நூல் : தனிமைத் தளிர்
ஆசிரியர் : ஆர்.சூடாமணி
ஆர். சூடாமணி அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 63 சிறுகதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு. 1950 களில் ஆரம்பித்து 2000ம் ஆண்டு வரை அவர் எழுதி பிரசுரமான சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளனர் சீதா ரவி மற்றும் கே.பாரதி அவர்கள். தமுஎகச அறம் கிளை நடத்திய சிறுகதை பயிலரங்கத்தில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறுகதை எழுத்தாளர் பட்டியலில் ஆர். சூடாமணி அவர்களின் கதைகளை பற்றி கூறினார். அப்பொழுதே அவரின் படைப்புக்களை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு,'தனிமை தளிர்' புத்தகத்தை வாங்கினேன். தன் வாழ்நாளில் 600 கதைகளுக்கு மேல் எழுதியுள்ள அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்களை கொண்ட தொகுப்பாக அமைந்துள்ளது இந்நூல்.
ஒவ்வொரு கதையும்,மனித வாழ்வில் வெளிப்படும் நுண்ணுணர்வுகளையும், நுட்பமான உளவியல் சிக்கல்களையும் பேசும் கதைகளாக அமைந்துள்ளது.
'மனித மனம் இப்படியெல்லாம் யோசிக்குமா?'என்ற கேள்வியே எழாத வண்ணம் அனைத்து கதைகளிலும் ஒரு உண்மை ஒளிந்திருப்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.மற்றவர்களிடம் காட்டாத நம் இருண்ட மனதை கதைகளில் வரும் சூழலுக்கு ஏற்ப எடை போட வைக்கிறது.
பெரும்பாலான கதைகள் நம் சமூகத்தில்,குடும்பத்தில் நடக்கும் உண்மை கதைகளாகவே புலப்படுகிறது.புனைவு கதைகளாக இருந்தாலும்,பல கதைகள் நம்மை சுற்றியுள்ள மனிதர்களை நினைவூட்டுகிறது.
ஆர். சூடாமணி அவர்களின் கிளாசிக் கதையாக இன்றும் பேசப்படும் 'நான்காம் ஆசிரமம்' கதை படிக்கும்பொழுது,இன்றைய காலகட்டத்திற்கே இக்கதை பெரும் முற்போக்கான கருத்தை கொண்டதாக உணர்தேன்.ஒரு பெண்ணின் இரண்டு கணவர்கள் தங்கள் மனைவி பற்றி அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் உரையாடல் தான் கதை.கதை நாயகி சங்கரி தன் இளமை காலத்தில் மனோகரனை காதலித்து, மணக்கிறாள். அவன் இறப்பிற்கு பின் இரண்டாவதாக மூர்த்தியுடன் மணவாழ்வில் இணைந்து இரண்டு குழந்தைகளை பெற்று, பின் அவள் 'அறிவு' தேடலுக்காக மூன்றாவதாக ப்ரோபாசரை மணந்து, அந்த வாழ்க்கையும் கசந்து நான்காவதாக தன் 'தனிமை' வாழ்க்கைகாக விவாகரத்து கோரி அது கிடைக்காமல் நிரந்தர தனிமையை ஆட்க்கொள்ள விரும்பி அவள் எடுக்கும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.அவளது இரண்டு கணவர்களும் அவர்கள் கண்ணோட்டத்தில் தங்கள் மனைவியை விமர்சித்து கதை செல்கிறது.70 களிலே இப்படி ஒரு கதையை ஒரு பெண்ணால் எழுத முடியும் என்ற நிலை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கும் நிலையை தவிர்த்து அவளின் மனப்போக்கை புரிந்து கொண்ட இருவரின் உரையாடலாக இருந்தது சிறப்பு.
நூலின் தலைப்பு பெயரை கொண்ட கதையான 'தனிமை தளிர்' தாய், தந்தையை விட்டு தன் பாட்டியிடம் வசிக்கும் ஒரு குழந்தையின் தனிமை வேதனையை சொல்லும் கதை.கணவன்,மனைவியின் அந்தரங்க தனிமைக்கு இடையூறாக தங்கள் குழந்தை இருக்கும் என்று அவளை தனிமையில் வாடவிடுவது என்ன மாறி மனநிலை என்று நம் மனதில் கேள்வி எழுகிறது.அவள் பருவ வயது வந்ததும் தங்களுடன் வைத்துக்கொள்ள விரும்பும் பெற்றோரின் ஆசையை அவள் நிராகரிக்கும் இடம் நமக்கும் நிம்மதி அளிக்கிறது.
