நூல் : பயங்கரவாதி
ஆசிரியர் : தீபச்செல்வன்
விலை : Rs.360
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
Ph:044-48557525
87545 07070

ஈழ தமிழ் மக்களுக்கு எதிராக,சிங்கள அரசாங்கம் நடத்திய இனவழிப்புப் போரில்,யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடந்த படுகொலை  சம்பவங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் 'பயங்கரவாதி'.2005ல் இருந்து 2009ல் நடந்த இறுதிப் போர்க்காலம் வரை பயணிக்கிறது இந்நாவல்.தனது முதல் நாவல் 'நடுகல்' மூலம் கவனத்தை பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின்  இரண்டாவது நாவல் 'பயங்கரவாதி'.ஈழ இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான இவர்,ஈழ மக்களின் நிலம்,கனவு, வாழ்வியல் குறித்து எழுதிய பல கவிதைகள்  குறிப்பிடத்தக்கவை ஆகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்க பெரும் கனவோடு  யாழ்பாணத்தில் காலடி எடுத்து வைக்கும் மாறனின் அறிமுகத்தோடு ஆரம்பமாகிறது கதை.கல்லூரி மாணவர்களின் அறிமுகம்,புதிய நட்புகள்,வெல்கம் பார்ட்டி,மாறன் - மலரினியின் காதல் என ஒரு சந்தோஷ ஆரம்பமே,நம்மையும் நம் கல்லூரி நினைவுகளில் திளைக்க வைக்கிறது.ஆனால் எல்லாம் ஒரு சில அத்தியாயங்கள் மட்டுமே.ஈழப்போர் சூழல் மேகங்கள் படர்ந்த பின் வரும் சம்பவங்கள் நம் கனவில் கூட அனுபவித்திராதவை.

மாறன்,சுதர்சன்,மலரினி,துருவன் ஆகியோருடைய நட்பு கதையை உயிரோட்டத்தோடு எடுத்து செல்கிறது.கதையின் ஊடே சிறுவயதில் அவர்கள் இழந்த உறவுகளை பற்றிய முன்கதை சுருக்கங்கள் வந்து போகிறது.போர் காலங்களில் மட்டுமே இழப்புகளில் சந்தித்திருப்பர் என்பது பொய்யாகி தங்களின் தினசரி வாழ்விலும் சிங்கள அரசால் பாதிக்கப்பட்டு இருப்பது புரிகிறது.எஞ்சிய உறவுகளோடு மிச்ச காலத்தை பயத்துடனே கழித்தாலும்,கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து தங்கள் வீட்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்கள்,தங்களது பிள்ளைகளின்  காலத்திலாவது எதும் நல்ல மாற்றங்கள் கிடைக்காதா  என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை  எதிர்நோக்குகிறார்கள்.

தங்கள் பிள்ளைகள் இயக்கத்தில் சேர்ந்து விட்டால், அவர்கள் வாழ்வு ஒரு கேள்விக்குறியோடு நின்றுவிடும் என்ற பரிதவிப்பு ஒவ்வொரு பெற்றோரிடமும் காண முடிகிறது.போர் ஆயுதத்தை ஏந்துவதை விட கல்வி என்ற பேராயுதத்தையே அனைவரும் விரும்பினர்.இயக்கத்தின் தலைவரும் அதையே விரும்புகிறார் என்ற செய்தியை ஒவ்வொரு கதாபாத்திரமும் கூறுகிறது.

பாடசாலைகள் தம் மக்களுக்கு பாதுகாப்பை தரும் என்ற நம்பிக்கையும் அவர்களை கல்வியின் பக்கம் திருப்பியுள்ளது.ஆனால் அங்கும் சில சிங்கள மாணவர்களின் அடாவடித்தனம் அவர்களை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.ஆர்மியுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மாணவர்களை எல்டிடிஈ யுடன் தொடர்புப்படுத்தி கொல்லக் கூட துணிகிறார்கள்.கேட்க நாதியற்ற நிலையே தமிழ் மாணவர்களுக்கு வாய்க்கிறது.ஒவ்வொரு மரணத்திற்கும் நீதி  கேட்க போராட்டத்தை கையில் எடுத்தாலும்,அவர்களையும் மரண பயத்தைக் கொண்டு ஒடுக்கிவிடுகின்றனர்.ஆர்மிக்கு எதிராக செயல்படும் ஒவ்வொரு மாணவனுக்கும் 'பயங்கரவாதி' என்ற முத்திரையை குத்தி கொடூர தண்டனைக்கு உட்படுத்துகின்றனர்.கதையில் நிரோஜன் மற்றும் பந்துல கதாபாத்திரங்கள் கொஞ்சமும் மனிதாபிமானமற்ற முறையில் தமிழ் மாணவர்கள் மேல் கொடூர தாக்குதலுக்கு உட்படுத்துவதும்,நினைத்த நேரத்தில் கல்லூரி விடுதியில் புகுந்து மாணவர்களிடம் அத்துமீறுவதும் அராஜகத்தின் உச்சம். 

எப்பொழுதும் ஆர்மியின் கண்காணிப்பில் இருக்கும் யாழ்ப்பாணத்தில்,கல்லூரியை விட்டு வெளியேறக் கூட உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் அவலம் அதிர்ச்சியை தருகிறது.நிதமும் சோதனைச்சாவடியில் அடையாளச்சான்றை காட்டி ஆர்மி முகாமுக்கு செல்லப்போகிறோமா அல்லது மறுபடியும் கல்லூரிக்கு செல்வோமா என்ற ஐயத்துடனே வாழும் மாணவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது.

