முதல் சிறுகதை :
பொறி
"ஹரே
ராம ஹரே கிருஷ்ணா"
"ஹரே
கிருஷ்ணா ஹரே ராம",
கோவிலில் பஜனை சத்தம்
காதைப் பிளந்தது.மெய் மறந்து
பாடி கொண்டிருந்த பக்தர்களை பராக்கு பார்த்து
கொண்டே பக்கத்தில் இருந்த தன் கணவனையும்
பார்த்தாள் அருணா. அவன் தெய்வீக
பரவச நிலையில் இருந்தது கண்கூடாக
தெரிந்தது.அவ்வளவு சத்தத்திலும் அருணாவிற்கு
கொட்டாவி வந்தது. திரும்பி பார்த்த
செந்தில் ஒரு முறை முறைத்தான். நமட்டு சிரிப்பு
சிரித்தபடி கர்ச்சீப்பால் வாயை மூடிக்கொண்டாள்.
கொரோனா காலம் முடிந்து
கோயில்கள் மறுபடி திறந்து ஆறு
கால பூஜைகளும் படு
அமர்க்களமாக செய்ய ஆரம்பமாகி விட்டது.
கொரோனா கால இடர்களை சமாளிக்க
மக்கள் கடவுளை நாடி படையெடுக்க
ஆரம்பித்தனர்.அவர்கள் இருக்கும் தெருவில்
உள்ள கோயிலிலும் கூட்டம்
அலைமோதியது.அதுவும் இன்று 'நித்ய
தர சுவாமிகள்' தன்
சிஷ்யபிள்ளைகளுடன் பக்தர்களுக்கு தரிசனம் தர வரப்போகிறார் என்று சுவரொட்டியை பார்த்து
கூட்டம் திமிலோகப்பட்டது.அங்குதான் இன்று பஜனை.
நேற்றிலிருந்து
செந்தில் அவரை
தரிசிக்க பல ஆயத்த
ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான். அவனுடைய
நண்பன் குமார் ஏற்பாட்டில் தான்
இந்த பஜனை கூட்டம்.குமார்,
ஒரு கட்சியின்
வட்டச் செயலாளர். ஆன்மீகம், அரசியல் என்ற போர்வையில்
அவர்கள் தெருவில் நாட்டாமை செய்து
கொண்டிருப்பவன்தான் இந்த குமார்.தெருவில்
யாருக்கும் அவனைப் பிடிக்காது. முக்கியமாக
பெண்களுக்கு. அவன் பார்வையே சகிக்காது.முன்பெல்லாம் செந்திலுக்கும் அவனை
கண்டால் பிடிக்காது.ஆனால் இந்த ஒரு
வருடமாக அவனுடன் அதீத பாசத்தில் உரசி கொள்கிறார்கள். அதை
பார்த்து அருணாவிற்கு எரிச்சல் வரும்.
கோயிலுக்கு
எப்பொழுதும் குடும்பமாக செல்வது செந்தில், அருணா
இருவருக்குமே மிகவும் பிடிக்கும்.செந்திலின்
தொழில் நிமித்த நேர நெருக்கடி
காரணமாக குடும்பமாக சுற்றுலாவோ, உறவு வீட்டு விசேஷங்களுக்கோ
எதற்கும் போக மாட்டான். அருணாவையும்,
பிள்ளைகளையும் அனுப்பி விடுவான். கோவில்
என்றால் மட்டும் உடனே கிளம்பி
விடுவான். அதனால் சுற்றுலா என்றாலே
அவர்களுக்கு கோவில்தான்.
மதப்
பிரிவினைகள் என்று இருவரிடமும் எதுவும்
இல்லாததால் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா என
எந்த பாகுபாடும் இல்லாமல் செல்வார்கள். தீபாவளி,
பொங்கல் பண்டிகைகளுக்கு புது துணி எடுப்பது
போல் கிறிஸ்மஸ்சுக்கும்
புது துணி எடுத்து சர்ச்சுக்கு
சென்று வழிபடுவார்கள்.பல தடவை
வேண்டுதல் வைத்து காணிக்கை செலுத்த
வேளாங்கண்ணி சென்றுள்ளார்கள்.
ஆனால் இந்த ஒரு வருடமாக
அவனின் போக்கு வேறு விதமாக
மாறி இருந்தது அருணாவிற்கு
பிடிக்கவில்லை.வீட்டில் சாதாரணமாக பேசி
கொண்டிருந்தாலே மதம், ஜாதி என்ற
வார்த்தைகள் அவன் வாயிலிருந்து தானாக
விழுகிறது.
