நூல் : சிறுகதை 3 காலாண்டிதழ் 


எப்பொழுதும் போல் சிறுகதை இதழ் என்று வரும் என்ற காத்திரத்தலோடு இருந்த எனக்கு,கடந்த வாரம் கிடைத்தது.கடந்த 2 இதழ்களை போலவே இந்த இதழின் அட்டைப் படமும் புதுமையாகவும்,

ரசிக்கத்தக்க வகையிலும் இருந்தது. அதேபோல் உள்ளடக்கத்திலும் பல புதிய பகுதிகள் இருந்தது ஸ்வாரஸ்யத்தைக் கூட்டியது.



எந்த புத்தகத்தை எடுத்தாலும் இறுதி பக்கத்தில் இருந்து வாசிக்கும் பழக்கத்தால் நேராக ர.அந்தோணி அஜய் 'கொலை செய்யும் தேவதை' வாசிக்க ஆரம்பித்தேன்.ஒரு பூனைக்கும்,விஜய்க்குமான பிணைப்பை சொல்லும் கதை.குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்ட தன் தாயின் பிம்பமாகவே அந்த பூனையை வளர்க்கும் விஜய்,அதன் இயல்பான வேட்டை தன்மையைகூட வெறுக்கிறான்.இறுதியில் அதன் இறப்பை,தன் அன்னையின் இறப்பை போன்று உணர்ந்து உடைந்து போகிறான்.இருந்தும் இந்த கதையின் சாராம்சம் எனக்கு சரியாக புரியவில்லை என்றே சொல்லலாம். 


சிறுகதை,நாவல் வாசிப்பில் சிலநேரம் ஏற்படும் மலைப்பு குறுங்கதைகளில் இருக்காது. அதனால் அவைகளை வாசிக்கும் ஆர்வம் எப்பொழுதும் இருக்கும்.இந்த இதழில் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் ஐந்து குறுங்கதைகளையும் ஒரே எடுப்பில் படித்து முடித்தேன்.ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு genreலும்,எளிய நடையிலும்  இருந்தது சிறப்பு.


ஒரு புதிய வாழ்க்கை அனுபவத்திற்காக மனைவியை கொலை செய்யும் அளவு செல்லும் கணவன்,மனைவின் கண்களில் இருக்கும் அன்பையும்,நம்பிக்கையும் பார்த்து கை விடும் கதை 'பகல் ஆசை', பேசும் வார்த்தைகளில் சிக்கனத்துடன் இருப்பவளை கிண்டல் செய்யும் சகபெண்களை கடந்து செல்பவள்,அவள் வாழ்க்கைக்கு தேவைபடும் இடத்தில் அதிகம் பேசுவாள் என உணர்த்தும் கதை 'ஒரு வார்த்தை ஒரு வாழ்க்கை',பக்கத்து வீடுகளில் வசிக்கும் இரு ஆண்களின் பகை,ஒருவன் இறந்தும் சமாதானம் ஆகாமல் போவதை,அவனுக்கு போடும் இறுதி மாலையில் இருந்து கணக்குபண்ணுவது சுவாரசியம்.இறப்பிற்கு முன் நம் பகைகெல்லாம் அர்த்தம் இல்லாமல் போவதை 'சமாதானம்'கதை உணர்த்துகிறது.


இந்த இதழின் புதிய பகுதியாக எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா மற்றும் ம.காமுத்துரை அவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தது.தான் கதை எழுத வந்த கதையை 'கதைகளின் கதை' என்ற தலைப்பில் ஆதவன் எழுதியிருந்தது வாசிக்க வெகு சுவாரஸ்யம்.சிறுவயதில் தாத்தா,பாட்டியிடம் கதை கேட்கவில்லை என்றாலும் அவர்களின் வாழ்க்கையே பல கதைகள் சொல்லியிருக்கும் என்பதை விளக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கை கதையும் நினைவுக்கு வருகிறது.நினைவில் வரும் கதையை யாரிடமாவது சொல்ல நினைத்து என் மகனிடம் சொல்லும் போது தான் கதைகளின் loop தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என உணர முடிந்தது.


'வார்த்தைகள் வந்து நிற்கின்றன' கட்டுரையில் தனது நேசத்திற்குரிய எழுத்தின் பரிணாமத்தினை சுவைபட சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் ம.காமுத்துரை அவர்கள்.தனது சிறுவயது வாசிப்பனுபவத்தில் இருந்து தொடங்கி,அவரது பேச்சில் உள்ள சிறுகுறைபாடால், மற்றவர்களிடம் பேசாமல் கடவுளுடனான நட்பில் இணைந்து காலை முதல் இரவு வரை அவருடன் பேசுவதாக கருதி தனியாக பேசிய காலத்தை அசைபோடுகிறார்.தனது பள்ளி ஆசிரியரின் வழிகாட்டலில் வகுப்பில் பாடநூலை சத்தமாக வாசிக்க பழகியதும்,அதுவே வேறு பிரச்சனையாக மாறியதால்,தொடர்ந்து தனிமை பேச்சே தொடர்ந்திருக்கிறது.ஆனால் அதுவும் அவரது எழுத்துலகத்திற்கு உதவியதாக சொல்லி இருக்கும் காரணம் அருமை.சில காலம் கவிஞராக இருந்து,சில தேடல்களுக்கு பின் எழுத்தாளர் பூமணி அவர்களின் எழுத்தில் நிலைகொண்டு,தனது பாணியில் அவரது முதல் கதை செம்மலரில் வெளியானது.


