நூல் : குழந்தைகளின் அற்புத உலகில்
ஆசிரியர் : உதயசங்கர்
குழந்தைகளின் அற்புத உலகிற்கு நம்மை கைபிடித்து அழைத்து சென்று, அவர்களின் குழந்தைமையை நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ஆசிரியர் உதயசங்கர் அவர்கள்.ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய அவசியமான நூல்.
பெரியவர்களின் மனநிலையில் இருக்கும் நாம் குழந்தைகளை எவ்வாறு கையாளுகிறோம் என்ற உண்மையை ஒவ்வொரு வரியிலும் உணர வைத்து,
தங்கள் இயற்கை உள்ளுணர்வின் அடிப்படையில் தங்களை தகவமைத்து கொள்ளும் குழந்தைகளை,நாம் நம் அனுபவங்களில் இருந்தே அவர்களை வழிநடத்தும் தவறான வழிமுறைக்கு குட்டு வைக்கிறார் ஆசிரியர்.
வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் ஆண்-பெண் பேதம், விளையாட்டு,உணவு, கல்வி என அனைத்திலும் வியாபித்து இறுதியில் அதிகாரம்,அடிபணித்தலில் வந்து முடிகிறது. இந்த மனநிலையை சிறுவயதில் இருந்தே குழந்தைகளிடம் விதைக்கும் தவறை பெற்றோரே செய்வது வேதனை.எப்பொழுதும் எஜமானர் மனோபாவத்துடனே இருக்கும் பெற்றோர்கள்,குழந்தைகள் அவர்களை சார்ந்து இருக்கும் ஒரே காரணத்தால்,அவர்கள் வாழ்வினை தீர்மானிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்வது அவர்களின் சுதந்திரத்தை பறிப்பதை போல் ஆகும்.குழந்தைகளின் மென்னுணர்வை புரிந்து அவர்களை அதிகாரம் செய்யாமல் அன்பு துணையாக வழிநடத்தும் இடத்தில் பெற்றோர்கள் இருக்க வேண்டிய அவசியம் புரிகிறது.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மையப்படுத்தி எழுதியுள்ள மூன்று அத்தியாயங்களும், குழந்தைகளின் ஆரோக்கிய தேடலில் இருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனிக்கிறேன் என்ற பெயரில் பெற்றோர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.
இன்றைய அவசர யுகத்தில் நம் உடல்நலத்திலேயே அக்கறை காட்டாதபொழுது, நம் குழந்தைகளின் உடல்நிலையில் நாம் செய்யும் தவறுகளை எந்த புரிதலும் இல்லாமல் கடந்து விடுகிறோம். பசி,தூக்கத்தின் அவசியத்தை புரியாமல் அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் நாம்,கிடைக்கும் சொர்ப்ப நேரத்தில் கூட குழந்தைகள் நலனில் அக்கறை காட்டாமல் அவர்களின் வாழ்வியலையே சிதைக்கிறோம் என்ற உண்மை முகத்தில் அறைகிறது.'உடலின் மொழி' யை கவனிக்காத வாழ்வியலோடு பயணிக்கும் நாம், குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லிக்கொடுப்போம் என்பது கேள்விக்குறியே..
குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு,பொது வாசிப்பு, படைப்புத் தளத்தில் குழந்தைகளை பங்கேற்க விடாமல் செய்யும் சமூகத்தையும், பள்ளி கல்விமுறையையும் சாடியுள்ளார்.குழந்தைகளின் படைப்பு தளத்தையும்,கற்பனை திறனையும் விரிவு படுத்த ஊன்றுகோளாகவும், உறுதுணையாகவும் யாரும் இல்லாத நிலையில்,அவர்களின் படைப்புத் திறன் நசுக்கப்படுகிறது என்பது இச்சமூகத்தின் கேடு.
கதைகள்,பாடல்கள் மூலம் குழந்தைகளின் மனநிலை ஒழுங்குபடுகிறது என்ற உண்மையை அறியாத பெற்றோர்கள், அவர்களை தொலைக்காட்சிக்கும், செல்போனுக்கு அடிமையாக்கும் சூழலில் நிற்க வைத்துவிடுகின்றனர்.பின்பு அதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க அவர்கள் எடுக்கும் பிரயத்தனங்கள் உதவாமல் போகிறது.குழந்தைகளின் உலகில் கதைகளின் பங்கு என்ன என்பதையும், அதிலும் கதைகளில் சொல்லலாம்/சொல்லக்கூடாது என வகைபிரித்து விளக்கி இருப்பது சிறப்பு.
குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்த ஆசிரியர் கூறும் எளிய வழிகள் அருமை. பாடல், ஓவியம்,கதைகள், விளையாட்டு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புத்தகத்தின் இறுதி பக்கங்களில் புல்லட் பாயிண்ட்ஸாக குறிப்பிட்டிருப்பது சுவாரசியத்தை கூட்டுகிறது.குழந்தை வளர்ப்புக்கு வழிகாட்ட கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே இப்புத்தகத்தை சொல்லலாம்.
குழந்தைகளை மையப்படுத்தி எழுதியுள்ள பல புத்தகங்களையும் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர்.அப்புத்தகத்தில் உள்ள சாராம்சத்தை விளக்கி இருப்பது நம்மையும் வாசிக்கத் தூண்டுகிறது.
குழந்தைகளின் ஆளுமை திறனை தவறவிட்டு நம் ஆசைகளை என்று திணிக்க ஆரம்பித்தோமோ, அன்றே அவர்களின் தனித்தன்மையை இழந்துவிடுகிறார்கள்.அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் பொறுப்பு இந்த சமூகத்தை சார்ந்தது. இதில் பள்ளிகளின் பங்கு அதிகம்.ஆனால் ஏட்டுக்கல்வியை மாணவர்களுக்கு மனன படுத்தவே அவர்களுக்கு நேரம் இருக்கிறது. மதிப்பெண்களின் வலையில் சிக்கி அங்கும் குழந்தைகள் அல்லலுறுவது கண்கூடு.
ஒவ்வொரு குழந்தையும் சமூகத்தின் பொக்கிஷம் என்ற வரியை படிக்கும் பொழுதே, இந்த சமூகம் அந்த பொக்கிஷத்தை எவ்வாறு கையாளுகிறது,அவர்களின் கனவுகளை எவ்வாறு நசுக்குகிறது,அவர்களின் தனித்தன்மையை எவ்வாறு ஊதாசீனப்படுத்துகிறது,அவர்களின் கல்வி, ஆரோக்கியத்தை எவ்வாறு பாழ்படுத்துகிறது என்று விரிவாக விளக்கியுள்ளார்.அவர்களின் கல்வி, ஆரோக்கியம், விளையாட்டு போன்ற அனைத்திலும் நுழையும் அரசியலையும் விவரித்துள்ளார்.குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள். அவர்கள் வளரும் சூழலை மட்டும் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்தால் போதும் என்ற உண்மையை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்களுக்கும், புற உலகத்திற்கும் இடையில் ஒரு அழகிய தொடர்புடன் வாழும் குழந்தைகளை அவர்கள் இயல்புடனே வாழ அனுமதிக்க பெற்றோர்கள் மட்டுமின்றி இச்சமூகமும் கைகோர்த்து செயல்படும் காலம் விரைவில் வர மனம் ஏங்கவைத்து விட்டது இந்நூல். நன்றி.
Comments
Post a Comment