நூல் : மழலை உதிர்த்த சொல்
ஆசிரியர் : கம்பம் மாயவன்
ஹைக்கூ கவிதைகள் எப்பொழுதும் என் மனதுக்கு நெருக்கமானதாக உணர்ந்திருக்கேன்.சிறுவயதில் கவிதைகள் வாசிக்க அவ்வளவு விருப்பம் இருக்காது.அதற்கு முக்கிய காரணமாக கவிதையின் நீளம்,சரியான புரிதலின்மை.வார இதழ்களில் கதைகள் வாசிப்பதில் உள்ள ஆர்வம் கவிதைகளுக்கு இருக்காது.ஆனால் ஹைக்கூ கவிதைகளின் வரவு,கவிதை வாசிப்பதில் இருந்த என் ஆர்வமின்மையை அப்படியே திருப்பிப் போட்டது.அதன்பின் எந்த பத்திரிகையை புரட்டினாலும் முதலில் கண் ஹைக்கூ கவிதையை தேடும்.
அதன் தொடர்ச்சியாக கம்பம் மாயவன் அவர்களின் 'மழலை உதிர்த்த சொல்' ஹைக்கூ கவிதை நூல் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.ரசனை,அன்பு,வறுமை,சாதி அரசியல் என அனைத்து தலைப்பையும் தொட்டு கவிதை வடித்திருப்பது சிறப்பு.மேலும் கவிதைகள் எழுதிய அன்றைய நாட்களில் நடந்த அரசியல் மாற்றங்கள்,ஊழல்,மக்களிடம் ஏவிவிட்ட அரசின் அராஜகங்கள் என அனைத்தையும் கவிதையில் சேர்த்திருப்பது அவரது சமூக பார்வையை காட்டுகிறது.
* உன்னிடம் கட்டுக்கட்டாய் பணம்
என்னிடம் கட்டுக்கட்டாய் புத்தகம்
இருவரும் எண்ணுகிறோம்.
சிலரிடம் இருக்கும் பண போதையை விஞ்சி விடுகிறது இந்த புத்தக போதை.புத்தகங்களை அடுக்கி எண்ணும் பொழுது ஏற்படும் பரவசம் எவ்வளவு பணத்தை எண்ணினாலும் கிடைக்காது என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும் அதிர்ஷ்டம்.
* திருடன் சிக்கினான்
காக்கிச் சட்டையிடம்
இனிதான் அதிகாரத் திருட்டு.
காக்கிச் சட்டை பேர்வழிகள், கைதிகளின் மேல் பிரயோகிக்கும் மனிதாபிமானமற்ற அராஜக செயல்கள் எந்த காலத்திலும் முடிவுறாது என்பதை இக்கவிதை வாசிக்கும் பொழுது தோன்றியது.இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையிலும் 'விசாரணை கைதியாக கொண்டு செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சாவு' என்ற செய்தி காதில் விழுவது அதை உறுதிப்படுத்துகிறது.
* நிலத்தைக் கொத்தினான் விவசாயி
விவசாயியை கொத்தினான் தரகன்
தரகனை கொத்தினான் முதலாளி
நிலத்தை கொத்தி அறுவடை செய்யும் விவசாயியின் உழைப்பை சுரண்ட தரகனை ஏவி விடும் முதலாளி வர்க்கம்,இறுதியில் அவனே அதில் குளிர்காய்பவனாக இருக்கிறான் என்பதை நயம்பட எடுத்துரைத்திருப்பது சிறப்பு.
* குண்டுவெடித்த இடம்
சிதறிக்கிடக்கும்
குரானின் அமைதி.
மத போதனை நூல்களால் மனிதத்தை மீட்டெடுக்க முடியாது என்பதை முகத்தில் அறையும்படி சொல்லியிருக்கும் கவிதை.
* கல்லூரிப் பேருந்து
போட்டி போடும் மாணவிகள்
ஜன்னலோர இருக்கை.
என் கல்லூரி கால நினைவை எழுப்பியது இக்கவிதை.பேருந்து ஜன்னலோர இருக்கைக்கு அடித்துக்கொள்ளும் நாங்கள் ஒவ்வொரு நிறுத்தத்திற்கு ஒரு ஆள் உட்கார வேண்டும் என்று கணக்கு வைத்து,அதிலும் சண்டையிட்டு கொள்வது பசுமையான நினைவுகள்.
இப்படியாக ஒவ்வொரு கவிதையும் நம் வாழ்க்கையோடு இணைத்து பார்க்க வைக்கிறது.சாதி கொடுமை,சாதிப் பிரிவினை பற்றிய கவிதைகள் அதிகமாக இருப்பதை காண முடிகிறது.அதோடு கவிஞருக்கு புத்தனை மிகவும் பிடிக்கும் என்பதை பல கவிதைகள் எடுத்துக்காட்டுகிறது.
சில முரண்பட்ட கவிதைகளும்,எனக்கு புரியாத சில கவிதைகளும் இடம்பெற்றிருக்கிறது.இரண்டு,மூன்று முறை படித்து புரிந்துகொள்ள முடிகின்ற கடினமான அர்த்தம் பொதிந்த கவிதைகளை உள்வாங்க சிரமமாக இருந்தது.
* விஷ மரம்
அமுதம் தரும்
நிழல்.
இக்கவிதையில் உள்ள 'விஷ மரம்' என்று எந்த மரத்தை ஆசிரியர் கூறுகிறார் எனப் புரியவில்லை.விஷ மரம் என்று எதும் இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.
நூலின் அட்டைபடத்தில் ஆரம்பிக்கும் அழகியல் பொதிந்த புகைப்படம்,புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தொடர்கிறது.கவிதைகளுக்கேற்ற புகைப்படம் என்று தேர்ந்தெடுத்து இருப்பது சிறப்பு.உண்மையில் ஒவ்வொரு ஹைக்கூ கவிதையும் அழகும்,இனிமையும் கொண்ட மழலை உதிர்த்த சொல்லாகவே உணரமுடிகிறது.நன்றி.
Comments
Post a Comment