- Get link
- X
- Other Apps
Jun 6, 2021
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி
தொகுப்பு : கு.ஹேமலதா
கரிசல் இலக்கியத்தின் வழி எளிய கிராமிய மக்களின் வாழ்க்கையை தன்னுடைய சிறுகதைகளிலும், நாவல்களிலும் அடையாளப்படுத்திய எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் அக்டோபர் 30, 1951ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள மேலாண்மறை நாடு என்ற சிற்றூரில் பிறந்தவர்.
எளிய பின்புலத்தில் இருந்து வந்த இவர் தனது பத்தாவது வயதிலேயே, தந்தையின் மறைவுக்கு பின் ஏற்பட்ட குடும்ப வறுமையின் காரணமாக குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பொருட்டு தன் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு சைக்கிளில் புளி வியாபாரம் செய்தார். பின் தனது சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து சிறிய மளிகைக் கடை நடத்தி ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். மனைவி பொன்னுத்தாய் இரண்டு மகள்கள் வைகறைச் செல்வி மற்றும் தென்றல். ஒரு மகன் வெண்மணிச் செல்வன்.
பாதியிலேயே நிறுத்தப்பட்ட படிப்பின் மீது உள்ள ஏக்கத்தின் வெளிப்பாடு அவரை தீவிர வாசிப்புக்கு உள்ளாக்கியது. அதனால் நூலகங்களே அவரது கல்விச்சாலைகளாயின. அங்கு தமிழ் இலக்கியங்கள் முதல் ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வரை படித்து தனது கருத்து வளம், மொழி வளம் ஆகிவற்றை வளர்த்துக் கொண்டார். அவருடைய வாசிப்பின் ஆர்வமே அவர் எழுதத் தூண்டுகோலாக அமைந்தது.
அவரது 21 ஆவது வயதில் முதல் சிறுகதையான 'பரிசு' 1972 இல் செம்மலர் இதழில் வெளியானது. தொடர்ந்து அவருடைய படைப்புகள் கல்கி, ஆனந்த விகடன் போன்ற முன்னணி இதழ்களில் வெளிவர ஆரம்பித்தன. செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியர் கே. முத்தையாவை தன்னுடைய ஆசானாக ஏற்றுக் கொண்டார். அவர் தந்த ஊக்கமும், உற்சாகமும் இவருடைய எழுத்துப் பணிக்கு மேலும் தூண்டுகோலாக அமைந்தது.
இருபதற்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளும், 6 நாவல்களும், 6குறுநாவல்களும், ஒரு கட்டுரைத் தொகுப்பும் இவரது படைப்புகளாக வெளிவந்துள்ளன. 2008ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அவருடைய 'மின்சாரப்பூ' சிறுகதை தொகுப்பிற்கு கிடைத்தது.
முதலாளித்துவ சிந்தனைகளால் மனதளவில் முற்றுகை இடப்பட்டவர்கள் வாழ்வில் ஆண்-பெண் சமத்துவத்துக்கு வழி இல்லை என்பதை மைய இழையாக வைத்து அவர் எழுதிய முதல் புதினம் 'முற்றுகை'.
பல ஆய்வு மாணவர்கள் இவருடைய படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவருடைய சிபிகள் என்ற சிறுகதை தொகுப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக்கல்வியில் இளங்கலை மாணவர்களுக்கு பாடநூலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது 'பாட்டையா'என்ற சிறுகதை பன்னிரெண்டாம் வகுப்புப் பாடமாக இடம்பெற்றது.
எழுத்தாளர்களுக்குச் சமூகம் மற்றும் அரசியல் பார்வை அவசியம் தேவை என்பதை வலியுறுத்திய அவர் நுட்பமான அரசியல் அறிவு கொண்டவர் மட்டுமின்றி தீவிர இடதுசாரிச் சிந்தனையாளராக திகழ்ந்தவர். சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் அதை நிரூபிக்கும் விதம் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் வழிகாட்டுதலில் இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்திலும், பிறகு அதிலிருந்து பிரிந்த விருதுநகர் மாவட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்தார்.
