நூல் : கடசல்
ஆசிரியர் : ம.காமுத்துரை
விளிம்பு நிலை மக்களின் எளிய வாழ்க்கையை தன் நாவல்களின் மூலம் வெளிப்படுத்தும் எழுத்தாளர் ம.காமுத்துரை அவர்களின் சமீபத்திய நாவல் 'கடசல்'.
கடசல்.. இந்த வார்த்தையின் அர்த்தம் புரியவேண்டும் என்றால் நாம் லேத் பட்டறைக்குள் செல்ல வேண்டும்.எத்தனையோ சிறு தொழில்களை பற்றிய அறிமுகம் நமக்கு இருந்தாலும்,இந்த கதை களம் எனக்கு புதிதாக இருந்தது.கதை முழுதும் 'மகாராஜன் இன்ஜினீயரிங் லேத் அன் வெல்டிங் ஒர்க்ஸ்' என்ற லேத் பட்டறையை சுற்றி நடக்கிறது.பட்டறையின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து,அங்கு வாழும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை,பகை,காதல்,கொண்டாட்டம் என கதை நகர்கிறது.
கதையின் ஆரம்பமே பட்டறையின் டர்னர் கைலாசத்தின் மனைவி செண்பகத்தின் தற்கொலை முயற்சி காட்சி இடம்பெறுகிறது.பக்கத்து வீட்டுப் பெண்களின் உதவியால் அவள் மீண்டாலும்,நிஜத்தில் ஏற்படும் பதற்றத்தை அக்காட்சியின் வரிகள் மூலம் நமக்கும் கடத்துகிறார் ஆசிரியர்.தன்னை விட்டு பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் கணவன் கைலாசத்தின் நடத்தையில் மனமுடையும் செண்பகம்,2 பெண் குழந்தைகள் இருந்தும் இந்த விபரீத முடிவை எடுப்பவள்,கதையின் இறுதி வரை அது தீராத தலைவலியாக தொடர்கிறது.
கணவன் தொடர்ந்து வேறு பெண்களுடன் தொடர்பில் இருக்கும் கொடுமையை எந்த விதத்திலும் சரி பண்ணமுடியாமல்,மனதுக்குள் லேயே புழுங்கி தவிக்கும் செண்பகம்,அந்த பரிதவிப்பால் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் பொழுது அதை பேய் பிடித்து விட்டதாக கைலாசம் ஊரில் பரப்பி,செண்பகத்திற்கு பேயோட்டி அவனது தவறை மறைக்க நினைக்கும் ஆணாதிக்க மனப்பான்மை,தவறு செய்யும் பல ஆண்களின் மனப்போக்கை காட்டுகிறது.
பட்டறையில் எடுபிடி பையனாக அறிமுகமாகும் பாண்டி,கதையில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறான்.பள்ளிக்கு செல்லாமல் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் பாண்டியின் வாழ்க்கை பாட்டை வாசிக்கும் பொழுது குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்த அரசுக்கு ஒரு சபாஷ் போடலாம்.சிறு பிள்ளை என்றும் பாராமல் பாண்டியை எந்த நேரமும் திட்டியும்,அடித்தும் வேலை வாங்கும் கைலாசத்தின் செயல் எரிச்சலை ஏற்படுத்துகிறது.தனது தனிப்பட்ட பிரச்சனைகளில் ஏற்படும் கோபத்திற்கு வடிகாலாக பாண்டியை தண்டிப்பது சற்று மிகையாக இருந்தாலும் குழந்தை தொழிலர்களின் அன்றைய நிலையை எடுத்துக்காட்டுகிறது. தனது சாமர்த்தியத்தால், பட்டறையின் அத்தனை வேலைகளிலும் சூட்டிகையாக செய்யும் பாண்டி கதையின் இறுதி வரை டர்னராக முடியாமல் போவது வருந்த வைக்கும் இடம். ஐடிஐ படித்த கண்ணனிடம் இல்லாத கைத்திருத்தமான வேலை பாண்டியிடம் இருந்தும் அவனது எதிர்காலம் எடுபிடியாகவே இருப்பது சற்று நெருடல்.கைலாசத்திடம் மட்டுமல்லாது அவனின் மனைவி,மகள் என அனைவர்க்கும் சேவகம் பார்க்கும் வேலைக்காரனாக இருப்பதும்,இதனால் தனது தம்பியை பள்ளிக்கு கூட்டி கொண்டு போய் விடும் அவனது ஆசை நிராசையாய் போவது ஒரு சிறுவனின் மனக்குமுறலை உணரமுடிகிறது. கைலாசத்தின் மகள் சகுந்தலாவிடம் சிக்கி பள்ளிக்கூட வாசலில் பாண்டி படும் அல்லலை வாசிக்கும் பொழுது நமக்கே சகுந்தலாவின் முதுகில் இரண்டு சாத்து சாத்த தோன்றுகிறது.
