பேரிருளின் புதுச்சுடர்கள்
தொகுப்பு : அ.உமர் பாருக்
தமுஎகச அறம் கிளையின் முன்னெடுப்பில் உருவான நூல் 'பேரிருளின் புதுச்சுடர்கள்'.பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு நூல்.ஒவ்வொரு கதையும் சமகாலத்தை பிரதிபலிப்பதாக எழுதப்பட்டிருப்பது சிறப்பு.அதோடு மட்டுமல்லாது, இந்த கதைகளை எழுதிய அனைவருக்கும் இதுவே 'முதல் சிறுகதை' என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.ஒவ்வொரு கதையும் ஆழ்ந்து சிந்திக்கும்படி எழுதி இருப்பதும்,புதியவர்கள் என்ற எண்ணம் தோன்றாத அளவு எழுத்து நடையும் அசாத்தியம்.
பன்னிரண்டு எழுத்தாளர்களில் எட்டு பேர் பெண்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறேன்.அதனால் கதைகளில் வரும் முதன்மை கதாபாத்திரங்களும் பெண்களாக இருக்கின்றனர்.அவர்களின் முற்போக்கு சிந்தனை, தெளிவான பார்வை, தைரியம் என ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கிறது.இப்புத்தகத்தில் எனது முதல் சிறுகதையான 'பொறி' இடம்பெற்றுள்ளது என்னை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதை பகிர விரும்புகின்றேன்.
இன்றைய கொரோனா கால பொதுமுடக்கத்தை மையமாக வைத்து ஐந்து கதைகள் இடம்பெற்றிருக்கிறது.
விளையாட்டின் மூலம்,ஆசிரியரின் அருகாமையில் படித்துக் கொண்டிருந்த நம் குழந்தைகள்,கொரோனா பொதுமுடக்கத்தால், பள்ளிகள் மூடிய நிலையில் 'ஆன்லைன் வகுப்பு' என்ற புதிய பாடமுறையை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.பள்ளிக் கட்டணம் வாங்க பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைக்காமல்,பாடம் நடத்தி, வீட்டுப் பாடம் கொடுத்து அவர்களின் குழந்தைமையை பாழ்ப்படுத்தும் இந்த ஆன்லைன் வகுப்பு,இயல்பாக வளரும் தன் மகனுக்கு அவசியமில்லை என்ற புரிதலோடு தன் மகனை அவன் இயல்பிலேயே விட்டுவிடும் சௌமியாவை நம் மனதில் இடம்பிடிக்க வைத்துள்ள கதை,சாந்தி சரவணன் எழுதிய 'ஜீம்பூம்பா'.
கொரோனா காலத்தில், சிகிச்சை என்ற பெயரில் அலோபதி மருத்துவம் சாமானியர்களின் மொத்த சேமிப்பையும் உறிந்தெடுத்த அவலத்தை சொல்லும் கதை சீ.குருமாணிக்கம் எழுதிய ''செலவு'.தன் தாயின் உயிரைக் காப்பாற்ற எத்தனை லட்சங்கள் செலவழித்தாலும்,கடைசியில் சாமானியரான ஆட்டோஓட்டுனரிடம் அவன் பேசும் பேரம் நடுத்தர வர்க்கத்தின் பொது புத்தியைக் காட்டுகிறது.இதில் பல லட்சம் காசை பிடுங்கிய மருத்துவரும்,சிறு தொகைக்காக பேரம் பேசும் அவனும் தராசில் சமஅளவே என்று எனக்கு தோன்றியது.
பொதுமுடக்கக் காலத்தை பயன்படுத்தி,சிறு,குறு வியாபாரிகளின் கடைகளை அடைக்கச் சொல்லி, அவர்களின் வருமானத்தை அபராதம் என்ற பெயரில் வசூலித்த அதிகாரிகளின் அராஜக செயல்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வலியை சொல்லும் கதை மு.ஜெய்கணேஷ் எழுதிய 'முடக்கம்'
கொரோன காலமுடக்கத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல ஏற்படுத்திய ஈ-பாஸ் முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒரு பிரதிநிதியாக அ.ஆஃப்ரின் பானு எழுதிய 'அனுமதி' கதையின் நாயகன் மோகனை பார்க்கமுடிகிறது.குஜராத்தில் பிறந்த தன் குழந்தையை பார்க்க செல்ல ஈ-பாஸ் எடுக்க அவன் எடுக்கும் ப்ரயத்தனங்களே கதை. எவ்வளவு முயன்றும் கடைசி வரை அது நிறைவேறாமல் போவது நம் மனதிலும் வேதனை ஆட்கொள்கிறது.
