சஹிதா - நிபந்தனையற்ற அன்பின் குரல் 



நூல் : சஹிதா -  நிபந்தனையற்ற அன்பின் குரல் 

ஆசிரியர் : கே.வி.ஷைலஜா 

முதற்பதிப்பு : 2021

வெளியீடு : வம்சி புக்ஸ் 

திருவண்ணாமலை. 


ஹேமலதா.கு 

தேனி.

தமிழில் பல மொழிபெயர்ப்பு படைப்புகளை வழங்கிய எழுத்தாளர் கே.வி.ஷைலஜா அவர்களின் முதல் நாவல்.முதல் நாவலே பெரும் விவாதத்திற்கு ஏற்ற கதை களத்தை கொண்டதாக இருக்கிறது.

கேரள மண்ணில் பிறந்த பாரம்பரிய இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் ஆன்மீக தேடலையும்,அதை அடைய அவள் தான் சார்ந்த மார்கத்தை கடந்து வெளிவர முற்படுகையில் ஏற்படும் தடைகளை எவ்வாறு கடந்து வந்து அவளது இலக்கை அடைகிறாள் என்பதே கதை.

பல கட்டுப்பாடுகளை கொண்ட இஸ்லாமிய குடும்பத்தில் வளரும் பெண் சஹிதா.தன் தாய், தந்தையை விட தனது பாட்டி இத்தாமுவுடன் நெருக்கமான அன்பை கொண்ட அவள்,தன் உற்ற தோழியாக கருதுவது அவள் தங்கை வஹிதாவை.மகள்களிடம் எப்பொழுதும் எறிந்து விழுந்து,அதிக கண்டிப்புக் காட்டும் தாய்,நிறத்தை வைத்து மகள்களை வேறுபடுத்தி பார்க்கும் தந்தை என அவளின் சிறுவயது அவள் குடும்பத்துடனே  அன்னியப்பட்டு போகும் சூழலை ஏற்படுத்துகிறது.அந்த நெருக்கடி சூழலில் இருந்து மீள அவள் தேடியது அவள் தோழி வீட்டு பூஜை அறையில் கண்ட அவளது கண்ணன். கண்ணனின் மீது கொண்ட அளவில்லாத அன்பை மனதில் ஆழப்பதிந்து அவள் கனவிலும், நினைவிலும் தோழனாக, காதலனாக பரிணமித்து தன் வாழ்வின் எல்லை வரை வர இருப்பதை அவள் உணர்ந்தாள்.இதுவே அவளின் ஆன்மீக தேடலுக்கான முதல் முடிச்சு என சொல்லலாம்.

திருமணத்திற்கு பின்பு,தன் மாமியார் ஜரீனாவின் அதிகப்படியான கட்டுப்பாடுகளில் சோர்ந்து போன சஹிதாவை அவளது கணவன் நாசிம் மீட்டெடுக்கிறான்.நாசிமின் தீர்க்கமான முடிவுகளால் தாய் ஜரீனாவால் அவன் சொல்லை தட்ட முடியாத நிலைக்கு ஆளாகிறாள்.இது சஹிதாவிற்கு பெரும் ஆசுவாசத்தை தருகிறது.இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக அவள் செய்யும் ஒவ்வொன்றையும் சிறு அதிர்ச்சியோடு கடக்கிறான் நாசிம்.அதுவும் அவனது தாய் ஜரீனாவிற்கு தெரியாதபடி பார்த்து கொண்டாலும்,இந்த சமூகத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்த சூழலை மனதிடத்துடன் எதிர்கொண்டான்.அவளின் இந்த போக்கை திசை திருப்ப, அவளின் ஆசைப்படியே ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்க உதவுகிறான். அப்பொழுதுதான் சரிதா, மீராவின் நட்பு அவளுக்கு கிடைக்கிறது. மூன்று பெண்களுக்குள்ளும் மலரும் சிநேகம் நம் மனதையும் பூக்கச் செய்கிறது.ஒரு பக்கம் வியாபாரம் என்றாலும் மறுபுறம் அவள் மனதில் இறையை அடைய போகும் நாளுக்காக ஏங்கியது.குடும்ப சூழல் அவள் மனதிற்கு ஒரு ஒவ்வாமையை தர ஆரம்பித்தது.பல இறை கூட்டங்கள், குருமார்களின் கூட்டங்களுக்கு செல்லும் ஆசை மேலோங்கி தன் கணவன் துணைக் கொண்டு செல்ல ஆரம்பித்தாள்.அவள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சி நாசிமின் உடல்நிலையையும் பாதித்தது. அதையும் மீறி தன் மனைவியின் மேல் கொண்ட அன்பினால் அவளின் ஒவ்வொரு ஆசையையும் பூர்த்தி செய்வதை கடமையாக கொண்டான்.

