நூல் : மறை நீர் 

ஆசிரியர் : கோ.லீலா 



பள்ளி காலங்களில் நீர், மழையின் முக்கியத்துவத்தை பற்றி தமிழாசிரியர் கட்டுரை எழுதி வர சொல்லும்பொழுது நம் மனதில் தோன்றும் முதல் தலைப்பு 'நீரின்றி அமையாது உலகு'.அந்த வாக்கியத்தில் உள்ள முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளாமல் தத்துவார்த்தமாக எழுதி கடந்து விடுவோம்.இன்றும் நீரின் மேன்மையையும்,சேமிப்பையும்  பற்றிய எந்த பிரக்ஞையுமின்றி வாழும் சமூகத்தில் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்பதை தலையில் குட்டு வைப்பது போல் உணர்த்தும் நூலாக 'மறை நீர்' அமைந்துள்ளது.


வெறும் புள்ளிவிவர அட்டவணைகளை மட்டும்  கொடுக்காமல் அதற்கான தீர்வினை சொல்கிறது இந்நூல்.நீரின் பன்னாட்டு அரசியலை பற்றி மட்டுமின்றி,நீர் மேலாண்மையில் நாம் அன்றாடம் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறது.


நூலின் தலைப்பான மறைநீர் பற்றிய அத்தியாயம் இதுவரை நான் கேள்விப்படாத தகவல்களை கொண்டுள்ளது. அதை வாசிக்கும் பொழுது தண்ணீரில் உள்ள உலக அரசியல் புரிகிறது.நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பயன்பாட்டிலும் நம் கண்ணுக்கு தெரியாத அளவு நீரின் உபயோகத்தை  மறைநீர் என்கிறோம்.ஒரு பொருளின் உற்பத்தியில் இருந்து கணக்கிடப்படும் மறைநீர் அந்த பொருளின் ஏற்றுமதி,இறக்குமதி வரை வரையறுக்கப்படுவதாக நூலின் வழி நமக்கு புரிகிறது.


நீரின் அவசியத்தை உணர மழைக் காடுகளின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர்.பூமியின் நுரையீரலான காடுகளின் அழிவை விவரிக்கும் இடத்தில்  நாம் மனிதனாக இருக்கும் தகுதியை இழக்கிறோம்.என்றும் மனிதனால் உருவாக்கமுடியாத மழைக் காடுகளின் மரணம் மனிதர்களின் பேராசைகளாலேயே சம்பவித்துள்ளது.பெரும் வனங்களின் அழிவு பல உயிரினங்களின் அழிவிற்கு காரணமாக அமைவதுடன் மழை பொலிவையும் குறைகிறது.கனிம சுரங்கங்களுக்காகவும்,பணப் பயிர்களை பயிரிடும் இடங்களாகவும் வனங்களை அழிப்பதால் காடுகளில் சுதந்திரமாக அலைந்து திரிந்த உயிரினங்களிடம்  உணவு சுழற்சி குழப்பங்களை ஏற்படுத்தியும்,அவைகளின் வழித்தடங்களின் மாற்றங்களும் நிகழ்த்தப்படுகிறது.அதோடு மட்டுமின்றி வனங்களின் மைந்தர்களான பழங்குடியினனர்களின் வழிகாட்டுதல்களை ஊதாசினப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்த நினைக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு குட்டும்  வைத்துள்ளார் ஆசிரியர்.


பழந்தமிழர்களின் நீர் மேலாண்மையையும்,நீர்நிலைகளுக்கு அவர்கள் பயன்படுத்திய 48 பெயர்களையும் வரிசைபடுத்தியிருப்பதை வாசிக்கும்பொழுது நமக்கு மலைப்பை ஏற்படுத்துவது நிச்சயம்.48 நீர்நிலைகளை கொண்ட நம் நிலத்தில் இன்று கைவிட்டு எண்ணும் அளவிலேயே இருப்பதை அறியும்பொழுது நாம் வெட்கி தலைகுனிய வைக்கிறது.மேலும் சங்க இலக்கிய பாடல்களின் மூலம் நம் மூதாதையர்கள் எப்படி நீரைக் கையாண்டனர் என்பதையும் விளக்கியுள்ளார்.