ஐ.டி. துறையின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது பா.தீபா லட்சுமி எழுதிய 'அடிமைகள்'.பொதுமுடக்கத்தை காரணம் காட்டி அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்து,50 பேர் செய்த வேலையை 10 பேரிடம் கொடுத்து உழைப்பு சுரண்டல் செய்யும் கார்பரேட் கம்பெனிகளை சாடியுள்ளார் ஆசிரியர்.
காதல் என்ற பெயரில் பெண்களை தங்கள் வலைகளில் சிக்க வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்யும் அயோக்கியர்களை எப்படி அணுகுவது என்பதை ராதிகா எழுதிய 'சுவாதி' கதை தெளிவாகியுள்ளது.பெண்களின் பயத்தை மூலதனமாக வைத்து உளவியல் ரீதியாக அவர்களை மிரட்டும் இது போன்ற ஆண்களை துச்சமாக கடக்க பெண்கள் தங்கள் மனதை வலிமையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை இக்கதை உணர்த்துகிறது.
பெண் குழந்தைகளை வளர்ப்பதை,கிராமங்களில் 'வயிற்றில் நெருப்பை கட்டிட்டு அலைவதாக' கூறுவார்கள்.இன்றைய நவீன காலம் வரை இந்த சொலவடை பொருந்துவது இந்த சமூகத்தின் வெட்கக்கேடு.அதுவும் பெண் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்யும் வல்லூறுகளிடம் நம் குழந்தை சிக்கி விடக்கூடாது என்று வெளியில் விளையாடக்கூட அனுமதிக்க முடியாத சூழலில் வாழும் நிலைக்கு நம்மை தள்ளி இருக்கும் இச்சமூகத்தின் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது மு.காயத்ரி தேவி எழுதிய 'மொட்டுகள்'. கதையை வாசிக்கும் பொழுதே வித்யாவின் பதட்ட உணர்வை கதையோட்டத்தின் வழி நம்மிடமும் கடத்தியிருப்பது சிறப்பு.
சேர்க்கை எண்ணிக்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடும் அவல நிலையை சொல்லும் கதை மீ.முத்துவிஜயன் எழுதிய 'என்னங்க சார் உங்க சட்டம்'கதை.
மத துவேஷத்தை பரப்பி மக்களை பிளவு படுத்த நினைக்கும் மனிதர்களை மையப்படுத்தி எழுதி இருக்கும் கதைகள் 'பொறி' மற்றும் சு.இளவரசி எழுதிய 'மீறல்'.
அரசின் புதிய பொருளாதார கொள்கையால், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்க பட்டதால் கண் பார்வை தெரியாத சதீஷின் வாழ்வு எவ்வாறு தடம் புரள்கிறது என்பதை சொல்லும் கதை இரா.சுகன்யா எழுதிய 'குமிழி'
மக்கள் எதை பார்க்கவேண்டும்,எதை பார்க்கக்கூடாது என்ற முடிவு ஊடகதுறையின் கையில் உள்ளதை எதிர்த்து போராடும் காவ்யாவின் கதை இவள் பாரதி எழுதிய 'சுதந்திரம்'
'பேரிருளின் புதுச்சுடர்களாக' இந்த புதியவர்களை 'வாசிப்பு' தளத்தில் இருந்து கைப்பிடித்து அழைத்து 'சிறுகதை எழுத்தாளர்களாக' பரிணமிக்க வைத்த தோழர் அ.உமர் பாரூக் அவர்களின் முன்னெடுப்புக்கு என் பேரன்பை உரித்தாக்குகிறேன்.நன்றி.
Comments
Post a Comment