அந்த நேரம் தான் சஹிதாவிற்கு ஆதியின் நட்பு கிடைக்கிறது. தன் கணவன், தோழிகளிடம் பகிர முடியாத அனைத்தையும் அவனோடு பகிர ஆரம்பித்தாள்.தன்னை போன்ற ஒத்தக் கருத்து கொண்ட ஆதியின் சிநேகம்,சஹிதாவிற்கு தன் இலக்கை அடைய போகும் மகிழ்ச்சியை அளிக்கிறது.தனக்கு ஒரு துணையாக அவனை கருத ஆரம்பித்தாள்.வேற்று மனிதனோடு சிநேகம் வைத்திருந்தாலும்,அதில் உள்ள உண்மையான நட்பை புரிந்து கொண்ட நாசிம்.தன் மனைவிக்கு ஏற்ற ஆன்மீக வழிகாட்டி ஆதியே என்று புரிந்து கொண்டு அவனுடன் தன் மனைவி சஹிதாவை வழியனுப்பி வைப்பதோடு கதை நிறைவடைகிறது.

பெண் என்பவள் ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே வாழ பழக்கப்படுத்தும் இந்த சமூகம்,அந்த வளையத்தை விட்டு வெளியேற நினைக்கையில் அவளுக்கு தரும் பட்டங்களும்,குடும்பம் என்ற அமைப்பை முன்னிறுத்தி அதை தடுத்தும் விடுகிறது.தங்கள் சுயத்தை இழந்து குடும்பமே மகிழ்ச்சி என்ற மனப்போக்கை அவள் அறியாமலே விதைத்து விட்டு,அன்பு,பாசம், பொறுப்புகள் கொண்டவள் என்ற போர்வையை அவள் மீது வீசி முடக்கி போடுகிறது.இதில் ஆண், பெண், சமூகம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒருமித்து செய்வது வேதனையின் உச்சம்.ஆனால் சஹிதாவிற்கு அன்பின் வழி அனைத்தும் அவள் விரும்பியவண்ணம் நடப்பது வாசிக்கும் ஒவ்வொரு பெண்ணின் மனத்தவிப்பை ஆசுவாசப்படுத்துகிறது.

இக்கதை சஹிதா என்ற ஒற்றை பெண்ணோடதாக மட்டுமின்றி பல பெண்களின் வாழ்க்கையை உளவியல் ரீதியாகவும், நெகிழ்வோடும் விளக்கியுள்ளது சிறப்பு.பள்ளி செல்லும் வயதில் திருமணம் புரிந்து இரண்டே வருடத்தில் பாம்பு கடியில் கணவனை பறிகொடுத்து சுயமாக தன் மகனை வளர்த்தெடுக்கும் இத்தாமு.தாயில்லாத காரணத்தால்,உடன்பிறந்தவர்களின் வாழ்வை சீராக்கி பின் இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட்டு,முதல் தார குழந்தையையும் சேர்த்து வளர்க்கும் பொறுப்பை ஏற்கும் நாசிமின் தாய் ஜரீனா பீவி,வெளிநாட்டிற்கு வேலைக்கு  சென்று திரும்பும் கணவனின் குணமாற்றம்,முகமாற்றம் என மனைவிக்கே வேற்று மனிதனாக தெரியும் போது,எப்படி தனது குழந்தைக்கு 'இவர்தான் உன் அப்பா' என்று அறிமுகப்படுத்துவது என்ற  மனதை அலைக்கழிக்கும் கேள்வியோடு பார்க்கும் லஷ்மிக்குட்டி,காதலித்து மணம் புரிந்து,கணவனின் ஊதாசீனங்களை இரவின்  தனிமை கண்ணீரோடு போராடி வாழும் சஹிதாவின் தாய் அஸ்மா,பக்கத்து வீட்டுப் பெண்ணாக அறிமுகமாகும் சாந்தம்மாவின் அன்பும் அக்கறையும் கொண்ட பிணைப்பு,தங்கை வஹிதாவுக்கும்,சஹிதாவிற்குமான அன்பு பிணைப்பு,மீரா, சரிதா,சஹிதாவின் எதிர்பார்பற்ற அன்பினால் உண்டான இணைபிரியா சிநேகம் என கதை முழுதும் பெண்களின் மனஉணர்வுகளை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் ஏராளம்.இப்படியாக பெண்களின் உணர்வுகளை முன்னிறுத்தியே இந்த படைப்பு முழுமையடைகிறது.

