நூல் : ஏதிலி 

ஆசிரியர் : அ.சி.விஜிதரன்


இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழக முகாம்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் ஈழ மக்களின் வாழ்க்கையை 14 கதைகளாக எழுதியிருக்கும் நாவல் 'ஏதிலி'.புனைவு கதைகளாக இருந்தால் வெறும் 'கதைகள்' என்ற சொல்லோடு முடித்து கொள்ளலாம்.ஆனால் இந்த 14 உணர்வுமிக்க வாழ்க்கைப் பாட்டை என்னவென்று சொல்வது.



ஈழத்தமிழர்கள் என்றாலே நம் மனதில் தோன்றுவது இலங்கை வாழ் தமிழர்கள் தான்.ஆனால் நம் நாட்டில் நம் மக்களோடு கலந்து,தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களை பற்றிய ப்ரக்ஞை சிறுதும் நம்மிடம் இல்லாதது ஆச்சரியம்.இந்நூலை வாசிக்கும் பொழுதுதான் எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் வரிசையில் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை புரிகிறது.இந்த உண்மை நம்மை ஒரு குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்துகிறது.


தங்கள் சொந்த நிலங்களில் இருந்து பிடுங்கப்பட்டு அந்நிய நிலத்தில் அனாதைகளை போல் வந்து இறங்கும் இவர்களை இந்திய அரசாங்கம் அரவணைத்துக் கொண்டாலும்,மாற்றான் குழந்தைகளின் நிலைதான் அவர்களுக்கு கிடைக்கிறது. உணவு,உறைவிடம் தவிர அவர்களின் எதிர்கால வாழ்க்கை கனவுகள், திட்டங்கள் என எந்த நிலைப்பாட்டிற்கும் யோசனை கூட செய்ய முடியாத அளவு நெருக்கடி நிறைந்த வாழ்வே அமைகிறது.ஒரு இனப்பிரச்சனையால் தங்கள் நாடு,மொழி,பண்பாடு என அனைத்தையும் இழந்து நிராதரவாக நிற்கும் இவர்களின் பெருவலியை இந்நாவல் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.


மொழி ஒன்றாக இருந்தாலும் நிலம் வேறாக இருப்பதால்,  அவர்களுக்கு உரிமை இல்லாத நிலத்தில் நிற்பதை போன்று ஒரு தாழ்வுமனப்பான்மை அவர்களுக்குள் நிலைத்து நிற்பதை யாராலும் சரி செய்து விடமுடியாது.


புலம்பெயர் மக்களின் மற்றொரு பெருவலி,உறவுகளையும், நண்பர்களையும் விட்டு வருவது.தொடர்பற்று போகும் இந்த உறவுகள்,சில விடாமுயற்சியால் உயிப்பிக்கவும் செய்யும் என்ற உண்மை இந்திரா - சுசி நட்பில் புரிகிறது.ஒரே கடிதத்தில் மொத்த மனத்தாங்களையும் விவரிக்கும் அவர்களின் உணர்வு,'இந்த கடிதத்தோடு தொடர்பற்று போய்விடுவோம்' என்ற  உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.ஒவ்வொரு கடிதத்திற்கும் உள்ள நாள் இடைவெளி அதை நமக்கும்  உணர்த்துகிறது.இந்த கடித பரிமாற்றத்தில் இலங்கை சூழல் மட்டுமல்ல,இந்திய முகாம் சூழலும் ஒரு பாதுகாப்பற்ற தன்மையே கொண்டுள்ளது என்ற உண்மை புரிகிறது.


அதே போல் தங்கை ஷாமினியின் வாழ்க்கையை கூறும் அவள் அண்ணன், அகதி வாழ்க்கையில் பெண்களின் சூழல் பல தவறான முடிவுகளை எடுக்க வைக்கும் என்று கூறும் போது உள்ள  நிதர்சனம் புரிகிறது.


மலர் அக்காவின் கதையோ நம்முள் மேலும் பதட்டத்தை உண்டாக்குகிறது.புலம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சம் அடையும் ஒரு பகுதி அகதிகள்,வேறு நாடுகளுக்கு வேலைக்காக சென்று அடிமைகளாக சிக்கிக் கொள்வோர் ஒரு பகுதி உள்ளனர்.அங்கு இருக்கும் கடுமையான சட்டங்களை பின்பற்றி,முதலாளிகள் கொடுக்கும் சொற்ப சம்பளத்தை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கும் இவர்களின் இறப்பு,கேட்க நாதியற்ற அனாதைகளின் இறப்பை விட மோசமாக இருப்பதை வாசிக்கும் பொழுது நெஞ்சம் கனக்கிறது.


ஒரே மொழி,ஒரே நாடு,ஒரே இனம் என்ற உணர்வில் வாழும் முகாம் மனிதர்களை பிளவுபட வைக்க பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் சாதி அரசியல் செய்யும் மனிதர்கள் முகாமில் இருப்பது வேதனை.வேறு நாட்டில் அடையாளமற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் சாதி,மத பிரிவினை இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். எவ்வளவு இக்கட்டிலும்,வாழ்வாதாரமே இல்லாமல் போனாலும் சாதியை பிடித்து தொங்கி கொண்டிருப்போர் அழிவதில்லை என்ற கூற்று புரிகிறது.


ஈழத்தமிழர்கள் மீது உள்ள அக்கறையை,தமிழக முகாம்களில் இருக்கும் ஈழ தமிழ் மக்களுக்கு ஏன் நம் அரசியல்வாதிகளால் காட்ட முடியவில்லை என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. ஈழம்,புலி,பிரபாகரன் என்றாலே நரம்பு புடைக்க பேசும் தமிழக அரசியல்வாதிகளுக்கு அதில் உள்ள அரசியலை வைத்து பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது.அதற்காக ஈழ தமிழ் இனத்தின் உணர்வுகளை மட்டுமின்று நம் உணர்வுகளையும் வெற்றுப்பேச்சுகளால் தூண்டிவிட்டு,தமிழர்களை  திசைதிருப்பும் வேலையை செய்வது வேதனையின் உச்சம்.


ஈழத்தமிழர்களின் உணர்வுகளை ஈழத்தமிழிலேயே நம்முள் கடத்தும்பொழுது அவர்களின் வலியை உணர முடிகிறது.ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை  கேள்வி கேட்பதை போன்று அமைந்திருக்கிறது இந்நாவல்.முகாமில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இருந்தாலும்,ஈழ இனபடுகொலையில் நடந்த உலக அரசியலையும் தோலுரித்து காட்டியுள்ளது இந்நாவல் என்பது மிகையில்லை.நன்றி.

Comments