நூல் : ஜிந்தாபாத் ஜிந்தாபாத்

ஆசிரியர் : .தமிழ்ச்செல்வன்

பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்

விலை : Rs.150

 


'ஜிந்தாபாத் ஜிந்தாபாத்' கோஷங்களுக்கிடையே நடக்கும் தொழிற்சங்க போராட்டங்களின் வரலாறை சொல்லும் நூல்.தான் பணிபுரிந்த அஞ்சலக துறையில் உள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளையும்,அதில் உள்ள அரசியல் அனுபவங்களையும்   'தீம்தரிகிட' இதழில் கட்டுரைத் தொடராக எழுதினார் தோழர் .தமிழ்ச்செல்வன் அவர்கள். அதை 32 அத்தியாயங்களை கொண்ட தொகுப்பு நூலாக  பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

 

'கொடி பிடிக்கவும்,கோஷம் போடவும் தான் இவர்களுக்கு வேலை'என போராட்டங்களை ஒரு எள்ளலோடு கடந்து போகும் பொது சமூகம்,அதன் பின்  உள்ள முதலாளித்துவம்,   தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுதல் போன்றவற்றை கவனிப்பதில்லை.மக்களுக்காக தான் போராடுகிறார்கள் என்ற புரிதல் கூட இல்லாமல் அதை கொச்சைப்படுத்தி,அவர்களை தனித்து விடப்படுகிறார்கள்.அதையும் மீறி அதிகார வர்க்கத்திடமும்,ஆளும் அரசாங்கத்திடமும் போராடி பெற்றுத்தந்த பல விஷயங்களை நாம் சும்மா உட்கார்ந்து கொண்டு பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது வெட்கக்கேடு.ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு போராட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறது.

 

தொழிற்சங்க நடவடிக்கைகளோடு தன் வாழ்க்கை சுயசரிதையும் சேர்ந்து எழுதியுள்ளார் ஆசிரியர்.போராட்டம்,கோஷம், வேலைநிறுத்தம் என ஒரு வறண்ட உள்ளடக்கத்தை எதிர்பார்த்து வாசிக்க ஆரம்பித்த எனக்கு ஆசிரியரின் எழுத்துநடை ஒரு கதைசொல்லியாக மாறி நம்மை 'ம்' போட்டு கேட்க வைக்கும் அனுபவமாக மாறியது.அதோடு அன்பு,நட்பு என ஒரு தோழமை கூட்டத்தின் சங்கமே தொழிற்சங்கம் என்ற புரிதல் கிடைத்தது.

 

ராணுவத்தில் இருந்து வெளியேறி தன் சொந்த ஊர் கோவில்பட்டியில் அஞ்சல் துறையில் பணியில் சேரும் ஆசிரியர்,முதலில் தொழிற்சங்கத்தின் மேல் எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்துள்ளார்.தொழிற்சங்கத்திலேயே இரண்டு பிரிவுகள் இருந்தததால் அதன் மேல் எந்த மதிப்பும் இல்லாமல் புறக்கணித்துள்ளார்.இலக்கியத்தில் விருப்பம் இருந்துள்ளதால் கவிதை புனைவதில் நாட்டம் ஏற்பட்டு,'தேடல்' என்ற கையெழுத்துப் பத்திரிகையும் வெளியிட்டார்.தோழர் பால்வண்ணம் அவர்களின் அறிமுகம் கிடைத்த பின்புதான் தொழிற்சங்க நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளார்.கோவில்பட்டி விவசாய ஆராய்ச்சி பண்ணையில் நடக்கும் விவசாய பணிகளை செய்யும் கிராம மக்களுக்கு முக்கியமாக பெண்களுக்கு வேலை உத்தரவாதமோ,ஊதியமோ தராமல் அன்றைய கூலியை மட்டும் கொடுத்து வந்த அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடந்த போராட்டம் தான் ஆசிரியரின் தொழிற்சங்க போராட்ட வாழ்வின் முதல் அடி எனலாம்.

 

அதில் ஏற்பட்ட ஈடுபாடு பின் அவர் பணிபுரிந்த அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தில் அவரை சேர வைத்தது.அஞ்சலக துறையில் உள்ள பெரும் முக்கிய பிரச்சனை அங்கு பணிபுரியும் புறநிலை ஊழியர்கள்.சொற்ப ஊதியத்திற்கு நாள் முழுதும் உழைக்கும் அவர்களின் வாழ்க்கை நிலையை எடுத்துரைக்க வீதி நாடகம் ஒன்றை நடத்த திட்டமிட்டு அதையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.தென் மாவட்ட தொழிற்சங்க வட்டாரங்களில் இது பெரும் கவனத்தை ஏற்படுத்தியது. அதற்கு முன்பே பல எழுத்தாளர்கள் சேர்ந்து  'தர்சனா' என்ற நிஐ நாடக குழு ஆரம்பித்து அதில் பல நாடகங்கள் அரங்கேற்றியுள்ளனர்.

