நூல் : விலாஸம்                                                        

சிரியர் : பா.திருச்செந்தாழை

விலை : Rs.275

பதிப்பகம் : எதிர் வெளியீடு

முதல் பதிப்பு : ஜனவரி 2022

 


பா.திருச்செந்தாழையின் 'விலாஸம்'..19 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல்.தமிழினி மின்னிதழில் இவருடைய சிறுகதைகள் வாசித்த அனுபவம்,இவரது 'விலாஸம்' நூலை வாங்கவைத்தது.

விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பிறந்த இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 'வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்' 2008 ஆம் ஆண்டு வெளியானது.தொடர்ந்து உயிர்மை,தடம்,நீலம்,விகடன் போன்ற இதழ்களிலும்,தமிழினி மின்னிதழிலும் சிறுகதைகள் எழுதி வருகிறார்.எந்த வகைமையிலும் சிக்காமல்,இதுவரை பேசப்படாத புதிய தளங்களை தேர்ந்தெடுத்து எழுதி வருபவர்.இவரது கவித்துவமான எழுத்து நடையில் கதை நிகழ்வுகளை வாசிக்கும் பொழுது இப்படியும் எழுத முடியுமா என்ற கேள்வி மனதில் எழாமல் இருக்காது.மனிதர்களின் ஆசை,கனவு,பொறாமை,அகந்தை,அன்பு என எந்த உணர்வுகளையும் நேர்கோட்டில் சொல்லாமல்,அந்த உணர்வை நம் வாழ்வில் சந்திக்கும் பொழுது ஏற்படும் மனஓட்டத்தையும் சேர்ந்து பதிவு செய்வது,நம்மை ஒருவர் வேவு பார்த்து எழுதும் தன்மையை கொண்டதாக இருக்கிறது.இயல்பை மீறிய மனிதர்களின்  நடத்தையை வெகு துல்லியமாக இவர் எழுத்து அவதானிக்கிறது.

இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகள்  வணிகத்தை மையப்படுத்தி எழுதி இருப்பது புதுமை.வியாபார சூழல் கொண்ட குடும்பங்களில் நடக்கும் தினசரி நடவடிக்கைகள்,வியாபாரத்தில் வீட்டுப் பெண்களின் ஈடுபாடு,அதில் உறவுகளுக்குள் ஏற்படும் கசப்பு என அதன் எதார்த்த போக்கை எந்த சுவாரசிய சேர்க்கையும் இல்லாமல் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.வணிகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு,அதை சீர் செய்து மேல் வந்தவர்கள்,நொடித்து போனவர்களின் வலி,அவர்களுக்குள் நடக்கும் கௌரவப்பிரச்சனை என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம்.விவசாய உற்பத்திகளை கொண்டு வணிகம் செய்யும் சம்சாரிகளின் வணிகத்தை அலசுகிறது.பேரம்,கமிஷன்,மண்டி,வால்பை, தரகு,பஜார் என வியாபார புழக்க வார்த்தைகள் ஏராளம்.மதுரை கீழமாசி வீதிக்குள் சென்ற நெடி எழுத்தில் அடிக்கிறது.விலாஸம்,த்வந்தம்,துலாத்தான்,ஆபரணம் ஆகிய கதைகளின் கதை களம் வணிகத்தை மையப்படுத்தி,வியாபார கணக்குகளுக்கு இடையே மனிதர்களின் மனக்கணக்கையும் சேர்த்து பதிவு செய்துள்ளார்.  

அந்த வரிசையில் 'விலாஸம்' ஒரு முத்திரை கதை என்றே சொல்லலாம்.இந்த 'விலாஸம்' வெறும் 'முகவரி' மட்டுமல்ல, ஒரு பெருவணிகரின் 'அடையாளம்'.வணிகத்தின் வெற்றி,தோல்வியே வியாபாரியின் அடையாளத்தை தீர்மானிக்கிறது.வணிக தோல்விக்கு பின் 'நொடித்துப் போனவர்' என்ற சொல்லாடலை பெற்று மிச்ச காலத்தை கழிக்கும் பலரின் கதைகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவமே 'விலாஸம்'.