கதை யாழ்ப்பாணத்தில் மட்டும் தேங்கி நிற்காமல்,போராளிகளின் நிலமான கிளிநொச்சிக்கும் பயணிக்கிறது.அங்கு தமிழர்களுக்கு கிடைக்கும் பேரமைதியும்,சுதந்திர காற்றும்,தமிழர்கள் வாழும் மற்ற நிலங்களுக்கும் கிடைக்க ஆசை வருகிறது.பீரங்கி,துப்பாக்கி,ஆர்மி இல்லாத போராளிகளின் நிலமான கிளிநொச்சியோடு யாழ்ப்பாணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் சுதர்சனின் மனம் ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது.எப்பொழுதும் ஆர்மியின் கண்காணிப்பில் இருக்கும் யாழ்ப்பாணத்தை விட்டு இங்கு வந்துவிட நினைக்கும் மனம்,இறுதியில் அவன் படிப்பை விட்டு இயக்கத்தில் சேர முடிவெடுக்க வைக்கிறது.தன் மகன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான் என்ற நிம்மதியுடன் வாழும் அவன் குடும்பத்தாருக்கு,போரில் அவனது இறுதி மூச்சு நின்றது கூட தெரியாமல் போகிறது.

உறவுகளின் இறப்பை விட,அவர்கள் தொலைந்து காணாமல் போவது பெரும் ரணத்தை அனுபவிக்க வைக்கிறது.அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா,இல்லையா என்ற கேள்வி வாழ்நாள் முழுதும் இவர்களை துரத்துகிறது.மகன் தாயைத்  தேட.. மனைவி கணவனைத்  தேட.. காதலன் காதலியைத்  தேட.. நண்பனைத் தேட.. என நாவல் முழுதும் யாரோ ஒருவர் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.தேடலின் வலி இறப்பின் வலியை விட கொடியதாக உள்ளது.

முதல் நாள் இயல்பு நிலையில் இருக்கும் வாழ்க்கை,அடுத்த நாள் போர் சூழலுக்கு மாறுவது என்று ஒரு நிலையில்லாத,பயவுணர்வோடு காலத்தை கழிக்கின்றனர்  ஈழ மக்கள்.பல மனித உரிமை மீறல்களுடன் நடந்த இப்போரில் தங்கள் கற்பை காப்பாற்ற பெண்கள் ஒரு பக்கமும்,உயிருக்கு பயந்து ஆண்கள் ஒரு பக்கமும் தலைமறைவு வாழ்க்கை வாழவே ஈழ தமிழ் மக்களின் பொழுதுகள் விடிகிறது.ஆர்மி ஆட்களால் புகழினிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம் திருமகளுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற பதட்டம் நமக்கு ஏற்படும் நேரத்தில் அவளின் துணிச்சலால் நிரோஜனை விரட்டும் இடம் நமக்குள் ஒரு பெருமிதம் பொங்குவதை தடுக்க முடியவில்லை.

கதையின் தீவிரத்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவது மாறன் - மலரினி காதலும்,மாணவர்களிடையே நடக்கும் குறும்பு பேச்சுகள்தான். கல்லூரியில் இருந்த சில காலம் தவிர்த்து  எப்பொழுதும் பிரிவிலேயே கழிக்கும் அவர்களின் காதலை அந்த பிரிவே மேலும் வலிமையாக்குகிறது.கதையின் இறுதி வரை மாறனுக்கு உறுதுணையாக நின்ற மலரினி நம் மனதில் நிற்கிறாள்.

கதையின் இறுதி அத்தியாயங்களில் இலங்கை போரை கண்முன் காட்சிப் படுத்துகிறார் ஆசிரியர்.போர் காட்சிகள் விறுவிறுப்புடன் செல்கிறது.நடக்கும் ஒவ்வொரு படுகொலையும் நமக்கே நடப்பதை போன்ற உணர்வை தரும் விதம் எழுத்தின் வீரியம் இருக்கிறது.களத்தில் நிற்கும் போராளிகளுக்கு கை கொடுக்க நினைக்கிறது நம் மனம்.

சிங்களம் கலந்த தமிழிலும்,சில இடங்களில் சிங்கள மொழியிலும் நாவல் எழுதப்பட்டிருப்பது அந்நிலத்து மக்களின் உணர்வை உயிர்ப்புடன் தருகிறது.ஈழப்போரை மட்டும் குறிப்பிடாமல்,அதற்கு முன் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திய பல வன்முறை சம்பவங்களையும் முன் கதை சுருக்கங்களில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.இப்படியாக பல வரலாற்றுப் பக்கங்களை உலகின் முன் தன் எழுத்தில் மூலம் வெளிகொண்டுவந்திருப்பது சிறப்பு.

கல்விக்காகவும்,உரிமை
க்காகவும் தங்கள் உயிரை கொடுத்த மாணவர்களின் கனவு இனிவரும் காலங்களில் மெய்ப்பட வேண்டும் என்ற நூலாசிரியரின் ஆசை நமக்கும் ஏற்படுகிறது.நன்றி.

Comments