நூல்-முற்போக்கு எழுத்தின் தடங்கள் பாகம் :1

தொகுப்பு-அ.உமர் பாரூக்

                   அ.இலட்சுமிகாந்தன்

பதிப்பகம்-பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் - 254

விலை.        - Rs.250/-



முற்போக்கு எழுத்தின் தடங்கள்.. 47 ஆண்டுகளைக் கடந்து ஓரு சமூக இயக்கமாக பயணித்து வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து தங்கள் முற்போக்கு எழுத்துகளால் தடம் பதித்த,பதித்து வரும்  படைப்பாளிகளை பற்றிய தொகுப்பு நூல்.தமுஎகசவின்  மாநிலக்குழுவில் உறுப்பினர் பொறுப்பில் இருந்த 54 படைப்பாளிகளை பற்றிய தொகுப்பை தமுஎகச அறம் கிளை உறுப்பினர்களால் தொகுக்கப்பட்டு 'தமிழ் ரைட்டர்ஸ்' என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.அதை நூல் வடிவில் தோழர் அ.இலட்சுமிகாந்தன் அவர்களும்,தோழர் அ.உமர் பாரூக் அவர்களும் வெளியிட்டுள்ளனர்.தமுஎகசவின் 15 வது மாநில மாநாட்டில் இந்நூலை வெளியிட்டது மேலும் இந்நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது.


எழுத்தாளர்களையும்,கலைஞர் களையும் அவர்களின் படைப்புகளின் வழியாகவே நாம் அறிந்திருப்போம்.பொதுவாக அவர்களின் படைப்புகளை அறிந்த நாம் அதை எழுதிய படைப்பாளிகளை பற்றிய சிறு அறிமுகம் கூட தெரியாது.இணையதளங்கள் வழி அவர்களை பற்றிய குறிப்புகள் இருந்தாலும், ஒரு முழுமையான அறிமுக விவரங்கள் இல்லாதது சற்று நெருடல்.அதை போக்கும் விதம் தமுஎகச அறம் குழுவின் உறுப்பினர்களை கொண்டு எழுத்தாளர்களின் வாழ்க்கை குறிப்பை தொகுக்க தோழர் அ.உமர் பாரூக் அவர்கள் முன்னெடுப்பில்,பெருமுயற்சியில் உருவான நூல் இது.நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமுஎகச அறம் கிளை உறுப்பினர்களும் இதற்காக துரிதசெயல் வடிவம் கொடுத்து தங்களது பங்களிப்பை அளித்தது அலாதியானது.பெரும் எழுத்தாளர்களின் வாழ்க்கை குறிப்பை,தமுஎகச அறம் குழுவின் ஆரம்பகட்ட எழுத்தாளர்களை வைத்து எழுதியது சிறப்பான முன்னெடுப்பு.


எழுத்துலக படைப்பாளிகளின்  பிறப்பு,குடும்பம்,எழுத்துலக அனுபவம்,வாசிப்பனுபவம், அவர்கள் பங்கேற்ற போராட்டங்கள்,சிறை அனுபவங்கள்,வெளியிட்ட நூல்கள்,பெற்ற விருதுகள் என அவர்கள் கடந்து வந்த பாதையின் மொத்த உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது இந்நூல்.


பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுவயதில் இருந்தே இடதுசாரி சிந்தனை கொண்டவர்களாகவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாகவும்

இருந்துள்ளனர்.அதுவே அவர்களின் எழுத்திலும் பிரதிபலிக்கச்செய்கிறது. சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் இவர்களின் எழுத்திற்கு அடித்தளமாக அவர்களின் வாசிப்பு ஆர்வமே காரணம் என்று கூறுகிறார்கள். பள்ளிக்காலம் தொடங்கியதில் இருந்தே வாசிப்பின் மேல் கொண்ட ஈர்ப்பு,அவர்களை நூலகங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளது.அதேபோல் அவர்களின் பள்ளி ஆசிரியர்களின் தோழமையுடன் கூடிய வழிகாட்டுதலும் பலருடைய எழுத்திற்கு உத்வேகத்தை தந்துள்ளது.அவர்களின் தொடர் எழுத்தார்வம் பல நூல்களை நமக்கும்,விருதுகளை அவர்களுக்கும் பெற்றுத் தந்துள்ளது.


பல எழுத்தாளர்கள் எழுத்துலகில் மட்டுமல்லாது கவிஞர்,பேச்சாளர்,வீதி நாடக கலைஞர்,திரைப்பட இயக்குனர்,நடிகர்,வரலாற்று ஆய்வாளர்கள் என பல தளங்களில் தங்கள் ஆளுமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சமூக போராளிகளாக களப்பணிகளிலும் அவர்களின் பங்களிப்பு அலாதியானது எனலாம்.பல மூத்த எழுத்தாளர்கள் சமூகநலனுக்காக சிறை சென்றுள்ளனர் என்ற செய்தியை அறியும் பொழுது,எழுத்துலகின் வீரியம் புரிகிறது.எழுத்து,ஒரு சமூக பொறுப்பை தரவல்லது என்பதை ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு புரிய வைக்கிறது.பல விருதுகள்,பரிசுகள் பெற்றிருந்தாலும்,அவற்றின் மீது வைக்கும் மதிப்பை விட எழுத்தின் மீது வைக்கும் நம்பிக்கை அளப்பரியது என்பதை ஒவ்வொரு கட்டுரையும் உணர்த்த தவறவில்லை.


ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்திலும் அக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் எழுத்தாளுமையின் 'மேற்கோள் வரிகள்' இடம்பெற்றிருப்பது சிறப்பு.அதை மட்டுமே தனியாக வசிக்கும் பொழுது வெகு சுவாரஸ்யமாக இருந்தது.புத்தக வாசிப்பின் முக்கியத்துவம்,கருத்து சுதந்திரம்,சமூக பங்களிப்பு,சமூக மாற்றம்,சாதி ஒடுக்குமுறை,கல்வி என பலதரப்பட்ட விஷயங்களை கொண்டுள்ளது அந்த மேற்கோள்கள்.


இந்நூலில் நான் எழுதிய ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஒரு முக்கிய நூலில் நமது பங்களிப்பும் இருக்கிறது என்பது பெருமை கொள்ளச்செய்கிறது.அதற்கு காரணமான தோழர் அ.உமர் பாரூக் அவர்களுக்கு மிக்க நன்றி. 


தமுஎகச வின் வரலாற்றை 'காலத்தின் குரல்' நமக்கு உணர்த்தியது என்றால் 'முற்போக்கு எழுத்தின் தடங்கள்' தமுஎகச எழுத்தாளர்களின் அறிமுகத்தை தந்திருக்கிறது.


வருங்காலத்தில் படைப்புலகில் காலடி தடம் பதிக்க வரும் புதிய எழுத்தாளர்களுக்கு இந்த 'முற்போக்கு எழுத்தின் தடங்கள்' நூல்,எழுத்தின் மீது உள்ள பொறுப்புணர்வை பாடமாக கற்பிக்கும் என்பது மிகையல்ல.நன்றி.

Comments