நூல் : டுஜக்..டுஜக்..ஒரு அப்பாவின் டைரி
ஆசிரியர் : தேனி சுந்தர்
சமகால இலக்கிய உலகில், தங்கள் படைப்புகள் மூலம் சிறார் இலக்கியம் ஒரு தனி முத்திரையை பதித்து வருவது கண் கூடாக காணமுடிகிறது.பல சிறார் நூல்களின் அறிமுகம் நமக்கு கிடைப்பது மனதை குதூகலிக்கச் செய்கிறது.அதை வாசிக்கும் பொழுது நம் மனமும் குழந்தையாகும் விந்தை அலாதியானது.இது வரை வாசித்த சிறார் நூல்களில் பெரும்பாலும் புனைவு கதைகளே இடம்பெற்றிருக்கும்.குழந்தைகளின் மாய உலகத்துக்குள் சென்று வரும் அனுபவத்தை அந்நூல்கள் நமக்கு கொடுப்பது மிகையில்லை.ஆனாலும் பெரும்பாலான நூல்களில் உள்ள கதைகள் நன்னெறி பாடநூல் போன்று குழந்தைகளுக்கும்,பெற்றோருக்கும் அறிவுரை வழங்குவதில் அதனுடைய தனித்துவத்தை இழந்து விடுகிறது.அதில் இருந்து வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருக்கிறது 'டுஜக்.. டுஜக்..ஒரு அப்பாவின் டைரி ' நூல். தோழர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய இந்நூல் குழந்தைகளின் உலகிற்கு நம்மை கை பிடித்து அழைத்து செல்கிறது.
பள்ளிகள் மூடப்பட்ட கொரோனா பேரிடர் காலத்தில்,தன் வீட்டில் குழந்தைகளுடன் நடந்த உரையாடல்களை தொகுத்து நூலக வெளியிட்டிருக்கிறார் தோழர் தேனி சுந்தர்.கொரோனா நோய் பயத்தில் நாம் பீடித்திருந்த நேரத்தில்,குழந்தைகளின் மழலை உலகத்தில் தன்னை சங்கமித்துக் கொண்ட தோழர் தேனி சுந்தர் அவர்கள் அவை அனைத்தையும் நாட்குறிப்பாக எழுதி நம்மையும் குழந்தைகள் உலகத்துக்குள் தள்ளிவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
கட்டுரை நூல் என்ற வகைமையில் இருந்தாலும் ஒவ்வொரு நாட்குறிப்பும் 'ஹைக்கூ கவிதை' என்றே சொல்லலாம்.அனைத்து நாட்குறிப்பையும் ஒரே மூச்சில் வாசித்தால் அதன் உயிரோட்டம் குறைந்து விடும் என்ற முடிவை முதல் நாட்குறிப்பை வாசிக்கும்பொழுதே உணரமுடிகிறது.வாசித்து, ரசித்து, சிரித்து,இதே போன்ற நிகழ்வு நம் வீட்டில் நடந்ததா என யோசித்து... என ஒவ்வொரு நாட்குறிப்பும் ரசனையின் உச்சம்.ஒரு குழந்தையை ரசனையுடன் அள்ளி அனைத்து கொஞ்சுவது போல் இருந்தது இந்நூல்.
இந்நூலை வாசிக்கும் பொழுது என் குழந்தைகளின் பேச்சும், கேள்விகளும் நினைவில் வந்து போவதை தடுக்க முடியவில்லை.அதை விட என் தந்தையுடன் நான் கழித்த நேரங்கள் என் நினைவலையில் வந்து போவது பசுமை.சிறு வயதில் இரவு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு வான் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டும்,வானியல் பற்றிய பல கேள்விகளை கேட்டு அவரையே குழப்பிய நாட்களை நினைத்து சிரிக்க வைத்தது.
குழந்தைகளின் மழலை பேச்சை கேட்க நாம் காதுகளை மட்டும் திறந்து வைத்தால் போதாது.அவர்களுக்கு பதில் சொல்ல பல நூல்களின் பக்கங்களையும் திறந்து வைத்தால் தான் முடியும் என்ற நிலையை உணரமுடிகிறது. அவர்களின் அறிவு சார்ந்த கேள்விகளுக்கு 'வயதுக்கு மீறின பேச்சு, அதிகப்ரசங்கித்தனமான கேள்வி' என வாயை அடைத்து விடவே நினைக்கும் பெற்றோர், ஆசிரியர்களின் போக்கை குட்டு வைப்பது போல் இருந்தது இந்நூல்.
மழலையில் பேசுவதால் குழந்தைகளின் பேச்சும், அவர்களின் எண்ணமும் முதிர்ச்சியற்ற குழந்தைத்தனமாகவே இருக்கும் என்பதை சொல்ல முடியாது என்று இந்நூல் கோடிட்டு காட்டுகிறது.பெற்றோரின் அனைத்து செயல்களையும் உற்று நோக்கும் குழந்தைகள்,அப்படியே வெளிப்படுத்தவும் செய்கிறார்கள்.சமூக பொறுப்போடு ஒரு குழந்தையை வளர்க்க நினைக்கும் பெற்றோர், முதலில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தலை தருகிறது இந்நூல்.
குழந்தைகளை கைகட்டி,வாய் பொத்தி வகுப்புகளில் அமரவைக்கும் இன்றைய கல்விமுறையின் மத்தியில் அவர்களை இயல்பாக உரையாட விட்டு அவர்களின் படைப்பு திறனையும்,கேள்வி ஞானத்தையும் தழைத்தோங்க செய்யும் ஆசிரியர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது நம் மனம் நிறைகிறது.
அப்பாவின் டைரியாக இருந்தாலும்,நூல் முழுவதும் 'ப்பா... ப்பா.. ' என்றே பேச்சை துவங்கும் குழந்தைகள், 'ம்மா.. ம்மா.. 'என்று ஆரம்பிக்காதது கொஞ்சம் வருத்தம்.அம்மாவிற்கும்,குழந்தைக்கும் நடக்கும் உரையாடலையும் சேர்ந்து பதிவு செய்திருந்தால்,இன்னும் ஒரு வேறு பரிமாணம் கிடைத்திருக்கும்.குழந்தை மொழியிலேயே,எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இந்நூலை வடித்திருப்பது சிறப்பு.நன்றி.
Comments
Post a Comment