கு.ஹேமலதா

தேனி.  


நூல் : பெண்களற்ற ஆண்கள் 

ஆசிரியர் : ஹருகி முரகாமி 

தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ் 


ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி அவர்களின் எட்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'பெண்களற்ற ஆண்கள்'.முகநூலில் வரும் நூல் விமர்சன பதிவுகளில் ஹருகி முரகாமி அவர்கள் எழுதிய நூல்களுக்கு வரும் விமர்சனங்களை வாசிக்கும் பொழுது,அவரது புத்தகத்தை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.1985ல்,தனது 29வது வயதில் எழுத ஆரம்பித்த இவரின்  படைப்புகள் உலகளாவிய கவனத்தை பெற்றதுடன்,50 க்கும் மேற்பட்ட மொழிகளிலும்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


ஆண்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களுடன் அவர்களுக்கு ஏற்படும்  சிநேகம்,காதல்,காமம்,தனிமை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் எட்டு கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு 'பெண்களற்ற ஆண்கள்'


யதார்த்த உலகில் பயணிக்க விரும்பும் ஓரு பெண்ணின் காதல் முரண்பாடுகளை பற்றிய கதை 'எங்கள் காலத்து வழக்காறு'.மாணவ பருவத்தில் இருந்தே காதலித்து வரும் இருவரின் காதல் பயணத்தில் காமத்தின் தேவை அவசியமா என்ற கேள்வியுடன் நகரும் கதை.திருமணத்திற்கு முன் தன் கன்னித்தன்மையை இழக்கக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருக்கும் காதலியிடம்,'உடலுறவே நம் காதலின் ஸ்திரத்திரத்தன்மையை உறுதிப்படுத்தும்' என்று வற்புறுத்தும் காதலனை,சமாளிக்க அவள் கொடுக்கும் சத்தியம் நமக்கு சிறிது அதிர்ச்சி அளிக்கிறது.ஆனால் அந்த சத்தியமே அவர்களை  நிஜ உலகில் பயணிக்க பேருதவியாக அமைந்தது எனலாம்.


பிறக்கும்பொழுதே இதயகோளாறுடன் பிறந்த தன் தங்கையின் திடீர் இறப்பை தாங்க முடியாத ஒரு அண்ணனின்  உளவியல் ரீதியான பரிதவிப்பை கூறும் கதை 'காற்றுக் குகை'.சவப்பெட்டியில் தங்கையின் உடலை கண்டதும்,'அவள் எப்படி காற்று இல்லாத அந்த சவப்பெட்டிக்குள் மூச்சு விடுவாள்,ஏன் அவளை வெட்டவெளியிலேயே வைத்திருக்கலாமே' என்ற அவனின் தவிப்பு நம்மை கண்கலங்க வைக்கிறது.அதே நினைவு பின்னாட்களில் அவன் எந்த குறுகிய,இருட்டு அறையில்  இருக்க முடியாத அளவு அவன் மனநலனை பாதிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.தன் தங்கையின் நினைவுகளை ஓவியமாக தீட்டி அவளை உயிர்ப்புடன் வைத்துக்கொள்கிறான்.சிறுவயதில் அவர்கள் இருவரும் சென்ற 'காற்றுக் குகை'யில் தன் தங்கையை தொலைத்தவன்,அவளுக்கு பிடித்த அந்த குகையிலேயே அவள் ஆன்மா இறந்திருக்க கூடும் என்ற நினைவோடு கதை நிறைவடைகிறது.



பல வருடங்களுக்கு முன் பிரிந்த தன் தோழியின் தற்கொலை செய்தியை அவள் கணவன் மூலம் அறியும் ஒரு மனிதனின் உணர்வை சொல்லும் கதை 'பெண்களற்ற ஆண்கள்'.சிறு வயதில் ஏற்பட்ட அவர்களின் சந்திப்பு,குறுகிய காலத்தில் நிகழ்ந்த அவர்களின் பிரிவு,அவனின் தேடல் என நீளும் கதை,அவளின் மரணத்தினால் அவனுக்கு ஏற்பட்ட தனிமையில் முடிகிறது.திடீரென ஏற்படும் பெண்களின் இழப்பையும்,அதனால் ஏற்படும் தனிமையையும் ஒரு ஆணின் மனநிலையில் உணர்த்தி இருக்கிறார் ஆசிரியர்.பெண்ணின் மீது கொண்ட அளவுகடந்த அன்பினாலே தான் இந்த நிலையை ஒரு ஆண் அடைகிறான் என்பதை தத்துவார்த்தமாக கூறியிருக்கிறார்.இரு மனிதர்களுக்கிடையே ஒரு அன்பு உறவு  தோன்றும்பொழுதே,அந்த உறவின் இழப்பை குறித்த சிந்தனையும் தோன்றிவிடுகிறது என்ற நிதர்சனத்தை உணர்த்தும் கதை.


