நூல் : ரயில் 

ஆசிரியர் : இந்திரஜித்



80000 தமிழர்களின் மரணத்திற்கு காரணமான சயாம் ரயில் பாதை பற்றிய வரலாற்றுப் புனைவு நாவல்  'ரயில்'.இரண்டாம் உலக போர் காலத்தில்,ஜப்பானிய படைகள் தங்கள் போர் யுக்திக்காக தாய்லாந்து - பர்மா இடையே ரயில் பாலம் கட்ட பல அப்பாவி மலாய் தமிழ் கூலிகளை கட்டாயப்படுத்தி இழுத்து வந்து அமைத்த சயாம் ரயில் பாதை பற்றிய  வரலாற்றை ஒரு புனைவின் வழி வெளிக்கொண்டு வந்துள்ளார் எழுத்தாளர் இந்திரஜித் அவர்கள்.இதுவரை அறியாத ஒரு வரலாற்று சம்பவத்தை இந்நூல் வழியாகவே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

எத்தனையோ மனவேதனை,சலிப்புகளுக்கிடையே மனிதன் வாழ்ந்தாலும் மழை,ஊஞ்சல்,யானை, விமானம்,ரயில் என ஒரு சில விஷயங்களில் மனித மனம் லயித்து போய்விடும்.அதிலும் வயது வித்தியாசமின்றி மனம் குதூகலிக்க செய்யும் ரயில் பயணங்கள் எப்பொழுதும் இனிமையான நினைவுகளை கொண்டவை.ஆனால் இந்நூலை வாசிக்கும் பொழுது,ரயில் பாலங்களை அமைக்க அடிமைகளை போல் நடத்தப்படும் சாமானிய மக்களின் வலியை உணரமுடிகிறது.

ஜப்பானிய சிப்பாய்களால் வெவ்வேறு இடங்களில் இருந்து இழுத்து வரப்பட்ட கூலிகள் முத்து,துரை,சாம்பா.கதையின் முக்கிய கதாபாத்திரங்களான இவர்களின் நட்பு கதையின் இறுதி வரை உயிர்ப்போடு இருந்தது நட்பின் ஆழத்தை உணர்த்துகிறது.எப்பொழுதும் தப்பிக்கும் மனநிலை கொண்ட முத்து,ஜப்பானிய படையை திருப்பி அடிக்க காத்திருக்கும் சாம்பா,பொறுமையாக வேலையை முடித்து எந்த வித சேதாரமுமின்றி தன் குடும்பத்துடன் இணைய நினைக்கும் துரை என மூவரும் வெவ்வேறு மனநிலை கொண்டவர்களாக இருந்தாலும்,ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கிடையே தங்களுக்குள் பேசி ஆற்றுப்படுத்திக் கொள்ள இவர்களுக்கு நட்பு போதுமானதாக இருக்கிறது.

ஜப்பானிய சிப்பாய்களின் அடக்குமுறை,கெட்டுப்போன உணவு, விஷ ஜந்துக்கள், மிருகங்களின் தாக்குதல், கடும் வேலை நெருக்கடி என சிக்கிக் கொள்ளும் மூவரின் ஒரே ஆசுவாசம் அவர்களின் கடந்த கால காதல் நினைவுகளே.தங்கள் இணையுடன் என்றோ ஒரு நாள் சேருவோம் என்ற ஏக்கத்தை மனதில் தக்கவைத்துக் கொண்டு அடிமை வேலை செய்யும் அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது.

போர் வேலைகள் முடிந்து ஊர் செல்ல ஆயத்தமாகும் கூலிகளின் மனம் சந்தோஷப்படாமல் ஒரு வித இறுக்கத்திற்கு ஆளாவது எதிர்பாராத உளவியல் திருப்பம்.ஊரில் விட்டு வந்த தங்கள் குடும்பத்தின் இன்றைய நிலை என்னவாக இருக்கும் என்ற பயம் அவர்களை இந்த பாழுங்கிணத்திலேயே வீழ்ந்து கிடக்க மனதை தயார்படுத்துகிறது.

நாடுகளுக்கிடையே நடக்கும் அரசியல் போரில் பல அப்பாவி மக்கள் தங்கள் குடும்பங்களை இழந்து,வாழ்க்கையே கேள்விக்குறியாகி போவதை கதையின் ஒவ்வொரு நகர்விலும் ஆசிரியர் புரிய வைக்கிறார்.மனோபலம் கொண்டவர்கள் மட்டுமே போருக்கு பின்பான வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும் என்பதும் புரிகிறது.

நேதாஜியின் மேல் கொண்ட பற்றின் காரணமாக,தங்களை அவர் விடுவிக்க வருவார் என பெரும் நம்பிக்கையுடன் அனுதினமும் காத்திருந்த கூலிகளுக்கு அது வெறும் கனவே என உணரும் பொழுது நமக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.இன்றைய இலங்கை தமிழர் இன அழிப்புக்கு காரணமான அரசியலே அன்றைய மலாய் தமிழர்களின் மரணங்களுக்கும் காரணம் என்று புரிகிறது.அதன் வரலாற்று பக்கங்களை மேலும் ஆழமாக படிக்க வேண்டும் என்றும்  தோன்றியது.

தனிமையில் இருக்கும் பொழுது மனதில் எழும் சொற்களின் ஆதிக்கம் ஒருவனை எவ்வாறு சோர்வடைய செய்கிறது என்பதை கதாபாத்திரங்கள் வழி நமக்கு உணர வைக்கிறார் ஆசிரியர்.

நம் வாழ்க்கை நெடுகிலும் நமக்கு அறிமுகமாகும் புதிய மனிதர்களை கொண்டே நம் வாழ்க்கை பாதை தீர்மானிக்கப்படுகிறது.அவர்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும் காதல்,நட்பு,ஆதரவு,சந்தோஷம்,துக்கம் என அனைத்தையும் சுலபமாக கடந்து செல்லும் எதார்த்தத்தை ஒவ்வொரு அத்தியாயமும் சொல்கிறது.கதையின் இறுதி வரை புது புது கதாபாத்திரங்கள் அறிமுகமாகி சிறு சோர்வை தருகிறது.அதோடு ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணத்தை கதையின் போக்கில் உணர வைக்காமல் தனியாக விவரிக்கும் பொழுது அது கதையின் நீளத்தை கூட்டவே உதவுகிறது.கதையின் ஆரம்பத்தில் இருந்த பதைபதைப்பு கொஞ்சம் கொஞ்சமாக தோய்ந்து கதையின் மைய புள்ளியை நீர்க்கச் செய்கிறது.இதில் கூலிகளை மனிதாபிமானத்துடன் நடத்தும் ஜப்பானிய சிப்பாயாக குரோஷி மட்டுமே சிறிது நேரம் வந்தாலும் நம் மனதில் இடம்பிடித்து விடுகிறான்.அதே போல் ஒவ்வொருவரின் காதல் அத்தியாயங்களும் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் சயாம் கொடூரங்களுக்கு மத்தியில் அவை அவசியமில்லாமல் போகிறது.

மிக எளிய மொழி நடையும், கதையின் விறுவிறுப்பான வேகமும் நூலை ஒரே மூச்சில் வாசிக்க முடிகிறது.எந்த வித குழப்பமும் இல்லாத ஒரே நேர்கோட்டுக் கதையாக இருப்பதும் சிறப்பு.நன்றி.

Comments