உதட்டுப்பிளவுடன் பிறந்த தன் மகனை சமூகத்தில் எந்த பாரபட்சமின்றி வளர்க்க நினைக்கிறாள் கோதை.அதேநேரத்தில் அவன் சந்திக்க போகும் அவமானங்களில் இருந்து அவனை காத்திட அதற்கும் ஒரு நேரம் வரும் என்ற காத்திரத்தலோடு இருக்கும் கதை 'அந்த நேரம்'.இக்கதை என் வாழ்க்கையை பிரதிபலிப்பது போல் இருந்ததது.கற்றல் மற்றும் பேச்சு குறைபாடுடன் இருந்த என் மகனுக்கு பல சிகிச்சைகளுக்கு பின், மனம் ஒடிந்து விடுதலைக்கான நேரத்திற்காக காத்திருந்த எனக்கு,'நான் நல்லாத்தான் இருக்கேன் அம்மா.. இனி எந்த சிகிச்சையும் வேணாம்' என்று ஒரு கட்டத்தில் அவன் சொன்ன அந்த நேரம் எனக்கு 'அந்த நேரம்' மாக அமைந்தது.
கணவன்,குழந்தைகள் தான் உலகம் என்று வாழும் பல பெண்கள்,தங்கள் தனித்துவத்தை இழந்து,ஒரு கட்டத்தில் அதை உணர்ந்து வெளிவர நினைத்தும் வர விடாத அளவு குடும்ப சூழலால் கட்டிப்போட வைக்கிறது.இதில் இருந்து விடுபட்டு தன் கணவன் துணையுடன் சுதந்திர காற்றை சுவாசிக்கும் 'செந்திரு' வின் கதை 'செந்திரு ஆகிவிட்டாள்'. விடுமுறையை கழிக்க பிறந்தகம் வரும் நித்யா,தன் அம்மாவின் புதிய அவதாரத்தை அணுகுவதில் உள்ள மன நெருக்கடியை கூறும் கதை.முதலில் அம்மாவின் போக்கு பிடிக்காமல் பொருமினாலும் பின் தன் தாயிடம் இருக்கும் கலைத்திறனை கண்டு அதிர்ச்சி அடைகிறாள்.இத்தனை வருடங்களாக தன் தாயின் தனித்த ஆசைகள், கலைத்திறன்களை பற்றி அறியாத அவள் வெட்கி,ஒரு கலப்பட மனநிலையில் ஊர் திரும்புகிறாள்.
'தாய்' என்றாலே அவளுக்கு ஒரு புனித பிம்பத்தை உருவாக்கி,அவள் குடும்பத்தை அன்பு செய்வதற்காகவே எடுக்கப்பட்ட பிறவி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது இச்சமூகம்.அதை உடைத்திருப்பது போன்று பல கதைகள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியம்.ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் உளவியல் சார்ந்த பல சிக்கல்களை கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
தன் குழந்தையிடம் உரிமை கொண்டாடி,மற்ற எவர் கொஞ்சினாலும் தன் குழந்தையே அடிக்கும் மனப்போக்கு கொண்ட நடுவயது தாய்.ஊனமான தன் சொந்த மகனையும் கணவனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனையும் ஒப்பிட்டு பார்க்கும் தாய்,தன் அந்திம காலத்தில் தன்னை விட்டு மகன் சென்றுவிடுவானோ என்ற பயத்தில் வரும் வரன்களை எல்லாம் தட்டிக் கழிக்கும் தாய், தன் பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்க விரும்பாமல் சுயமாக சம்பாதித்து அதையும் பிள்ளைகளிடம் கொடுத்து ஏமாறும் தாய்,அன்புடன் பழகும் தன் கணவனின் மூத்த தாரத்தின் பையனின் திருமணத்திற்கு செல்ல தயக்கத்துடன் இருக்கும் தாய் என சொல்லிக்கொண்டே போகும் அளவு தாயின் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தும் கதைகள் ஏராளம்.அதேபோல் பெரும்பாலான கதைகள் குழந்தைகளை மையப்படுத்தியே இருப்பது புலப்படுகிறது.
கதையின் மைய கதாபாத்திரம் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவே சித்தரித்தாலும்,மற்ற கதாபாத்திரங்கள் பிற்போக்கு தன்மையுடன் அமைந்துள்ளதால் இரண்டும் சரிவிகிதமாகவே தெரிகிறது.குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் நடுத்தர குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளையே கதையாக இருப்பதால், அச்சமூகத்தின் பேச்சு நடை எழுத்தில் உள்ளது.
சிறுகதை எழுத விரும்பும் ஆரம்பக்கட்ட எழுத்தாளர்களுக்கு இந்நூல் ஒரு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.ஒவ்வொரு கதையும் ஒரு புதிய கோணத்தில் பரிணமிக்கிறது.63 சிறுகதைகளையும் ஒரே நேரத்தில் வாசிக்காமல் கால இடைவேளை விட்டு வாசித்தால் உள்வாங்க எளிமையாக இருக்கும்.
நூலின் கடைசி பக்கங்களில் இருக்கும் ஆர். சூடாமணி அவர்களின் கேள்வி-பதில் பகுதி,அவரை பற்றி தெரியாத நம்மை போன்ற சமகாலத்து வாசகர்களுக்கு ஒரு புரிதலை தருகிறது.நன்றி.
Comments
Post a Comment