நூல் : சிறுகதை காலாண்டிதழ்
ஏப்ரல் - ஜூன் 2021
தமுஎகச அறம் கிளை ஒருங்கிணைப்பில் சிறுகதைகளுக்கென்று தனியாக ஒரு இலக்கிய இதழ்.ஒன்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இதில் இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் அடங்கும்.
இதழின் முதல் கட்டுரையாக ம.மணிமாறன் அவர்களுடைய 'கலைத்து அடுக்கப்பட்ட கதைகளின் கதை.. '.நான்கு சிறுகதை தொகுப்புகளை பற்றிய கட்டுரை.ஜி.நாகராஜன் அவர்களை பற்றிய குறிப்பில் இருந்து ஆரம்பித்து,இலக்கிய தர்க்கங்களை முன்வைக்கும் கட்டுரை.வாசிக்க ஆரம்பித்ததுமே சற்று மலைப்பாகவும், உள்வாங்க கடினமாக இருந்ததையும் உணர்ந்தேன்.பல வார, மாத இதழ்களை படித்த பெருமிதத்தோடும் சிறிது அசட்டையோடு தான் சிறுகதை இதழையும் நினைத்திருந்தேன்.ஆனால் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் பொழுதுதான் இந்த இதழின் கணம் புரிந்தது.
இறந்தவர்களின் கடைசி நேர பயணத்தில்,அவர்களுக்கு நகை போட்டு அலங்கரிக்க கேட்டு வருபவர்களிடம் தன் நகைகளை கொடுத்து உதவும் சக்கரை செட்டியாரின் கதை எஸ்.செந்தில்குமார் அவர்கள் எழுதிய 'சாவு அலங்காரம்'.
நம்பிக்கையின் பெயரில் அவர் கொடுக்கும் நகைகள், அதை வாங்கி சென்றவர்களும் அவர் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக நடந்து கொள்வதும் வழக்கமாக இருப்பதால் அவருக்கு இந்த விஷயத்தில் எந்த மனத்தடங்களும் இல்லை.அவர் மனைவி நீலமணியும் இந்த விஷயத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். அதை உடைப்பது போல,அவருடைய மருமகன்களின் செயல்கள் அவரின் உயிரை பறிக்கும் அளவு செல்ல வைக்கிறது.ஒரு நாள் காத்திரத்தலில் கிடைக்க இருக்கும் நகைக்காக,மருமகன்களின் நிர்பந்தத்தாலும், அவர்களின் பொறுப்பற்ற அவசர செயலாலும் ஒரு உயிர் பறிபோனதே மிச்சம்.தன் கணவனுக்காக காத்திருக்கும் நீலமணியின் உணர்வை காத்திருத்தலின் பெருவலியாக பொம்மி - கண்ணபிரானின் காதல் வழி எழுத்தாளர் சொல்லி இருப்பது அருமை.ஐந்து அத்தியாயம் கொண்ட சற்று பெரிய சிறுகதை.வட்டார வழக்கு மொழி கதை என்றாலும் வாசிக்க எந்த குழப்பமும் இல்லாத கதை நகர்வு சிறப்பைத் தருகிறது.
கவிப்பித்தன் அவர்கள் எழுதிய 'ஒற்றன்', எந்த அதிர்வும், திருப்பமும் இல்லாத ஒரு நேர்க்கோட்டுக் கதையாக இருந்தது.ஆற்று மணலை கடத்தும் கூட்டத்தை பிடிக்க, தன் மேலதிகாரிகளின் ஆணைக்கு கட்டுப்பட்டு சிதம்பரம் எடுக்கும் பிரயத்தனங்கள் ஒவ்வொரு தடவையும் தோல்வியில் முடிகிறது.தனக்கு துப்புக் கொடுக்கும் ஒற்றனை நம்பி அவர் வேகமுடன் செயல்பட்டாலும் ஏதோ ஒரு இடத்தில் தான் தவற விடுவதாக உணர்ந்து தன்னை திசைதிருப்புவதே அந்த ஒற்றன் தான் என்பதை கதையின் இறுதியில் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைகிறார். ஆனால் வாசிக்கும் நமக்கு அந்த அதிர்ச்சி ஏற்படவில்லை.
நவகிரகங்களின் ஒன்றான புதனின் மனைவியின் பெயர் இலா.இவள் ஆண் - பெண் என இரண்டு பாலினப் பண்புகளை கொண்டவள். ஆனால் இரண்டும் கலக்காது தனித்திருக்கும்.இந்த இலா கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள கதை மு.ஆனந்தன் அவர்கள் எழுதிய 'இலா'.மனைவி,குடும்பம், குழந்தைகள் என சராசரி மனிதனாக வாழும் கைரதனின் மறுபக்கம் ஒரு அதிர்வை தரக்கூடியதாக உள்ளது.மாற்று பாலினத்தவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கும் நமக்கு,இப்படி ஒரு புதிய வகை இருப்பது உண்மையா என்ற ஐயத்தை சிறுகதை இதழ் அறிமுக விழாவில் கதை ஆசிரியர் கொடுத்த விளக்கங்களால் தீர்ந்தது.இது போன்று 64 வகை உள்ளதாக சொன்னபோது சற்று மலைப்பை ஏற்படுத்தியது.
