நூல் : நசீபு 

ஆசிரியர் : மு.அராபத் உமர் 

விலை : Rs.120

பக்கங்கள் : 103

பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்


தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த எழுத்தாளர் மு.அராபத் உமர் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு 'நசீபு'.ஏழு சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் எளிய இஸ்லாமிய குடும்ப சம்பவங்களை புனைவு கதைகளாக வெளிப்படுத்தியுள்ளார்.வாசிப்பின் வழி எழுத்துலகத்திற்கு பிரவேசித்திருக்கும் அவரின் எழுத்தில் இருக்கும் முதிர்ச்சி கதைகளின் உள்ளடக்கத்தை வலிமையாக்குகிறது.



திருமணத்திற்கு சொன்னபடி வரதட்சணை கொடுக்காமல் விட்ட தந்தையின் இறுதி சடங்கிற்கு அனுமதி தராத கணவன் வீட்டாரின் அராஜகத்தை சொல்லு கதை 'ஷஜ்தா'.சொந்த அண்ணன் மகளை மருமகளாகக்  கொண்டாலும்,அங்கு பேசுவது பணமும், நகையும் மட்டுமே என்று இருக்கும் பொழுது அன்பிற்கு ஏது இடம்? மனைவி,குழந்தைகள் என்று ஆனபின்பும் அம்மா,அக்காவின் பேச்சுக்கு இடம் கொடுக்கும் நஜீம்,ஆணாதிக்க  வர்க்கத்துக்கே ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.இதில் எந்த தவறுமே செய்யாத பானுவிற்கு மட்டும் ஏன் இந்த தண்டனை? 'தந்தையை பார்க்க சென்றால் உறவை அத்துவிட நினைக்கும் கணவன் ஒரு பக்கம்,துணிந்து சென்றால் அண்ணன்களுக்கு பாரமாய் போய்விடுவோமோ என்ற தவிப்பு மறுபக்கம். இதில் எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் கடவுளிடம் சரணாகதி அடையும் நிலையை  எட்டுகிறாள்.பணத்திற்காக திருமணம் செய்யும் நஜீம்கள் இருக்கும் வரை கண்ணீரை சுமந்து கொண்டு வாழும் பானுக்களும் இருப்பார்கள் என்ற  நிதர்சனத்தை உணர்த்தும் கதை.


கொரோனா பொதுமுடக்கக் காலத்தில்,ஒரு குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கலை சொல்லும் கதை 'ஈமான்'.நன்றாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் திடீர் பொருளாதார சிக்கல் ஏற்படும் பொழுது உருவாகும் மனஉளைச்சல் மீள முடியாதது.அதில் இருந்து மீண்டு வர கணவனும் மனைவியும் கைகோர்த்து சமாளித்தாலும்,சகமனிதர்களின் உதவியும்,அன்பும் கிடைக்காமல் எதுவும் கிட்டாது என்பதை விளக்கும் கதை.'அல்லாவின் கிருபையால் நிலைமை சரியாகிவிடும்' என்ற எண்ணத்தில் அகமதுவும், பர்வீனும் இருந்தாலும் சுற்றத்தாரின் அன்பும் அரவணைப்பும் கைதூக்கி விடுவது போல் வேறு எதுவும் இல்லை எனலாம்.வறுமையின் வலியோடு கதையின் ஆரம்பம் இருந்தாலும்,பின் அதன் போக்கு நேர்மறை சூழலோடு பயணித்து முடிவும் சுபமாக இருப்பது வாசிப்பவர் மனதிலும் ஒரு ஆசுவாசத்தை தருகிறது.


உறவினர்களுக்கு  மத்தியில் அந்தஸ்துடன் வாழ,தன் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பு தனக்குரியதாக அர்த்தப்படுத்திக்கொண்டு ஓடும் இன்றைய பல ஆண்கள்,அன்பையும்,பாசத்தையும் வெளிப்படுத்த தவறி விடுகிறார்கள்.இழப்பின் பொழுது அந்த வலியை உணர்ந்து என்ன பயன்? என்ற கேள்வியை எழுப்புகிறது 'வெம்மை' சிறுகதை.சிறுவயதில் அப்பாவின் கைபிடித்து நடக்க ஆசைபடும் மகன் ரியாஸ்,வயதான காலத்தில் அதே தந்தையிடம்,தன்னுடைய பணிச்சூழல் காரணமாக  முகம் கொடுத்துக்கூட பேச முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறான்.தந்தையின் இறப்பின் பொழுது கூட அவர் அருகில் இல்லாமல் போகும் நிலை வரும்பொழுது தான் அவன் தன் தவறை உணர்கிறான்.தந்தை,மகன் பிணைப்பை சொல்லும் கதையாக இருந்தாலும்,மருமகள் பஹிமாவுக்கும்,மாமனாருக்கும் உள்ள பாசப்பிணைப்பே கதையில் மேலோங்கி இருக்கிறது.தன் தந்தையை போன்று பாவிக்கும் அவரின் இழப்பை பஹிமாவே அதிகம் தாங்கினாள் எனலாம்.ஒப்பாரி,ஐஸ் box,உறவுகளின் வம்பு பேச்சுக்கள்,சடங்குகள் என இறந்த வீட்டில் ஒரு நாள் இருந்த அனுபவத்தை தருகிறது இக்கதை.


