நூல் : ஆனந்தவல்லி 

ஆசிரியர் : லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
விலை : Rs.230
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
Ph:044-24332424

ஆனந்தவல்லி.. ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட வரலாற்று புனைவு நூல்.அரசர்களின் வீர பராக்கிரம பெருமைகளை மட்டுமே பேசும் பல வரலாற்று நூல்களுக்கிடையே,அரசர்களின்  பிற்போக்குத்தனங்களையும்,அவர்கள் அந்தப்புரங்களில் வாழும் பெண்களின் நிலையையும் எடுத்துரைக்கும் நாவல்.

இந்நூலின் ஆசிரியர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் பிறந்து,தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வளர்ந்தவர்.சிறப்புக் குழந்தையை வளர்ப்பதன் அனுபவங்களை பற்றி 'எழுதாப் பயணம்' என்னும் நூலை எழுதியுள்ளார்.'ஆனந்தவல்லி' இவரின் முதல் நாவல்.

தன் சுகபோக செலவுக்காக திருமணமான மகளையே அரண்மனையில் விற்று செல்லும் சுயநலமிக்க தந்தை கொத்தனின் மகள் மீனாட்சியின் கதை 'ஆனந்தவல்லி'.ஐந்து வயதில் மீனாட்சியை சபாபதிக்கு  குழந்தை திருமணம் செய்து வைத்து,வயதுக்கு வரும் வரை தாய் வீட்டில் இருக்க வேண்டிய சூழலில்,தாய்க்கு தெரியாமல் தந்தையால் அரண்மனையில் விற்கப்படுகிறாள்.அந்த பெண்ணிற்கு இதிலுள்ள சூதும்,துயரமும் தெரியவில்லை.பல ஆண்டுகளுக்கு பின் அவளை தேடி வரும் கணவன் சபாபதி உண்மை நிலை அறிந்து அவளை மீட்க அரண்மனைக்கும்,மராட்டிய மன்னர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மெட்ராஸ் கவர்னரிடமும் முறையிடக் கிளம்புகிறான்.அங்கு அவனுக்கு நியாயம் கிடைக்கிறதா என்பதே முடிவு.

இந்நாவலின் மையம் ஒரு பெண்ணின் கதையாக இருந்தாலும்,மிக முக்கியமான மூன்று விஷயங்களை இந்நாவல் பேசுகிறது.

1.பெண் அடிமைகள்
2.கணவனுடன் உடன்கட்டை ஏறுதல்
3.குழந்தை திருமணம்.

உழைக்கும் ஆண்களை மட்டுமே விற்று அடிமைகளாக  வைத்திருப்பார்கள் என பல வரலாற்று சம்பவங்களில் நாம் வாசித்திருப்போம்.ஆனால்  தங்கள் சுகபோகத்திற்காக பெண்களை அடிமைகளாக வைத்து,அவர்களை ஒரு போகப்பொருளாக நினைத்து பண்டமாற்று முறையாக மற்ற அரசர்களுக்கு விற்க,வாங்க என அரசர்கள் செயல்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் அரண்மனைகளில் அடிமைகளாக சிக்கி வாழ்ந்து மடியும் பெண்கள்,மூன்று வேளை உணவும்,அரண்மனையின் பிரமாண்ட தங்குமிடம்,அரசரின் ஆசைநாயகி என்ற பெயர் என அனைத்தையும் ஒரு பெருமையாக கருதி,தாங்கள் அடிமைகள் என்ற உண்மையை உணராமல் இருக்கின்றனர்.அரசரின் அதிகாரபூர்வ ராணிகள் ஐந்து பேர் என்றால் அவர்களுக்கு பணிவிடை செய்யும் 'அக்காக்கள்' பலர்,அக்காக்களுக்கு பணிவிடை செய்ய பல பணிப்பெண்கள் என தன் சாம்பிராஜ்யத்தில் பாதி பெண்களை தங்கள் அரண்மனையில் அடிமைகளாக  வைத்திருக்கும் அரசர்கள் எவ்வாறு குடிமக்களுக்கு நல்லாட்சி செய்தார்கள் என்று தெரியவில்லை.

