நூல் : முகாமி 

ஆசிரியர் : அய்.தமிழ்மணி 



கவிஞர்,நடிகர்,குறும்பட, ஆவணப்பட  இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் அய்.தமிழ்மணி அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு 'முகாமி'.தேனி மாவட்டம் கம்பத்தை வாழ்விடமாக கொண்ட இவரின் சிறுகதைகள் எளிய மக்களின் வாழ்வியலையும்,சமூகத்தின் நுட்பமான அரசியலையும்  பேசுகிறது.மனிதர்களின் அன்றாட சூழலில் நடக்கும் நிகழ்வுகளையே கதைகளாக இருப்பதால் ஒவ்வொரு கதையிலும் நமக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் என பொருத்திப் பார்க்க முடிகிறது.நிஜத்தில் நாம்  சுலபமாக கடந்து போகும் சம்பவங்களை,கதையை வாசிக்கும் பொழுது, உண்மையின் வீரியம் புரிகிறது.


'குடி குடியை கெடுக்கும்' என்ற வாக்கியத்திற்கு வழு சேர்க்கும்  விதமாக அமைந்துள்ள கதை 'கெடாவெட்டு'. அன்றாட கூலிக்கு வேலை செய்து விட்டு வீடு திரும்பும் பெண்களின் அரட்டையில் ஒரு முழுகதையின் சாரத்தையும் கொண்டுவந்திருப்பது அருமை.குடும்ப தலைவன் குடிக்கு அடிமையானால், அக்குடும்ப பொருளாதாரத்தை கவனிக்கும் பெண்களின் நிலை என்னவாகும் என்பதை பெண்கள் பார்வையிலேயே சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.குடிகார கணவனை திருத்த முடியாத சூழலில் பெண்களும் அதே குடியை கையிலெடுப்பது ஏற்க முடியவில்லை.சுமதியின் மனநிலையே பெரும்பாலான பெண்களின் மனநிலையாக இருக்கும்.


நிகழ்கால அரசியலும்,கந்துவட்டி அநியாயங்களும் எந்த அளவு சாமானிய மக்களை இழிவுபடுத்துகிறது என்பதை விளக்கும் கதை 'கருப்பையாவின் கந்துக் கணக்கு'.தன் ஊர் மக்களிடம் அநியாய கந்துவட்டி வாங்கி அதில் அரசியல் செய்யும் கருப்பையா,தன் சுயலாபத்திற்காக கட்சி தாவும் இன்றைய அரசியல்வாதிகளின் பிம்பமாக இருக்கிறான்.கொள்கைகளின் மேல் பற்று கொண்டு அரசியல் செய்த காலம் போய் பணக்கொள்ளையின் மேல் பற்று வைக்கும் காலமாக உள்ளதை வெகு எதார்த்தமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.  அரசியல்வாதிகளின் பினாமியாக செயல்படும் கருப்பையா போன்ற ஆட்கள் உள்ள வரை அரசியல் என்றும் சாக்கடையே.


சாதியின் சுவடு படியாமல் மகனை படிக்க வைத்து,வேலைக்கு அனுப்ப நினைக்கும் தந்தை மாயத்துரையின் கனவு நிறைவேறியதா என்பதே 'அதாக்கப்பட்டது' சிறுகதை.களவும்,காவலுமாக வாழ்ந்த சமூகத்தில் வளர்ந்தவனுக்கு,அந்த தொழிலின் நிழல் படியாத வேலையில் சேர போகும் சந்தோஷம் சில வினாடியில் கைவிட்டு போனதை அவனை போன்று நம்மாளும் ஏற்கமுடியவில்லை.சாதி பிரிவினையின் மேல் இருக்கும் இந்த சமூகத்தின் பார்வை எந்த காலத்திலும் மாறாது என்பதை உணர்த்தியது.


தனது சாராய பார் க்காக நில ஆக்கிரமிப்பு செய்து பிழைப்பு நடத்தும் ஒரு அயோக்கியனால்,தன் இடம், தாய், தந்தையை இழந்து குடிகாரனாக மாறும் ஒரு இஸ்லாமிய இளைஞனின் துயரக் கதை 'இடம்'.கதையை அன்றைய அரசியல் சூழலோடு பொருத்தி எழுதி இருப்பது சிறப்பு.


நூலின் தலைப்புச் சிறுகதை 'முகாமி' யை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய தந்தையின் நினைவு வராமல் இருக்காது.மத பிரிவினையின்றி வாழ்ந்த மனிதர்களுக்குள் மத துவேஷத்தை பரப்பும் இன்றைய அரசியல் சூழலை எடுத்துக் காட்டும் கதை 'ஹு இஸ் த ப்ளாக்ஷிப்' சிறுகதை.ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும் என்ற திமிரில் பல திருமணங்கள் முடித்தும்,வீட்டு பெண்களை சந்தேக கண்கொண்டு பார்க்கும் ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்கும் கதை 'யோக்கியதை'.


இப்படியாக அனைத்து கதைகளும்  ஒரு சமூக அக்கறையும்,   பொறுப்புணர்வுடனும் இருந்தது சிறப்பு.கதைகள் அனைத்தும் மிகவும் உயிரோட்டமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கதைகள் அனைத்தும் வட்டார வழக்கு மொழி நடையில் இருந்ததே.தேனி மாவட்ட வட்டார மொழி எழுத்து நடை ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நெருக்கமாக உணர வைக்கிறது.ஆனால் அதுவே தொடர்ந்து இருப்பதும் ஒரு வித சலிப்பை உண்டாக்கியது.ஆனால் எந்த கதையையும் படிக்காமல் கடந்து விட முடியாத அளவு மிகவும் சுவாரஸ்யமும்,நேர்த்தியுமாக அமைந்திருப்பது சிறப்பு. நன்றி.

Comments