செந்தில், கதையின் இன்னொரு குழந்தை தொழிலாளி.இன்று குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள்,ஊடகங்கள் மூலம் நமக்கு தெரிந்து விடும் நிலை வந்தாலும் பல மறைமுக குழந்தைகள் வன்கொடுமை நடந்து கொண்டுதான் உள்ளது.இன்று மட்டுமல்ல,50 வருடங்களுக்கு முன்பும் இக்கொடுமை நிகழ்ந்துள்ளது என்பதற்கு செந்தில் கதாபாத்திரம் சாட்சியாக உள்ளது.
பெருவணிகத்தின் முன் சிறுகுறு தொழில் எவ்வாறு நசுங்கியது என்பதை படிப்படியாக எடுத்து சொல்லியிருப்பது அருமை.முதலில் தொழில் நடக்கும் இடங்களுக்கே சென்று நேரடியாக தங்கள் பொருட்களை அறிமுகம் செய்து வியாபாரத்தை ஆரம்பித்து,பின் ஊரில் உள்ள ஒட்டுமொத்த வியாபாரிகளையும் ஒரே இடத்தில் கூட்டி பல அதிரடி பரிசுகள் கொடுத்து வளைத்து போடும் விதம்,வாசிக்கும் பொழுது தான் நாம் அதன் சூதை உணர முடிகிறது.இதில் முதலில் சிக்காத பட்டறை ஓனர் மகராசன்,கைலாசத்தின் பேச்சில் மயங்கி தன் சொந்த பட்டறையிலேயே 'கூலி வாங்கும் முதலாளியாகி' விடும் அவலம் அவருக்கே புரியாமல் போவது வேதனையின் உச்சம்.
கதை முழுதும் தேனி பகுதி மக்கள் பேசும் வட்டார வழக்கு மொழியிலேயே எழுதி இருப்பது,கதைக்கு உயிர்ப்பை கொடுக்கிறது.தேனி பகுதியில் நடக்கும் கதை என்பதால்,எழுத்தாளர் தேனியின் அத்தனை இடங்களுக்கும் நம் கை பிடித்து அழைத்து செல்கிறார்.
பெண்கள்,தங்களது மனப்புழுக்கங்களை பேச்சின் மூலம் ஆற்றும் இடமாக ஒவ்வொரு வீட்டு வாசலையும் சொல்லலாம்.ஏதோ ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து தங்கள் ஆற்றாமை,நகைச்சுவை உணர்வு,அந்தரங்க பேச்சுக்கள் என அவர்கள் பேசுவதை கதையோடு பிண்ணி ஆசிரியர் வெகு எதார்த்தமாக பதிவு செய்துள்ளார்.
கதையின் கடைசி 10 அத்தியாயங்களில் மட்டுமே கதையின் முக்கிய உள்ளடக்கம் இருந்ததால்,ஆரம்ப கதை நகர்வு சிறு சுணக்கத்தோடு இருந்தது.கண்ணன்,செந்தில், வசந்தா என சில தேவையில்லாத கதாபாத்திரங்கள் கதை நகர்வுக்கு உதவினாலும் கதையோடு ஒட்டவில்லை.பாலியல் தொழில் நடக்கும் தெருவில் நடக்கும் சில காட்சிகள், கண்ணன் தன் சகாக்களுடன் அடிக்கும் கிண்டல் அரட்டைகள் என கதையோட்டத்திற்கு தேவையற்ற சில காட்சிகளும்,கதாபாத்திரங்களின் பேச்சுகளும் உவப்பாக இல்லை.இடையில் வரும் கண்ணன் - ஈஸ்வரி காதல் அவ்வளவு ஈர்க்கவில்லை.
பட்டறையில் நடக்கும் வேலைகளை பற்றிய நுணுக்கங்கள் பல காட்சிகளில் ஆசிரியர் விவரித்து இருப்பது,பட்டறை தொழிலை பற்றிய ஒரு புரிதலை தருகிறது.இன்று நாம் காணும் எண்ணிலடங்கா 'ஹார்ட்வேர்' கடைகளின் இருப்பு,பல பட்டறைகளின் அழிவை சொல்கிறது.மனித உழைப்பின் சக்தியை மறந்து இயந்திரத்தின் ஆதிக்கத்தில் சிறுதொழில்கள் முடங்கியதின் வரலாற்றை பதிவு செய்ததில் 'கடசல்' நாவல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மிகையில்லை.நன்றி.
Comments
Post a Comment