"எதுக்கு
அந்த பாயம்மாவிடம் பூ வாங்குற...?
"
"கிறிஸ்மஸ்னா கண்டிப்பா
சர்ச்சுக்கு போகணுமா...?அவங்களோட எல்லாம் சகவாசம்
வச்சுக்க கூடாது.. ஆளை கவுத்தி
அவங்க மதத்துக்கு இழுத்துக்குவாங்க... "
"அந்த
அஹமதோட உனக்கென்ன பேச்சு வேண்டி
கிடக்கு.. கொஞ்சம் ஒதுங்கியே இரு..
இவங்கெல்லாம் இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்க
ஆசை பாடுவாங்க... "
என்று சகோதத்துவமாக பேசி பழகிய பலரிடம்
குறை கண்டுபிடித்து பேச ஆரம்பித்தது அருணாவிற்கு
எரிச்சலை ஏற்படுத்தியது.
'இதென்ன பேச்சு...ஜாதி, மதம்
பார்த்தா மனுஷங்கட்ட பழக முடியும்'.முதலில்
கணவனின் பேச்சை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டாள். பின்புதான்
அரசல் புரசலாக கவனித்ததில் அந்த
அரசியல்வாதி குமாருடன் சிரித்து சிரித்து
பேசிக் கொண்டிருப்பதை காண முடிந்தது.செந்திலின்
மனமாற்றத்துக்கு இந்த குமார்தான் காரணமாக இருப்பானோ என்ற
யோசனை அவளுக்கு ஏற்பட்டது.
"எதுக்கு
அந்த ஆளோட அப்படி பல்ல
காட்டிகிட்டு பேசிட்டு இருக்கீங்க? "
"மரியாதையா பேசு..அவர் எவளோ பெரிய ஆள்.அந்த கட்சியில் வட்டச் செயலாளராக இருக்கிறார். எவ்வளவு நல்லா பழகறார் தெரியுமா… அவர் பேச்சும் செயலும் அப்பப்பா...இத்தனை நாள் பழகாமல் விட்டது எவ்வளோ தப்புனு நினைக்கிறேன்".
"கூறுகெட்டத்தனமா
பேசாதீங்க...'அந்த ஆள் நம்ம
தெரு பொம்பளைங்கள பார்க்கிற பார்வையே சரியில்லை'னு நீங்களே எத்தனை தடவை சொல்லி
இருக்கீங்க.இப்ப அந்த ஆள
புகழ்ந்து பேசிட்டு இருக்கீங்க..வெட்கமா
இல்ல...."
"அரசியல்வாதினா
அப்படி இப்படித்தான் இருப்பாங்க...அதுக்காக நம்ம தெருவுல
இருக்க பெரிய மனுஷன் ஒதுக்க
முடியுமா?... உன்
வேலையை பாரு...
"என்னமோ
செய்யுங்க....அந்த ஆளோட சேர்ந்து
கேவலப்பட்டு போயிடாதீங்க"...
பஜனை சத்தம் செவிப்பறையை கிழித்தது.
கோயில் செல்வது அவளுக்கு பிடிக்கும்.ஆனால் 'ஆன்மீக குரு'
என்ற போர்வையில் இருக்கும் ஆட்களை தரிசிக்க
வேண்டும் என்று இந்த
மாதிரி கூட்டத்திற்கு சொல்வது பிடிக்காது. 'ஆன்மீக
குரு ' என்றால் என்ன மாதிரி
மனுசங்கன்னு என்பதைதான் தினமும் டிவி, பேப்பரில் பார்க்கிறோமே...எல்லாம் அந்த குமார்
பண்ணின வேலை.அவன் ஏற்பாடு
செய்த பஜனை கூட்டம். தெருவில்
ஒரு ஆள் விடாமல்
அழைத்திருந்தான்.'அந்தாள் கூப்பிட்டால் இவருக்கு
எங்க போச்சு அறிவு ' என்று
மனதிற்குள் பொருமினாள்.குமார் பற்ற வைத்த பொறி செந்திலுக்குள் பரவிக்
கொண்டிருந்தது அருணாவிற்கு கவலையாக இருந்தது.
பஜனை முடிந்து குருவிடம் ஆசீர்வாதம்
வாங்கி கிளம்ப இரவு
நெடு நேரம் ஆகிவிட்டது.
"இனிமேல்
பஜனை, கிஜனைனு என்னை
இழுக்காதீங்க...."என்று திட்டியபடியே படுக்கையில்
விழுந்தாள்.