பொத்தாம்பொதுவாக மழையில்லை என்ற வாதத்தை வைத்தே தண்ணீர் பற்றாக்குறை யை அளவிடும் நாம்,மழை பெய்த நேரங்களில் கிடைத்த நீரை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்ற கேள்வியை நூல் ஆசிரியர் நம்முன் வைக்கும் இடத்தில் நம்மிடம் பதில் இல்லை..அதற்கு நம் அன்றாடம் கடைபிடிக்கும்படி சிறு சிறு தீர்வுகளையும் கூறி இருப்பது சிறப்பு.இந்த 20 தீர்வுகளை நம் குழந்தைகளை வாசிக்க வைத்தாலே தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை அவர்களுக்கு உணர வைக்க முடியும்.


இந்த பூமியும்,இங்கு கிடைக்கும் இயற்கை வளங்களும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதாக மனிதன் என்று நினைக்கிறானோ அன்றே இந்த இயற்கை வளங்கள் சூரையாடாமல் பாதுகாக்கப்படும்.நீர்நிலைகளை பராமரிக்கும் பணியை ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாக உணர வேண்டும். பெரும்பாலான பொறுப்புகளை  அரசே ஈடுபடுவதால் பொதுமக்களாகிய நாம் எந்த பிரக்ஞையுமின்றி நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில் இருந்து கழிவுகளை போடுவது வரை கேடு விளைவிக்கிறோம்.அவரவர் ஊர்,வீடுகளில் இருக்கும் நீர்நிலைகளை நாமே பொறுப்புடன் கையாண்டால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் பேருபகாரமாக கருதலாம்.


நீர் ஆதாரங்களை பாதுகாக்க அரசு எடுக்கும் சில தீர்வுகள் தொல்லைகளாக முடிவதாக ஆசிரியர் கூறும் சில காரணங்கள் அதிர்ச்சி அளிக்கிறது.நீர் சேமிப்பில் நாம் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த அணைகளின் கட்டுமானத்தினால் ஏற்படும் பல சிக்கல்களாக மரம் வெட்டுதல்,நீரோட்டத்தை தடுத்தல்,நீரோட்டத்தின் போக்கை மாற்றுதல்,சூழலியல் சங்கிலி அறுபடுதல் போன்றவைகளை வரிசைப்படுத்துகிறார்.குழாய் மூலம் நீரை எடுத்து செல்லுதல்,கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் போன்றவைகளும் இதில் அடங்கும்.


ஆசிரியர் கோ.லீலா அவர்களின் முந்தைய படைப்புகள் அனைத்திலும் நீரின் மாசுபாடு,பாதுகாப்பு என நீரை பற்றிய விழிப்புணர்வே அதிகம்.அதற்கெல்லாம் ஒரு மைல்கல்லாக இந்த 'மறை நீர்' நூல் அமைந்திருப்பது மிகையல்ல.நீரை பற்றிய பல நூல் தரவுகளை கொண்டு எழுதி இருப்பது அவருடைய உழைப்பை பறைசாற்றுகிறது.


இன்றைய புவி வெப்பமடைதல்,கால நிலை மாற்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணிகளை இந்நூலை வாசிக்கும் பொழுது  நம்மால் உணரமுடிகிறது. இந்த ஒட்டுமொத்த கேடுகளுக்கும்  மனிதகுலமே காரணமாக இருப்பது வெட்கக்கேடானது.எதிர்கால சந்ததியினருக்கு நாம் எந்த இயற்கை வளத்தை விட்டு வைக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.மரம்,காடு,காட்டு உயிரினங்கள்,மழை,நிலத்தடி நீர்,நீர் நிலைகள் என ஒட்டுமொத்த இயற்கை சுழற்சியையும் நம் பேராசையினால் அழிக்கப்படுவதை நிறுத்தினால் மட்டுமே இந்த பூமி தன் இயற்கை சுவாசத்தை நிறுத்தாமல் இயங்கும் என்பதை இந்நூல் விளக்குகிறது.நன்றி.

Comments