நூலின் தலைப்பை கொண்ட 'நசீபு' சிறுகதை தொகுப்பின் முத்திரை கதையாக சொல்லலாம்.தலைமுறை தவறாமல் குடும்ப ஆண்களின் கைகளில் சிக்கி அடிமை வாழ்க்கை வாழும் பெண்களின் கதைகளை சொல்லும் கதை.கதை சொல்லியாக பூட்டி சுபைதா,தன் அனுபவங்களை தன் பேரனின் மனைவி செரினாவிடம் சொல்லுவதாக கதை செல்கிறது.


"நேரத்துக்கு சோறு, வருசத்துக்கு ரெண்டு சேல,நல்லாத்தான் பார்த்துக்கிட்டார்"


என்று பூட்டி உணர்ச்சியே இல்லாமல் சொல்லும் இடத்தில்,இன்றைய காலத்திலும் பல பெண்களின் நிலை இதுவே என்ற உண்மை சுடுகிறது.தந்தையிடமும் கணவரிடமும் உரிமையெடுத்து பேசமுடியாத பெண்கள் 'எல்லாம் நசீபுவே' (இறைவன் விதிச்சது)என்று கடந்து செல்கின்றனர்.இதில் சுபைதா பூட்டிக்கு நடந்த ஒரு நிகழ்வு வாசிக்கும் பொழுதே நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.இறக்கும் தருவாயில் இருக்கும் கணவன் மனநிம்மதி அடைய  'நான் என்ன செஞ்சிருந்தாலும் மன்னிச்சுருங்க' என மன்னிப்பு கேட்கும் இடம்.செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்பது என்பது அவள் மனதில் எவ்வளவு மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதை பெண்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.தலைமுறையாக 'என் கணவன்,மகனை மாற்றி விடுவேன்' என்ற மன உறுதியோடு பெண்கள் கிளம்பினாலும் அது வெறும் 'விழலுக்கு இறைத்த நீராகவே' போகும் என்ற உண்மை உரைக்கிறது.இறுதியில் பேரனிடமும் 'உன் வேலையை மட்டும் பாரு' என்ற சொல்லாடலை கேட்டு அவள் விடும் கண்ணீர் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.


இப்படியாக அனைத்து கதைகளுமே இஸ்லாமிய பின்புலத்தை கொண்டு எழுதி இருக்கிறார் ஆசிரியர். இஸ்லாமிய குடும்பங்களில் இருக்கும் பழக்கவழக்கங்கள்,கட்டுப்பாடுகள்,சம்பிரதாயங்கள் என அனைத்தையும் தொட்டு அதில் கேள்விகளையும் எழுப்பியுள்ளார் தோழர் அராபத்.ஆண்களுக்கு இல்லாத பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியை 'இத்தா' கதையில் வரும் குழந்தை  ஜெனியின், 


'இந்த சட்டம்  எல்லாம் எழுதினது ஆம்பளைங்களாம்மா..? ' 


என்ற புரிதலில் ஒளிந்திருக்கிறது.


நம் வீடுகளில் பல கதைகள் உண்டு.அக்கதைகளில் வரும் அப்பா, அம்மா, தம்பி, பாட்டி, அத்தை போன்ற குடும்ப உறுப்பினர் தவிர்த்து பக்கத்து வீட்டு அக்கா,எதிர் வீட்டு மாமா,முறுக்கு விற்கும் பாட்டி என்ற கதாபாத்திரங்களும் இடம்பெறும்.இவர்களை தவிர்த்து நம்மால் என்றுமே நம் கதையை சொல்லமுடியாது.நம் வாழ்வோடு இவர்களும் பிண்ணி பிணைந்தே வருகின்றனர்.எந்த கஷ்ட,சந்தோஷ சூழலிலும் அவர்களின் துணை அலாதியானது.அப்படிபட்ட மனிதர்களை கதாபாத்திரங்களாக கதைகளில் உலவ விட்டிருப்பது சிறப்பு.ராணி அக்கா,கோழிக்கடை காசிம்,குழலாப்பம் போடும் பக்கத்து வீட்டு அக்கா,பேகம்,பாத்திமா அக்கா என நீள்கிறது பட்டியல்.


இது ஆசிரியரின் முதல் சிறுகதை தொகுப்பு என்று  நம்பமுடியாத அளவு அவர் எழுத்தின் ஆழம் வியப்பளிக்கிறது.கம்பம் பகுதி வட்டார வழக்கும்,இஸ்லாமிய சமூகத்தின் பேச்சு புழக்கத்தையும் கலந்து வெகு யதார்த்தமாக அமைந்திருக்கிறது தொகுப்பின் மொழிநடை.பெரும்பாலான கதைகள் பெண்களின் மனவலியை சொல்லி இருந்தாலும்,அதில்  மிகைத்தன்மை இல்லாத,யதார்த்த நிலையை புரிய வைக்கும் எத்தனிப்பு மட்டுமே இருந்தது சிறப்பு.அவர் எழுத்தின் மூலம் சமூகத்திற்கு வைக்கும் பல கேள்விகள் ஒரு மாற்றத்திற்கான  விதையாக இருக்கும்  என்ற நம்பிக்கை கொடுக்கிறது.இது மென்மேலும் தொடர வாழ்த்துகள்.நன்றி.

Comments