“எல்லாரும் மெய் மறந்து
ராம நாமம் சொல்லுறாங்க..உனகென்னடி கொட்டாவி
வேண்டி கிடக்கு? “அவளை தூங்க விடாமல்
செந்தில் கடிந்தான்.
“அந்த சாமியார் ‘ராம நாமம் சொன்னால் போதும்.. பகவான்
எல்லாவற்றையும் பார்த்து கொள்வார்.நாம செய்யற
தப்பையும் மன்னித்து விடுவார்’ அப்படினு அளந்து விட்டிட்டு இருக்கார்.. நீங்களும் அதுக்கு மண்டையாட்டிட்டு இருக்கீங்க…அப்போ என்ன தப்பு
செஞ்சாலும் ‘ராமா’னு கன்னத்துல போட்டுக்கிட்டா போதுமா? “என்றாள் சிரித்தபடி.
“பெரியவங்க எதாவது
சொன்னால் அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்…”
“அப்படி என்ன அர்த்தத்தை
நீங்க கண்டுபிடிச்சீங்களாம்? “கிண்டல் தொனியில்
கேட்டாள்.
‘இனி இவளிடம் பேசினால்
வீண்விவாதம் தான்’என நினைத்து விட்டு, “உன்னை எல்லாம் திருத்தவே முடியாது”என்று கூறி விட்டு திரும்பி படுத்துக்கொண்டான்.
பிள்ளைகள்
பள்ளிக்கும், செந்தில்
வேலைக்கும் கிளம்பிக் கொண்டிருந்த காலை
நேரத்தில் காலிங் பெல் சப்தம்
கேட்டு அருணா வெளியில் எட்டிப்
பார்த்தாள்.அங்கு குமார் நின்றுகொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் மனதுக்குள் கடிந்தாலும் வேறுவழியின்றி,
"வாங்க
வாங்க" என வரவேற்றாள்.
சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த
செந்திலுக்கு முகமெல்லாம் பல்லாக, "வாங்க சார்" என்றான்.
சிரித்தபடியே சோபாவில் வந்து உட்கார்ந்தான்
குமார்.வீட்டை நோட்டம் விட்டபடியே
அவன் பார்வை அருணாவிடம் வந்து
நின்றது.அசட்டு சிரிப்பு ஒன்று
சிரித்துவிட்டு செந்திலிடம் திரும்பினான்.
அருணா உடனே சமையல் அறையினுள்
சென்றாள்.
"என்ன
விஷயம் சார்? " செந்தில் கேட்டான்.
"நேத்து
நம்ம நித்ய தர சுவாமிகள் கோயிலுக்கு
வந்தார்ல... அவர்
நம்ம கோயிலுக்குள்ளேயே ராமர் கோயில் ஒன்று
கட்டலாம்னு முடிவு செஞ்சிருக்கார்.அதுக்கு பக்தர்களிடம் காணிக்கை
வாங்கி நம்ம சார்பாக அமௌன்ட்
கொடுக்க முடிவு செஞ்சிருக்கோம்.
உங்களால முடிந்த பணவுதவி செய்ய கேக்க வந்தேன்", என
முடித்தான்.
சமையலறையிலிருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அருணா, கணவன் என்ன
சொல்லப் போகிறான் என்று அவன்
வாயை பார்த்தாள்.
"அப்படியா..ரொம்ப நல்ல விஷயம்..
என் பெயர்ல ஒரு பத்தாயிரத்தை எழுதிக்கோங்க" பரவசத்துடன்
கூறினான் செந்தில்.
திக்கென்றது அருணாவுக்கு. சுளையாக இப்படி பத்தாயிரத்தை
எடுத்து கொடுப்பான் என்று கனவில் கூட
அவள் நினைக்கவில்லை. ஆறு மாதமாக கொரானாவின்
பிரச்சனை காரணமாக, தொழில் சரியாக
இல்லாமல் பாதி சம்பாத்தியத்தில் குடும்பம்
நடத்திய அவளுக்கு இது பெரிய
அதிர்ச்சியாக இருந்தது. கண்களில் கண்ணீர்
சொரிந்தது.ஆனால் அவன் இதைப்
பற்றி எந்த கவலையும் இல்லாமல்
கோயில் கட்ட தன் பங்கை
பெருமிதத்துடன் கொடுத்தான்.
