந்து விடுகிறது.உழைப்பும், நேர்மையும் ஒருசேர வாய்த்திருக்கும் கந்தவேலுவின் வாழ்வில் சாதி எவ்வாறு விளையாடுகிறது என்பதையும், அதை கடந்து அவன் தன் மனைவி சின்னத்தாயின் ஒத்துழைப்புடன் வாழ்வில் வெற்றி கொள்வதே கதையின் சாராம்சம்.   


வாழ்ந்து நொடித்த ஒரு பெரிய குடும்பத்தில், கந்தவேலுவிற்கு மூன்றாவது மனைவியாக வாழ்க்கை படும் சின்னத்தாய், அக்குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு ஆணிவேராக விளங்குகிறாள். கணவனுக்கு துணையாக ஒரு சாமான்ய பெண்ணாக கதையின்  ஆரம்பத்தில் நமக்கு தோன்றி இருந்தாலும், ஊர் பொது கிணற்றில் நீர் எடுக்க விடாத போது அவள் ஒரு புரட்சி பெண்ணாக பரிணமிக்கிறாள்.பின் கந்தவேலுவின் முன்னேற்றத்திற்காக அவள் எடுக்கும் ஒவ்வொரு முன்னெடுப்பையும் காணும் பொழுதும் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறாள்.இன்றைய நவீன யுகத்திலும் பெண்கள் வேலைக்கு செல்வது ஒரு கடினமான சூழலாக இருக்கும் போது,எழுபது வருடத்திற்கு முன்பே அதை தகர்ப்பது போல் சின்னத்தாயின் செயல்பாடுகள் இன்றைய தலைமுறைக்கு ஒரு பாடமாக அமைகிறது.வயல் வேலை,தீப்பெட்டி ஓட்டுதல், காய்கறி விற்றல்,கணவனுடன் சேர்ந்து திருவிழாவில் மெஸ் ஆரம்பித்தது, மாடு வளர்த்து, பால் கறந்து விற்று என அவள் பார்க்காத வேலையே இல்லாதது போல் வாசிக்கும் பொழுதே மலைப்பை தருகிறது.தனக்கு ஏற்பட்ட அவமானத்தை வைராக்கியமாக மாற்றி அதில் வெற்றியும் கண்ட புதுமை பெண்ணாகவே நமக்கு சின்னத்தாய் தெரிகிறாள்.


ஒரு குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அக்குடும்ப  பெண்களின் உழைப்பும்,தியாகங்களுமே  முழுமுதல் காரணமாக அமைகிறது. தன் கணவன், குழந்தை என்று சுயநலமாக இல்லாமல் மாமனார்,மாமியார்,மூன்று நாத்தனார்களின் நல்வாழ்விற்கும் சின்னத்தாயின் உழைப்பும் ஒரு காரணமாக அமைகிறது.ஒவ்வொரு நிலையிலும் அவளின் பக்குவமான யோசனைகளே கந்தவேலுவை வழிநடத்தியது என்பது மிகையில்லை.கந்தவேலுவின் முற்போக்கு எண்ணத்தின் விதை அவள் மனதிலும் விழுதாக படர்வது அவர்களின்   அன்பின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது.இவர்களின் அன்பின் பயணம் அவளின் இறப்பிற்கு பின்னும் ஒரு காவியமாக கந்தவேலுவின் வாழ்வில் நிலைக்கிறது.


காலில் செருப்பு அணியாமை, தலைப்பா கட்ட அனுமதி இல்லாமை, பொது கிணற்றில் நீர் எடுக்க தடை, கோவில் உள்ளே செல்ல தடை என தீண்டாமை தலைவிரித்து ஆடும் நிலையிலும்,தன் சமூக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பாதையை வழியமைத்துக்கொடுக்கும் காந்தவேலுவின் செயல் நமக்கு வியப்பூட்டுகிறது.அதற்கு உறுதுணையாக இருக்கும் தன் நண்பர்களான மாரி, வாத்தியார் இருவரையும் தான் பொருளாதார முன்னேற்றம் அடைந்த காலத்திலும் மறக்காமல் நட்பு பாராட்டுவது அவனது நல்ல குணத்தை காட்டுகிறது.