மாதவிடாய் காலத்தில்,கால் கூட நீட்டி படுக்க முடியாத விறகு அடுக்கும் சிறு அறையில் தன் நாட்களை கழித்தும்,தீட்டு துணியை யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால் வெளியே எறியாமல்,துவைத்து அதே அறையில் காயப்போடுவதும், அதன் வீச்சத்தை சகித்து கொண்டு இருக்கும் சஹிதாவின் தோழி லீலாவின் நிலையை வாசிக்கும் பொழுது நம் மனமும் அந்த அவஸ்தையை  அனுபவிக்கிறது.ஆனால் இன்றும் பல பெண்களின் நிலை இது தான் என்ற நிதர்சனம் முகத்தில் அறைகிறது.

சஹிதாவின் பிரசவத்திற்கு பின்னான அவள் உடல்நிலை கவனிப்பை பொறுப்பெடுத்து செய்யும் சாந்தம்மாவின் கவனிப்பு பற்றிய விளக்கங்கள் ஓரு அத்தியாயம் முழுதும் இருக்கிறது.பல மருத்துவ குறிப்புகளை அடங்கிய இந்த அத்தியாயம் பெண்களுக்கு ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம்.மருத்துவ கவனிப்பு என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாத அளவு சாந்தம்மாவிற்கும் சஹிதாவிற்கும் உள்ள அன்பையே இங்கு பிரதானமாக காணமுடிகிறது.

நாசிம்..வேற்று மதக்கடவுளை வழிபட தன் மனைவியை அனுமதிக்கும் இடத்திலேயே நாசிமை நமக்கு பிடித்துவிடுகிறது.கதையின் முக்கிய கதாபாத்திரமாக சஹிதா இருந்தாலும்,அவளின் கனவை நிறைவேற்ற சமூகம், குடும்பம் என பல்வேறு நெருக்கடிகளை தாண்டி கடைசி வரை அவளுடன்  துணை நின்ற அவள் கணவன் நாசிம் வாசகர் மனதை முழுதாக வென்றவன் ஆகிறான் என்பது மிகையில்லை.இல்லற வாழ்வில் நாட்டமில்லாத மனைவியை நிர்பந்திக்கும் சூழல் கொண்ட மனநிலையை பெற்றிருக்கும் இன்றைய ஆண்களின் மத்தியில் நாசிம்,தன் மனைவியின் ஆன்மீக தேடலை புரிந்து அவள் மேல் கொண்ட அன்பு  துளி அளவும் சிதறாமல் அவளின் ஒவ்வொரு படிநிலையிலும் துணை இருப்பது மட்டுமல்லாது,அவளது மனஅமைதிக்காக விக்ரக வழிபாடு,தீட்சை வாங்க அவள் எடுக்கும் முடிவு என அனைத்திலும் அவளை சாந்தப்படுத்த நினைக்கும் நாசிமின் வலி அளப்பரியது.தன் வலி உணர்ந்தாலும்,தன் மனைவின் மனத்தவிப்பை காணப் பொறுக்காத அவனின் நேசம், 'இதை விட வேறு என்ன வேண்டும்' என்ற எண்ணமே நமக்கு தோன்றுகிறது.அவர்களுக்குள் நிகழும் ஆன்மீக தர்க்க உரையாடல்கள் இக்கதையில்  முக்கியமாக கருத வைக்கிறது.