தேனியில் 'சாரட் வண்டி வீடு' என்ற அடையாளத்தோடு ஒரு காலத்தில் வணிகத்தில் கோலோச்சிய பெருமாளை காண அவரிடம் சிறுவயதில் தொழில் கற்று இன்று  பெருவணிகராக விளங்கும் தன்ராஜ் தன் மகனுடன் செல்கிறார்.அவர்களின் சந்திப்பே 'விலாஸம்' கதையின் மையம்.தனது மில்லின் புது யூனிட் திறப்புவிழாவிற்கு அழைக்க தன் பழைய முதலாளியை காண கிளம்பும் தன்ராஜின் முஸ்தீபில் இருந்து,ஒவ்வொரு கணமும் தந்தையின் நடவடிக்கைகளை கதை வழியே நமக்கு கடத்துகிறார் தன்ராஜின் மகன்.

பல வெற்றி தோல்விகளை கடந்து,இன்று தன் குடும்பத்துடன் காலத்தை கழிக்கும் பெருமாளை,ஏதோ போருக்கு சென்று வீழ்த்த நினைக்கும் மனநிலையில் கிளம்பும் தன்ராஜ் அங்கு பெருத்த ஏமாற்றத்தை சந்திக்கிறார்.தன்ராஜுடைய வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்வார் என்ற நினைப்பை தவிடுபொடியாகும் விதத்தில் அதை பெருமையாக கருதும் முதலாளியாக பெருமாள் தன் உவகையை வெளிப்படுத்திய இடத்தில்,தன்ராஜின் புன்னகை சற்றே திரை விலகிய ஆங்காரமாய் தோன்றுகிறது.முதலாளியின் வீழ்ச்சியை ஒரு வன்மத்துடன் அவரிடமே வெளிப்படுத்த நினைத்த தன்ராஜ் அதற்கான சாதகமான சூழல் அமையாது போவது அவரை ஏமாற்றமடையச்  செய்கிறது.பெருமாளின் உதவியாளர் புகழேந்தி,தன்ராஜை ஒரு ஏளன புன்னகையோடும்,கிண்டல் தோணியிலும் மட்டம் தட்டும் இடத்தில்,தன்ராஜ் எந்த எதிர்வினையும் காட்டாமல் விலகி போனதுகூட,'இவர்கள் இப்படியே பொருமியபடி இருக்கட்டும்'என்ற குரூரம் இருப்பதாகவே அறிய முடிகிறது.அப்பாவின் இந்த நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த மகன்,ஊர் திரும்பும் நேரத்தில் அவருடைய மற்றொரு முகத்தை அறிந்து கொள்கிறான்.அது அவரின் உழைப்பு.பெருமாளின் கிட்டங்கிகள் கிடைத்த செய்தியை மகன் சொன்னதை கூட காதில் வாங்காமல் தானிய மூடைகளை மழையிலிருந்து காப்பதில் அவர் காட்டிய மும்முரம் அவரின் உழைப்பை அளக்கமுடிகிறது.வணிகத்தில் 'அனுபவமே போதை' என்று சொல்லும் அய்யாவுவின் வார்த்தையை தன் தந்தையுடன் ஒப்பிட்டு பார்க்கும் மகன்,அங்கு அவரின் விஸ்வரூப வெற்றி எதனால் வந்தது என்ற உண்மையை அவனோடு சேர்ந்து நாமும் அறிய முடிகிறது.

வெற்றி பெற்ற ஒருவனின் உடல் மொழி,மனதில் இருக்கும் எண்ணங்களுக்கேற்ற முகபாவம் என தன்ராஜை,ஆசிரியர்  எடுத்துக்காட்டும் பொழுது அவரின் குணம் ஒரு துருத்தலோடு நம் கண் முன் நிற்கிறது.ஒரு மனிதரின் குணத்தை நேர்த்தியான குறியீட்டினை கொண்டு விவரித்து இருப்பது ஆசிரியருடைய எழுத்தின் சிறப்பைக் காட்டுகிறது.

