நூல் : அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி 

ஆசிரியர் : அ.கரீம் 



சமூக நிகழ்வுகள் மற்றும் மனிதர்களின் நுண்ணுணர்வுகளை சிறுகதைகளின் வழி பேசும் எழுத்தாளர் அ.கரீம் அவர்களின் சிறுகதை தொகுப்பு 'அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி'.ஒரு நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டை ஆளும் அரசின் கையில் உள்ளது.ஆனால் அதிகாரத்தை கையில் எடுக்கும் அரசின் செயலால் மொத்த நாட்டு மக்களும் படும் அல்லலை சமகால பதிவாக தனது 11 சிறுகதைகள் வழி நமக்கு உணர்த்தி இருக்கிறார் ஆசிரியர் அ.கரீம்.


இந்திய தேசத்தை 'குந்திய தேச'மாக்கி,இன்றைய ஆளும் அரசாங்கத்தின் திட்டங்களை பகடி செய்து எழுதி இருக்கும் கதை 'அதிகாலை நிசப்தம்'. தோழர் ஆதவனின் 'லிபரல் பாளையத்திற்கு' கொஞ்சமும் சளைத்ததில்லை தோழர் கரீமின் 'குந்திய தேசம்'.எப்பொழுதும் கண்காணிப்பு  வளையத்தினுள்ளேயே தன் நாட்டு மக்களை வைத்திருக்கும் அரசாங்கத்தில்,மக்கள் (நாம்)படும் இன்னல்களை வாசிக்கும்போது,நாமும் இந்த வலையில் சிக்கியிருப்பது உறைக்கிறது.'ஒரே மொழி, ஒரே நாடு' முழக்கங்கள்,பசுவதை தடைச்சட்டம், demonetisation, மாரிதாஸ் அலப்பறைகள்,தேசிய கல்விக் கொள்கை,பதஞ்சலி என ஒன்று விடாமல் அனைத்தையும் ஒரே கதையில் 'வைத்து' செய்திருப்பது சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது.


80 வயதை கடந்த பஷீருக்கும்,அவர் வளர்க்கும் செந்நிற கிடாவிற்கும் உள்ள உணர்வுபூர்வமான பிணைப்பினை சொல்லும் கதை 'பஷீரின் கடைசிக் கிடாய்'. மூப்பின் காரணமாக அனைத்து ஆடுகளையும் விற்ற பஷீரிடம் இந்த கிடா மட்டும் ஒரு குழந்தையை போல் ஒட்டிக்கொண்டது.யாரும் இல்லாத தனிமையுடன் போராடியவர் கிடாயின் அன்பு ஆசுவாசப்படுத்திய நேரம் திடீரென்று காணாமல் போகிறது.பஷீருடன் ஏற்பட்ட முன்பகை காரணமாக உள்ளூர் கறிக்கடை ரஹீம்தான் அவரது கிடாயை மறைத்து வைத்திருப்பான் என்ற யூகம் உண்மையாகிறது.இறுதியில் கிடா என்னவாகிறது என்ற  திருப்பதுடன் கதை நிறைவடைகிறது.


2008 ல் நடந்த மும்பை தாக்குதலை மனதில் வைத்து,  தீவிரவாத செயல்களை கட்டுக்குள் வைக்க அரசு  ஏற்படுத்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) செய்யும் அராஜக செயல்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை கரீமின் 'இன்று தஸ்தகீர் வீடு'.தீவிரவாதம் என்றாலே இஸ்லாமிய சமூகம் தான் செய்யும் என்ற நோக்கத்திலேயே அவர்களை விசாரணை என்ற பெயரில் மிரட்டவும்,அவர்களின் மேல் பொய்யான வழக்கை சுமத்தி 2 அல்லது 3 ஆண்டுகள் சிறையில் அடைத்து, பின் விடுதலை செய்து அவர்களை இந்த பொது சமூகத்தில் இருந்து அந்நியமாக்கி மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்பதை இந்த கதையின் வழி நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். ஒரே தெருவை சேர்ந்த அன்சாரி, சுலைமான்,தஸ்தகிர் என மூவரின் வாழ்க்கையை, போலீஸ் அராஜகம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுகிறது என்பது மட்டுமல்லாது, ஒரு தேசிய வரைபடத்தை வைத்திருப்பதை கூட குற்றச் செயலாக கூறி மிரட்டுவதும் நமக்கு ஒரு பதற்றத்தை தருகிறது.சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்காகவே  இந்த சட்டத்தை இன்றைய ஆளும் அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது சந்தேகமின்றி விளங்குகிறது.