 

வீட்டு மனிதனாக இருந்த தன்னை ஒரு தெரு மனிதனாக மாற்றிய கோவில்பட்டி தெருக்களை நமக்கும் சுற்றிக் காட்டுகிறார் ஆசிரியர்.ஒரு இடத்தில் இலக்கியம்,ஒரு இடத்தில் கம்யூனிசம்,மற்றொரு இடத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரைகள் என பல குழுக்கள் அத்தெருக்களில் இயங்கி இவரின் பல சிந்தனைகளை உயிர்பெறச் செய்திருக்கிறது. சமூகப் பொறுப்புகள்,உரிமைகள்  பற்றிய பல விவாத உரையாடல்களின் வழி அவரின் பார்வை அவற்றை உற்று நோக்க வைத்துள்ளது.கோவில்பட்டி வீதிகளின் மேல் உள்ள ஈர்ப்பு அவரின் வாழ்க்கையில் நடந்த முதல் பெரும் உடைப்பாக குறிப்பிடுகிறார்.

 

தொழிற்சங்க ஊழியர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பற்றிய  வகுப்புகள்  சங்கங்களில் மாலை நேரம் எடுக்க ஆரம்பித்தனர்.லட்சுமி மில்ஸ் நிர்வாகத்தை உதாரணமாக கொண்டு தோழர் எடுத்த வகுப்பு பல புரிதல்களை நமக்கு தருகிறது. தொழிலாளியின் கை,முதலாளியின் புதிய சொத்துக்கு எப்படி வழி செய்கிறது ? அந்த சொத்துக்கு யார் உரிமையாளர் ? என்ற கேள்விகளை  முன்வைக்கிறார்.ஆனால் இந்த வகுப்புகள் ஊழியர்களின் மனநிலையில்  வெறும் வகுப்பாகவே கடந்து, நடப்பில் எதும் ஆகாது என மனப்போக்கிலேயே இருப்பது ஆசிரியரை போல் நமக்கும் வருத்தம் தருகிறது.'சமரசம்' என்ற பெயரில் வெகுஜனத் தன்மையில் இருக்க முயல்வது அத்தனை போராட்டங்களையும் நீர்த்து போகச்செய்யும் என்ற உண்மையை வி.எஸ்.கணபதி அவர்கள் சொல்வதும் யோசிக்கவைக்கிறது.கோரிக்கைகள் நமக்கு சாதகமாக வருவதும்,ஊதிய உயர்வும் மட்டுமே ஒரு போராட்டத்தின் வெற்றி அமையாது.எத்தனை ஊழியர்கள் வர்க்க உணர்வோடு போராடினர் என்பதே ஒரு போராட்டத்தின் வெற்றி ஆகும்.இதை ஊழியர்கள் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் புரிகிறது.

 

ஒரு வேலைநிறுத்தமோ,போராட்டமோ,அதற்கும் ஆட்களை திரட்டுவதற்கு பல வழிகளை கையாள வேண்டியுள்ளது.தங்கள் உரிமைக்காக தான் வேலைநிறுத்தம் நடக்கப்போகிறது என்ற ப்ரக்ஞை கூட இல்லாமல்,புரிதலின்றி பல உறுப்பினர்கள் கலந்து அந்த போராட்டங்களை சடங்குகளாக நீர்த்து போக செய்கிறார்கள்.சங்கத்திற்கு சந்தா மட்டும் கட்டினால் போதும் என்ற நிலையோடு,தவிர்க்க முடியாதபட்சத்தில் ஒரு ஓரமாக நின்று விட்டு வருவார்கள்.இவர்கள் பெரும்பாலும் துக்ளக்,இந்து படிப்பவர்கள் என ஆசிரியர் சுட்டிக் காட்டுவது யாரென்று நமக்கு புரிகிறது.

 

அஞ்சலக புறநிலை ஊழியர்களை நிரந்தர பணியாளராக்க வேண்டி அம்பையில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு,ஊழியர்களை ஒன்றிணைக்க சங்கம் பட்ட பாடு எனக்கு சிரிப்பை வரவழைத்தது.பல சிரமங்களை கடந்து அந்த வேலைநிறுத்தம் வெற்றி பெற்றது சிறப்பு.