இவர்கள் மட்டுமின்றி,மராட்டிய  அரசர்களை தங்களுக்கு கீழ் வைத்திருக்கும் ஆங்கிலயேர்களும் அவ்வாறு தான் இருந்தார்கள் என்பது அடுத்த அதிர்ச்சி.பெண்கள் உடன்கட்டை ஏறுதல்,குழந்தை திருமணம் என அனைத்து பிற்போக்குத்தனத்திற்கும் தடை போடும் அவர்களும் பெண் சம்போகத்தில் திளைப்பதில் அரசர்களை போன்றவர்களே என்பது புரிகிறது.

கணவனுடன் உடன்கட்டை ஏறினால்தான் அடுத்து அரசனாக முடிசூடும் தங்கள் வாரிசிற்கு குடிபெருமை கிடைக்கும் என்ற தவறான அனுமானத்தில்,அரச பெண்களே சுயமாக முடிவெடுத்து,அதுவே தங்களுக்கு பெருமை,அப்பொழுது தான் குடிமக்கள் தங்கள் ஆட்சிக்குத்  தலைவணங்குவர் என நிர்பந்தித்து அவர்களாகவே உடன்கட்டை ஏறும் நிகழ்வு நடைபெறுகிறது.அதிலும் ஒரு பிரிவினையாக,உயர்ந்த குடி பெண்கள் மட்டுமே இந்த சடங்கிற்கு தகுதியானவர்கள் என்றும்,தகுதியற்ற மற்ற பெண்கள் அந்த உறவிற்கு உண்மையாக இருந்தால் மட்டும் போதும் என்ற கூற்றையும்  முன்வைக்கிறார்கள்.இதிலுள்ள முரண் உயர்வு/தாழ்வு என்பது எந்த காலத்திலும் இருந்துள்ளது எனப் புலப்படுகிறது.

கதையின் முக்கிய முடிச்சாக  இருப்பது மீனாட்சி - சபாபதியின் குழந்தை திருமணம்.ஒன்றும் அறியாத பருவத்தில் இருவருக்கும் திருமணம் செய்ததில் ஏற்பட்ட குழப்பமே அவர்களின் மொத்த வாழ்வும் அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

மீனாட்சியின் தந்தை கொத்தனின் கோணல் புத்தியால் ஏற்பட்ட விளைவுகளுக்கு,அவனைத் தவிர அவன் மொத்த குடும்பமும் தண்டனையை அனுபவித்தது வலி தரக் கூடியது.

மனைவியை தேடி அலையும் சபாபதியின் பரிதவிப்பு சொல்லில் அடங்காதது.அவள் கற்புடன் இருக்க மாட்டாள் என்ற உண்மை அவன் மனதில் சுட்டாலும்,'எந்த தவறும் அவளுடையது அல்ல' என்ற புரிதல் உண்மை காதலில் மட்டுமே வரும்.சிறுவயதில் சில காலம் மட்டுமே அவளுடன் இருந்த நாட்களை அசைபோட்டபடி அவளுக்காக ஏங்கித் தவிக்கும் சபாபதி மனதில் நிற்கிறான்.

பல ஆய்வு நூல்களின் தரவுகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நாவலில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் இறுதி கால ஆட்சியை புரிந்து கொள்ள முடிகிறது.

சிறு குழந்தை மீனாட்சியாக அறிமுகமாகி,அரண்மனையில் 'ஆனந்தவல்லி' யாக மாறி முடிவில்லா துயரில் சிக்கிய  ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல  'ஆனந்தவல்லி'.பல பெண்களின் கண்ணீரின் அடித்தளத்தில் தான் பல அரசர்களின் சாம்பிராஜ்யங்கள் எழுப்பப்பட்டுள்ளது என்பதை உணர வைக்கும் கதை.நன்றி.

Comments