வியாபாரம் செய்யும் வீடுகளில் வாழும் பெண்களை,புதுக்கணக்கிற்கு மட்டும் விடியும் முன் கடைக்கு அழைத்துவந்து வெளிச்சம் வருவதற்குள் வீட்டுக்கு அனுப்பிவிடும் ஆண்களுக்கு  மத்தியில் லீலாக்கள் உருவாகுவார்களா என்ற கேள்வியை த்வந்தம்கதை யோசிக்கவைக்கிறது. பெண்ணிற்கு கிடைக்கும் சுதந்திர வெளியில் அவள் காணும் கனவுகளை அடைய அவள் எடுக்கும் முனைப்புகளுக்கு முன் ஆண் அற்பமாகி விடுகிறான்.அவளின் வெற்றி ஒரு போதையாக மாறி விடும் அளவு அவளின் செயல் நேர்த்தி இருக்கும் என்பது மிகையல்ல.லீலாவும் அப்படித்தான்.மென்மையான குணம் கொண்ட அப்பாவி கணவன் தீபனுக்கு தொழிலில் உதவியாக வந்து கடை கல்லாவில் உட்கார்ந்தவள்,ஆண்களின் கழுகு பார்வைகளை கடந்து வெற்றியின் ருசியை அனுபவிக்க தயாராகிறாள்.'த்வந்தம்' கதையின் கதைசொல்லி ஒரு சிங்கி விற்பவனாக கதையில் அறிமுகமாகி தீபனுக்கு தொழில் யோசனைகள் கூறும் நலன்விரும்பியாக அவனுடன் நெருக்கமாகிறான்.அப்பாவி தீபனை ஏமாற்றும் மற்ற வியாபாரிகளிடம் இருந்து தொழிலை காப்பாற்ற லீலாவை கல்லாவில் அமரும் யோசனையை அவனே கூறுகிறான்.வீட்டில் இருக்கும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை வேறு ஒரு பெண்ணின் மேற்பார்வையில் விட்டு தொழிலை நடத்த ஆரம்பிக்கிறாள்.ஆரம்பத்தில் தடுமாறினாலும்,தொழிலின் போக்கு வெகு சீக்கிரம் அவளுக்கு பிடிபடுகிறது.ஒரு அனுபவம் வாய்ந்த வியாபாரியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சில முடிவுகளை தனிப்பட்டு எடுத்து தோல்விகளை சந்தித்தாலும்,வெற்றியின் ருசி அவளுக்கு போதையை தருகிறது.இனி எவர் துணையும் தேவையில்லை என்ற இடத்திற்க்கு அவள் வரும்போது,  கதைசொல்லிக்கு அதிருப்தி ஏற்பட்டாலும்,அவள் மேலுள்ள ஆசையில் நிதானிக்கிறான்.ஆதரவற்ற பெண்ணிற்கு உதவி செய்யும் ஆண்,அந்த பெண்ணிடம் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்வதில்லை என்ற கூற்றை உண்மையாகும் விதம் கதைசொல்லியும் அவளின் மேல் கொண்ட உடல் வேட்கையை  வெளிப்படுத்துகிறான்.ஆனால் லீலா எவ்வித எதிர்வினையும் காட்டாததால்,அவளுக்கு புரிகிறதா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கும் தருவாயில்,அவள் சொல்லும்  'கரிசனத்திற்கான முதலீடு' என்ற வார்த்தை அவனை கூசச்செய்து அவளை விட்டு விலகுகிறான்.வணிகத்தில் ஏற்படும் நட்டத்தை,சக வியாபாரிகளிடம் ஒரு தூண்டில் புழுவாக்கி ஒரு 'கரிசனத்தை' ஏற்படுத்தும் இடத்தை அவள் விவரிக்கும் பொழுது அதோடு தன்னை ஒப்பிட்டு கொள்ளும் கதைசொல்லி,அதை ஒரு அவமானமாக கருதி விலகியது நல்லதே என்று இறுதியில் புரிகிறது.  

'வணிகம் என்றாலே அதில் சூதும்,அடுத்தவனை கவிழ்க்க செய்யும் சதியும் அடங்கியே  இருக்கும்' என்று லோகு, அய்யாவுவிடம் சொல்லும் பொழுது அய்யாவுக்கு ஏற்படும் கோபத்தில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.தரகு வேலை பார்த்தாலும்,ஐந்து ரூபாய் அதிகம் கிடைக்கும் என்ற லோகுவின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல்,தானியேலுக்கு துரோகம் செய்ய மனம் வராமலும் ஒதுங்கி போகும் அய்யாவு கதாபாத்திரம் நிஜத்தில் இருக்குமா என்று தெரியவில்லை.அடுத்தவனை அழிக்க,லாபத்திற்கும் கட்டாத விலைக்கு சரக்கு கொள்முதல் செய்து,அடிமாட்டு விலைக்கு அடுத்தவன் போடும் கடைகளுக்கு விற்று அவனை காலி செய்யும் வியாபாரம் தான் இன்று நடக்கிறது. தொழிலில் நிலைத்து நிற்க எடுக்கும் பிரயத்தனங்களை விட அடுத்தவனை அழிக்க போடும் திட்டங்களே இன்றைய வியாபாரிகளிடம் அதிகம்.அந்த உண்மையை 'துலாத்தான்' கதை சொல்கிறது.மனப்பிறழ்வு கொண்ட மகளின் திருமண வாழ்வை சரி செய்ய முடியாத அய்யாவு,மருமகனிடம் கெஞ்சும் பொழுது,வணிகத்திலும் தரகுக்காக வியாபாரிகளிடம் கையேந்தும் நிலையை ஒப்பிட்டு பார்க்கிறார்.தானியேலுக்காக அய்யாவு போட்ட வியாபார கணக்கு வெற்றி பெற்றாலும்,தன்னுடைய மகளின் வாழ்க்கை கணக்கு சரியாகுமா என்ற கனத்த கேள்வியோடு அவர் வடிக்கும் கண்ணீர் மனதை அழுத்துகிறது.

அண்ணன் தம்பிக்கு இடையில் வரும் சொத்து பிரிவினையால்   குடும்பத்துக்குள் நிகழும் மாற்றங்களை சொல்லும் கதை 'ஆபரணம்'.சிறுவயதில் இருந்தே தம்பி திலகரை வியாபாரத்தில் தலையிட விடாமல் கல்லாவில் அமரவைத்து தொழில் அனுபவம் இல்லாமல் செய்து அவனை கடனாளி ஆக்கி மொத்த சொத்தையும் அபகரிக்க நினைக்கும் அண்ணன் திரவியத்தின் சூதுக்கு அண்ணி மரியமும் உடந்தையாக செயல்படுகிறாள்.கடனுக்காக திலகரின் மனைவி சித்திரையிடம் அவளது ஒவ்வொரு ஆபரணத்தையும் வாங்கும் பொழுதும் மரியம் எண்ணவில்லை,அவளுக்கு கிடைக்காத பிள்ளைப்பேறு சித்திரைக்கு ஆபரணமாக தரிக்கும் என்று.தன்னை ஒரு ஆளுமை பெண்ணாக காட்டிக்கொள்ள பணத்தின் மீது நாட்டம் கொண்டு அதை எண்ணும் பொறுப்பை ஏற்று,தானே அவற்றை பாதுகாத்து வருவது போன்ற பிம்பத்தை உருவாக்கும் மரியம், சித்திரை,திலகரை வீட்டை விட்டு அனுப்பிவிட்ட பின்பே,உண்மையான ஆபரணம் எது என அவள்  புரிந்து கொள்கிறாள்.கணவன் திரவியத்தின் உடல்நிலை, குழந்தை இல்லாமல் போனது என அவள் பறித்து பூட்டி வைத்த ஒவ்வொரு ஆபரணமாக கீழே விழத் தொடங்குகிறது.இறுதியாக சித்திரையின் மூன்றாவது மகவை தனதாக்கிக் கொள்ள அவள் எடுக்கும் முன்னெடுப்பும் கீழே விழுந்த ஆபரணாமாய் போகிறது.எந்த மகிழ்ச்சியும் இல்லாத 'அழுகின்ற ஒரு சிறுமி'யாக தன் மனைவி மரியத்தை திரவியம் நினைத்தாலும் அவளின் சூது,நமக்கு அப்படி தோன்ற வைக்கவில்லை.சித்திரையின் முதல் கர்ப்ப செய்தி அவளை அடையும் முன்பே அதை ஏற்கக்கூடிய மனம் இல்லாத பொழுதே மரியத்தின் குணம் அறிய முடிகிறது.அதோடு சித்திரையின் நகைகளை பாலில் முக்கி துடைத்து நுகர்ந்து பார்க்கும் மரியத்திடம் ஒரு குரூரம் இருப்பது உறுதியாகிறது.

ஒரே வீட்டில் வாழும் மனிதர்களிடையே நடக்கும் உரையாடல்,சில அசந்தர்ப்ப சூழலில் தடை படும் பொழுது அங்கு எழும் நிசப்தம் அவர்கள் மனதில் ஓலமாகவே கேட்கும். அந்த நிசப்தத்தை தாள முடியாமல் ஒளிந்து கொள்ளும் அவர்களின் மனதை வெகு துல்லியமாக இக்கதையில் ஆசிரியர் எழுத்தில் கொண்டு வந்திருப்பது அசாதாரணம்.அதை வாசிக்கும் நம் மனதிலும் ஒரு அமைதி ஆட்கொள்கிறது.சித்திரையின் கர்ப்ப செய்தியை அவள் எங்கு தன்னிடம் வந்து சொல்லிவிடுவாளோ என்ற பதற்றத்தில்,தன்னுடைய இயல்பான முகத்தை தொலைக்கும் மரியத்தின் முகம் நம் கண் முன் வந்து போகிறது.மனிதர்களின் முகபாவத்தை வைத்து அவர்கள் மனநிலையை அளக்கும் யுக்தி எழுத்திலும் வரும் என்பதை நிரூபித்துள்ளார் ஆசிரியர்.

வணிக மனிதர்கள் ஒரு பக்கம் என்றால் தேரிக்காட்டு பனைமரக்கூட்டத்திற்கு நடுவில் வாழும் வெக்கை மனிதர்களின் வாழ்வியல் ஒரு பக்கம்.

'படையல்'... மகளின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலை சீர் செய்ய,தன் குலதெய்வத்திற்கு படையல் போட பல வருடங்கள் கழித்து செல்லும் கடற்கரை,அந்த தேரிக்காட்டில் கிடைத்த வானாந்திர அமைதியும்,கள்ளின் புளிப்பும், வீட்டில் கிடைக்காத சுதந்திரமும் மனதை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது.குலதெய்வத்தை கடவுளாக பாவிக்காமல் தன் சேயோனாக நினைத்து வேண்டுதல் என்ற பெயரில் எதும் கேட்காமல்,அதனுடன் உரிமையுடன் பேசும் உறவை கொண்டவனாக இருக்கிறான்.வேண்டுதல் நிறைவேறுமா? இல்லையா? என்ற கேள்வியே அவனுள் எழாமல் தன் சேயோனை காண செல்லும் குதூகலம் மட்டுமே வியாப்பித்து இருக்கிறது.குத்தல் பேச்சுக்களிடையே செல்லா காசாக இருக்கும் கடற்கரைக்கு வீட்டில் கிடைக்காத ஆசுவாசம் தன் சேயோனின் இடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை நாடிச் செல்லுவது,தனிமையில் வாழ்வை கழிக்கும் பல மனிதர்களின் பிம்பமாக தெரிகிறது.கதையில் தேரிக்காட்டின் செம்மண் வரலாறை என் ஆச்சியிடம் கேட்ட உணர்வை ஏற்படுத்துகிறது ஆசிரியரின் எழுத்து.அதோடு எளிய மனிதர்களின் மதத்துக்கு அப்பாற்பட்ட உறவை பேசுகிறது இக்கதை.அதே தேரிக்காட்டில்,தாழம்பூ வாசனையோடு ஆரம்பமாகிறது 'காப்பு' கதை.'தாழம்பூ வாசனை நினைவிழக்கச்செய்யும்' என்ற கிழவனின் பேச்சை சிறு வயதில் நம்பியும் நம்பாமலும் இருந்த கதைசொல்லி,ஒருகட்டத்தில் அவனின் பல நினைவுகளை அழிக்க தாழம்பூ வாசனைக்கு அவன் மனம் ஏங்குவதோடு முடிகிறது.

கணவனை இழந்த மருமகள் செங்குவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்குமோ என்று அவளை சந்தேகிக்கும் மாமனார் சிவசு ஐயாவின் யூகம் உண்மையா என்ற கேள்வியோடு 'தேவைகள்' கதை ஆரம்பமாகிறது.அவரவர் நியாயம் அவரவருக்கு என்ற விதி போல் தேவைகளும் அப்படியே.பெரும் மனஉளைச்சலோடு அவர் சந்தேகிக்கும் முத்து தன்னுடைய தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில், 'தின்னுட்டு போ, கழுதை!' என்று சொல்லும் இடம் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும்,நடப்பின் நிதர்சனம் இதுவே என்று புரிகிறது.

எல்லோருடைய வீட்டிலும் ஒரு 'அத்தை' இருப்பாள்.குடும்பத்தில் நடக்கும் திருமணமோ,இழவோ எல்லாவற்றிலும் முன் நின்று,எந்த பிரதிபலனும் இல்லாமல் செய்து முடிப்பாள்.அவள் பேச்சை கேட்டு நடந்தாலே ஒரு ஒழுங்கில் எல்லாம் தானாக நகரும் என்ற எண்ணத்துடன் மொத்த பொறுப்பும் அவளிடம் கொடுத்தாலும்,அவளை ஏசுவதற்கென்றே சில உறவுகள் குடும்பத்தில் இருக்கத்தான் செய்கிறது.அந்த மனக்கீறலையும் பொறுத்து அழுகையால் மட்டுமே பதில் சொல்லும் வேலுமணி அத்தை போன்றவர்கள் கடைசிவரை ஊதாசீனப்படுத்தவே படைக்கப்பட்ட ஜென்மங்களாக இருப்பார்கள் என்ற நிதர்சனத்தை உணர்த்துகிறது 'கீறல்' சிறுகதை.ஆதரவற்ற தம்பதியின் வீட்டில் நடக்கும் இறப்பின் வலியை 'அவற்றின் கண்கள்',மேலும் துடி,திராட்சை மணம் கொண்ட பூனை என தொகுப்பின் ஒவ்வொரு கதையும் நமக்கு பல கதைகளை சொல்கிறது.நடுவில் ஒரு திகில் கதையாக 'மீன் முள்ளின் இரவு'.வேட்டை நாய்களின் ஓலங்கங்களுக்கிடையே,  மனநிலை சரியில்லாத ஒரு அமானுஷ்ய மனிதனாக அத்தெருவுக்குள் நுழையும் ஒருவனை பற்றிய கதை.நாய்களுடன் ஒன்றி,இரவில் அவன் தேடும் உணவு எது என்று நாம் அறியும்போது நிச்சயமாக ஒரு பய உணர்வை ஏற்படுத்தும்.

சூழலுக்கு ஏற்றார் போல் மாறும் மனித மனங்களின் உளவியலை பட்டவர்த்தமாக கையாண்டுள்ளது ஆசிரியரின் எழுத்து.சில கதைகளில் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் நுண்ணுணர்வுகளை ஆசிரியரின் எழுத்தில் வாசிக்கும் பொழுது சற்று கடினமாக உள்ளது.எளிய வார்த்தைகள்,சொற்றொடர்களை கொண்டு விவரணைகள் இல்லாதது வாசிக்க சற்று அயர்ச்சியைத் தருகிறது.ஆரம்பகட்ட வாசகர்களுக்கு இது ஒரு மிகைத்தன்மையை தந்து வாசிக்காமலேயே செல்லும் அபாயம் உண்டாகலாம்.அந்த வகையில் 'நட்சத்திரங்களை ருசிப்பவர்கள்' கதை என்னால் சிறிதளவும் உள்வாங்க முடியவில்லை.கதையின் ஆரம்பம் ஓரளவு பிடிபட்டாலும்,கதையின் நகர்வில் எனக்கு தெளிவற்ற ஒரு குழப்பமே மிஞ்சியது எனலாம்.கதைகளின் ஒவ்வொரு விவரிப்பையும் நிதானித்து படித்து கதைக்குள் செல்ல சில நிமிடங்களாவது ஆகிறது.ஆனால் அந்த நிதான வாசிப்புதான் அவருடைய கவித்துவமான கதைமொழியின் அடர்த்தியை உள்வாங்க செய்கிறது. எழுதி தீர்க்கமுடியாத பல கதைகள்,இந்த சமூகத்தில் கொட்டிக்கிடக்கிறது என்பதை ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் பொழுதும் இத்தொகுப்பில் உணர வைக்கிறார் ஆசிரியர் பா திருச்செந்தாழை அவர்கள்.அவரின் எழுத்துப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.நன்றி .

 



Comments