 

பொதுவாக தொழிற்சங்க இயக்கம் என்பது சொந்த வாழ்வை பலி கேட்கும் இயக்கமாக கருதப்படுகிறது.அதுபோல் தோழர் .தமிழ்ச்செல்வன் அவர்களும் தன் சொந்த வாழ்வை பற்றிய ஒரு குற்றஉணர்வோடேயே கடந்து வருகிறார்.தன்னுடைய முன்னோடியான தோழர் பால்வண்ணம் அவர்களை தான் பின்பற்றி நடப்பதாக பெருமை பட்டுக் கொண்டே, மனைவிக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை இயக்கப் பணிகள் செய்து கொண்டு இருந்தார்.கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டு வேலை,ஆசிரியர் பணி இரண்டையும் சமாளிக்கும் தன்னுடைய இணையரை நினைத்து மனம் வருந்தினாலும்,இயக்கப்பணியே அவர் மூச்சாக இருக்கிறது.பொது வாழ்விற்கான தியாகமாக இதை கருதினாலும் சில நேரம் நம் மனம் ஏற்க மறுக்கிறது.

 

தொழிற்சங்க பணிகளை பற்றி ஊழியர்களின் குடும்பங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் நியாயமானதாகவே தோன்றுகிறது.குடும்பத்துக்கு நேரம் ஒதுக்காமல்,இரவு,பகல் பாராமல் நிர்வாக பணிகளுக்காக ஊர் ஊராக சுற்றுவதாலும்,தொழிற்சங்க வேலைகளுக்கு தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து கடனாளி ஆவதாலும்  பலரின் குடும்ப வாழ்வில் அவர்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர்.ஊழியர்களுக்கு நடத்தப்படும் தொழிற்கல்வியை அவர்களுக்கும் நடத்தினாலொழிய இப்பிரச்சனை தீராது.ஆனால் அது நடைமுறையில் இயலாத காரியம் என்பதால் ஒரு குடும்ப விழாவிற்கு ஏற்பாடு செய்து ஊழியர்களின் குடும்பங்களை சந்திக்க வைக்கும் யோசனை சரியானதாக இருந்தாலும் அதிலும் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலவில்லை எனலாம்.Get-together போன்று நடக்கும் இந்த சந்திப்புகளால் எந்த கலாச்சார மாற்றமும் நடைபெறாது என்ற நிலை புரிகிறது.இதற்கு முதலில் குடும்பங்களில் நடக்கும் ஆணாதிக்கமும்,வரதட்சிணை,சாதி பார்த்து நடக்கும் திருமணங்களையும் ஒழிக்க வேண்டும்.ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமலே போனது.கலாச்சார மாற்றத்திற்கான சுயவிமர்சனத்தை முன்வைத்து மாற்றங்களை நோக்கி செல்ல வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

 

இதே போல் தொழிற்சங்க இயக்கங்களில் உள்ள ஊழியர்களின் கடவுள் பக்தி.மத உணர்வில் இருந்து வெளிவராமல் சங்கத்தின் உள்ளேயே கோவில் கட்டுவது,சரஸ்வதி பூஜை கொண்டாடுவது என மற்ற சிறுபான்மையினரின் உணர்வுகளை துச்சமாக கருதி செயல்படுவது இன்றும் மாறாமல் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.கடவுள் மறுப்பை தொழிற்சங்க இயக்கங்கள் கையில் எடுத்தே தீரவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

 

தொழிற்சங்க பணிகளுக்கிடையே இலக்கிய பணியில் ஏற்பட்ட தொய்வு, அவரை பல கேள்விகளுக்குள் ஆளாக்கியது.தொழிற்சங்க பணிகளிடத்தில் இருந்து மீண்டு மறுபடி இலக்கியத்தில் ஈடுபடும் ஆர்வம் மேலோங்கியது.தொழிற்சங்கம்,குடும்பம்,இலக்கியம் என தன் வாழ்வை மூன்றாக பிரித்து குழம்பிய நாட்களையும் கடந்து வந்தார்.இலக்கியத்தை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கும் தொழிற்சங்க ஊழியர்களை புத்தக வாசிப்பின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும் எனக் கூறும் ஆசிரியர்,

 

'Writers and artists are the engineers of the mind'

 

என்ற ஸ்டாலினின் மேற்கோள்படி எழுத்தாளர்களுக்கும்,தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

 

