நூல் : மழை பிடித்தல் 

ஆசிரியர் : அனிதா 



மழை பிடித்தல்... யாருக்குத்தான் மழை பிடிக்காது..அதுவும் கவிதை மழை...அதுவும் என் தோழி எழுதிய கவிதைகள்.எதிர்பாராத தருணத்தில் தோழியிடம் இருந்து கிடைத்த  கவிதை பரிசு.


சிறுகதைகள்,நாவல்கள் வாசிப்பதில் உள்ள ஈடுபாடு கவிதை வாசிப்பதில் என்றும் வந்ததில்லை.காதல்,பிரிவு, தனிமை பற்றிய கவிதைகள் சில நேரங்களில் ஈர்க்கும்.சங்க கால கவிதைகள் போன்று இல்லாமல் எளிய வார்த்தைகளில் வெளிப்படும்  கவிதைகள் மனதில் ஆழமாக பதிய தவறுவதில்லை. அந்த வகையில் தோழி அனிதா அவர்கள் எழுதிய 'மழை பிடித்தல்' மிக சிறப்பு என்றே சொல்லலாம்.


எந்த ஒரு தனிப்பட்ட வகைமையிலும் சிக்காமல் சமூகம்,பெண்களின் வலி,காதல்,இழப்புகள்,வயோதிக வாழ்க்கை, குழந்தைகளின் குறும்பு,எளிய மனிதர்களின் அன்பு  என அனைத்து தலைப்புகளிலும் வெளிப்பட்டிருக்கிறது அவரது கவிதைகள்.நம் நினைவலைகளை கிளர்ந்தெழச் செய்யும் விதமாக கவிதைகள் அமைந்திருப்பது சிறப்பு.


மதுரையை வாழ்விடமாக கொண்ட நூலாசிரியர் அனிதா அவர்கள் கல்லூரியில் அறிவியல்துறையில் துணைப்பேராசிரியராக பணிபுரிகிறார்.'மழை பிடித்தல்' அவரது முதல் கவிதை தொகுப்பு நூலாகும்.


ஊர் கோயில் கதைகளை கூறும் அய்யனாரிடம் பிரியமானவர்கள் சாயலை காண முடிக்கின்ற பக்தியை கூறும் கவிதை பக்தியை கடந்து கடவுளிடத்தில் ஏற்பட்ட நட்பை எடுத்துக்காட்டுகிறது.கடவுளை நட்புடன் அணுகும்பொழுது அங்கு வேண்டுதலோ,கோரிக்கைக்களோ இல்லாது போகும் என்பதை 'அய்யனாரின் கதைகள்' கவிதை அழகியலோடு சொல்லு பொழுது கடவுள் மேல் உள்ள பயம் போய் அன்பை யாசிக்க மனம் அலைகிறது.


புத்தக வாசிப்பின் அவசியத்தை பேசும் கவிதை 'அவனின்றிப்போன அவன்'.புத்தகத்தை உடைமையாக தரித்தவனின் கூர் பார்வையும்,கேள்வி ஞானமும் எவ்வாறு மழுங்கடிக்கப்படுகிறது என்ற உண்மையை விளக்குகிறது இக்கவிதை.


விருப்பு /வெறுப்பு என இரண்டும் கலந்த  நிலையில் இருக்கும் இன்றைய  மனித மனங்கள்,காலத்துக்கேற்ற சுழற்சியில் சிக்குவதை 'சுழலும் மனம்' என்ற கவிதை வழி வெகு எதார்த்தமாக பதிவு செய்துள்ளார்.


எதிரில் தெரிந்தவர்கள் வந்தாலும் நலவிசாரிப்புகளுக்கு பயந்து,செல்போனில் முடங்கும் மனது,ஒரு நட்பை இழக்கிறது என்பதை 'விசாரிப்புகள்' கவிதை விவரிக்கும் பொழுது என் குற்றவுணர்ச்சி மேலோங்கியது நிதர்சனம்.


இன்று  ஆர்டரின் பேரில் எத்தனை விதமான உணவு பண்டங்களை ருசித்தாலும் அப்பாவுக்கும்,அண்ணனுக்கும் தெரியாமல் மறைத்து வைத்து சாப்பிடும் வெள்ளைக் கொழுக்கட்டைக்கு ஈடாகாது என்பதை அதே ரசனையுடன் கவிதையில் வெளிப்படுத்தி இருப்பது ரசனை.அதேபோல் 

சொந்த ஊர் சென்று திரும்பும் பொழுது,ஊர் நினைவுகள்,ஏக்கங்களுடன் கூடவே சிறுவயதில் சாப்பிட மிட்டாயும்,காராச்சேவும் ஏறிக்கொள்வதை குறிப்பிடும் கவிதை அம்மாவையும்,நம் சொந்த ஊரையும்  நினைவுபடுத்துகிறது.


பொதுயிடங்களையே  கழிப்பிடமாக்கிக்  கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில் அவசரத்திற்கு கழிவறையை தேடும் பெண்களின் வலி,மாதவிடாய் பிணி,அவளின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள், முதிர்கன்னியின் ஏக்கம், என பெண்ணின் அத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது இவரது  கவிதைகளில்.நம் வீட்டு பெண்ணாக இல்லாத பட்சத்தில்,மிக விருப்பமாய் கேட்கப்படும் மற்ற பெண்களின் கதைகளின் சுவாரஸ்யத்தில் மனிதத் தன்மையை விலைகொடுக்கும் மாந்தர்களின் முகமூடியை கிழிக்கிறது  'பெண்களின் கதை' கவிதை.


"மிகச்சில  நாட்கள் தூக்கத்தைவிட கனவுகள் பிடித்தமானதாய் அமைந்துவிடுவதே அந்நாளின் மிகப்பெரிய ஆறுதல்... "


☝️பெண்ணின் 'ஒரு நாள்' வாழ்வு இப்படியாக முடிகிறது எனும் பொழுது சுற்றியுள்ள மனிதர்களின் தேவை அவசியமா என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது...


இதுபோல் ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருப்பது,எந்த கவிதையையும் வாசிக்காமல் கடந்து போக விடாமல் நம்மை கட்டிப்போட வைக்கிறது. 


காதலின் பல பரிணாமங்களை 'லவ் பாப்கார்ன்' என்ற தலைப்பில் 'ஹைக்கூ' கவிதைகள் போன்று 2 அல்லது 3 வரிக்குள் எழுதியிருப்பது சுவாரஸ்யம்.


இனி வரும் படைப்புகளில் அரசியல்,சமூகம் சார்ந்த கவிதைகளில் கவனம் செலுத்தினால் மேலும் சிறப்படைவதில் ஐயமில்லை.நன்றி.

Comments