கொரோனா கால அவலங்களை சொல்லும் கதைகள் மூன்று இத்தொகுப்பில் உள்ளது.கொரோனா தொற்றின் ஆரம்பகட்டத்தில்,அக்கிருமி இஸ்லாமியர்களாலேயே பரப்பப்படுகிறது என்ற பொய் பிரச்சாரத்தினால் அவர்களை பிரித்தாள நினைத்த நம் அரசாங்கத்தின் கேடுகெட்ட செயலால் அல்லல்பட்ட அச்சமூகத்தினரை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை 'கிருமி நாசினிகள்'.வேற்று மதத்தை சேர்ந்த இரு நண்பர்களுக்குள் இந்த பொய் பிரச்சாரம் பிரிவினை உண்டாக்கியதா? அல்லது இன்னும் நட்பை இறுக்கியதா?  என்பதை உணர்வு பொங்க எழுதியிருக்கிறார் ஆசிரியர்.


கொரோனா பொதுமுடக்கத்தால்,யாருமற்ற அனாதைகளாக திரிந்த பல பிச்சைக்காரர்களின் பசிக் கொடுமையை பேசும் 'கானல் நீர் உருவங்கள்', அதே போல் வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் அன்றாட கூலித் தொழிலாளர்களை மனதில் வைக்காமல் நம் அரசாங்கம் அறிவித்த பொதுமுடக்கம் அவர்களின் உயிரையும் மாய்க்கும் அளவுக்கு  கொண்டுபோன சம்பவங்களை மையப்படுத்தி எழுதியுள்ள 'அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி' கதை மனதை ரணப்படுத்தியது.பொதுமுடக்கக்காலத்தில் எந்த போக்குவரத்து வசதிகளின்றி அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக சென்றதில்,உணவுக்கும் வழியின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்ட அல்லலை தன் எழுத்தின் வழி நம் மனதில் வலியை ஏற்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.


சினிமா நடிகர்களை போல் வேடமிட்டு ஊர் திருவிழாக்களில் மேடையேறும் மேடை கலைஞர்களின் வாழ்க்கை பாட்டையும்,அவர்கள் குடும்ப பொருளாதார நிலையையும் விளக்கும் 'எம்ஜியாருக்கு வயசாகிடுச்சு', சாதி பாகுபாட்டையும்,ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைப் பேசுவதாக நினைத்து அவர்களை கீழ்த்தரமாக தன் எழுத்துக்களில் பதிவு செய்யும் ஒரு எழுத்தாளரை,அவர் எழுதிய புத்தகமே அவர் தலையில் கொட்டு வைப்பது போல் கேள்விகளை கேட்டு இறுதியில் அவர் கையாலேயே அவர் புத்தகத்தை எரிப்பதோடு நிறைவடையும் 'சாம்பல் பறவைகள்'. 


இப்படியாக ஒவ்வொரு கதையும் நம் உணர்வுநிலையை தொடுவது மிகையல்ல.கதையின் ஆழத்திற்குள் இழுத்துச் சென்று அதன் உயிரோட்டத்தை உணர வைக்கிறார் ஆசிரியர் கரீம்.11 கதைகளையும் தொடர்ந்து படிக்க முடியாத அளவு கதையின் கணம் நம்மை அழுத்துகிறது.கதைகள் எளிய நடையில் இருப்பதால் புதிய வாசகர்களுக்கும் எளிதாக வாசிக்கும் வண்ணம் இருப்பது சிறப்பு.நன்றி.

Comments