திருமண பந்தத்தில் இல்லாத ஆண்-பெண் உறவை மையப்படுத்தி ஐ.கிருத்திகா அவர்கள் எழுதியுள்ள கதை 'இருள்'.சமூகத்தில் இழிவாக கருதப்படும் ஒரு உறவில் இருக்கும் மதி-முருகானந்ததின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் கதை அமைந்துள்ளது.இருளிலேயே வாழ்ந்து, இருளிலேயே முடிந்து விடும் அவர்களின் உறவு,யதார்த்த வாழ்க்கைக்கு உகந்ததற்ற,நிலையற்ற உறவாகவே அவர்கள் புரிந்து வைத்திருந்தாலும்,மதியின் ஆழ்மன ஏக்கம் கதையை வாசிக்கும் எவருக்கும் புரியும்.
காமம் சார்ந்த கதையாக இருந்தாலும் மதியின் மனதில் இருக்கும் காதல்,கதையின் போக்கில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.அவனிடம் 'என்னை விரும்புகிறாயா? ' என்று கேட்க நினைக்கும் அவள்,அவனின் பதிலுக்கு பயந்தே கேட்காமல் விட்டு விடுகிறாள்.அவனும் தன் நிலையை சூசகமாக ஒவ்வொரு இடத்திலும் அவளிடம் வெளிப்படுத்தி, தன் தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொள்கிறான்.கணவன் மனைவி உறவு போல் அவர்களுக்குள் உரிமையுடன் இருந்தாலும்,அவனுக்கும் அவளுக்கும் தாண்ட முடியாத ஒரு எல்லைக்கோடு இருப்பதை இருவருமே உணர்ந்து இருந்தனர்.
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதையாக காலப்பெட்டகம் பகுதியில் கிருஷ்ண சந்தர் அவர்கள் எழுதிய 'மகாலட்சுமி பாலம்' கதையை சொல்வேன். படிக்கும் பொழுதே ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்பது மிகையில்லை.மஹாலட்சுமி பாலத்தின் கீழே உலர்த்தப்பட்ட வெளுத்து கிழிந்து,ஒட்டுப் போட்ட ஆறு புடவைகளின் பின் உள்ள பெண்களின் வாழ்க்கை கதையாக விரிகிறது.பொதுவாக பெண்களை பற்றிய கதையாக ஆரம்பத்தில் தெரிந்தாலும்,அவர்கள் படும் துயத்திற்கு காரணமாக எவை இருக்கிறது என்பதை ஆறு பேருடைய கதைகளிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை சுரண்டி,அதில் குளிர்காயும் முதலாளித்துவத்தின் போக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கதைகளாக இருக்கிறது.அதற்கு துணை போகும் இந்நாட்டு அரசையும் சாடி,கண்டும் காணாதது போல் கடந்து போகும் சாமானிய மக்களையும் கிழிந்த புடவைகள் தொங்கும் பாலத்தின் இடது பக்கம் திருப்பிவிட்டு கதையை முடித்திருக்கிறார்.
உரிமைக்கு போராடும் எவருக்கும் இந்த அரசு கொடுக்கும் பரிசு என்னவோ துப்பாக்கி சூடு மட்டுமே என்பதை கடைசி சேலைக்கு சொந்தக்காரி 'மாய்' ன் கதையில் தெளிவாகிறது. இக்கதை 1950 களில் எழுதப்பட்டிருந்தாலும் சமகாலத்திற்கும் பொருந்தும் விதம் இருந்தது ஆச்சர்யம்.இக்கதையில் எழுத்தாளர் முன்வைக்கும் கேள்விகள் சாமானய மக்களின் மனதிலும் குடைச்சலை ஏற்படுத்தும் என்பது மிகையில்லை.
இதழ் வடிவமைப்பு மிக அருமை. கதைகளுக்கு பொருத்தமான ஓவியங்கள் கிளாசிக் ரகம்.அடுத்த இதழில் யாருடைய படைப்புகள் இடம்பெறப்போகிறது என்பதை இந்த இதழிலேயே குறிப்பிட்டு இருப்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
காலப்பெட்டகம் பகுதியில் வந்த 'மகாலட்சுமி பாலம்' சிறுகதை எழுதிய எழுத்தாளரை பற்றியும், சிறுகதை எந்த மொழியில் மற்றும் எந்த ஆண்டில் வெளிவந்தது என்பதை ஒரு சிறுகுறிப்பு எழுதி இருக்கலாம், 'ஞானமாதாவின் தேநீர்' கதையில் இருந்த முன்குறிப்பு போல்.
முதல் இதழே மிகச் சிறப்பாக அமைந்திருப்பதால், அடுத்தடுத்த இதழ்களை எதிர்பார்க்க வைத்துவிட்டது.அனைத்து வாசகர்களுக்கும் இவ்விதழ் ஒரு புது அனுபவத்தை தரும் என்பது உண்மை.நன்றி.
Comments
Post a Comment