அடுத்து என்னை வெகுவாக ஈர்த்த பகுதி ஈழ எழுத்தாளர் ப.தெய்வீகன்  அவர்களின் நேர்காணல்.புலம்பெயர் இலக்கியத்தை பற்றிய ஒரு புரிதலை இந்த நேர்காணல்  தருகிறது.வாசிப்பின் முக்கியத்துவத்தையும்,ஈழ இலக்கியத்தில் முக்கிய பொறுப்புகளாக அவர் கருதும் சிலவற்றையும் எடுத்துரைத்துள்ளார்.ஈழத்து போர் பற்றி எழுதும் பொழுது  உண்மையுடனும்,பொறுப்புடனும் இருக்க வேண்டிய அவசியமும்,அந்த நிலத்தின் கதையை அங்கு வாழ்ந்தவர்களாலேயே எழுத முடியும் என்பதையும் குறிப்பிடுகிறார்.ஈழ வட்டார வழக்கு சொற்கள் இன்னும் ஈழ இலக்கியத்தில் செறிவாக இல்லை என்றும் கூறியுள்ளார்.


நித்தில் அவர்கள் எழுதிய 'வந்துட்டா' கொரோனா கால பொதுமுடக்க நெருக்கடியில் பெண்கள் பட்ட அல்லலையும்,எப்பொழுதும் மனைவியை சந்தேகத்துடன் பார்க்கும் கணவன் வேலைக்கு செல்லாமல்,கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருப்பதால் அவளுக்கு  ஏற்படும் மனஅழுத்தத்தையும் உரைக்கும் கதை.அன்றாடம் காலை,கணவன் அலுவலகமும்,பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற பின் பெண்களுக்கு ஒரு பிரத்யோக சுதந்திர வெளி கிடைத்ததை இந்த கொரோனா காலம்,அவர்களை சமையல்காட்டிலேயே பெண் 'பாத்திரங்களாக' ஆக்கியது.கதையில் வரும் நந்தினி கணவனின் சந்தேகம் காரணமாக பிறந்த வீட்டுக்கு வந்ததும்,அவளுடைய அம்மாவின் மனநிலை மகள் 'வந்துட்டா' என்ற நிம்மதியும்,ஏமாற்றமும் ஓரு சேர பிரதிபலிப்பதை காணமுடிகிறது.


வடநாட்டில் இருந்து வரும் குடும்பங்களின் வறுமை நிலையை எடுத்துச்சொல்லும் கதை எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'பேல் பூரி'. இக்கதையில் இரு குழந்தைகளின் பசி உணர்வையும்,மொழி தெரியாத இடத்தில் அச்சிறு பெண்ணின் சமாளிப்பும்   வாசிக்கையில் நம் மனம் பரிதவிக்கிறது.தன்மானமும்,சாமர்த்தியமும் கொண்ட குழந்தைகளாக இருப்பது ரசிக்க வைக்கிறது.


குடும்ப வன்முறையால்,ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு உயிர்கள் பலி ஆவதை சொல்லும் கதை வசந்ததீபன் அவர்கள் எழுதிய 'மழைவெயில்',வீட்டு விலங்குகள் தடை சட்டத்தை பகடி செய்து சுப்ரபாரதிமணியன் அவர்கள் எழுதிய 'தடை',தமிழ்நாடன் அவர்கள் மொழிபெயர்த்த ரிசிகேஷ் பண்டாவின் 'கன்னா அக்காவின் கொலுசு' அடுத்த வீட்டு அக்காக்களின் மீது ஈர்ப்பு ஏற்படும் தெரு சிறுவர்களின் மனஓட்டத்தை சொல்கிறது.இப்படியாக ஒவ்வொரு சிறுகதையும் நம் மனதை ஆக்கிரமிப்பது உண்மை.


இந்த இதழில் பெண் எழுத்தாளர்களின் சிறுகதை படைப்புகள் எதுவும் இல்லாதது ஒரு சிறு குறை. இனி வரும் இதழ்களில் பெண்களின் படைப்புகளுக்கும் பிரதான இடம் கிடைத்தால் சிறப்பு. நன்றி.



Comments