1975 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆரம்பித்த32 பேர்களில் இவரும் ஒருவர். தமுஎகச தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். தமுஎகச அமைப்பை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பெரும் பங்கு வகித்தவர்.
புதிய எழுத்தாளர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் தனி கவனம் செலுத்தி,அவர்களது எழுத்துக்களை வாசித்தும், கருத்துக் கூறியும், முன்னுரை எழுதித் தருவதையும் பெரும் விருப்பத்தோடு செய்து வந்தார். இளம் எழுத்தாளர்களுக்கு சிறுகதை எழுதுவது எப்படி என்ற வழிகாட்டும் கட்டுரை நூலான 'சிறுகதை படைப்பின் உள்விவகாரங்கள்' எழுதியுள்ளார்.
எழுத்துப் பணிகளுக்கிடையே தான் சார்ந்த தமுஎகச, மார்க்சிய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பணிகளை மட்டுமின்றி பல்வேறு விவசாய போராட்டங்களிலும், ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் போராட்டத்திலும் பங்கேற்று ஒரு மாத காலம் மதுரை சிறையிலும், விலைவாசி உயர்வுக்கான போராட்டத்தில் பங்கேற்று ஒரு மாத காலம் பாளையங்கோட்டை சிறையிலும் இருந்தவர்.
சமரசமற்ற போர்க்குணம் மிக்கப் படைப்புகளே தனது லட்சியமாக கொண்டிருந்தவர். விமர்சனங்களுக்கு அஞ்சி அதை தவிர்க்க நினைக்கும் எழுத்தாளர்கள் மத்தியில், அவர் படைப்பின் மீது வைக்கும் பல விமர்சனங்களை மிகுந்த அக்கறையோடு எதிர்கொண்டவர்.
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் 2017 அக்டோபர்30 அன்று சென்னையில் அவரது 66 வயதில் காலமானார்.
வெளிவந்துள்ள படைப்புகள்
நாவல்கள்
1.முற்றுகை
2.ஆகாயச் சிறகுகள்
3.உயிர் நிலம்
4.இனி
5.அச்சமே நரகம்
6.முழுநிலா
குறுநாவல்கள்
1.பாசத்தீ
2.தழும்பு
3.மரம்
4.கோடுகள்
சிறுகதைத் தொகுப்புகள்
1.சிபிகள்
2.ஊர் மண்
3.மானுடப் பிரவாகம்
4.அன்பு வாசம்
5.விரல்
6.மின்சாரப்பூ
7.பூச்சுமை
8.ஒருமாலைப் பூத்து வரும்
9.உயிர்க்காற்று
10.தேசிய மயில்
11.பூக்காத மாலை
12.மனப்பூ
13.பாட்டையா
14.மௌனக் கேள்வி
15.காகிதம்
16.கணக்கு
17.மனப் பூ
18.தழும்பு
19.தாய்மதி
20. என் கனா
21.வெண்பூமனம்
22.மானாவாரிப்பூ
23.இராசாத்தி
கட்டுரை நூல்
1.சிறுகதை படைப்பின் உள்விவகாரம்
பெற்ற விருதுகள்
சாகித்திய அகாதமி விருது (2008)
· மனப் பூ தொகுப்புக்கு தமிழக அரசின் இலக்கிய விருது
· கல்கி சிறுகதை போட்டியில் இரண்டு முறை முதல் பரிசு
· தமிழ் அரசி சிறுகதை போட்டியில் முதல் பரிசு
· ஆனந்த விகடன் பவழ விழா ஆண்டில் முத்திரை பரிசுகள்
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு
· மக்கள் டிவி வழங்கிய 2009 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்திற்கான விருது.
· வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் "மாட்சிமைப் பரிசு" என்ற கேடயம்.
· உயிர்க் காற்று தொகுப்புக்கு பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது வழங்கி சிறப்பித்தது. தொடர்ந்து ஐந்து முறை இந்த வங்கி இவ்விருதை வழங்கியுள்ளது.
· இலக்கிய சிந்தனை விருது
· அமுதன் அடிகளார் விருது
· லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது
இணைய இணைப்புகள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment