நூல் : அவயம் 

ஆசிரியர் : ஏக்நாத் 

விலை : Rs.320

பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்




அவயம்.. அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசார களங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் மேடை பேச்சாளர்களின் வாழ்க்கை நிலையை சொல்லும் நாவல்.மாடசாமி என்ற மேடை பேச்சாளனின் முழு வாழ்க்கை பயணத்தில் நம்மையும் கையோடு கூட்டிச் செல்கிறார் ஆசிரியர்.பேச்சாளராக பெருங்கனவோடு தொடங்கும் அவனது வாழ்க்கை அவனை எங்கு கொண்டு செல்கிறது,அதில் நிலைக்க அவன் எடுக்கும் போராட்டங்கள்,முடியாமல் போகும் இடத்தில் இலட்சியத்தை கைவிட்டு செல்லும் கையாலாகாத நிலை என ஒரு நெடும் பயணத்திற்கு நம்மை ஆயத்தப் படுத்துகிறார் ஆசிரியர்.

கிராமத்தில் ஓரளவு  படித்தவனாக அறிமுகமாகும் மாடசாமி வீட்டின் கடைக்குட்டி.அண்ணன்,தம்பி,அக்கா என உடன்பிறந்தவர்கள் இருந்தாலும் தாய் சடச்சிக்கு மாடசாமியே செல்லப் பிள்ளை.பல தோல்விகள், அவமானங்களை கடந்து வரும் மாடசாமியின் வாழ்க்கையில் சடச்சியின் அன்பு மட்டுமே நிலையானதாக இருக்கிறது.

கல்லூரி காலம் வரை அத்தானின் பராமரிப்பில் படித்து தன் சொந்த ஊர் திரும்பும் மாடசாமி,அரசியல்  மீது ஆர்வம் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்கிறான்.அத்தானின் சிபாரிசில் கிடைத்த ஆசிரியர் பணியை உதறி முழு நேர அரசியல் மேடைப்  பேச்சாளராக மாறுகிறான்.அவன் பேச்சில் பல தமிழ் மேற்கோள்கள்,பழமொழிகள்,குட்டி கதைகள் என சுவாரசிய தகவல் சேர்க்கை,அவனை பெரும் பேச்சாளராக உருமாற்றுகிறது.அதில் கிடைக்கும் பேரும்,புகழும் அவனுள் ஒரு போதையை ஏற்படுத்தி,அவன் குடும்பத்தின் பொருளாதார நிலையை கூட கவனிக்க முடியாத அளவு அரசியல் வாழ்வு அவனை தன்னுள் இழுத்துக் கொள்கிறது.

தன் தாய்,மாமியாரின் தயவில் இரு  குழந்தைகளை வளர்க்கும் மாடசாமியின் மனைவி வேணி,ஒரு கட்டத்தில் குடும்ப பொருளாதாரத்தை கணவனின் கவனத்திற்கு கொண்டு வரும்பொழுதுதான், தன் குடும்ப நிலையை உணர்கிறான் மாடசாமி.ஆனால் அரசியல் செல்வாக்கு,மற்றவர்களின் புகழாரத்துக்கு மதிமயங்கிய நிலை அவனை வேறு எந்த முடிவும் எடுக்க விடாமல் செய்கிறது.

இதற்கிடையில் ஏற்படுகிற பெண் சகவாசம்,ஊர் மக்களின் முன் அவனுடைய மதிப்பை இழக்க வைத்து,கட்சியிலும் ஓரங்கட்டப்படுகிறான்.கட்சியில் ஏற்பட்ட கசப்பினால்,அரசியல்வாதிகளின் பொது மனநிலையான கட்சித்தாவலில் ஈடுபட்டு பலரின் பகையையும் சம்பாரிக்கிறான்.இந்த போக்கு கதை இறுதி வரை தொடர்கிறது.பல கட்சிகளுக்கு அவன் சென்றாலும்,அவனுடைய தாய் கட்சியான கம்யூனிஸ்ட் கொள்கைகளையே அவன் செயல்களில் பிரதிபலிக்கிறது.

போதிய வருமானம் இல்லாமல் நண்பனின் யோசனைப்படி சீட்டு பிடித்து,அதில் கிடைக்கும் வட்டி லாபத்தில் சுமூகமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை திடீரென நிகழ்ந்த மனைவியின் இழப்பு,அவனை மறுபடியும் தடம் மாற்றுகிறது.சந்தோஷம்,துக்கம் என மனித வாழ்வில் ஏற்படும் பல திருப்பங்களே அவனின் அடுத்தடுத்த செயல்களை தீர்மானிக்கும் என்ற உண்மை மாடசாமியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமை ஆகாமல் இருந்தவன்,முழு குடிகாரனாகிறான்.கூடவே மற்ற பெண் சகவாசமும் ஒட்டிக்கொள்கிறது.ஒரு முறை  பட்ட அவமானத்தையும் மீறி மறுபடி அதே தவறை செய்யும் நிலைக்கு அவன் மனம் உந்துகிறது.தவறு என்று தெரிந்தே பாதை மாறும் அவனின் செயல் நமக்கு அவன் மேல் கோபத்தை விட பச்சாதாபத்தையே ஏற்படுத்துகிறது.