நூல் ஆரம்பம் முதல் ஆண்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள்,சந்திப்புகள், நட்பு என போய்க்கொண்டிருந்த நூலில் ஒரு பெண் பெயர் கூட வரவில்லையே என்ற எண்ணம் எழும் பொழுது தோழர் ஜெயலட்சுமியின் வருகை ஒரு நம்பிக்கையை தருகிறது.தொழிற்சங்கம் என்றாலே ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற எண்ணத்தை உடைக்கும் தோழர் ஜெயலட்சுமி,தனது பங்களிப்பின் மூலம் மற்ற பெண்களுக்கும் அதை  உணர்த்துகிறார்.பெண்களே இல்லாத தொழிற்சங்க பணிகளுக்கு பெண் ஊழியர்களை அணிதிரட்டும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு மகளிர் மாநாடையே நடத்தும் அளவு முன்னேறி போனது வாசிக்கும் நமக்கு ஆச்சரியம் அளிக்கிறது.பீடித் தொழிலாளர்கள் முதல் வங்கி ஊழியர்கள் வரை 500க்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இவர்கள் நடத்திய 'உழைக்கும் மகளிர் மாநாடு' ஒரு மைல் கல் எனலாம்.

 

செங்கொடி சங்கம் என்று சொல்லப்படும் CITU மட்டுமின்றி இன்னும் பல சங்கங்கள்,அதற்குள் பல அணிகள் என இருப்பதால்,புதிதாக வேலையில் சேருபவர்களை தங்கள் அணிக்கு இழுக்க போட்டி நடக்கும்.சில ஊழியர்கள் தங்கள் தேவைக்கேற்ப சங்கங்களை மாற்றிக் கொள்வதும்,இரண்டு சங்கமும் வேண்டும் என்று இரண்டுக்கும் சந்தா கட்டுவது என்று ஒரு தெளிவான முடிவை எட்டமுடியாத நிலைதான் அவர்களுக்குள் இருக்கிறது.அதோடு அவர்கள் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும்,பொதுவில் அவர் ஒரு தொழிலாளி என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும்,இதில் மொழி,சாதி,மதம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார் ஆசிரியர்.ஒரே சங்கத்திற்குள் குப்தா  அணி,கே.ஜி.போஸ் அணி என பல அணிகள்,மேலும் INTUC ஆதரவு சங்கம்,பாரதிய ஆதரவு சங்கம்,SC/ST ஊழியர் சங்கம் என எல்லா துறையிலும் இப்படியாக சங்கங்கள் இருப்பது தொழிலாளர்கள் மட்டும் காரணம் இல்லை.ஆளும் அரசாங்கத்தின் ஒவ்வொரு துரோக வரலாறு இதற்கு பின் இருக்கிறது என புரிகிறது.

 

தொழிற்சங்க வரலாற்றின் முக்கிய நிகழ்வான அஞ்சல்துறையின் நாடு தழுவிய போராட்டத்தை பற்றி வாசிக்கும் பொழுது ஆளும் அரசுகள் எவ்வாறு முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று புரிகிறது.நேருவின் ஆளும் அரசுக்கு எதிராக 1960ல் நடந்த இந்த போராட்டத்தில் வைத்த கோரிக்கை 'கௌரவமான சம்பளம்' மட்டுமே.ஆனால் அந்த கோரிக்கை 'நியாமான சம்பளத்திற்கு' இறங்கி இறுதியில் தேவையின் அடிப்படையில் 'குறைந்தபட்ச சம்பளமாக' வந்து நின்றது.அதுவும் 2005 வரை எந்த தொழிலாளர்களுக்கும் அதை வழங்கப்படவில்லை என்பது வேதனை தரும் உண்மை.அதோடு மட்டுமல்லாது வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவித்து,1968 ல் சங்கத்தை தடையும் செய்தது.பின்பே அஞ்சல்துறைல் INTUC சங்கம் உருவானது.

 

1946 ல் விக்கிரமசிங்கபுரத்தில்,ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த கப்பற்படை எழுச்சி போராட்டத்திற்கு ஆதவளித்த  செங்கொடி சங்கம்,தெருக்களில் பல செங்கொடிகளை நட்ட பொழுது தோழர் முத்துக்குமாரசாமி ரவுடிகளால் வெட்டப்பட்டது மற்றொரு வரலாறு.ஆனால் அவரின் தியாகத்தை தமிழகம் இன்றுவரை அறியாதது வேதனைக்குரியது என்பதை வாசிக்கும் பொழுது இதுபோன்று பல தியாகிகளை அறியாமல் இருக்கின்றோமே என்ற வெட்கம் ஏற்படுகிறது.