"ரொம்ப
நன்றி சார்...அப்படியே நம்ம
ஜாதி சங்கத்திலும் பணம் கலெக்ட்
பண்ண கிளம்பிட்டு இருக்கேன்... நீங்களும் வர்றீங்களா? "என கேட்டதுதான்
தாமதம், "இதோ கிளம்பிட்டேன் சார்...நம்ம
சாமிக்கு நாம
செய்யாம வேற யாரு செய்வா...."என்று இளித்தான் செந்தில்.
உள்ளிருந்து
அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த அருணாவுக்கு புசுபுசுவென்று இருந்தது.குமார் விடைபெற்று
சென்றதும் பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள்.
"யாரைக்
கேட்டு கோயில் கட்ட பணம்
கொடுத்தீங்க... இன்னும் இந்த மாச வீட்டு வாடகை
கொடுக்கல..ஸ்கூல் ஃபீஸ் கட்டனும்..சீட்டு பணம் கொடுக்கனும்...
எப்படி சமாளிக்கிறதுனு தெரியாம நான் திணறிட்டு
இருக்கேன்.. நீங்க பாட்டுக்கு என்னை
ஒரு வார்த்தை கேட்காம
கொடுக்க எப்படி மனசு வந்தது",
கோபம் உச்சிக்கு சென்று கத்த ஆரம்பித்தாள் அருணா.
"கோயிலுக்கு
செய்யிறது புண்ணியம்டி..அதுவும் 'நம்ம சாமி'
க்கு கோயில் கட்டுவதிற்கு பணம் கொடுக்கிறது எவ்வளவு
பாக்கியம் தெரியுமா? உனக்கெங்கே புரிய போகுது...."
"இது
என்ன புது பழக்கம். என்னைக்கு
நாம கோயிலுக்கு இவ்வளவு
காசு கொடுத்து இருக்கோம்? கோயில்
காணிக்கைனு போட்டாலே நூத்தி ஒன்னுக்கு மேல இதுவரை என்னைக்காவது போட்டிருக்கோமா? அதென்ன 'நம்ம சாமி? ' நம்ம
சாமி அய்யனார்தான்.இந்த சாமிய என்னைக்கு
நீங்க கும்பிட்டு இருக்கீங்க?
கோயிலுக்கு பணத்தை கொடுத்துட்டா நம்ம செலவை யார்
பார்ப்பா? " என்று ஆவேசமாக கேள்விகளை
அடுக்கி கத்த
ஆரம்பித்தாள்.
“அதென்ன…அந்தாள் கூப்பிட்டதும் ஜாதி சங்கத்துக்கு போறேன்னு குதிச்சுட்டு
கிளம்பறீங்க? நாம கஷ்டபட்ட காலத்துல உங்க ஜாதில இருந்து எவன் நமக்கு உதவி செஞ்சான்? ஒரு 25000 ரூபாய்க்கு உங்களுக்கு உங்க ஜாதில பெறுமானம் உண்டா? அஹமதம்மா தான் கடைசி நேரம் குடுத்து காப்பதினாங்க….. அதெல்லாம் மறந்து போச்சு..இந்த தெருல ஜாதி, மதம் பார்க்காம
பழகுன மனுஷங்க தான் உதவிக்கு வந்தாங்க…..உன் சாமியும் வரல, உன் ஜாதி மனுஷங்களும் வரல… அப்படித்தான்
இத்தன நாள் வாழ்ந்தோம்… இப்ப என்னமோ ‘நம்ம சாமி, நம்ம ஜாதினுட்டு குதிச்சுட்டு இருக்கீங்க..”என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அருணா பேசிய பேச்சில் இருந்த உண்மை உறுத்த, பதில் பேசத் தெரியாமல் செந்தில் சட்டையை மாட்டிக்கொண்டு
வெளியே கிளம்பினான்.
அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த இரண்டு
நாட்களும் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.இத்தனை நாள் கணவனிடம்
பேசாமல் அவள் இருந்ததில்லை. பணத்தையும்
விட்டு, குணமும் கெட்டு கொண்டிருக்கும்
தன் கணவனின் போக்கு
அவள் மனதில் கலவரத்தை உண்டாக்கியது.எந்த கருத்து வேறுபாடும்
இல்லாமல் பத்து வருடம் வாழ்ந்த
வாழ்க்கை, இந்த ஒரு வருடமாக
கானல் நீராகி போவது கண்கூடாக
தெரிகிறது.