தன் இரு மகள்களின் எதிர்காலத்தை முன்னிட்டு அரசியலுக்கு முழுக்கு போட்டு,வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகும் மாடசாமி,தான் இதுவரை செய்த தவறுக்களையும்,ஏற்பட்ட அவமானங்களையும் கலையும் விதம் ஒரு தெளிவான மனிதனாக மாறும் இடம் நம்மையும் ஒரு 'அப்பாடா' போட வைக்கிறது.மூத்த மகளின் கல்விக் கனவு முறிந்து திருமணத்தில் முடிந்ததை தடுக்க வழி தெரியாமல் இருந்தவன்,தன் இளைய மகளின் மேற்படிப்புக் கல்விக்காக ஒரு பெரும் முடிவு எடுத்தது மனநிறைவைத் தந்தது எனலாம்.

மாடசாமியின் சூழ்நிலை,அவனை பல தவறான பாதைக்கு இட்டு சென்று,மற்றவர்களுக்கும் மனபாரத்தை கொடுத்தாலும் ஏனோ அவனை ஒரு தீயவனாக உருவகப் படுத்த முடியாமல்,அவன் திருந்த வேண்டும் என்ற மன ஆவலே நமக்கு ஏற்படுகிறது.கஷ்டங்களுடன் காலத்தை கழித்தவனின் முடிவை எதிர்மறையாக எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு சுபமாக முடிந்தது ஒரு திருப்தியைத்  தருகிறது.

அரசியல் கட்சிகளில்,மற்ற பதவிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம்,மரியாதை, அக்கட்சி பேச்சாளர்களுக்கு கிடைப்பதில்லை.பொருளாதார நிலையிலும் அவர்களுக்குரிய சன்மானம் சரியான வகையில் கிடைக்காமல் போவதும் நிகழ்கிறது.கட்சியின் கொள்கை பிடிப்புள்ள மிக சிலர் மட்டுமே இந்நிலைக்கு தாக்குப்பிடிக்க முடிகிறது.'எந்த கட்சியில் இருந்தால் காசு பார்க்கலாம்' என்று நினைக்கும் பலரின்  மனநிலை கட்சித்தாவலில் கொண்டு போய் விடுகிறது.இதில் கொள்கை,தலைவன் பாசம் என்ற கோட்பாடுகளுக்கு இடமில்லை என்ற உண்மை புரிகிறது.மாடசாமியும் இதற்கு தப்பவில்லை.

பத்திரிகையாளரும்,எழுத்தாளருமான ஏக்நாத் அவர்களின் நான்காவது நாவல் 'அவயம்'.திருநெல்வேலி வட்டார வழக்கு சொல்லான அவயத்தின் பொருளான 'சத்தம்' கதை முழுதும் சண்டையாகவும்,கேளிக்கை கூப்பாடாகவும் நிறைந்து இருக்கிறது.நேர்கோட்டில் பயணிக்கும் எளிமையான மொழி நடை,யதார்த்த கதை களம் என ஒரு இயல்பான வாசிப்புக்கு அடித்தளமிடுகிறது இந்நாவல்.

பல நெல்லை வட்டார வழக்கு சொல்கள் நாவல் முழுதும் நிரம்பி இருந்தாலும்,கதையின்  ஓட்டத்திற்கு சிறுதளவு தேக்கத்தைக் கூட தரவில்லை எனலாம்.மாடசாமியின் வாழ்க்கை பயணத்தோடு,அன்றைய காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்,சமூக நிகழ்வுகள்,இயற்கை பேரிடர்கள் என அனைத்தையும் தொட்டு செல்கிறது கதை.கற்பனை பெயர் கொண்டு கட்சிகளை விளிக்காமல்,களத்தில் இருக்கும் நிஜ கட்சிகள், பிரமுகர்களை கொண்டே கதை நகர்வதால்,புனைவு கதை என்றாலும் உண்மையோடு உரசிச் செல்கிறது.இது வாசிக்கும் நமக்கு சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

கதையின் போக்கிற்கு பல கதாபாத்திரங்கள் தேவைப்பட்டாலும்,நாவலின் இறுதி வரை புதிய கதாபாத்திரங்கள் அறிமுகமாவது கொஞ்சம் அயர்ச்சியாக உள்ளது.ஆடு மேய்க்கும் ஆச்சி,மாடசாமியின் தாய் சடச்சி, சிரிச்சான் பொண்டாட்டி,ஒழக்கு,மாடசாமியின் அத்தான் என கதைக்கு மிக நெருக்கமான சில  கதாபாத்திரங்கள் மனதில் பதிய தவறவில்லை.வேலை தேடி மும்பை செல்லும் அத்தியாயங்களும் மனதில் ஒட்டாமல் கதை நீளத்திற்கே உதவியது எனலாம்.

இறுதியில் "பேரன்பு கொண்ட பெரியோர்களே... " என பேச்சை ஆரம்பிக்கும் பொழுது,அதுவரை காணாமல் போயிருந்த கைதட்டல் சத்தத்தை,மாடசாமி ஒரு சந்தோஷ அவயமாக ஏற்றுக்கொள்ளத் தவறவில்லை. நன்றி.

Comments