நூல் : பாக்களத்தம்மா 


ஆசிரியர் : புலியூர் முருகேசன் 


பாசத்தின் பெயரில் ஒரு குடும்பத்தின் உழைப்பு,பணம், சொத்து என அனைத்தையும் சுரண்ட நினைக்கும் உறவுகளை மையப்படுத்தி எழுதியிருக்கும் நாவல் 'பாக்களத்தம்மா'.


பாக்களத்தம்மா.. குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் மூத்த தலைமுறை.தன் கணவனுக்கு இரண்டாவதாக வாழ்க்கைப்பட்டு,மூத்த தாரமான தன் அக்காள் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்று,பின் அன்பின் காரணமாக அவர்களின் குழந்தைகளையும் வளர்கிறாள்.பெண் என்ற போதிலும்,அவள் கணவன் சின்னசாமி நாடாரின் ஒத்துழைப்புடன்,அவளே அக்குடும்பத்தில்  அனைத்துமாக இருந்து வழிநடத்துகிறாள்.தன்னை சுற்றியுள்ள மனிதர்களிடம் எந்த வித பாரபட்சமின்றி அவர்களின் மனஓட்டத்தை வைத்தே உதவிகள் புரிவதும், அன்பை பொழிவதிலும் வள்ளலாக இருக்கிறாள்.தன் இறந்த கணவனை பிரியமுடியாத காரணத்தால் அவரின் இறந்த உடலை பாதுகாப்பதுமாக எங்கும் நடக்காத புதுமையையும் செய்கிறாள்.அவள் தன் கொள்ளுப் பேரன் நாகைய்யாவின் மேல் கொண்ட பாசம் அலாதியானது.அவர்களின் பாசம் கதை இறுதி வரை வியாபித்து இருப்பது நெகிழ வைக்கிறது.


இன்று ஒரு பிள்ளையை வளர்க்க அல்லல்படும் குடும்பங்களுக்கு இடையே பாக்களதம்மா மூன்று தலைமுறை மக்களை சண்டை சச்சரவின்றி வளர்த்தெடுத்த விதம் நமக்கு ஒரு பாடம்.அவள் இருந்த காலத்தில் லேசாக புகைந்த குடும்ப பிரச்சனைகள் அவள் இல்லாத காலத்தில் விஸ்வரூபம் எடுக்க காரணமாக அமைந்தது அவள் சேர்ந்து வைத்த சொத்து.வீட்டின் மூத்தவர் இருக்கும் வரையே குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும் என்பதை கோடிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.அன்பு,பாசத்திற்கு அடிபணிந்து சென்றாலும்,ஒரு கட்டத்தில் பணம்,பொருள்,சொத்துகள் மட்டுமே உறவுகளிடையே பிரதானமாக அமைந்து விடுவது நிதர்சனம்.


நாகையா.. கதையின் முக்கிய கதாபாத்திரம்.மூன்று வயதில் தன் கொள்ளு பாட்டி பாக்களத்தம்மாவின் அரவணைப்பில் வளரும் அவனை,குடும்ப பிரச்சனை காரணமாக பிரித்து கூட்டி செல்லும் தாய் காமாட்சி, அவனது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுகிறாள்.பாட்டியுடன் இருந்த வரை சொகுசாக வாழ்ந்தவன்,பின் தன் ஒட்டு மொத்த குடும்பத்துக்காவும் அவன் வாழ்க்கையை இழப்பது பெரும் சோகம்.ITI படிக்க ஆசை படும் அவனை,  அவனின் இரண்டு அக்காள் கணவர்களும் மாறி மாறி அவர்களுடைய தொழிலுக்கு கூலியாக வைத்து நாகையாவின்  வாழ்வை பாழ் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.அதை தட்டி கேட்கும் பொறுப்பில் உள்ள தந்தை பழனியப்பனும் அவர்கள் போடும் முடிச்சில் சிக்கிக் கொள்வது அவரின் குடும்ப சூழலை நமக்கு சொல்கிறது.நாகையாவின் கதாபாத்திரம் இன்றைய பல குடும்பங்களின் ஆண்களை பிரதிபலிக்கிறது. தந்தை விட்டு சென்ற கடமைகளை எந்த குறையும் இல்லாமல் உடன்பிறந்தவர்களுக்கு  செய்ய வேண்டும் என்ற உணர்வு  மேலோங்கி அவர்களின் இயல்பை மீறி அதில் சிக்கிக் கொள்கின்றனர்.இதில் குளிர்காய்ந்து,பிறந்த வீட்டின் ஒட்டு மொத்த சொத்தையும் உறிஞ்சி எடுக்கும் அட்டை பூச்சிகளாக உடன்பிறப்புகள் மாறுவது,அன்பிற்கும்,பாசத்திற்கும் மரியாதை இல்லாமல் செய்து விடுகின்றனர்.


நாகையாவின் இரு அக்காள்கள்  மருதாம்பாள்,தங்கம்மா போன்ற பெண்கள்,'உறவு' என்ற பெயரிலும்,'தாய்மாமனின் கடமை' என்ற மமதையிலும் செய்யும் சுரண்டல் வாசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் எரிச்சல் அடைய வைக்கிறது.அவர்களுடைய கணவர்களை இதில் பகடை காயாக்கி,தாய் வீட்டில் பிடுங்கும் திண்ணும் புத்தியை நாகையா கடைசி வரை எதிர்க்காமல் இருப்பது அவன் தன் சொந்த குடும்பத்துக்கு செய்யும் துரோகமாக கருத வைக்கிறது.


எப்பொழுதும் மகள்களின் நலனிலேயே அக்கறை காட்டும் பழனியப்பன்,மகனின் எதிர்கால நலனில் அக்கறையற்று இருப்பது உறுத்துகிறது.அவர் ஆசை மகள் மருதாம்பா வீட்டுக்கு கோழியோடு சென்று அவரும், மகனும் பட்டினியோடு திரும்பும் இடம் வலி மிகுந்தது.சிறுவயது நாகையா, அக்கா, மாமா சாப்பிடுவதை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதை வாசிக்கும் பொழுது நம்மால் எளிதாக கடந்து விடாத அளவு ஆசிரியர் எழுத்தில் ரணத்தை விதைக்கிறார்.


தீயவர்களுக்கிடையே நல்லவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மிக்ஸர்மாமா,சண்முகராஜா, தங்கவேல் சார் போன்ற நல்லவர்களும் நாகையாவின்  வாழ்வில் இருப்பது மிகுந்த ஆசுவாசத்தை தருகிறது.ஆனால் அவர்களின் உதவியும் விழலுக்கு இறைத்த நீராகவே ஆவது மனதை நெருடுகிறது.


நாவல் மிகவும் உணர்வுபூர்வமாகவும்,உயிர்ப்புடனும் அமைந்துள்ளது.கதையில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும்,நம் வாழ்க்கையோடு பிண்ணி பிணைந்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.கதையில் மேலும் ஒரு சிறப்பம்சமாக அமைந்திருப்பது வட்டார வழக்கு எழுத்து நடை.கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை வாசிக்கும் வாசகரை கொஞ்சமும் சலிப்படைய விடாத எழுத்து.கதையும் எந்த இடத்திலும் தோய்வில்லாமல்,விறுவிறுவென நகர்வது மேலும் சிறப்பு.நன்றி.

Comments