நூல் : புதிர்வினை 

ஆசிரியர் : கவிவாணன்


புதிர்வினை.. 11 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல்.ஒரு கவிஞராக அறியப்பட்ட தோழர் கவிவாணன் அவர்கள்,இந்த கொரானா கால பொதுமுடக்கத்தை பயன்படுத்தி தன்னை ஒரு சிறுகதை எழுத்தாளராக பரிணமித்து,தன் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.ஒடுக்கப்பட்ட எளிய மக்களின்  வாழ்க்கை போராட்டத்தை தன் கவிதைகள் வழி வெளிப்படுத்தியவர்,அதே எளிய மக்களின் வாழ்வியலை சிறுகதைகளாக எழுதியுள்ளது சிறப்பு.யதார்த்தமிகு எழுத்துக்களாலும்,எளிய நடையிலும் ஒவ்வொரு கதையும் நம்மை ஈர்க்கிறது.


தன் தாயை தோசை கரண்டியால் சூடு போட்ட தந்தையின் செயலால், தான் விரும்பி உண்ணும் தோசையை வெறுக்கும் ஒரு சிறுவனின் மன வலியை சொல்லும் கதை 'தோசை'. நாள் முழுதும் ஓயாமல் உழைக்கும் அவனது தாய் சிறுது நேரம் தூங்கியதால் அவளுக்கு கிடைத்த தண்டனையை அவன் மனம் ஏற்காமல்,அதை பல கேள்விகளாக நம்மிடம்  முன்வைக்கும் இடத்தில் நம்மிடமும் பதில் இல்லை.


குடும்பத்தை நிராதரவாக விட்டு செல்லும் ஆண்களின் பொறுப்பற்றத்தனத்தை விளக்கும் கதைகளாக 'வந்து போகாத அப்பா' மற்றும் 'புதிர்வினை' இருக்கிறது. இரண்டு கதைகளிலுமே,விட்டு சென்ற கணவனால், குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை அனுபவித்தும்,அவள்களின் மனம் ஏனோ கணவனை மன்னிப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.'வந்து போகாத அப்பா' கதையின் இறுதியில் அவர் ஒரு எழுத்தாளர் என்று முடித்திருப்பது அவ்வளவு உவப்பாக இல்லை. எழுத்தாளருக்குரிய சுதந்திர வெளி, குடும்பத்தை விட்டு சென்றால்தான் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.


ஆணவக் கொலையை மையப்படுத்தி எழுதி இருக்கும் 'பன்னீர்ப் பூக்கள்' கதை மனதை விட்டு அகலவில்லை.கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணின் மனஉணர்வையும், அவளின் மௌனத்தையும் விளக்கும் இடம் அருமை.கல்லூரியில் நடக்கும் காதல் பகுதி மிக இயல்பாக அமைந்திருந்ததால்,நம் மனதிலும் ஆழப்பதிந்து விடுகிறது.சாதி,மதம்,அந்தஸ்து என பல காரணங்களை சொல்லி தங்கள் பிள்ளைகளின் காதலை வெறிகொண்டு வேரறுக்கும் தாய்,தந்தைகள் இன்றும் நம்மோடு உலவுவது,இந்த சமூகத்தின் மேல் ஒரு அச்சத்தை தருவது மிகையில்லை என்பதை இக்கதை எடுத்துக்காட்டுகிறது.


'ஆனாலும் உயரம்தான்' கதையில் படித்து பட்டம் பெற்று ஆசிரியப்பணியில் இருக்கும் மனைவியிடம் இருந்து அவளின் மொத்த சம்பளத்தையும் பறிக்கும் கணவன் வஹாப்பும், 'முத்துமாரி (எ) நேகா' கதையில்,சுயமாக உழைக்க நினைக்கும் மனைவி லீலாவின் படிப்பு சான்றிதழ்களை கிழித்து எறியும் அவளின் கணவனும் முரண்பட்டுத் தெரிந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் 'ஆணாதிக்க மனோபாவ' ஒற்றுமை படித்த பெண்களையும் அடிமை மனோநிலையில் தான் பாவிக்கின்றனர் என்ற நிதர்சன உண்மை புரிகிறது.'ஆனாலும் உயரம்தான்' கதையில் சலீமாவின் திருமணத்திற்கு அவள் தாய் மனதளவில் அவளை தயார்படுத்தும் இடம் இன்றும் 90 சதவீத குடும்பங்களில் நடப்பது கண்கூடு.அதையும் மீறி சலீமாவின் ஆசை இறுதியில் ஒரு ஹய்ஹீல்ஸ் செருப்பால் நிறைவடைந்தாலும்,ஆண்களை ஒரு பெண்ணால் ஒரு எல்லையோடுதான் மீற முடியும் என்ற உண்மை முகத்தில் அறைகிறது.



அனைத்துக்கும் அனுசரித்து போகும் பெண்களுக்கிடையில்  'அழகுத்தாய்' மட்டுமே வயிற்றில் குழந்தையுடன் வைராக்கியத்துடன் எதிர்த்து வாழ கிளம்புகையில் ஒரு ஆசுவாசத்தை தருகிறது.


கடிதத்தின் வழி ஒரு கதையை விவரித்து எழுதி இருக்கும்  'முத்துமாரி (எ) நேகா' கதை புதுமை.சிறுகதைகளில் அங்காங்கே கவிஞர் கவிவாணன் அவர்களின் கவிதைகள் இடம்பெறுவது ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது.


 விளிம்பு நிலை மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கதைகளாக வெளிப்படுத்தும் பொழுது அப்பிரச்சனையின் தீவிரத்தை கதையை வாசிக்கும் நம்மால் உணர முடிகிறது.பெரும்பாலான கதைகள் ஆண்களின் அடக்குமுறையாலும், பொறுப்பின்மையாலும் குடும்பங்களில் ஏற்படும் இன்னல்களையும்,அதன் பொருட்டு பெண்கள் படும் அல்லல்களை வெளிப்படுத்தும் கதைகளாகவே அமைந்துள்ளது.அத்தனை இன்னல்களையும் கடந்து வைராக்கியத்துடன் வீறு கொண்டு எழும் பெண்களை  இந்த சமூகம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை வெகு யதார்த்தமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.நன்றி.

Comments