இல்லறத்தின் மீது பற்று கொண்ட நாசிமிடம் இருக்கும் மனச்சமநிலை,ஆன்மீக மனம் கொண்ட சஹிதாவிற்கு இல்லை என்பதை பல நிகழ்வுகளில் காணமுடிகிறது.ஸ்ரீ கிருஷ்ணனிடம் இருந்து ஆரம்பித்த அவளின் ஆன்மீக காதல்,சிவன்,காளி என தொடர்ந்து,ஆட்டிச குறைபாடு உள்ள குழந்தைகளின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக ப்ராணிக் ஹீலிங் பயின்று அவர்களுக்கு உறுதுணையாக இருக்க ஆசைப்படும் மனம் கடைசியில் திருவண்ணாமலை ஆசிரமத்தில் அடைக்கலம் புகுகிறது.'தான் பிரபஞ்சத்துக்கு உரியவள்' என்ற வார்த்தைகள் மட்டும் ஒருவளை ஆன்மீகத்துக்கு இட்டுச்செல்லாது என்பதை அவளின் கடைசி நிமிட மனசஞ்சலத்தின் வழி நம்மால் உணர முடிகிறது.


ஆன்மீக துறவறம் பெண்களுக்கு எந்த அளவு சாத்தியம்,அதுவும் இஸ்லாமிய பெண்களுக்கு, தங்கள் மார்க்க கட்டுப்பாடுகளை மீறி இது சாத்தியமா என்ற கேள்வியை நம் மனதில் ஓடவிடுகிறார் ஆசிரியர்.சிறுவயது முதலே தந்தையின் அரவணைப்பு கிடைக்காமல் தவித்த சஹிதாவிற்கு தன் மகளின் நிலையை ஏன் உணராமல் போனது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.நாசிமின் அன்பை சஹிதாவுடன் ஒப்பிடும் நம் மனம், சஹிதாவை தாண்டி நாசிமிடமே வந்து நிற்கிறது.பொது புத்தியை கொண்டு அளவிடும் நம் மனம்,சஹிதாவின் முடிவை ஏற்க மறுக்கிறது.

தன் ஆதி கடவுளின் மேல் பக்தி கொண்ட தாய் அஸ்மா, முன்னோர்கள் வழிபாட்டினை பின்பற்றும் தந்தை கரீம்  என இருவரிடையே வளர்ந்த சஹிதா,இந்து கடவுளான கண்ணனை மனம் உருகி தொழும்  நிலையை பார்க்கும் பொழுது,ஒரே குடும்பத்தை சேர்ந்த மனிதர்களுக்குள்ளும் இந்த  ஆன்மீக முரண்பாடு இருப்பது மனித மனங்களின் வேறுபாட்டை உணர்த்துகிறது.

கதையின் இடையில் வரும் நந்தா,சக்தி கதாபாத்திரங்கள் கதையோடு ஒட்டவில்லை என்றே சொல்லலாம்.

"பரிசுத்தமான உள்ளொளியோடு இருக்கும்போது மட்டுமே எதிரில் இருண்மையோடு வருபவர்கள் நம்மிலிருந்து ஒளியை எடுத்துக்கொண்டு  போக முடியும்.நாமே இருளிலிருந்து ஒளியை கொடுக்க முடியாது" என்று நாசிம் சஹிதாவிடம் கூறும் வார்த்தை நூறு சதவீத உண்மை தன்மை கொண்டதாக உள்ளது.

சஹிதா - நிபந்தனையற்ற அன்பின் குரல்.. ஆம்..நாவல்  முழுதும் வரும் கதை மாந்தர்களின் அன்பின் குரல் மட்டுமே கேட்கிறது.அன்பின் குரல் மட்டுமே கதையில் பிரதானமாக ஒலிப்பதால் வாசிக்கும் நமக்கும் நேர்மறையான அனுபவத்தை கொடுக்கிறது. புரிதலின் அடிப்படையிலேயே மனித உறவுகளிடையே அன்பு மிகுதியாகிறது.அந்த புரிதலுடன் கூடிய அன்பை,  தன் மொத்த வாழ்வை மட்டுமின்றி தன் மகள் அமீராவின் எதிர்காலத்தையும் தனதாக்கிக் கொண்டு சஹிதாவிற்கு விடுதலை கொடுக்கும் நாசிம் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறான்.குடும்ப உறவுகளிடம் இருந்து வெளியேறி இந்த பிரபஞ்ச தேடலில் ஐக்கியமாக விரும்பும் சஹிதாவும் அதை ஒரு அன்பின் பயணமாகவே கருதுகிறாள்.அவளின் பயணம் வெற்றியடைய அவளுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்.நன்றி.

Comments