‘’ பக்தியின்
பெயரில் ஒருவன் பணத்தை சுரண்ட
வரானு
கூடவா இவருக்கு தெரியாம
இருக்கு?அதீத மத பற்று,
ஜாதி பிரிவினை என பேச்சில் மட்டுமல்லாது, செயலிலும் இறங்குறாரே? இதற்கு
குமார் மட்டும் தான் காரணமா
இல்லை தங்கள் ஜாதியை முன்னிறுத்தி
பகடை ஆடும் அந்த கட்சியின் செயல்பாடுகளுமா?அந்த
கட்சி மேல உள்ள பற்றின் காரணமா அவன்
மனம் மாறி இருக்கா? இல்லை
மனதில் இத்தன நாள் ஆழ
புதைந்துள்ள வக்கிரங்கள் இப்போ வெளிப்படுதா?மதவெறி
அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தும் இந்த
அரசியல் எப்படி சிறு துரும்பாக
ஒரு குடும்பத்தினுள் நுழைந்து,
மனுஷ மனங்களில் சிறுபான்மையினர்
மீது வெறுப்பை உண்டாக்குகிறது. இது என்ன மாறி சூழல்?’என
மனதில் ரணத்துடன் பல கேள்விகளை அடுக்கி யோசித்தாள்.அதன்
அழுத்தம் தாளாமல் வீட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
காலையில்
பால் வண்டி சத்தம் கேட்டு
எழுந்து பால்
வாங்க வெளியே வந்தாள் அருணா.தெரு பெண்கள் கூடி
நின்று ஏதோ குசுகுசுவென்று பேசிக்
கொண்டிருப்பதை பார்த்து அவளும் கூட்டத்தில் கலந்தாள்.
"விஷயம் தெரியுமா…. அந்த
குமார் இருக்கான்ல, அவனை போலீஸ்
தேடிட்டு இருக்காம்.."
"எதுக்குடி"
"ஏதோ பொம்பளை சமாச்சாரமாம்...
கீழத்தெரு சேரி
பக்கம் ஒரு பெண்ணை மூணு பேர்
சேர்ந்து கெடுத்து எரிச்சுருக்காங்க...அதுல
இவனும் சம்பந்தபட்டிருப்பானு போலீஸ் தேடுதாம். ஆனா அவன் தலைமறைவாம்....
திக்கென்றது
அருணாவிற்கு.
“உனக்கெப்படி
தெரியும்?
“
“இப்பதா நியூஸ்ல பார்த்தேன்…போய் பாரு..
"நாலு
நாளைக்கு முன்னாடி தான அந்தாள்
நம்ம தெருவையே பஜனை கூட்டத்துக்கு
நல்லவன் மாறி அழச்சான்...கேடு
கெட்டவன்... அப்பவே தெரியும்... அவன்
பொம்பிளைகளை பார்க்கற பார்வையே சரி
இருக்காது... "
"எந்த
வீட்டு பிள்ளையோ.. பாவம்.. இவனுங்க கையில் சிக்கி சின்னாபின்னமாகிடுச்சே... "
என்று ஆளாளுக்கு பேசி அங்காலாய்த்தார்கள்.
அங்கு நிற்க முடியாமல் வேகமாக போய் தன்
கணவனை எழுப்பினாள்.
"என்னங்க விஷயம்
தெரியுமா...உங்க நண்பன்னு சொல்லிட்டு திரிஞ்சிங்களே, அந்த
குமார்.. அவனை போலீஸ்
தேடுதாம்... நியூஸ்ல ஓடுது… போய் டிவிய
போடுங்க..
“
"என்ன
சொல்லுற? " அதிர்ச்சியில் உறைந்த செந்தில் வேகமாக போய்
டிவியை ஆன் செய்தான்.
“தலித் பெண்ணை வன்புணர்வு
செய்து கொலை செய்த முக்கிய கட்சியை சேர்ந்த மூவரை போலீஸ் கைதி செய்தது. அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதே கட்சியை சேர்ந்த குமார்
என்பவரையும் போலீஸ் வலைவீசித் தேடுகிறது”.
ஆற்றல் வடிந்த
உடலோடு சோர்வாக சோபாவில் அமர்ந்தான் செந்தில். அவன் கண்கள்
அருணாவைப் பார்ப்பதைத் தவிர்த்து, தரையை பார்த்துத்
தாழ்ந்திருந்தன.
அறைக்குள்ளிருந்து
வந்த டப்பென்ற சப்தத்தில் இருவருமே திரும்பிப் பார்த்தார்கள்.எலியை பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொறி எழுப்பிய
சப்தம்தான் அது. எலிப்பொறிக்குள்ளிருந்த
தேங்காய் துண்டையும் காணவில்லை, எலியையும்
காணவில்லை.
Comments
Post a Comment