அம்பேத்கார், பெரியார் போன்றோரின் சிந்தனைகளையும்,கொள்கைகளையும் இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்க  மாரி, வாத்தியருடன் கூட்டு சேர்ந்து அவர்கள் ஆரம்பிக்கும் படிப்பகம் நம்பிக்கையூட்டும் விதம் இருந்தது.


பனை ஏறும் போது கால் விலகாமல் இருக்க ஒரு சாண் அளவுள்ள நாரை கட்டுவதை தான் காலப்போக்கில் சாணர் என்று மருவியதாக ஆசிரியர் கூறி இருப்பது எனக்கு புதிய செய்தி. அதேபோல் 1911ல் அமுல்படுத்தப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தில் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் திருட்டு, கொள்ளை செய்வதாக அடையாளப்படுத்தி தினம் இரவு காவல்நிலையத்தில் பூட்டி வைக்கும் கொடுமைகளை அறியும் பொழுது அன்று சாதி தீ எந்த அளவு பற்றி எறிந்திருக்கிறது என்பது புரிகிறது.


சைவமும், வைணவமும் சமண மதத்தை அழித்த கதையையும்,அதில் எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றி படுகொலை செய்த நிகழ்வை,இன்றும் சிவன் கோயில் திருவிழாக்களில் ஒரு நாள் கொண்டாட்டமாக வைத்திருப்பதை இன்றைய தலைமுறை அறியுமா என்பது சந்தேகமே.அதுபோல் கீழ்சாதி மக்கள் கோவிலுக்குள் நுழையாமல் வெளியில் நிற்க வைக்க மேல்சாதியினர் உபயோகித்த சொலவடை 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என கந்தவேலு சொல்லும் போது, இன்றும் அந்த சொலவடையை நம்பி கோயில் கோபுரத்துக்கு கும்பிடு போடும் நாம் வெட்கி தலைகுனிய வேண்டியிருக்கிறது.


சாதி ஏற்றத்தாழ்வுகளை கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர் வெளிப்படுத்தி இருப்பது, தான் சார்ந்த சமூக மக்கள் பட்ட துயரங்களை, அவமானங்களை உலகிற்கு பறைசாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை வெளிக்காட்டுகிறது.பல முற்போக்கு சிந்தனைகளைகதையின் ஊடே போற போக்கில் சொல்லிஇருப்பது சபாஷ் போட வைக்கிறது.


மிக சொற்பமான கதாபாத்திரங்கள்,மிக எளிய சொல்வழக்கு என ஒரு நாவல் எழுத விரும்பும் ஆரம்பநிலை எழுத்தாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக இந்த நாவல் அமைந்துள்ளது  சிறப்பு.


நேர்மறை மனிதர்களோடு கதை பயணிப்பதால் அதிர்ச்சியோ, திருப்பங்களோ இல்லாமல் ஒரு நேர்கோட்டில் பயணிக்கிறது கதை.


கல்வியும், பொருளாதாரமுமே ஒரு சமூகத்தை உயர்த்தும் என்பதை ஆணித்தரமாக இக்கதையில் உணர்த்தி இருக்கிறார் ஆசிரியர்.அதற்கான முன்னெடுப்பில் உழைப்பும்,நேர்மையும் எவ்வளவு முக்கியம்  என்பதையும் புரிய வைத்திருப்பது இன்றைய இளம் தலைமுறைகளுக்கு ஒரு பாடமாக அமையப்பெரும். தான் சார்ந்த சமூகத்தின் ஒடுக்குமுறை, அடிமைத்தனத்தில் உழன்ற தங்கள் மூதாதையரின் கதையை அவர்களின் சந்நிதிகள் அறிந்தால் தான், சாதி, பொருளாதாரத்தில் தங்களுக்கு கீழ் உள்ள மக்களை மதிக்க கற்றுக்கொள்வார்கள் என்ற பாடத்தை இக்கதை எடுத்துரைக்கிறது. நன்றி.

Comments