 

நடுவில் ஆசிரியரின் இணையரின் பணிமாற்றம் காரணாமாக பத்தமடை சென்று,அம்பையில் சில காலம் பணி,பின் நெல்லை அஞ்சல்துறை கிடங்கில் நான்கு வருடப்பணி,நாட்டார் வழக்காற்றியல் பற்றிய நூல் வாசிப்பு,தொ.பரமசிவன்,.மாடசாமி,.சிவசுப்பிரமணியன் போன்ற தோழர்களின் அறிமுகம் என அவரின் தனிப்பட்ட  வாழ்வும் சேர்ந்தே பயணிக்கிறது.

 

நூலில் பல இடதுசாரி தோழர்களின் அறிமுகம் நமக்கு கிடைக்கிறது.அனுபவம் மிக்க மூத்த தோழர் பால்வண்ணம்,எந்த போராட்டத்திற்கும் அதிரடியாக  இறங்கும் தோழர் வீரணன்,தீக்கதிர் பத்திரிகை ஏஜென்ட் சங்கரப்ப நைனா,சி.ராமசுப்பு,சுப்பையா ஜி,'ஜிந்தாபாத்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலேயே கோஷம் போடும் ஒயிலாட்டக் கலைஞர் நம்பி வாத்தியார்,தோழர் சி.எஸ்,பி.ராமமூர்த்தி என ஒவ்வொரு அத்தியத்திற்கும் ஒருவர் நம் கண் முன் வந்து செல்கிறார்கள்.இவர்களோடு நண்பர்கள் சுவடி மற்றும் பாலு.இவர்களுக்கிடையே உள்ள நட்பின் ஆழத்தை பற்றி பேசவும் தவறவில்லை ஆசிரியர்.

 

பல நூல்களின் அறிமுகமும் நமக்கு கிடைக்கிறது.ஆங்கில நூல்கள் உட்பட.மாஞ்சோலை போராட்டத்தை பற்றி விரிவாக மற்றொரு முறை பேசலாம் என விட்டது சற்று ஏமாற்றம்.ஆனால் அதே மாஞ்சோலை போராட்டம் தான் தன் அஞ்சல் பணியை விட்டு வெளிவர வேண்டிய நிர்பந்தத்தை தந்தது என்று தோழர் கூறும்பொழுது அவரது இக்கட்டான நிலை புரிகிறது. 17 பேரை கொன்ற இந்த போராட்டத்தின் வீரியத்தை புரியாமல் அன்றைய நெல்லை சீமை அதே இயல்பு நிலையில் இருந்தது வாசிக்கும் நமக்கு அதிர்ச்சியை தருகிறது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திலும் 11 பேரை கண்ணெதிரே சுட்டுக் கொன்ற அரசாங்கத்தை நாம் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நிதர்சனமும் புரிகிறது.

 

ரஷியாவின் கம்யூனிச அரசியல் பற்றி கட்டுரையில் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.அதனை பற்றிய போதிய தெளிவு எனக்கு இல்லாமல் இருந்தாலும் வாசிக்கும் பொழுது அதனை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் புரிகிறது.

 

எண்ணற்ற தோழர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பும் தியாகமும் கொண்ட தொழிற்சங்க வரலாறு,இன்று கொள்கையற்ற மத்தியதர மனோபாவத்துடன் இருக்கிறது.இது முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது.ஆளும் அரசாங்கங்களும் எந்த துறையிலும் வேலைக்கு நிரந்தர பணியாளர்களாக எடுக்காமல் முறைசாரா தொழிலாளி,காண்ட்ராக்ட் அடிப்படையில் எடுக்கும் தொழிலாளி என நிரப்பி விடுகிறார்கள்.நல்ல உணவிற்கு கூட வழியில்லாத அடிப்படை சம்பளத்திற்கு போராட முடியாமல் தங்கள் வேலையை காப்பாற்ற போராடும் நிர்பந்தத்தை ஆளும் வர்க்கம் தந்துள்ளது மனதை ரணப்படுத்துகிறது.

 

'ஒரு தோழன் வீழ்ந்தால் அந்த சணத்திலேயே அந்த இடத்திலிருந்து இன்னொரு தோழர் எழுவான் '

 

என்ற வரிக்கு ஏற்ப ஒவ்வொருவரும் 'அது நான்தான்' என்ற எழுச்சியோடு முன்னேறும் நாள் தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை வீண்போகாது.நன்றி.

Comments