யதார்த்த உலகத்தில் நாம் எதிர்கொள்ளும் பல சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து  நம்மை காப்பாற்றிக்கொள்ள நம் நிகழ்காலத்தில் இருந்து தொலைய நினைக்கின்றோம்.புதிய தேடல்களை நோக்கி போகும் நம் மனது அதில் தொலைவதற்காகவே சிந்திக்க துவங்குகிறோம்.அப்படி ஒரு சிந்திப்பில் தொலைந்து போகும் 'குருமிஸாவா' என்ற மனிதனைப் பற்றிய  கதை 'நான் அதை எங்கே காணக்கூடும்'.அப்படி தொலைந்த குருமிஸாவாவை கண்டுபிடிக்க அவனது மனைவி நியமிக்கும் ஒரு துப்பறிவாளனின் பார்வையில் கதை நகர்கிறது.நாம் தூங்கப்போகும் முன்பு,பயணங்களில்,ஏன்.. வெட்டவெளியை பார்த்து சும்மா உட்கார்ந்திருக்கும்போழுதும்,நம் நினைவுகளில் இருந்து நமக்கு பிடித்தவற்றை மட்டும் எடுத்து சிந்தித்து கொண்டிருப்போம்.அந்த சிந்திப்பில் நாம் தொலையவே ஆசைப்படுவோம்.அதே சிந்திப்பில் நாம் இல்லாமலும் போவோம்.அப்படி இல்லாமல் போவதற்காகவே சிந்திக்கின்றோம்.அதில் லயித்து வேறு உலகம் செல்லும் மனிதர்களை மையமாக வைத்து குருமிஸாவாவை படைத்திருக்கிறார் ஆசிரியர்.சிந்திப்பில் தொலைந்த மனிதனை பல விசாரணைகளுக்கு அப்புறம் புரிந்துகொண்ட கதைசொல்லியைப் போல் எனக்கும் கதையை மூன்று முறை வாசித்த பின்பே புரிந்து கொள்ள முடிந்தது.இந்த புரிதலும் சரியா என்ற கேள்வி,  மனதில் குடைவதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.


கதைகள் அனைத்தும் ஜப்பான் தேசத்தில் நடப்பவைகளாக இருப்பதால்,குறிப்பிட்டிருக்கும் இடங்கள்,பெயர்கள்,அந்நாட்டின் பழக்கவழக்கங்கள் என அனைத்தும் நமக்கு அந்நியமாக உணர்ந்தாலும் கதையோட்டத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக செல்கிறது.


பிரிவையும், தனிமையையும் பிரதானமாக கொண்டு செல்லும் கதைகளினால் கதை மாந்தர்களின் வலியை நம்மாலும் உணரமுடிகிறது.வெவ்வேறு தேசங்களில் வாழும் மக்கள் என்றாலும் மனதில் ஏற்படும் உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவையே.


சில கதைகள் நேர்கோட்டு கதையாக வாசித்தவுடன் புரிந்து கொள்ளும் அளவு இருந்தது.சில கதைகள் ஆரம்பிக்கும் பொழுது வெகு எதார்த்தமாக இருந்தாலும், தொடர்ந்து வாசிக்கும் பொழுது பல தத்துவங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.அதில் சிக்கிக் கொள்வது போல் இருந்தாலும் இரண்டு முறை வாசித்து புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால் ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும் கதையின் சாரம் புதிது புதிதாக தோன்றுகிறது.ஆசிரியரின் பார்வை வேறாக இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.நமக்கும் கதையின் புதிய கோணங்கள் புலப்படுகிறது.கதைகளை புரிந்துகொள்ள விடாப்பிடியாக மறுமுறை வாசிக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர்.ஒரு கதையில் இரண்டு பக்கம் புரியவில்லை என்றால் 'அடுத்த கதைக்கு' தவ்வ நினைக்கும் நம் மனம் இந்த தொகுப்பில் அவ்வாறு போகாதது ஆச்சரியம்.இது ஒரு புது அனுபவம் என்றே கூறலாம்.


வேறொரு நாட்டின் மொழி,கவிதைகள்,பண்பாடு,மரபு சார்ந்த விஷயங்கள்,அந்நாட்டு இசை என அனைத்தையும் உள்வாங்கி மொழிபெயர்ப்பது சாதாரண விஷயம் இல்லை.நூல் ஆசிரியரின் உளவியல் கருத்துக்களை சிறிதும் அர்த்தம் மாறாமல் வாசகர்களுக்கு கடத்திய  மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.நன்றி.

Comments